சொன்னாலும் சொல்வார்கள், திருக் கயிலாயம் வெறும் பாறை என!

This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue

மலர் மன்னன்



ஸேது ஸமுத்திர கால்வாய் திட்டம் என்று பெயர் சொல்கிறார்கள். ஸேது என்றாலே பாலம் என்றுதான் அர்த்தம். ஆனால் பாலமே இல்லை என்கிறார்கள். ராமநாதபுரம் சமஸ்தான மன்னர்களுக்கு சேதுபதி என்பதுதான் பட்டப் பெயர். அதாவது பாலத்திற்கு அதிபதி. ஆனாலும் பாலமே இல்லை என்கிறார்கள். பிறகு ஏன் ஸேது ஸமுத்திரக் கால்வாய் திட்டம்? ஸேது ஸமுத்திரம் என்பது காலங்காலமாய் இருந் து வரும் அடையாளம் என்பதால்தானே? வழக்கு என்றால் வெறும் மணல் திட்டுகளின் தொகுப்பு என்பார்கள். ஆனால் அடையாளப் படுத்த மட்டும் பாலம் என்பதைத்தான் பயன் படுத்துவார்கள்! ஏன் இந்த முரண்பாடு?

கால வெள்ளத்தின் பின்னால் இன்னும் கொஞ்சம் போனால் ஸ்ரீராம ஸேது என்கிற அடையாளம் தெரியும். அது ஹிந்து தேச கலாசாரத்தின் அடையாளம். மர்யாதா புருஷோத்தம் ராமபிரானும் கீதாசாரியன் கண்ணபிரானும் ஒவ்வொரு ஹிந்துவின் அணுவிலும் உள்ளனர். சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி, சிறுவர்கள் யாவரும் ஸ்ரீராமர், சிறுமியர் எல்லாம் சீதையரே என்று பெருமிதம் கொள்ளும் ஹிந்துக்களிடம் ராமர் இருந்ததற்கான அடையாளமே இல்லை என்று சொன்னால் எதிர்வினை என்னவாக இருக்கும்? அல்லது என்னவாக இருக்க வேண்டும் என்பதை அவரவர் தீர்ப்பிற்கே விட்டு விடுகிறேன்.

ஆர்க்கியாலாஜிகல் சர்வே ஆப் இந்தியா என வழங்கப்படும் ஹிந்துஸ்தானத்துத் தொல்லியலாய்வு மற்றும் பராமரிப்பு அரசினர் நிறுவனம் இதுவரை ஸ்ரீராம ஸேது பற்றி எவ்வித ஆய்வும் செய்ததுமில்லை, அறிக்கை தயாரித்து ஆவணப் படுத்தியதுமில்லை. ஆகவே ஸ்ரீராம ஸேது பற்றிய விவரங்களைத் தாக்கல் செய்வதற்கான அருகதை அதற்கு இல்லை. மத்திய அரசின் கலாசாரத் துறை அதனிடம் தகவல் கேட்டபோதே இது பற்றி நாங்கள் ஆய்வு ஏதும் செய்ததில்லை என்றுதான் நியாயமாக அது பதிலளித்திருக்க வேண்டும்.

ஸ்ரீராம ஸேதுவைத் தொல்பொருளாகப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இல்லை என்று தொல்லியல் ஆய்வு மற்றும் பராமரிப்பு நினைத்துக்கொண்டிருக்கிறது என்றால் அது தன் கடமைகள் யாவை என்பதையே சரியாக அறியவில்லை என்று அர்த்தம். வெறும் புராதனக் கட்டிடங்கள் மட்டுமல்ல, இயற்கையாகவே அமைந்த நூதனமான கலாசார அடையாளங்களையும் இனங் கண்டு பாதுகாத்துப் பராரிப்பது அதன் கடமை. ஆர்க்கியாலாஜிகலை ஆர்க்கிடெக்சராஜிகல் என்று கண்டுபிடித்திருகிறார்களா என்ன?

