சோதிர் இலதா கிரிசாவின் ‘தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்! ‘ கட்டுரைக்கு மறுப்பு.

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

மு.இளங்கோவன்


அன்புள்ள ஆசிரியருக்கு,வணக்கம்.

சோதிர்லதா கிரிசா அவர்களின் கட்டுரை தினமணியிலும் திண்ணையிலும் படித்துப்பார்த்தேன். தமிழ் இலக்கிய உலகில் பல காலம் பேசப்பட்ட செய்தியைப் புதியதாக் கண்டுபிடித்துச் சொல்வதுபோல் எழுதியுள்ளார்.

கிரந்த எழுத்துப் பயன்பாடு தேவை எனவும், புதிய குறியீடுகளைப் பயன்படுத்திப் பிறமொழியினருக்குத் தடுமாற்றம் இல்லாமல் தமிழ்படிக்க வாய்ப்பை உருவாக்கலாம் எனவும் பிறமொழிச் சொற்களை வேண்டிய அளவு கலந்து எழுதலாம் எனவும் இவர் விரும்புகிறார்.

தமிழ் அறிஞர் ஒருவர் தமிழின் நிலை குறித்துப் பின்வருமாறு வருந்திக் குறிப்பிடுவார். ‘தமிழ்த்துறை மடம் போன்றது. யார் வேண்டுமானாலும் வந்து கருத்துச் சொல்லலாம்’ என்று நிலை உள்ளது என்றார்.
தமிழே படிக்காத பலர் தமிழின் பெயரில் பெரிய பொறுப்புகளில் ஒட்டிக்கொண்டுள்ளதை இன்று நோக்கும்
பொழுது இஃது உண்மை என்பது புலனாகும்.

தங்கள் துறை சார்ந்து ஒருபக்கம் கூடத் தமிழில் எழுதாதவர்கள் தமிழ் எழுத்தைக் குறைக்க வேண்டும் என்பார்கள்(இவர்களை எழுத்துத் திருத்திகள் என்பார் அறிஞர்.வ.சுப.மாணிக்கம் அவர்கள்).தமிழ் ஒலியைக் கற்பிக்க ஆய்வுக்கூடம் வேண்டும் என்பார்கள். ஆங்கிலத்தைக் கலந்து எழுதலாம் என்பார்கள்.ஆங்கிலம் கற்றால் அயல்நாட்டில் வேலை என்பார்கள்.திருக்குறளுக்கு உரைவரைவார்கள். முடக்கத்தானை மரம் என்பார்கள்.இவர்களைக் கண்டிக்கும் வண்ணம் தமிழகத்தில் உணர்வுடையவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளமையும் தமிழுக்கு எதிராகப் பேசுபவர்களை ஆதரித்து,வாய்ப்பு நல்கும் ஊடகங்கள் மிகுந்துள்ளமையும் வேதனை அளிக்கின்றது.

எனவேதான் தமிழ்பற்றி தமக்கு எதுவும் தெரியாது எனக் கூறிக்கொண்டு மிக ஆபத்தான பல கருத்துகளைச் சோதிர் இலதா கிரிசா முன்வைத்துள்ளார்.இவர் பெயரே தமிழில்லை.இவர் பெயர் ஏடுகளில் தெரிந்தவுடன் இவர் தமிழுக்கும் தமிழர்களுக்கும் அறிவுரை சொல்ல வந்துவிட்டார். போகிறபோக்கில் தமிழ் நிறுவனங்களுக்கு மூதறிவாளராக மாறினாலும் வியப்பில்லை.

மொழி கருத்தைப் புலப்படுத்தும் கருவி மட்டுமன்று.மொழியில் வரலாறு உண்டு.சமூக நடப்பியல் உண்டு. மொழியில் அமைந்த சொற்களில் வரலாறு உண்டு.பண்பாடு உண்டு.காய்ச்சல் ஜுரமாகியது.பீவராகி இன்றுள்ளதை நோக்கும்பொழுது தமிழ்ச்செல்வாக்கு நாட்டில் இருந்ததையும் வடமொழி ஆதிக்கம் நிலவியதையும்,இன்று ஆங்கில வல்லாதிக்கம் உள்ளதையும் இச்சொல்லாட்சிகள் தெரிவிக்கின்றன.இவற்றை அறியாதவர்கள் எந்தச் சொல்லை ஆண்டால் என்ன என்று பொறுப்பற்ற கருத்துகளை முன்வைக்கின்றனர்.

பிறமொழிச் சொற்களின் கலப்பால் பல தமிழ்ச்சொற்கள் வழக்கில் இல்லாமல் ஒழிந்தன.காலதர்,பலகணி எனும் தமிழ்ச் சொற்களை விட்டுவிட்டு சன்னல் வைத்துக்கட்டுகிறோம்.சோறு மணக்கும் நாட்டில் சாதம் வைக்கப்படுகிறது.மிளகுச்சாறு இருந்த நாட்டில் இரசம் வைக்கிறோம்.குழம்பு சாம்பாராகிவிட்டது.’நல்லா இருக்கிறாயா?’ என்பது செளக்கியமா? என ஆகிவிட்டது.

தமிழில் சற்றொப்ப 25 மொழிகளைக் கலந்து பேசுகிறோம்.நம் பேச்சில் 80 விழுக்காட்டுச்சொல் அயற்சொல்லாக உள்ளது. குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் இல்லை.மனம்போன போக்கில் பிறமொழி ஒலிப்புக்கலந்து எழுதவும் பேசவும் செய்கிறோம்.ஆங்கிலவழிக்கல்வியின் வல்லாதிக்கத்தால் மொழி,இனம்,பண்பாடு கேள்விக்குறியாகியுள்ளது. தாய்மொழியில் கல்வி கொடு எனத் தமிழகத்தில் நீதிமன்ற வாசலில் நிற்கும்படி நிலைமை தாழ்ந்துவிட்டது.இச்சூழலில் சிக்கலில் இருந்து மொழியைக் காக்க அறிவுரை கூறாமல் மொழிக் கலப்புக்குத் தூவம் இடுவது வேண்டாத விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

கவிச்சக்கரவர்த்தி கம்பன் வடமொழியிலிருந்து கதையை எடுத்தாலும் தமிழ் மரபுக்கு உட்பட்டே தன் காப்பியத்தைப் படைத்துள்ளான்.’சானகி நகுவள்’ என்பான்.வீடணன் என்பான்.தமிழ்ஒலிக்கு ஏற்பவும்,தமிழ்ச் சொல்லாக்கமாக்கியும் வடசொல்லை மாற்றியுள்ள அருமையை உணர்ந்து சோதிர் லதாக்கள் சரியான வழியில் தமிழை எழுத வேண்டுகிறோம்.

மு.வ,கல்கி,அழகிரிசாமி உள்ளிட்ட அறிஞர்களின் நூல்களை இனியேனும் படித்துப்பாருங்கள். தமிழின் இனிமைபுரியும்.

மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா


muelangovan@gmail.com

Series Navigation

முனைவர் மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன்