ஜனநாயகம்

This entry is part [part not set] of 34 in the series 20070517_Issue

ஆதிராஜ்


எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்றெண்ணி
இருப்பதும் ஜனநாயகம்! ஆனால்
நல்லாரைத் தாழ்த்தியே பொல்லார் உயர்வது
நடைமுறை ஜனநாயகம்!

தெரியாத பாமரன் தெரிந்தவன் போலெங்கும்
திரிந்திடல் ஜனநாயகம் – ஓர்
வரிகூட எழுதவும் வக்கில்லாபேர் தலைமை
வகிப்பதும் ஜனநாயகம்!

ஏறிய ஏணியை எட்டி உதைப்பதே
இன்றைய ஜனநாயகம்! – தாம்
கூறிடும் பொய்களைக் கூசாமல் உண்மைபோல்
‘கூறி’டல் ஜனநாயகம்!

‘இன்றொன்று நேற்றொன்றாம்’ எதிர்கால விளைவுகள்
என்னவோ ஜனநாயகம்! – எந்த
நன்றொன்று செய்தாலும் நாசமென் ‘றெதிர்க்கட்சி
நலன்’ தேடல் ஜனநாயகம்!

மதவாத மாயையும் இனவாதப் பேயுமே
‘மந்திரம்’ ஜனநாயகம் – வித
விதமாகப் பொய்பேசும் விபரீத மனிதர்கள்
வெல்வதும் ஜனநாயகம்!

அயலென்றும் நட்பென்றும் அன்றாடம் ஒருவரை
அறிவித்தல் ஜனநாயகம்! – ஓர்
பயமின்றி நானிந்தப் பாடலை எழுதிடப்
பணித்ததும் ஜனநாயகம்!!

– ஆதிராஜ்.

Series Navigation

ஆதிராஜ்

ஆதிராஜ்