ஸ்ரீ ராம ஸேது ஒரு நீண்ட நெடிய கால கலாசாரத்தின் அடையாளம். தொன்மையான தொரு மாபெரும் சமூகத்தின் உயிரோட்டத்தில் இறண்டறக் கலந்துவிட்ட நம்பிக்கையின் அடையாளமும் கூட. நமது தொல்லியல் துறையில் பொதுவாகப் புராதனக் கட்டிட நிர்மாணங்களைப் பற்றிய புள்ளி விவரங்களைத்தான் வைத்திருப்பார்கள்.

ஆயிரமாயிரம் ஆண்டு வயதான மரங்கள் கல்லாகிப் போய்விடுவதுபோல் எந்த யுகத்திலோ முறையான பாலம் அமைக்க வேண்டிய அவசியமோ அதற்கான அவகாசமோ இன்றிக் கடலில் பாதை அமைக்க அணை கட்டுவதுபோலப் பாறைகளை இட்டு நிரப்பிய அமைப்பின் மீது கால வெள்ளம் போர்த்தி மூடிய மணல் கெட்டித்துப் போய், உடைத்து எறிந்தால்தான் அகற்ற இயலும் என்னும் அளவுக்குக் கவசம்போலாகிவிட்டது பற்றி மத்திய அரசின் கலாசார அமைச்சகம் தனது அறியாமையின் காரணமாக விசாரித்தாலும் அல்லது உச்ச நீதிமன்றமேகூடக் கேட்டிருந்தாலும் எங்களிடம் இது பற்றி விவரம் இல்லை. காலாசாரம் தொடர்பான ஆய்வாளர்களிடமோ ஆன்மிகப் பெரியவர்களிடமோ கேளுங்கள் அல்லது புவிஇயலாளரிடம் விசாரியுங்கள் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும், அந்த ஆர்க்கியாலாஜிகல் சர்வே? அதற்கு மாறாக அதிகப் பிரசங்கித்தனமாகச் சம்பந்தா சம்பந்தமின்றி ஒரு அறிக்கை தந்தால் அவ்வாறு தருமாறு அது நிர்பந்திக்கப்பட்டிருக்கும் என்கிற முடிவுக்குத்தான் வரவேண்டியுள்ளது. தொல்லியல் துறை என்ற முறையில் இதுபற்ற்றி ஆய்வு செய்து எங்கள் கருத்தைத் தெரிவிக்கிறோம், அவகாசம் தாருங்கள் என்றாவது அவர்கள் சொல்லியிருக்க வேண்டும்; அவ்வாறில்லாமல் ராமபிரான் இருந்ததற்கே வரலாற்றுச் சான்று இல்லை, ஆகவே அவர் கட்டியதாகக் கூறப்படும் பாலத்திற்கும் வரலாற்றுச் சான்று இல்லை என்று வாக்குமூலம் அளித்தால் அது
வெளி நிர்ப்பந்தமாக இருக்கக்கூடுமேயன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

இந்த ஐயப்பாட்டின் முள் முனை மூவரை நோக்கி நீள்கிறது. ஒருவர் மத்திய கலாசார அமைச்சர் சோனி, சட்ட அமைச்சர் பரத்வாஜ் மற்றும் என்ன காரணத்தாலோ ராமர் பாலத்தை உடைத்தே தீருவது எனத் துடித்துக்கொண்டிருக்கும் மத்திய தி மு க கடல் வழிப் போக்குவரத்து அமைச்சர் டி ஆர் பாலு. அரசு அதிகாரிகளை இவர்கள் நிர்ப்பந்திதிருக்கக் கூடும் என்கிற சந்தேகத்தின் பேரில் இம்மூவரையும் மன்மோஹன் சிங் தமது அமைச்சரவயிலிருந்து நீக்கியிருக்கவேண்டும். ஆனால் அதைச் செய்யாமல் தாம் வெறும் பொம்மலாட்டப் பிரதமர்தான் என்பதை இந்த விஷயத்திலும் நிரூபித்திருக்கிறார். இதில் அமானுஷ்ய மவுனம் நீடிப்பதால் னமது சந்தேக முள் சோனியா காந்தியை நோக்கியும் நீள்கிறது.

