ச ம ர் ப் ப ண ம்

This entry is part [part not set] of 35 in the series 20080731_Issue

நா.விச்வநாதன்



அந்தக் கோயிலின் கோபுர அழகு அலாதியானது. எந்தப் பக்கமிருந்து பார்த்தாலும் ஏதோ மங்கலமான புதுச்செய்திகளைச் சொல்வது போலிருக்கும். அலுக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
அடிக்கடி தஞ்சாவூர்ப் பெரிய கோயிலின் பிரம்மாண்டத்தைப் பார்ப்பவனுக்கு இதிலொன்றும் விசேஷமில்லைதான். அத்தனை பெரிதில்லை என்றாலும் சொர்ணமூர்த்திஸ்வரர் கோயிலின் கம்பீரம் பார்த்தவுடனே பிடித்துப் போனது. கோயிலின் அசாத்திய அமைதி. இதுபோன்ற அழகும் அமைதியும் இப்போ கோயில்களில் அபூர்வமே.
பெரிய கோயில் இப்போது சுற்றுலாத்தலமாகவும் வியாபார கேந்திரமாகவும் மாறிப் போனது. பொருட்காட்சி அம்சங்கள் வந்துவிட்டன. ராஜராஜன் கடல்கடந்து தேசங்கள் ஜெயித்த பெருமையைக் கூற எழுப்பித்த நினைவுச் சின்னமாகவே அது இப்போ தோன்றும். அதன் பின்னணியில் உயிர்ப்பலிகள் இருக்கின்றன. அளவற்ற சேதங்கள் இருக்கின்றன. குருதி இருக்கிறது. அடித்தட்டு மக்களின் வேதனை இருக்கிறது. வன்முறை இருக்கிறது. பெரியகோவிலின் கீழே புதையுண்டவர்களின் முனகல் சூட்சுமமாகக் கேட்கிறது. அரசர்கள் எப்போதுமே ரத்த ருசி பிடித்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஒவ்வொரு ராஜ சிரிப்பின் கம்பீரத்துக்குப் பின்னாலும் எளிய மக்களின் ஓலம் உறைந்தே கிடக்கிறது.
கண்டதேவி கோயிலில் கசகசவெனக் கூட்டம் இல்லை. ஆடம்பரங்கள் இல்லை. வழக்கமாக எல்லாக் கோயில்களிலும் அப்பியிருக்கும் எண்ணெய்ப் பிசுக்குகள் இல்லை. கண்களைக் கூசச் செய்யும் மின்விளக்குகள் இல்லை. உரித்துப்போட்ட வாழைப்பழத் தோல்கள் இல்லை. தேங்காய் உடைசல்கள் இல்லை. படு சுத்தம்.
கருங்கல் வேலைப்பாடு. உயர உயரத் தூண்கள். கச்சிதமான கதவுகள். ஒருகால் நகரத்தாரின் கைங்கரியமாக இருக்கலாம். அந்த சமூகம்தான் வீடுகளையும் கோயில்களையும் கலைநயம் மிக்க அற்புதங்களாகப் பண்ணி வைத்துவிடுகிறார்கள். சைகோன், கம்போடியா, பர்மா என தூர தேசங்களுக்குப் போய், உழைத்து, கப்பல் கப்பலாக திரவியம் அனுப்பி, பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடுகள், கோயில்கள். இந்தக் கலை நேசிப்பைக் கால ஓட்டம் அடித்துச் சென்றுவிடாமல் தொடர்ச்சியாகப் பேணிக் காப்பது ஆச்சர்யம். கண்டதேவி கோயில் அவ்வறானதாக இருக்கலாம்.
ஆன்மிகம், பக்தி போன்றவற்றில் பெரிய ஈடுபாடோ, ஈர்ப்போ இல்லையென்றாலும் கோயில்களைக் கண்டால் பிரவேசிக்காமல் இருக்க முடிவதில்லை. கண்டதேவி கோவிலுக்குள் ஒரு சுற்று சுற்றிவந்து கல்வெட்டோ சித்திரக் குறிப்புகளோ எதும் கிடைக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்த போதுதான் ”ஸ்வாமி தர்சனம் பண்றேளா?” என்று கேட்டுக்கொண்டே வந்தார் சிவாச்சாரியார்.
