சேதி வந்தது

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

வாஸந்தி


பூஜாரி விட்டல் ராவின் வீடு தெருக்கோடியில் இருந்தது. ஐந்து மணிக்கு அவரைப் பிடிக்கணும் என்று கனகம்மா தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள்.இப்பொழுது மணி நான்கு தான். விட்டல்ராவ் சரியாக நாலரை மணிக்குக் கோவிலுக்குக் கிளம்பிவிடுவார். கிளம்பும் சமயத்தில் போய் நின்றால் ஏகமாய் பிகு செய்துக் கொள்வார்.ஆபீஸுக்குக் கிளம்பும் சமயத்தில் ஏதாவது விவரம் கேட்க எதிரில் சென்றால் ரமணாவின் அப்பாவுக்குக் கோபம் வருமே அதுபோல.வெங்கடாசலபதிதான் விட்டல்ராவின் எஜமானர். தேமேனென்று நிற்கும் கற்சிலை.வாயைத் திறந்து ஏன் தாமதமாக வந்தீர் என்று கேட்கப்போவதில்லை. இந்தமட்டும் என்னை கவனிக்க நீர் இருக்கிறீரோ நான் பிழைத்தேனோ என்று வெங்கடாசலபதிக்குத் தோன்றவேண்டும்.விட்டல் ராவ் சூட்டும் கோட்டும் அணியவில்லையே தவிர பூஜாரி வேலையையும் ஏதோ ஆபீசர் வேலை போலத்தான் நினைப்பதாகத் தோன்றும்.தனுர் மாசக்குளிரானாலும் டாணென்று காலை ஐந்தரை மணிக்குக் கோவில் வாசலைத் திறக்கப் போய்விடுவார். பன்னிரெண்டு மணிக்குக் கோவில் வாசல் மூடப்படும் எந்தக் கொம்பன் வந்தாலும் திறக்காது. ஒரு மந்திரி அந்த ஊர் பக்கம் 12 அடித்து பத்து நிமிஷம் கழிந்து வந்தார். அவருடன் வந்தவர்கள் அரக்கப் பரக்க விட்டல் ராவிடம் வந்து திறக்கச் சொன்னார்கள்.கோவில் விதியை வெங்கடாசலபதியே வந்தாலும் மாற்ற முடியாது என்றுவிட்டார் விட்டல்ராவ்.மாலை ஐந்து மணிக்கு

ஒரு விநாடி பிசகாமல் கோவில் திறக்கும்.அதற்குமுன்பு சாமியை தரிசனத்துக்குத் தயார் செய்யவேண்டும்.

விட்டல்ராவ் தனது கடமைகளைப் பட்டியலிடும்போது சொர்கவாசல் சாவி அவரிடம்தான் இருப்பதாகத்

தோன்றும்.

வேகமாக நடை போடும்போது கனகம்மாவுக்கு லேசாக மூச்சிறைத்தது.மத்தியான்னம் சாப்பிட்டுப் படுத்ததும் கண் அசந்தது தப்பு.இத்தனைக்கும் இன்று காலை காபி போட்டுக் குடிக்கும் போது விட்டல் ராவைப் பார்க்கவேண்டும் என்று நினைவு வந்தது.மூன்றரை மணிக்கு அவர் வீட்டுக்குச் செல்வது என்ற முடிவையும் அப்போதே எடுத்தாகிவிட்டது.இன்று மதியம் படுக்கக்கூடாது என்ற எண்ணத்தை மீறி வந்த தூக்கத்தினால் கண்விழிக்கும் போது மணி மூன்றரை ஆகி விட்டிருந்தது. முகத்தைக் கழுவி வாய் கொப்புளித்துக் கிளம்பத்தான் நேரம் இருந்தது.

பூஜாரியின் மனை வாசலை மிதிக்கும் போது விட்டல்ராவ் கோவிலுக்குக் கிளம்ப ஆயத்தமாகியிருந்தார்.

‘கனகம்மாவா, வா ‘ என்றார் சுமுகமாக. ‘ நானே நினைச்சேன் நீ வருவேன்னு. ‘

கனகம்மா தலைப்பால் முகத்தைத் துடைத்தபடி திண்ணையில் அமர்ந்தாள். ‘ஞாபகம் இருக்கா உங்களுக்கு ? ‘ என்றாள் மெல்லப் புன்னகைத்து.

