ஜெயகாந்தனின் விமர்சனங்கள் மீது ஒரு விமர்சனம்

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

சொ.சங்கரபாண்டி


திராவிட அரசியல் இயக்கங்களின் அடித்தளமானவரும், தமிழ்நாட்டின் பெருவாரியான மக்கள் கண்மூடித்தனமாக போற்றிய தலைவருமான அறிஞர் அண்ணா மறைந்த பொழுது அவரைப் பற்றிய மிகத்துணிச்சலான விமர்சனத்தை முன்வைத்த நவீன இலக்கிய உலகின் புரட்சியாளர் திரு.ஜெயகாந்தனை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. தமிழ்ச்சமூகத்தில் மொழியானாலும், கலை இலக்கியமானாலும் வெறும் வரட்டுக்கூச்சல்களையும், வெட்கங்கெட்ட புகழ்ச்சிகளையும் கேட்டு சலிக்கும் பொழுதெல்லாம் அறிவு பூர்வமான விமர்சனங்கள் வரும் பொழுது ஒரு நம்பிக்கை பிறக்கின்றது. அவர்களின் விமர்சனங்களின் மீது எனக்கு கருத்து மாறுபாடு இருக்கலாம். ஆனால் இத்தகைய விமர்சனங்கள் விமர்சிக்கப்பட்டவரின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் தமிழ்ச் சமூகத்தின் ஜனநாயக வளர்ச்சிக்கும் வழி வகுக்கும். அரசியல் விமர்சனங்களைத்தான் அரசியல் வாதிகள் POTA போன்ற கொடிய சட்டங்களைப் பயன்படுத்தி நசுக்கி வருகின்றனர். கலை இலக்கியங்களிலாவது கருத்துச் சுதந்திரத்தை அரசியல் அதிகாரம் நசுக்காமல் பாதுகாப்பது அவசியம். முன்னால் ஜெயகாந்தனும், தற்பொழுது ஜெயமோகனும் பூனைக்கு மணிகட்ட முன்வந்தது பாராட்டுக்குரியது. அதேவேளை அவர்களது உண்மைப்பசி அல்லது தரம் தேடல், உண்மையின் மீதும் தரத்தின் மீதுமான பற்றினாலும் மற்றும் நம்பிக்கையினாலும் எழுந்ததா என்ற சந்தேகத்தை இங்கு அலச விரும்புகிறேன். அந்தச் சுதந்திரத்தை அவர்களும், அவர்களது இரசிகர்களும் என் போன்ற ஜெயகாந்தனின் இலக்கிய இரசிகர்களுக்கு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

பட்டங்களும் தகுதிகளும்

முதலில் அறிஞர் என்று அண்ணாவையும் கலைஞர் என்று கருணாநிதியையும் நான் அழைப்பதில் வெட்கப்படவுமில்லை, மகிழ்ச்சியடையவுமில்லை. அறிஞர் என்று சொல்லுவதால் அவர் அனைத்தும் அறிந்தவர் என்றோ அல்லது அவர் ஒருவர் தான் அறிந்தவர் என்றோ ஆகிவிடாது. கற்றறிந்த அறிவாளிகளுக்குப் பஞ்சமாக இருந்த அந்தக் காலத்தில் எளிய பிற்பட்ட ஒரு சமூகத்திலிருந்து கல்வியால் உயர்ந்து, அரசியலில் புதிய சாதனை படைத்த அண்ணாவை தமிழ்ச் சமூகம் அப்படி அழைத்ததில் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. காந்தியை மகாத்மா என்றும் நேருவை பண்டிதர் நேரு என்றும் அழைப்பது போலத்தான் இதுவும். காந்தியை மகாத்மா என்றால் மற்ற அனைவரும் ‘அல்பாத்மா ‘ ஆகிவிடப்போவதில்லை. அதற்காக நான் அவரை மகாத்மா காந்தி என்று அழைப்பதில் பெருமைப்படவுமில்லை, தவறு செய்யவுமில்லை. அதுபோல் நேருவை பண்டிதர் என்பதால் மற்ற அனைவரும் பாமரராகி விடுவதில்லை. அப்பட்டங்கள் மிகைப்படுத்தப் பட்டாலும் அவர்களின் தகுதியுடன் மிகச்சிறிய அளவிலாவது தொடர்புள்ளவை. புரட்சிக்கும் புரட்சித்தலைவிக்கும் தொடர்பே இல்லாவிடினும், அதைக் கண்டுகொள்ளாமல் விடுவதுதான் இன்று தமிழகத்து அறிவுஜீவிகள் உயிர் பிழைப்பதற்கான ஒரே வழி!