‘ஓம் மதுவாதா ரிதாயரத மது க்ஷரந்தி ஸிந்தவ.’
சிறந்த செயல்களைச் செய்ய விரும்புகின்ற நமக்கு காற்று இனிமையாக வீசட்டும். நதிகள் இனிய நீருடன் ஓடட்டும்.
கனிவோடு தீபாராதனை பண்ணினார். நாமாவளிகளை சங்கீதம் போலவே உச்சரித்தார். எதுகுலகாம்போதியும் ஆரபியும் சக்ரவாகமும் ஆனந்தபைரவியுமாக ஒரு ராகமாலிகை போலவே இருந்தது அவர் அர்ச்சனை செய்த அழகு. சீதையைத் தூக்கிச் சென்றபோது இந்த ஊரில்தான் ஜடாயு ராவணனைத் தடுத்தாராம். ராவணன் ஜடாயுவின் றெக்கைகளை வெட்டி கண்டம் பண்ணினானாம். ஜடாயு இறந்தபின் ராமன் அவனுக்குக் கிரியைகள் பண்ணினது இந்த இடம்தானாம்.
கண்டதேவிக்குப் பெயர்க்காரணம் சொன்னார். ஜடாயு ராவண யுத்தம் பற்றி எனக்குத் தெரிந்த ஏழெட்டு ஊர்க்காரர்கள் தங்கள் ஊரில்தான் அது நடந்தது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒரு நூறு ஊர்களிலாவது இந்தக் கதை உலவுகிறது. பிடித்தமான நெகிழ்ச்சியான நிகழ்ச்சிகளைத் தங்கள் ஊரோடு பொருத்திக் கொள்வதில் ஒரு திருப்தி.
”ஸ்வாமி தர்சனம் முடிஞ்சு சாப்டுட்டுப் போங்கோ. வீடு பக்கத்லதான் இருக்கு. செல்லப்பா?… ஐயாவைக் கூபட்டிண்டு போய்ச் சாப்பிடப் பண்ணு…” இப்படி உபசரிப்புகள் இப்போது அரிதாகி விட்டன. உபசரிப்புகளே ஆச்சர்யம் தரும் அம்சங்களாகி விட்டன. பக்தி வியாபாரமாகி விட்டது. சிரத்தையாய்ச் செய்யும் அர்ச்சகர்கள் இப்போது காணாமல் போய்விட்டார்கள். அபரிமிதமான தட்டுக்காசு. சிரத்தையையும் ஆத்மார்த்தத்தையும் அது தொலைத்து விட்டது. ஒல்லியான வயிறொட்டிய அர்ச்சகர்களை இப்போ பார்க்க முடியலே. பளபள உடம்பு. பட்டு வேஷ்டி. தாம்புக்கயிறு சைசுக்குத் தங்கச் சங்கிலி உத்திராக்ஷம். உயர்தர கடிகாரம். பட்டையாக நெற்றி விபூதி. பெரிதாகக் குங்குமப் பொட்டு. சந்தன்க் கீற்று … எல்லாமே மேக்கப் போட்டமாதிரி. சந்நிதியிலேயே செல்ஃபோன் பேசுகிறார்கள். தட்டில் காசு போடாதவனுக்கும் அழுக்கு வேட்டிக்கும் சின்னப் புன்னகை கூடக் கிடைக்காது. காசுள்ளவர்களை மோப்பம் பிடிக்கும் அபார ஞானம். ஏக மரியாதை. பட்டு பரிவட்டம் பூ பிரசாதம். ”என்ன மாமி பொண்ணுக்குக் கல்யாணமாமே” என்று விசாரிப்புகள். அர்ச்சனையைப் பாதியிலேயே விட்டுவிட்டு பெரிய மனுஷர்களை வரவேற்க ஓடும் அவசரம் – செயற்கையான சிரிப்பு – பான் பராக் விவகாரங்கள். புனிதமான கர்ப்பகிரகத்தில் அபசார காரியங்கள், அநாசாரங்கள்.