‘தனுர் மாசம் பிறந்ததுமே உன் ஞாபகம்தான் ‘ என்று விட்டல் ராவ் சிரித்தார். ‘நாலு நாள் முந்தியே பஞ்சாங்கத்தைப் பார்த்து வெச்சுட்டேன். வர்ற எட்டாம் தேதி ரேவதி நட்சத்திரம். அதாவது அடுத்த செவ்வாய்க் கிழமை. ‘

‘செவ்வாய் கிழமையா ? ரொம்ப சரி .கோவில்லெ ஒரு அர்ச்சனைக்கு ஏற்பாடு பண்ணணும் ரமணா பேரிலே. ‘

‘அதையும் குறிச்சு வெச்சுண்டாச்சு.பண்டிகைப் பாரணைன்னு வராமெ போனாலும் அன்னிக்குதானே நீ கோவில் பக்கம் வருவே ? ‘

கனகம்மா எழுந்தாள். ‘அப்படி வந்தாத்தான் சாமிக்கும் ஞாபகம் இருக்கும் ‘.

விட்டல் ராவ் யோசனையுடன் அவளைப் பார்த்தார்.

‘அவனுக்கு இப்ப என்ன வயசு இருக்கும் ? ‘

‘யாருக்கு ? ரமணாவுக்கா ? இருக்கும் நாற்பது நாற்பத்திரெண்டு- இருக்காது ? ‘

‘இருக்கும் அவன் பிறந்து ஆறுமாசம் கழிச்சு லக்ஷ்மிக்குத் துளசி பிறந்தா. ‘

கனகம்மாவுக்கு முகமெல்லாம் மலர்ந்து போயிற்று.

‘துளசியை என்ன வம்பு செய்வான் ரமணா! ‘

அவளது நினைவுகளைக் கலைக்க சங்கடப் படுபவர்போல் விட்டல் ராவ் நின்றார்.

‘ரமணா எப்ப வர்றான், சேதி உண்டா ? ‘

‘ யாருக்குத் தெரியும் ? வருவான், வருவான்.வராமெ எங்கெ போவான் ? ‘

கனகம்மா அவரைப் பார்த்துச் சிரித்தாள். ‘ பிறந்த நாள் அன்னிக்கு வந்து நின்னாலும் நிப்பான். யார் கண்டது ? ‘

பிறகு நினைவு வந்தவள்போல் தொடர்ந்தாள். ‘துளசி பேரன் பேத்தி எடுத்தாச்சுன்னா நம்பக்கூடமாட்டான்! ‘

கனகம்மா அது ஏதோ பெரிய ஹாஸ்யம் போல் சிரித்தாள். உள்ளேயிருந்து எட்டிப்பார்த்த விட்டல் ராவின் மனைவி லக்ஷ்மி, ‘ரமணா வரானா ? ‘ என்றாள்.

‘வந்தாலும் வருவான் ‘,என்றாள் கனகம்மா, சொல்லும்போதே அதை நம்புபவள்போல.

‘வந்ததும் அவன் போகவிடாமெ, ஒரு நல்ல பெண்ணாய்ப் பார்த்துக் கல்யாணத்தைச் செய் ‘, என்றாள் லக்ஷ்மி.

‘ ஆமாமாம். செஞ்சுட வேண்டியதுதான்.ஏதாவது நல்ல பெண் இருந்தா நீங்கதான் பார்த்துச் சொல்லணும். ‘

‘ ஆகா,கண்டிப்பா ‘, என்றாள் லக்ஷ்மி.

‘ அதை நீ சொல்லணுமா ? ‘

கனகம்மாவுக்குக் காரணம் புரியாமல் மனசு நெகிழ்ந்தது.

விட்டல்ராவின் முகம் திடாரென்று இறுகிற்று.

‘சரி கனகம்மா.எனக்கு நேரமாச்சு.கிளம்பணும். அர்ச்சனைக்கு ஏற்பாடு பண்ணறேன்.நைவேத்தியம், வழக்கம் போலேயா ? ‘

‘ஆமாம் ‘.

‘ பிஸிபேளா ஹுளி அன்னா, சேமிகே பாயஸா ? ‘ என்றாள் லக்ஷ்மி.

கனகம்மா சிரித்தாள்.

‘ஆமாம்! ரமணாவுக்கு அதுதான் பிடிக்கும். ‘

‘ ருசி மாறியிருக்கும்டா இப்ப! ‘

‘ மாறாது. என் பிள்ளையைப் பத்தி எனக்குத் தெரியாதா ? ‘

விட்டல்ராவ் எந்த அபிபிராயத்தையும் சொல்லாமல் செருப்பைமாட்டிக் கொண்டு லக்ஷ்மியைப் பார்த்து, ‘மழை வரும் போலிருக்கு. முற்றத்திலே ஏதோ உலர்த்தியிருக்கே போலிருக்கு ? ‘ என்றார்.