ஸ்ரீராமர் என்று ஒருவர் இருந்தார் என்று ஒப்புக்கொண்டால்தானே ஸ்ரீ ராமர் கட்டிய பாலமா அல்லவா என்கிற விவாதம் எழும், ஆகவே ஸ்ரீ ராமபிரான் இருந்ததற்கே ஆதாரம் இல்லை என்று சொல்லிவிடுங்கள் என்று ஹிந்துதானத்தின் கலாசாரம், நம்பிக்கை, புனிதம் ஆகியவை பற்றி ஏதும் தெரிந்துகொள்ள முனையாத கிறிஸ்தவரான மத்திய காலாசாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனியோ, தேர்தலில் வெற்றிபெற்றமைக்குக் குறிப்பாகக் கிறிஸ்தவர்களுக்கு நன்றி சொன்ன தி மு க மத்திய கடல்வழிப் போக்குவரத்து அமைச்சர் டி ஆர் பாலுவோ அவர்களை வற்புறுத்தியிருக்கக் கூடும் என்கிற சந்தேகம் எழுமானால் அது நியாயம்தானே?

ஒரு நாட்டின் மலைகள், நூதனமான புவியமைப்புகள், விசாலமான நீர்நிலைகள் முதலானவை யாவும் பரம்பரையாகத் தொடர்ந்து வரும் கலாசாரத்தின் அடையாங்கள். அவற்றுக்கு மூலாதாரமாக இருப்பவை மக்களின் உள்ளார்ந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் ஊற்றுக்கண் சமயம், அதாவது அந்த நாட்டின் மண்ணுகே உரித்தான மதம். புராதன நாகரிகங்கள் தவழ்ந்த எகிப்து, பாலஸ்தீனம் (இன்றைய இஸ்ரேல் உள்ளிட்ட பகுதி), கிரேக்கம் முதலான இடங்களில் இத்தகைய சமய நம்பிக்கை சார்ந்த இயற்கையாகவே உருவான கலாசார அடையாளங்கள் இன்றும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருவதைக் காணலாம். ஜெருசலேத்தில் உள்ள ஒரு குன்றிலிருந்துதான் தம் இறை தூதர் குதிரை மீதேறி வானுலகு ஏகினார் என்பது முகமதியர் நம்பிக்கை. அந்தக் குன்று அவர்களுக்கு ஒரு புனிதச் சின்னம். உங்கள் இறை தூதர் இந்தக் குன்றின் மீதிருந்து குதிரை ஏறி வானுலகு ஏகியமைக்கு வரலாற்று ஆதாரம் இல்லை என்று எவரும் சொல்லிவிட முடியாது. சொல்லிவிட்டுப் பத்திரமாக வீடு திரும்பவும் முடியாது!

மிகத் தொன்மையான ஹிந்து நாகரிகத்தின் தொட்டிலான பழம் பெரும் பாரத பூமியிலும் ஏராளமான இயற்கை அமைப்புகள் சமய நம்பிக்கையின் அடிப்படையில் உருவான கலாசார அடையாளங்களாகத் திகழ்வதில் வியப்பில்லை.

விழுப்புரம் அருகில் கண்ட மானடி என்ற பெயரில் ஒரு சிற்×ர். இங்கதான் சீதை கேட்ட பொன்மானை ராமர் அடிச்சாரு என்று நேரில் கண்டதுபோல ஒரு பொட்டலைக் காட்டிச் சொல்கிறான் அங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிற ஒரு சிறுவன்! இதற்கு என்ன சொல்வது? ஆழப் பதிந்த அவனது நுட்மான உள்ளுணர்வைச் சிதைத்துப் போடுவதுதான் பகுத்தறிவு போலும்! தனது கிராமத்தில்தான் ராமபிரானும் சீதை பிராட்டியாரும் தங்கிச் சென்றனர் என்கிற அந்தச் சிறுவனின் பெருமிதமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வை ஏளனம்
செய்வது என்ன நாகரிகம்? பண்பாடுள்ள எவரும் இத்தகைய நுண்ணுணர்வுகளை ஏளனம் செய்யவோ அவமதிக்கவோ மாட்டார்கள்.