இலக்கிய சாதனைகளைப் பயன்படுத்தும் அரசியல் நிலைப்பாடுகள்

ஜெயகாந்தனுடைய பெரும்பாலான படைப்புக்களில் உள்ள யதார்த்தமும், எளிமையும், தருக்கமும் என் அறிவை வளர்த்துள்ளது, மனதைப் பண்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் நான் புதுமைப்பித்தனை விட ஜெயகாந்தன் படைப்புக்களை அதிகம் நேசிக்கிறேன். அவற்றை எத்தனை முறை வேண்டுமானாலும் என்னால் படிக்க முடிகிறது. ஒவ்வொரும் முறை படிக்கும் பொழுது அவரிடம் கண்மூடித்தனமான மதிப்பு ஏற்படுகிறது. ஜெயமோகன் படைப்புக்களை நான் அதிகம் படித்ததில்லை. ‘ரப்பர் ‘ நாவலை மட்டும் படித்திருக்கிறேன், எத்தனையோ நல்ல நாவல்களில் அதுவும் ஒன்று என்பதைத்தவிர எனக்கு வேறு கருத்துமில்லை. ஆனால் ‘திண்ணை ‘யில் ஜெயமோகனின் (அகந்தையான பிதற்றல்கள் நீங்கலாக) சில கட்டுரைகள் என்னைச் சிந்திக்கத் தூண்டியுள்ளன. எனவே ‘விஷ்ணுபுரம் ‘ நாவல் உள்பட அவரது மற்ற படைப்புக்களையும் படிக்க மிக ஆர்வமாகவே உள்ளேன்.

இலக்கியத் திறமைகள் ஒருபக்கம் இருக்க, அவர்களது அரசியல் சார்பான பிதற்றல்கள் அவர்களின் உள்நோக்கத்தைச் சந்தேகிக்க வைக்கின்றன. ஜெயமோகன் நேரடியாக தன்னுடைய அரசியல் சார்பை வெளிக்காட்டாவிடினும், அவருடைய இந்துத்துவ நிலைப்பாடு மறைமுகமாக அவ்வப்பொழுது வெளிப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. அவர் வெளிப்படையாக வரும் வரை நான் அதைப்பற்றி மேலும் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஜெயகாந்தனோ இடது சாரி அரசியலில் அடி எடுத்து வைத்து, பின்னால் காங்கிரஸில் இணைந்து சீரழிந்து, தற்பொழுது இந்துத்துவவாதிகளுடன் மேடைகளில் தலைகாட்ட ஆரம்பித்துள்ளார்.