‘ஓ ஆமாம் ‘ என்று லக்ஷ்மி உள்ளே சென்றாள்.

கனகம்மா அண்ணாந்து வானத்தைப் பார்த்தாள்.மேகம் ஏதும் காணப்படாவிட்டாலும், விட்டல்ராவ் சொன்னதால் மழை வந்தாலும் வரலாம் என்ற யோசனையுடன் வீட்டை நோக்கிக் கிளம்பினாள்.போகும் வழியில்

மளிகைக் கடைக்காரர் நாகப்பாவிடம் கால் கிலோ சர்க்கரை, 50 கிராம் முந்திரிப்பருப்பு திராட்சை, 10 கிராம் கிராம்பு என்று பட்டியல் கொடுத்து கணக்கில் சாமான் வாங்கிக் கொண்டாள்.

‘என்ன கனகம்மா விசேஷம் ? ‘ என்றார் நாகப்பா.

‘என் பிள்ளை ரமணாவுக்குப் பிறந்த நாள் வர்ற செவ்வாய் கிழமை! ‘

‘ஓ, சரிதான். ரமணா வரானா ? ‘

‘வருவான் ‘.

தராசில் முந்திருப்பருப்பை போட்டுக்கொண்டிருந்த அதை நிறுத்தி அவளைப் பார்த்தார்.

‘சேதி வந்திருக்கா ? ‘

கனகம்மா இல்லை என்று தலையசைத்தாள்.

‘சேதி அனுப்பற வழக்கமே அவனுக்கு இல்லே.திடார்னு வந்தாலும் வரும். சொல்லமுடியாது. ‘

‘சரிதான். வந்தா தெரியப் படுத்துங்க. ‘

சின்னச் சின்னக் காகிதப் பொட்டிலங்களக் கப்பாணிக்கயிற்றால் கட்டி அவள் கைகளில் நாகப்பா வைத்ததை சேலைத் தலைப்பில் சேர்த்து இடுப்பில் செறுகி வீட்டை நோக்கி நடக்கும்போது கனகம்மாவுக்கு திடாரென்று சோர்ந்தது.

ரமணா வரானா ? சேதி வந்திருக்கா ? இதென்ன கேள்வி கேட்கிறார்கள் எல்லாரும் ? சேதி அனுப்பிதான் பெத்தவளைப் பார்க்க ஒருத்தன் வரணுமா என்ன ? மழை வருமோ என்று வானத்தை அடிக்கடி பார்த்தபடி

அவள் வீட்டுக்குச் சென்றபோது பக்கத்து வீட்டு ராஜம்மாவின் மகள் சரோஜா துளசி மாடத்தில் விளக்கேற்றி ஏதோ பாட்டை முணுமுணுத்தபடி நின்றிருந்தாள். நல்ல பெண். இந்த மாதிரி ஒரு பெண் ரமணாவுக்கு வாய்த்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள். ஆனால் சரோஜாவுக்கு பதினெட்டு வயதுகூட ஆகவில்லை. ரமணாவின் வயதுக்கு யார் இப்போது பெண் கொடுக்க சம்மதிப்பார்கள் என்று அவளுக்கு யோசனை ஏற்பட்டது. முதலில் அவன் வரட்டும் . அவன் மனசில் என்ன இருக்கிறதோ ? அவன் பெரிய படிப்பு படித்தவன்.படித்த பெண்தான் அவனுக்கு சரிப்படும். ‘ நானே பார்த்துண்டாச்சு. இவளைத்தான் நான் கட்டிக்கப் போறேன் என்று சொல்லி அவள் முன் நிறுத்தினால் அவள்தான் என்ன செய்யமுடியும் ?மகாராஜனாய் இரு என்று ஆசீர்வதிப்பதைத்தவிர ? அவள் கோபப்படுவாள் என்று பயந்துதான்

அந்த அசட்டுப் பிள்ளை ஏதும் தெரிவிக்காமல் இருக்கிறானோ ?