ராமர் பாலம் இயற்கையாக உருவான மணல் திட்டுகளின் தொகுப்பு என்று அமெரிக்காவில் உள்ள நாஸா விண்வெளி ஆய்வு மையம் சொல்லிவிட்டதாகப் பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால் நாஸா இதுபற்றிய தனது கருத்தை வெளியிடுகையில் முடிவாக என்னதான் சொல்லியிருக்கிறது?

பூமியைச் சுற்றி வரும் செயற்கை கோள்களில் பொருத்தபட்டுள்ள தொலை தூர உணர்வுப் பதிவுக் கருவிவிகளும் புகைப்படக் கருவிகளும் இதுபோன்ற திட்டுகள் எவ்வாறு தோன்றின என்றோ , அவை தோன்றி எத்தனை காலம் ஆயிற்று என்றோ நேரடியான தகவலைத் தரக் கூடியன அல்ல. அவை மனித முயற்சியால் உருவாக்கப் பட்டவையா அல்லவா என்றும் அவற்றின் மூலம் திட்ட வட்டமாகக் கூற முடியாது என்றுதான் நாஸா அதிகாரி மார்க் ஹெஸ் அறிவித்திருக்கிறார். அதாவது ராமர் பாலம் இயற்கையாகத் தோன்றிய மணல் திட்டுகளின் தொகுப்பா அல்லது மனித முயற்சியால் உருவான அமைப்பா என்று எங்களால் சொல்ல முடியாது என்று அதற்குப் பொருள்!

ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்குமிடையே அச்சு அசலாக ஒரு பாலம் போலவே தோற்றமளிக்கும் அமைப்பு ஸ்ரீராம பிரான் தம் துணைவர்களின் உதவியால் உருவாக்கியது என்ற கருத்தை நாஸா உறுதி செய்யவும் இல்லை, அதே சமயம் மறுக்கவும் இல்லை! ஆனால் ஹிந்துக்களின் நம்பிக்கைகள், மன உணர்வுகள் ஆகியவற்றை எள்ளி நகையாடுவதில் மகிழ்ச்சியடையும் தகவல் தொடர்பு சாதனங்களும் அரசியல்வாதிகளும் நாஸாவின் கருத்திற்கு மாறான தகவலைத் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள்!

ஹிந்துஸ்தான அரசின் கலாசார அமைச்சகமும் சட்ட அமைச்சகமும் அரசு சார்ந்த அமைப்புமே ஸ்ரீராம ஸேது பற்றிப் பொறுப்பில்லாமலும், கலாசார நுட்பம் தெரியாமலும் ஒரு வாக்கு மூலத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தமது சிறுபிள்ளைத்தனத்தை பகிரங்கப் படுத்தக் கூடுமானால் நமது பொறுப்பிலிருந்து கை நழுவிப் போய்விட்ட திருக்கயிலாயத்தின் நிலை என்னவாகுமோ என யோசிக்க வேண்டியுள்ளது.