ஜெயகாந்தனுடைய தர அளவுகோல் பெரியாரையும், அண்ணாவையும், திராவிட அரசியலையும் விமர்சிப்பதோடு நின்று விட்டது முதலில் எனக்கு வியப்பாக இருந்தது. பின்னால் இராஜீவ் காந்தி தலைவரானவுடன், காங்கிரசின் தரம் உயர்ந்து விட்டதென்று நினைத்தாரோ என்னவோ, ஜெயகாந்தன் அதன் அடிப்படை உறுப்பினராகி பத்திரிகைக்குக் கூட ஆசிரியராகப் பணியாற்றினார். மூன்று ஆண்டுகளுக்கு முன் அவர் வாஷிங்டன் வந்த பொழுது அறிந்தேன், அவர் சோனியா காந்தியைக்கூட தரம் வாய்ந்த தலைவராக எண்ணி இந்தியாவின் பிரதமராக வரக் கொடி பிடித்தார் என்று. இது சம்பந்தமாக நான் அவரிடம் பல கேள்விகளை எழுப்பியபோது, எதற்கும் பதில் சொல்லாமல் இந்துத்துவத்தை எதிர்ப்பதால் (அப்பொழுது) சோனியா காந்திதான் பிரதமராக வர வேண்டும் என்றார். இப்பொழுது 2003 செப்டம்பரில், இந்துத்துவத்தை தமிழ்நாட்டில் தண்ணீர் விட்டு உரம் வைக்கின்ற காஞ்சி சங்கராச்சாரியாரைப் பற்றிய வாலியின் புத்தக வெளியீட்டு விழாவில் காஞ்சியாரைப் பாராட்டி அவர் பெருமையையும் இந்து மதப்பெருமையையும் அளந்திருக்கிறார்.

அறிஞர் அண்ணாவைப் பற்றியும், திராவிட அரசியல் கட்சிகளையும் பற்றிய அவருடைய கணிப்புக்களிலாவது பெரும்பாலும் உண்மையுள்ளது என்று நான் ஒத்துக்கொள்கிறேன். அதுவும் அவர் சோனியா காந்திக்கெல்லாம் வக்காலத்து வாங்கியதை கண்டு கொள்ளாமல் விட்டால்தான் ஏற்றுக்கொள்ள முடிகிறது. அறிஞர் அண்ணா தமிழ் நாட்டுக்கு முதல்வராக வரத்தகுதியில்லையென்று எண்ணிய ஜெயகாந்தன் எப்படி சோனியா காந்தி இந்தியாவுக்குப் பிரதமராக வரத்தகுதியுள்ளவர் என்று கருதினாரோ தெரியவில்லை, அதன் ஆழமான பின்னணியை சற்று பின்னால் பார்ப்போம். ஆனால் பெரியார் மீது அவர் வைத்த விமர்சனங்கள் பெரியார் காலத்திய அரசியல் பின்னணியை வைத்து எழுந்தவையல்ல. பெரியார் ஏதோ கசாப்புக்கடைக்காரனைப் போல நடந்து கொண்டதாகக் குறிப்பிட்டார். கம்யூனிஸ்டுகள் மத்தியிலிருந்த போது அவர் கசாப்புக் கடைக்காரனிடமிருந்த நியாயத்தைக் கூட அறிந்து ஒரு சிறுகதை எழுதினார் என்பது இங்கு குறிப்படத்தகுந்தது. காங்கிரசில் சேர்ந்த பிறகு அதுவும் மறந்து விட்டது போலும். தற்பொழுது காஞ்சி சங்கராச்சாரியாருக்கும், இந்துத்துவத்துக்கும் சாமரம் வீசும் பணியை ஆரம்பித்திருக்கிறார். இப்படியாக பரிணாமம் அடைந்த அவரின் அரசியல் சாயத்துக்குச் சாதிதான் பின்னணி என்பதை நாம் அலசுவோம்.