அவளது யோசனை அந்தப் புதிய கோணத்தைத் தொட்டதும், அதுதான் காரணமாக இருக்கவேண்டும் என்று அவளுக்கு ஊர்ஜிதமாயிற்று. அட பைத்தியமே என்று சிரித்துக் கொண்டாள். நேரிலே வா அவளையும் அழைச்சிண்டு உன் பவிசை உன் பெண்டாட்டிக்குச் சொல்றேன். வந்தால், உனக்குப் பிடிச்சதை செய்து போட அவளுக்குக் கத்துக்குடுப்பேன் . பிஸிபேளா ஹுளி அன்னா செய்யத் தெரியுமா ?

அடுப்பில் அரிசியும் பருப்பும் சேர்ந்து வெந்ததும் கனகம்மா தயாராக இருந்த புளிக்குழம்பை அதில் ஊற்றி நன்றாகக் கலக்கினாள். கொப்பரையுடன் கூடிய மசாலாக் குழம்பின் வாசனை மிகச் சரியான பதத்தில் இருப்பதைக் கண்டு திருப்தி ஏற்பட்டது. எல்லாம் சேர்ந்து கொதித்து சுருளும்போது இறக்கி நெய்யில் கடுகையும் முந்திரிப்பருப்பையும் ஒரு பிடி கருவேப்பிலையும் தாளித்துப் மேலாகப் பரப்பியபோது ரமணா இதைச் சாப்பிட வந்தே ஆகவேண்டும் என்று தோன்றிற்று. அவனுக்குப் பிடித்த சேமியா பாயசம் தயாராகியிருந்தது.சேமியாவுடன் நான்கு கிராம்பையும் நெய்யில் வறுத்து பாலில் வேகவிடவேண்டும் அவனுக்கு.சாப்பாட்டில் அத்தனை வக்கணைப் பேசும் பிள்ளை. இதையெல்லாம் மறந்திருக்கமுடியாதுமைன்று காலை எழுந்திருக்கும்போது கனகம்மாவுக்குக் காரணம் புரியாமல் மனசு பரபரத்தது. நேற்று பின்னிரவிலோ இல்லை இன்று விடியலிலோ கண்ட கனவின் நினைவு ரம்யமாக மனசில் அமர்ந்திருந்தது.கனவு வீட்டில் கல்யாணக்களைக் கட்டியிருந்தது.தோரணமும் விளக்குகளுமாக.ரமணா கழுத்தில் மாலையுடன் நின்றான்.கனவு கலைந்த பிறகும் அந்தக் கனவுக் காட்சியில் அவள் மீண்டும் மீண்டும் திளைக்க முயன்றாள்.

வெங்கடாசலபதிக்கு அன்று விசேஷ அலங்காரம் செய்திருந்த விட்டல்ராவ், தனது கணீரென்ற குரலில் அர்ச்சனையை ஆரம்பித்ததும், ரமணாவின் கல்யாணத்தை உன் சன்னிதியிலே நடத்தறேன் என்று வெங்கடாசலபதியிடம் அவள் வாக்கு கொடுத்தாள். அர்ச்சனை முடிந்து தீபாராதனை எடுத்து அவளிடம் கற்பூரத் தட்டை விட்டல்ராவ் நீட்டியபோது கமலம்மா மகிழ்ச்சியுடன் சொன்னாள்.

‘லக்ஷ்மி அன்னிக்கு ரமணாவுக்குக் கல்யாணத்தை பண்ணிடுன்னாளே,பலிக்கும்னு நினைக்கறேன். இன்னிக்கு விடியக்காலம் அவனை செவந்தி மாலையும் கழுத்துமா சொப்பனத்திலே பார்த்தேன். ‘

‘பலிக்கட்டும் ‘ என்றார் விட்டல்ராவ் உச்சரித்துக் கொண்டிருந்த மந்திரத்தை நிறுத்தி.

வீட்டுக்குச் செல்வதற்குள் ரமணா நிச்சயம் வருவான் என்று நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.ராஜம்மா

வீட்டைத் தட்டி பிரசாதம் கொடுத்து ‘ரமணாவுடைய பிறந்த நாள் இன்னிக்கு,அவன் வந்தாலும் வருவான் ‘ என்றாள். ‘அப்படியா ? ‘ என்றாள் ராஜம்மா வியப்புடன். ‘கடுதாசு வந்திருக்கா ? ‘

‘கனா வந்தது ‘ என்று கனகம்மா சிரித்தாள்.