திருக் கயிலாயம் திபேத்தினுள் இருந்த போதிலும் ஹிந்துஸ்தானத்திற்கு வெகு அருகாமையி லுள்ளதுதான் என்பது வரைபடத்தைப் பார்த்தால் தெரியும். வட கிழக்கேஇமய மலையின் ஓர் அங்கமாகவே திகழ்வது திருக் கயிலாயம். ஹிந்துக்கள், சமணர்கள், பவுத்தர்கள், திபேத்தின் பவுத்தத்திற்கு முற்பட்ட புராதன சமயத்தினர் ஆகிய அனைவருக்குமே சமய நம்பிக்கையின் அடிப்படையில் மிகப் புனிதமாக இருந்துவரும் திருக் கயிலாயம், கம்பீரமாக எழுந்து நிற்கும் ஒரு கரிய நிறக் கற்பாறை. பெரும்பாலும் பனிப் போர்வையால் தன்னைப் போர்த்திக் கொண்டிருப்பதால் அது வெண்ணிறமாய்ப் பொலிகிறது. சூரிய ஒளி படும்போது அது மஞ்சள் நிறமாகவும் ஆரஞ்சு வண்ணத்திலும் ஒளிர்கிறது! ஸிந்து, சட்லெட்ஜ், பிரம்மபுத்திரா முதலான ஆறுகளின் தோற்றுவாய் அது. ஞான பூமிக்காகப் பணி செய்து வந்த நாள்களில் தலங்கள் பலவற்றுக்கும் சென்று அவற்றின் தனிச் சிறப்பு குறித்து எழுதி வந்த நான் திருக் கயிலாயமும் சென்று வர வேண்டும் என மணியன் விரும்பினார். அதற்கான நடைமுறைப் பணிகளும் தொடங்கின. ஆனால் குடும்பப் பிரச்சினை ஒன்றால் அந்த அரிய வாய்ப்பை இழக்க நேரிட்டது.

ஹிந்துஸ்தானத்தின் தென்கோடியிலுள்ள தமிழகம் உள்ளிட்ட எல்லாப் பகுதிகளையும் சேர்ந்த மக்கள் எவ்வித வசதியையும் எதிர்பாராமல், எத்தகைய இடையூறுகளையும் பொருட்படுத்தாமல் திருக் கயிலாய யாத்திரையைக் காலங் காலமாக மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்கு எவ்விதக் கட்டுப்பாடும் இருந்ததில்லை!

1950 ல் சீனா துராக்கிரமாகத் திபேத்தை ஆக்கிரமித்துக் கொண்ட பிறகு ஹிந்துஸ்தானத்திலிருந்து எவரும் திருக் கயிலாயம் செல்வதற்கு சீன அரசு அனுமதிக்கவில்லை. 1980 ல் நடந்த பேச்சு வார்த்தையின் விளைவாக ஆண்டு தோறும் பாரதத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் யாத்திரிகர்கள் திருக் கயிலாய தரிசனம் செய்ய சீன அரசு அனுமதித்தது. எனது ஞாபகம் சரியாக இருக்குமேயானால் சுப்பிரமணியம் ஸ்வாமி இதற்குப் பெரு முயற்சி எடுத்துக் கொண்டார் எனலாம்.

இன்று உரிய கட்டணம் செலுத்திச் சீனாவின் அனுமதிச் சீட்டைப் பெறாமல் பாரதத்திலிருந்து எவரும் திருக் கயிலாய யாத்திரை மேற்கொள்ள இயலாது! திபேத் இன்று சீனாவுக்குச் சொந்தம். ஆகவே திபேத் எல்லைக்குள் உள்ள திருக்கயிலாயமும் சீனாவுக்குச் சொந்தமாகிப் போனது!