அரசியல் நிலைப்பாடுகளின் சாதியப்பின்னணி

தமிழ்ச் சமுக அமைப்பில் சாதியின் பிடி தளராமலிருப்பதன் அடிப்படையே உறவுகளும், குடும்பங்களும்தான். சிறுவயதில் தாய், தந்தையரும், நெருங்கிய உறவினரும் நம்முடைய சிந்தனைக்களத்தை அதிகமாக பாதிக்கின்றனர். அப்பருவத்தில் அவர்கள் நம்மில் தவறான சிந்தனைகளைத் திணித்தால் கூட நமக்குத்தெரிவதில்லை. பெற்றோர்களால் மதமும் சாதியும் நம் அடையாளங்களாக ஆழ்மனதில் பதிந்து விடுகின்றன. வாலிபப்பருவத்தில் நாம் உலகத்தில் உள்ள பிரச்சினைகளை அலச முன் வரும்பொழுது, சரி, தவறு என்பதைத் தட்டிக்கேட்கிறோம். ஆனால் ஒரு சிலரே சொந்த பந்தங்களை மீறி அல்லது துறந்து தவறை எதிர்த்துப் போராட முன் வருகிறார்கள். பின்னால் திருமணமாகி நமக்குப் புது உறவுகள் ஏற்படும் பொழுது நம்முடைய சாதிய, மத அடையாளங்கள் மீட்டெடுக்கப்பட்டு அவற்றின் இறுக்கம் வயதாகும் பொழுது அதிகமாகின்றன. இது அன்று முதல் இன்று வரை உள்ள நடைமுறை உண்மை.

தமிழ் நாட்டில் வேளாள சாதிகள் பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாக பார்ப்பனியத்தைக் கடைபிடித்து வந்திருக்கின்றனர். வேளாள சாதிகள் எனும் போது பார்ப்பனர் அல்லாத முன்னேறிய சாதிகளான பிள்ளை, முதலியார், செட்டியார் இன்னும் பிற சாதிகளைக் குறிப்பிடுகிறேன். (இட ஒதுக்கீட்டுக்காக இவர்களில் பலர் தில்லுமுல்லு செய்து பிற்பட்டவர்கள் பட்டியலில் சேர்ந்ததை சற்று மறந்து விடுவோம்.) சுதந்திரத்துக்கு சற்று முன்பு, பிரிட்டிஷார் ஆட்சியில் வேளாள சாதிகளில் பலர், கிறித்துவ மதத்தைத் தழுவி, மதநிறுவனத்தின் உயர் பதவிகளைத் தங்கள் வசம் வைத்துக்கொண்டனர். அதன்பின் திராவிட இயக்க சிந்தனை வேரூன்ற ஆரம்பித்த புதிதில், மற்றொரு பகுதியினர் திராவிட இயக்கங்களில் சேர்ந்து பார்ப்பனரின் ஆதிக்கத்தை எதிர்க்கத் தலைப்பட்டனர்.

எஞ்சிய மூன்றாம் பகுதியினர், இந்து மதக்கட்டுக்கோப்பில் முழுநம்பிக்கை வைத்து பார்ப்பனிய மற்றும் சைவ சமய நெறிகளைக் கடைபிடித்து வந்தனர். இவர்களில் ஒரு பிரிவினர் பார்ப்பனர்களைப் போலவே சைவ உணவு மூறைகளைக் கடைபிடித்து வந்துள்ளதால், தங்களைப் பார்ப்பனர்க்கு அடுத்த உயர்ந்த சாதியாக பீற்றிக்கொள்வதில் அதிகப் பெருமையடைவதுண்டு. இவர்கள் பார்ப்பனர் செய்யும் அத்தனை சடங்குகளையும், அர்த்தம் தெரியாமலே அந்தஸ்துக்காகவே பண்ணிக்கொண்டு வந்திருக்கிறார்கள் (இன்னாளில் பணவசதி படைத்த அத்தனை சாதி மக்களும் இதைப் பின்பற்றி வருவது வேறு விஷயம்). இந்த சைவ வேளாளச் சாதிகளுக்கும், பார்ப்பனர்களுக்குமுள்ள ஒரே ஒரு வேறுபாடு உண்டு. சமயச் சடங்குகளில் தமிழ் மொழியை பார்ப்பனர் (அய்யங்கார்கள் தவிர) சுத்தமாகப் பயன்படுத்தியதில்லை; சைவ வேளாளச் சாதியினரோ, சமஸ்கிருதத்தோடு, தமிழையும் கலந்து வழிபாட்டில் பயன் படுத்தி வந்துள்ளனர்.