இங்கே நேர்மாறான அனுபவம்!
கண்டதேவி அர்ச்சகர் முதிர்ந்தவராக இருந்தார். பளீரென்ற சிரிப்பு. ஆசாரங்களை விடாதவர். விவரம் தெரிநதவராகவும் இருந்தார். ”அஞ்சு நிமிஷம் சாயங்கால பூஜை பாத்துட்டு ஆத்துல எதாச்சும் சாப்டுட்டுப் போகலாம். என் வீடு தாண்டி கோவிலுக்கு வந்தவாளா இருந்தாலும் பசியோட போகப்டாது…” திரும்பவும் நினைவூட்டினார்.
திடீரென்று கோயிலின் அர்த்த மண்டபத்தில் மேளச் சத்தம் கேட்டது. நாதசுர வித்வான் நாயனத்தைத் தோளில் சாய்த்து உட்கார்ந்திருந்தார். திடீரென்று வாசிக்க ஆரம்பித்தார். மனது துணுக்குற்றது. என்ன இது?
இன்ன ஓசை என நிர்ணயிக்க முடியாத ஒருவித சப்தம். கூட்டிக் குறைத்து அந்த சப்தமே வந்துகொண்டிருந்தது. அவ்வப்போது பிசிறு தட்டியது. ஓர் அடையாளத்துக்காக- சற்று தள்ளி மேளம் வாசித்துக் கொண்டிருந்தவர் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தார். உன் நாதசுரத்துக்கு இது போதும் என்கிறாப்போல இடைத்துண்டு அடித்துக் கொண்டிருந்தார்.
என்ன இசை இது, என்ன கீர்த்தனை இது, என்று இனம்காண முடியவில்லை. என் ஆழ்ந்த சங்கீத ஞானத்தைப் பிரயோகித்து அலசியதில் ஒன்றும் பிடிபடவில்லை.
‘ப்ப்பீப்பீ..ஈஈ – ப்ப்பிப்பீ..ஈஈ…’
அவர் முகத்தில் அலுப்பு. சோகம்.
என்ன வாசிக்கறீங்க, என்று கேட்பது நாசூக்காக இராது என்று மெளனமானேன். வாத்தியத்தை உறையிட்டுக் கொண்டிருந்தார். அஞ்சு நிமிஷ வாசிப்பு – மூச்சு வாங்கியது.
தஞ்சாவூர்ப் பக்கத்து நாதசுரக்காரர்கள் அநேகமாக எல்லாரும் நண்பர்கள். மழமழவென ஷேவ் செய்த முகம். கலர் ஜிப்பா. கம்பீரமான தோற்றம். பன்னீர்ப் புகையிலை. எப்போதும் கமகமவென ரம்மியப் படுத்தும் வாசனை. வாத்தியத்தைக் கையில் எடுத்தால் கிறங்கடித்து விடுவார்கள்… நேர்மாறான அனுபவம் இங்கே!
காலசந்தி, உச்சிக்காலம், சாயுங்கால பூஜை, என்று நியமம் தவறாத வழிபாடு. நாதசுரம்தான் இடைஞ்சல். வாத்தியத்தைக் கையில் எடுத்தால் மனம் துணுக்குறும். பிசிறு பிசிறாய் இடையிடையே விதவிதமான ஓசைகள். அபஸ்வரம் – கோயிலில் இதுகுறித்து யாரும் அலட்டிக் கொள்வதாய்த் தெரியவில்லை. ஸ்வரஸ்தானங்களைக் கச்சிதமாகக் கணக்கிட்டு விடுபவனுக்கு இது நரக வேதனையாக இருந்தது. என்ன இது? எதற்காக இந்த சங்கீதம்? கோளாறு வாசிப்பவனிடமா, வாத்தியத்திலா? சொர்ணமூர்த்திஸ்வரர் – பிரகதாம்பாள் ஏற்றுக் கொள்வார்களா?