சீனா திபேத்தை ஆக்கிரமித்தபோதே நேரு அதனைத் துணிவுடன் கண்டித்து சர்வ தேசப் பிரச்சினையாக்கியிருந்தால் அன்றைக்கு இருந்த கடுமையான கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நிலையில் அமெரிக்காவும் மேற்கத்திய வல்லரசுகளும் அதற்கு ஆதரவு தெரிவித்திருக்கும். இரண்டாம் உலகப் போரில் தீவிரமாக இறங்கியதால் சிறிது சலிப்புற்றிருந்த ரஷ்யா பிரச்சினையில் தலையிடாமல் ஒதுங்கியிருந்திருக்கும். மேலும் தொடக்கத்திலிருந்தே ரஷ்யாவுக்கு சீனாவின் மீது அப்படியொன்றும் பந்த பாசமில்லை. அங்கும் கம்யூனிஸம் காலூன்றியதால் ஒரு சம்பிரதாயமான இசைவுதான் இருந்தது (பிறகு இரண்டுக்குமிடையே எல்லைப் பிரச்சினை எழுந்து பிணக்கும் தோன்றியது). 1949ல்தான் பிறந்திருந்த செஞ்சீனமும் நெருக்கடியைச் சமாளிக்க இயலாமல் பின் வாங்கியிருக்கும். திபேத் தொடர்ந்து ஒரு சுயாட்சி அதிகாரம் உள்ள பிரதேசமாக நீடித்திருக்கும். திருக்கயிலாய புனித யாத்திரை மேற்கொள்ள சீனாவின் தயவை எதிர் நோக்கியிருக்கும் தலைக் குனிவும் நமக்கு நேர்ந்திருக்காது. நேருவின் மார்க்ஸிய மயக்கம் சீனாவின் மீதான மயக்கமாகிவிட்டதால் அதன் அத்துமீறலை அவரால் எதிர்க்க இயலவில்லை. இந்தி சீனி பாய் பாய் என்றார்; பிறகு அதற்கும் நம்மை விலை கொடுக்கச் செய்துவிட்டுப் போனார்!

1962 ல் சீனா பாரதத்தின் மீது படையெடுத்து, வட கிழக்கு இமய மலைப் பகுதியில் பாரதத்திற்குச் சொந்தமான பெரும் பகுதியை ஆக்கிரமிப்புச் செய்து தனதாக்கிக்கொண்டு விட்டது. பல்லாயிரக் கணக்கான சதுர மைல்கள் பரப்புள்ள பகுதியை சீனாவிடம் இழந்துவிட்ட மத்திய காங்கிரஸ் அரசின் கையாலாகாத்தனம் குறித்து நாடாளுமன்றத்த்தில் கடும் விமர்சனம் எழுந்தது.

அப்போது, பிரதமராகப் பொறுப்பு வகித்த நேரு, ஒரு புல் பூண்டு கூட முளைக்காத வெறும் பனிப் பாலைவனத்தைத்தான் சீனா தன் வசமாக்கிக் கொண்டுள்ளது என்று சமாதானம் சொன்னார்.

உடனே எதிர்க் கட்சி வரிசையிலிருந்த லோஹியாவோ அன்றி காமத்தோ எழுந்து, பிரதமர் அவர்களே உங்கள் மண்டையும் ஒரு முடிகூட இல்லாமல் வழுக்கையாகத்தான் கிடக்கிறது. அதற்காக உங்கள் தலையை யாராவது பறித்துச் செல்ல ஒப்புவீர்களா என்றுகேட்டார். அதற்கு நேருவால் அசட்டுச் சிரிப்புச் சிரித்துத்தான் சமாளிக்க முடிந்தது.

மெய்ஞானத்தை மதிக்காத விஞ்ஞானத்தை மனித சமுதாயம் மேற்கொண்டதால்தான் இன்று உலகமே இயற்கையின் பலவாறான சீற்றங்களுக்கு இலக்காகியுள்ளது. சுற்றுப்புறச் சூழலின் சீரழிவுக்குக் காரணமே இயற்கையின் தோற்றத்தில் இறைச் சக்தியைக் கண்டு அதனை மதிப்பதற்கும் மகிழ்வதற்கும் மாறாக எந்த வகையில் அந்த இயற்கை அமைப்பைச் சிதைத்து ஆதாயம் அடையலாம் என்று பேராசைப்பட ஆரம்பித்ததுதானே!

அதிலும் மக்களின் மன உணர்வுகளையோ நுட்பமான அழகியலையோ சிறிதும் மதிக்காத சீன அரசு ஏதேனும் ஆதாயம் கருதி தன் வசமுள்ள கயிலாய பர்வதத்தைச் சிதைக்கவோ அதன் மீது ஏதேனும் கருவிகளைப் பொருத்தவோ, அல்லது திருக் கயிலாயத்தையே முற்றிலுமாக அகற்றிவிடவோ முற்பட்டால் என்னவாகும்?