இந்த மூன்றாம் பிரிவில் படித்தவர்களும், அறிவுஜீவிகளும் சரிந்து வரும் பார்ப்பனிய மற்றும் சைவ சமய செல்வாக்கைக் கண்டு வருந்தினார்களேயன்றி, இந்து மதத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க முன்வரவில்லை. ஒருபுறம் கிறித்துவம், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை மதம் மாற்றி இந்து மதத்தில் தொடர்ந்து துளைகள் இட்டுக்கொண்டிருப்பதை எண்ணி மனம் வெதும்பினாலும், அவர்களை ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆனால், நாத்திகம் தழுவிய திராவிட இயக்கத்தவர்களை மட்டும் இவர்கள் எதிர்த்து வந்துள்ளனர். அவர்களை இந்து மதத்தின் உள்ளார்ந்த உயரிய தத்துவங்களை அறியாத மூடர்களாகச் சித்தரித்து, தங்களை அனைத்தும் அறிந்த அறிவு ஜீவிகளாக விளம்பரப்படுத்திக் கொண்டனர். இவர்களில் கம்யூனிஸ்டு இயக்கத்தின் போர்வைகளில் ஒளிந்து கொண்டவர்களுமுண்டு. ஜெயகாந்தன் போன்றவர்கள் கம்யூனிஸ்டு இயக்கத்தில் இருந்த போதும், இந்து மதத்திலும், பார்ப்பனிய தத்துவங்களிலும் உள்ள தங்களது பிடிப்பை விட்டு விடவில்லை. ஜெயகாந்தனின் ‘பிரம்மோபதேசம் ‘ குறுநாவலும், சோ ராமசாமியின் ‘எங்கே பிராமணன் ‘ நாவலும் சீரழிந்து விட்ட பார்ப்பனியத்தின் மீது அனுதாபப்பட்டு, அவற்றின் உண்மையான கொள்கைகளுக்கும் நடைமுறைக்கும் தொடர்பில்லை என்றும், பார்ப்பனியத் தத்துவங்கள் மிக உயர்ந்தவையென்றும் பறை சாற்றுகின்றன.

ஜெயகாந்தனின் பார்ப்பனியப் பற்றும், அவரது வேளாளச்சாதிய அடையாளமும் அவரது குடும்ப உறவுகளின் இறுக்கத்தினால் படிப்படியாக அதிகரித்து அவரது சிவப்பு சாயத்தைப் போக்கி, காவி முலாம் பூசி வருகிறது. அதன் வெளிப்பாடே அவரது ஒருதலைப் பட்சமான தர நிர்ணய விமர்சனங்கள்! அவர் தன்னுடைய வேளாளச்சாதிய அடையாளத்தை வாஷிங்டன் வந்த பொழுது வெளிப்படையாக பிரகடணப் படுத்தியிருக்கிறார். இருந்தாலும் திராவிடக் கட்சிகளின் வெறுமையையும், அடாவடித்தனத்தையும் படித்த இளைஞர்கள் மத்தியில் உணர வைக்கிற அளவில் அவற்றை வரவேற்க வேண்டும். அதே நேரம், தேசியம் பேசி இந்தியாவை ஏமாற்றி ஏப்பமிட்டு வரும் பார்ப்பன, பனியாக் கட்சிகளான காங்கிரஸையும், பாரதீய ஜனதாவையும், மற்றும் அவர்களது தமிழ்நாட்டு ஏஜண்டுகளான ஜெயகாந்தன், சோ ராமசாமி போன்ற அறிவுஜீவிகளையும் அடையாளம் காட்டும் விமர்சனங்கள் இன்னும் வரவேண்டும்.

sankarpost@hotmail.com

Series Navigation

சொ.சங்கரபாண்டி

சொ.சங்கரபாண்டி