‘ஓம் சாம வேதப் ப்ரியாயை நம. சங்கீத ரூபிண்யை நம…’
நமக்கென்ன, நாலுநாள் தேவகோட்டையில் வசூல்வேலை முடிந்தால் ஊருக்கு நடையைக் கட்ட வேண்டியதுதான். இதில் சுரம், அபசுரம் என்ன வேண்டியிருக்கு… என மனதின் மூலையில் குரல்.
எழுபத்தியைந்து வயது இருக்கலாம். பதினாலு வயசில் வாத்தியத்தைப் பிடித்திருந்தாலும் இந்த அறுபது வருஷங்களில் அது துளியும் வசப்படாதது பேராச்சர்யமே. புரிந்துகொள்ளவே முடியாத எண்ணற்ற புதிர்களில் இதுவும் ஒன்றா? ஓர் உயரிய இனிய இசைக்கருவியை இப்படியும் கையாள முடியுமா? சாத்தியமா?
சிலபோது தூக்கக்கலக்கத்தில் எது கனவு எது நிஜம் புரியாது. நாதசுரக்காரரும் அவரது ஓசைகளும் வந்து சங்கடப்படுத்தும். பயப்படுத்தும். ‘வா உன்னை கவனித்துக் கொள்கிறேன்’ என்று மருட்டும்.
வேலை நிமித்தம் ஒவ்வொரு முறை போகும்போதும் கோவிலுக்கு ஒரு விசிட் அடிப்பது வழக்கமாகி யிருந்தது. இம்முறை அவரோடு பேசிப் பார்த்துவிட வேண்டும் என்கிற சங்கல்பத்தோடு போனால் ஒவ்வொரு முறையும் ஏனோ முடிவதில்லை. ஒருவித கூச்சத்தோடு நின்றுவிட்டு உடனே திரும்புவது தொடர்ந்து நடக்கிறது.
நாத பிரம்மம் நாதோபாசனை என்று திருவையாற்று மேல் சங்கதிகளில் உயரப் பறந்துகொண்டிருப்பவனுக்கு இங்கு நேரும் மன உளைச்சல் தாள முடியவில்லை.
அன்று அலங்கார தீபாராதனை நடந்து கொண்டிருந்தது.
– தலைவர்களுக்கெல்லாம் தலைவனுக்கு வணக்கம் சொல்கிறோம். நமோ வயம் வைச்ரவணாய… குர்மஹே மஹாராஜாய நமக.
அர்ச்சகரின் ஸ்பஷ்டமான உச்சரிப்பின் ரம்யத்தில் மெய்சிலிர்த்தது.
திடீரென்று நாதசுர வித்வான் பிடித்த பிடியில் மண்டபத்து வெளவால்கள் அச்சத்தோடு, வெளியேபோக வழி தெரியாமல் அங்குமிங்கும் பறந்து அல்லாடின.
வெளியில் கண்டதேவி தேர் சாதுவாக நின்றிருந்தது.
”ஸ்வாமி இந்த வருஷம் தேர் ஓடுமா?” என்ற கேள்வி அர்ச்சகரை சற்றே இம்சித்திருக்க வேண்டும். மெல்லிய குரலில் சொன்னார். ”ஓடணும். தடையிராமல் ஒடினா நல்லது. ஜனங்களின் வாழ்க்கையும் சபிக்ஷமாக சீராக ஓடும். தினசரி என் பிரார்த்தனையே இதுதான்.”
பிரகதாம்பாள் மெனனகைக்கு அர்த்தங்கள் ஆயிரம்.
தாண்டிச் செல்லுமுன் நின்றேன். அந்த நாதசுரக்காரரைப் பார்த்தேன். இப்போதுதான் முதன்முறையாக என்னைப் பார்க்கிறாப்போலப் பார்த்தார்.