தனது பேராசையை நிறைவேற்றிக்கொள்ள எத்தகைய முறைகேட்டையும் செய்யத் தயங்காதவர்கள் இன்றைக்கு சீனாவில் அதிகாரம் செலுத்துபவர்கள் என்பது உலகமே அறிந்த உண்மை. ஒரே பண்டத்தை மிக உயர்ந்த தரம், நடுத்தரம், கடைத்தரம் என்று மூன்று விதமாக உற்பத்தி செய்து உலகச் சந்தையில் நபர்களின் தன்மைக்கு ஏற்ப விற்கிற ஒழுக்கங்கெட்ட தேசம் எனப் பெயர் எடுத்துள்ள தேசம் இன்றைய சீனம்!

இத்தகைய சீனா கவர்ந்துகொண்ட நிலத்தைப் பற்றிச் சர்வ சாதாரணமாகக் கருதிய நேருவின் வழி வந்தவர்களின் கையில்தான் இன்று அதிகாரம் உள்ளது.

மக்களின் மன உணர்வுளைச் சிறிதும்பொருட்படுத்தாமல் தனது எல்லைக்குட்பட்ட ராமர் பாலத்தைப் பற்றி அலட்சியமாக வாக்குமூலம் அளித்து, அந்தப் பாலத்தைத் தகர்ப்பதில் எவ்விதத் தயக்கமும் தனக்கு இல்லை எனத் தனது சொரூபத்தை பகிரங்கப் படுத்தி விட்ட காங்கிரஸ் வசமுள்ள இன்றைய பாரத அரசு, ஒருவேளை சீனா திருக் கயிலாயத்தைச் சிதைக்க முடிவு செய்தால் அதுபற்றி எவ்விதக் கவலையும் கொள்ளாது என்றுதானே எண்ண வேண்டியிருக்கிறது?

இன்றைக்கு இருக்கிற கங்யூனிஸ்ட் ஆதரவு பாரத காங்கிரஸ்தி முக கூட்டணி அரசு, பெரும்பான்மை மக்களின் மன உணர்வுகளை மதிக்காத அரசு. எத்தகைய பாதகத்தை விளைவித்தாலும் அவர்கள் சகித்துக் கொள்வார்கள் என்று அலட்சியம் செய்யும் அரசு. கண் துடைப்பாகச் சிறிதளவு பரிகாரம் செய்வதுபோலக் காண்பித்தாலேயே திருப்தியடைந்துவிடும் ஒட்டகக் கூட்டம் என்று பெரும்பான்மை மக்களை துச்சமெனக் கருதும் அரசு.

எனவேதான் ராமர் பாலத்தோடு கூடவே திருக் கயிலாயம் பற்றிய கவலையும் எழுகிறது.
(1950ல் சீனா திபேத்தை ஆக்கிரமித்தபோது, பாரத அரசு சீனாவுக்குத் தனது கண்டனத்தைத் தெரிவிக்கத் தவறவில்லை. வல்லபாய் பட்டேல், ராஜாஜி போன்றவர்கள் நேருவுக்கு இணையான முக்கியத்துவம் பெற்றிருந்ததால்தான் அது சாத்தியமாகியது.அமெரிக்காவும் பிரிட்டனும் பாரதத்தின் நிலைப் பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தன. இதன் காரணமாகவே சீனா பாரதத்தின் மீது உள்ளூரப் பகைமை கொள்ளலாயிற்று. எவ்வித முறைகேட்டுக்கும் தயங்காத சீனாவிடம், அரசியல், பொருளாதாரம், வாணிபம் என எல்லாக் கோனங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. திண்ணை வாசகர்கள் விரும்பினால் இதுபற்றி ஒரு தனிக் கட்டுரை எழுத முற்படுவேன்)


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்