”அய்யா?”
என் பக்கம் திரும்பினார். ”அய்யா பேரு?” என்றேன் பவ்யமாய்.
இந்தக் கேள்வியை இதுவரை யாரும் என்னிடம் கேட்டதில்லை, என்கிறாப்போல ஒருமுறை பிராகாரத்து குதிரை வாகனத்தை வெறிக்கப் பார்த்தார்.
”என்ன கேட்டீங்க? பேரா? என்னா இருக்குது பேர்ல? ஏதோ பேரு…”
”எனக்கு சங்கீத ஞானம் கொஞ்சம் உண்டு. இப்ப என்ன ராகம் என்ன கீர்த்தனை வாசிச்சீங்க புரிபடலியே?”
எதிரே இருந்த அம்மன் சந்நிதியை உற்றுப் பார்த்தார். மெல்லிருளில் பிரகதாம்பாளின் மூக்குத்தி பளீரிட்டது.
”அவளாண்ட கேளேன் சொல்லுவா!”
தொண்டையைச் செருமிக்கொண்டு லேசாகச் சிரித்தார். அவரு‍டைய முதல் சிரிப்பு வியப்பாக இருந்தது. ”நான் வாசிக்கறது புரியலையா?”
நான் அவரையே பார்த்தேன்.
”தினமும் நாலுவேளையும் வாசிக்கறேன். பிரகதாம்பாள் இதுவரை கண்டுக்கலே. சொர்ணமூர்த்திஸ்வரரும் எனக்கென்னன்னு இருக்கார். எனக்கு நம்பிக்கை இருக்கு. அவங்க வேடிக்கை காட்டறாங்கன்னு நினைக்கறேன். நான் விடமாட்டேன். விடவே மாட்டேன்.” உணர்ச்சி தெறிக்கப் பேசினார். சொல் தடுமாறியது. ”என்னைக் கேட்கறதுக்கு பதில் அவங்களைக் கேளுங்க. அவங்களையே கேளுங்க. கேட்டு எனக்கும் சொல்லுங்க…”
– இஷ்டம் மனீஷானாம். அகம் மனிஷானாம். சர்வம் மனிஷானாம்… எம்பெருமானே நாங்கள் விரும்புவதைக் கொடுத்தருள்வாய். இவ்வுலக இன்பத்தை எனக்குத் தருவாய். எப்போதும் எல்லாவற்றையும் கொடுத்தருள்வாய்.
சற்று நிதானத்துக்கு வந்திருந்தார். ”உக்காருங்க” என்றார்.
”என்ன கேட்டீங்க, ராகமா – கீர்த்தனமா..ன்னுதானே? அதெல்லாமில்லே. என் சோகத்தை சாமிகிட்டே வாத்தியத்தின் மூலமாச் சொல்றேன். அழறேன். புலம்பறேன். தினமும் இதே புலம்பல்தான். சொர்ணமூர்த்திஸ்வரர் ஒருநா கேப்பார். நிச்சயமாயக் கேப்பார். அந்தம்மா, அதான் உள்ளருக்காளே, பிரகதாம்பா… கேப்பா. கட்டாயம் அவராண்ட எடுத்துச் சொல்லுவா. இன்னம் நேரம் வரல்ல. நேரம் வரல்ல…” கண்களில் ‍லேசாக நீர் கோர்த்துக் கொண்டது.
”ஆறு வயசில இதைத் தூக்காமத் தூக்கினேன். இதுலதான் மாயாமாளவ கெளளை தொடங்கினேன். இதுலதான் சாதகம். இதுலதா எல்லாமும்…” என்றவாறே கம்பீரமாக நாதசுரத்தைப் பிடித்துக் கொண்டார். கண்களைத் துடைத்துக் கொண்டார். சீவளியை லேசாகப் பதப்படுத்திச் சொருகினார். ரெண்டு தடவை ஒலியெழுப்பினார். உயர்த்திப் பிடித்தார். ”கேட்டுக்கோ!”
என்ன ஆச்சர்யம். என்ன மாயம் இது. எந்த உலகத்தில் இருக்கிறோம். எங்கே சஞ்சரிக்கிறோம்!…
”நீதான் பெரிய சங்கீதக்காரனாச்சே – கேளு…”
அட நாத நாமக்ரியை.
இது கரகரப்ரியா.
ஓஹோ ஹோ … தலை சுற்றுகிறாப்போலிருந்தது. இந்த சுநாதம் எங்கே ஒளிந்திருந்தது இதுவரை. என்ன அற்புதம்… பல்லவியிலேயே மத்தாப்பு விசிறினாப் போல நானா பக்கமும் ராக தேவதைகள் ஜ்யாசல்யத்தோடு… பூப்பூவாய்…
”இதோ தரேன். பொறுக்கிக்கோ…” கண்களை மூடிக் கொண்டார். ”இப்ப வாசிக்கறேன் ஒருவரி. சொல்லு பாப்போம். இதுவரை எவனும் இப்படி வாசித்திருக்க மாட்டான்…”
ஆஹ்ஹா, பிலஹரி.
இது சிம்மேந்திர மத்திமம்.
ஒவ்வொன்றிலும் சாம்பிளாக வாசிப்பு. அபாரம்.
என்ன குழைவு. என்ன இழைவு. என்ன லாவகம். என்ன அலட்சியம். எல்லாம் என்வசம் என்று எங்கும் இசைத் துகள்கள் பரவி கோபுரம் தொட்டு அதையும் தாண்டி ஆகாயம் நோக்கிச் சென்றது.
வாசுதேவ் எனி… கல்யாணி. மத்திம ஸ்தாயி.
பூமியிலே அமைதி நிலவட்டும். தண்ணீரில் அமைதி நிலவட்டும். எல்லாமே நமக்கு மகத்துவத்தை உண்டாக்கட்டும்.
”கல்யாணியிலே மூணுமணி நேரம் விடாம ஆலாபனை பண்ணுவேன்… ஹ ஹ ஹஹ்ஹா.”
ப்ருதிவ்.. சந்திரிஷம்… மந்திரம் சொல்லிக்கொண்டே வந்த அர்ச்சகர் ஸ்தம்பித்து நின்றார். ஏழெட்டு பேர் கூடி விட்டனர்.
”அட நம்ம சம்முகமா… நம்ம சம்முகமா…”
”அடேடே…யப்பா!”
கசங்கிய அழுக்கு ஜிப்பா நனைந்திருந்தது. தோள்கள் லாவகமாக அசைந்தன. தலை சிலிர்த்து நின்றது. கண்கள் சிவந்து போயிருந்தன. சந்நதம் வந்திருந்தது அவரிடம். தவில்காரர் மருண்டுபோய் உட்கார்ந்திருந்தார். அவருக்கு வில்களே ஓடவில்லை.
மேல்துண்டு நழுவி விழுந்ததைக் கூட கவனிக்காமல் கல்யாண வசந்தத்தில் இழைந்து கொண்டிருந்தார் சண்முகம். ‘நாத லோலுடை…’
தேவகானம். இது நாதோபாசனை. என்ன லயம். உலகமே பிரமித்து நின்றாப் போல…
எந்த இனிமையைத் தருவதற்காக நீங்கள் இசையின் இன்ப வடிவாக விளங்குகிறீர்களோ அந்த இசையின் மூலமாக உங்களை ஆர்வத்துடன் நாடுகிறோம். இந்த சமர்ப்பணம் மூலம் பூமியில் அமைதி நிறைக. எல்லாம் பெருக எல்லாரும் பெறுக…
சொர்ணமூர்த்திஸ்வரர் – பிரகதாம்பாள் புதிரை விடுவிக்கத் தயாராக இருப்பதைப் போல புன்னகைத்துக் கொண்டிருந்தனர்.


Series Navigation

நா.விச்வநாதன்

நா.விச்வநாதன்