மதியமே ரமணா வரலாமோ என்று அவள் காத்திருந்து பிறகு பசி பொறுக்காமல் சாப்பிட்டு மிகுந்த பிஸிபேளாவையும் பாயசத்தையும் அவனுக்கு என்று மூடிவைத்தாள்.மதியம் போய் மாலை வந்து,தோட்டத்து மாமரத்துப் பட்சிகளின் குரல் ஓய்ந்து, வீட்டு முற்றத்தில் அடர்த்தியான கரும் போர்வை படர்ந்தது. துளசி மாடத்து விளக்கின் எண்ணையும் தீர்ந்து அணைந்த தருணத்தில் அன்று செய்த அதிகப்படியான வேலையினால் கனகம்மாவுக்குக் கண்ணைச் சுழற்றிக்கொண்டு வந்தது.

இரவுச் சாப்பாடு முடிந்து பாத்திரங்களைக் கழுவி வைத்து அவள் விளக்கை அணைத்துப் படுக்கச் செல்லும்போது ரமணா வந்தான்–எப்போதும் போல, மெல்ல சப்தமில்லாமல், பூனை போல. அவன் வந்தது தெரியாததால் பின்னாலிருந்து அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டதும் அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.மெல்லிய நிம்மதியும் ஏற்பட்டது.

‘என்னடா ரமணா, ஆளையே காணும் ? ‘ என்றாள் மனத்தாங்கலுடன்.

அவன் சிரித்தான். ‘குறை பட்டுக்காதே. உன்னைப் பார்க்கத்தான் வந்தேன் ‘ என்றான் ரகசியக் குரலில்.

அவளுக்கு திடாரென்று நினைவு வந்தது. ‘ சாப்பிட்டியோ ? எப்பவும் சாப்பாடு முடிஞ்சப்புறம் வந்து நிப்பே திருடன் மாதிரி!ரெண்டு அரிசி ரொட்டி பண்ணித் தரட்டுமா ? ‘

‘வேண்டாம் ,வேண்டாம் ,நா சாப்பிட்டாச்சு. ‘ என்றான் அவன் அவசரமாக.

‘அம்மா சமையல் கூட உனக்கு சாப்பிடணும்னு இப்ப தோணறதில்லே ‘ என்றாள் அவள் துக்கத்துடன். ‘எங்கேடா போயிட்டே சொல்லாமெ கொள்ளாமெ ? ‘

‘உஷ், மெள்ளப் பேசும்மா. ‘ என்று அவள் வாயைப் பொத்தினான். உள்ளங்கையில் பூண்டு வாசனை வந்தது.

‘எந்த தப்புக் காரியமும் நா பண்ணல்லே அப்பா நினைக்கிறமாதிரி ‘ என்றான் மெல்ல.

‘ நீ ஒரே பிள்ளை. உன்னைப் பத்தி அவருக்குக் கவலையிருக்காதா ? உனக்கு என்ன குறை வெச்சார் ?

படிக்கவெக்கல்லியா ? ‘

‘நீ இந்த மாதிரி அழுதியானா நா கிளம்பிப் போறேன். நா எந்தத் தப்பும் பண்ணல்லேன்னா நீ என்னை நம்பணும்! ‘

‘நா நம்பறேண்டா! ‘ அவள் மீண்டும் அழுதாள்.

‘நா வந்தது தப்பு ‘ என்று எழுந்தவனை அவள் பதற்றத்துடன் அமரச் செய்தாள். தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு நிதானமாகச் சொன்னாள். ‘எல்லா பெரிய படிப்பையும் ஃபஸ்டுலே பாஸ் பண்ணிட்டு இப்படி

அலையறையே, எங்களைப் பாத்துக்கறது உன் கடமைன்னு நினைக்கலியா நீ ? ‘

‘இல்லே! ‘ என்றான் அவன் அவளுக்குப் புரியாத உத்வேகத்துடன். அவன் கண்களில் இருந்த பளபளப்பு அவளை அச்சுறுத்திற்று.

‘ ‘உங்களுக்குப் போதுமான காசு இருக்கு.செளகர்யமா வாழ வசதி இருக்கு. என் உதவி தேவை இல்லே. ‘

‘காசு இருந்தா போதும்னு நினைக்கிறியா ? ‘

‘ அது இல்லாததாலெ நரகத்திலே இருக்கிறவங்களை எனக்குத் தெரியும். அவங்களுக்கு உதவ யாருமில்லே! அவங்களுக்குக் கிடைக்கவேண்டிய நீதிக்காகப் போராடறதுக்கு ஆள் தேவை. ‘

‘ நீதான் அவதரிச்சிருக்கியா அதுக்கு ? ‘

‘ அப்படித்தான் வெச்சுக்கயேன்! ‘

இவனுக்கு புத்தி சொல்ல தனக்குத் திராணி இல்லை என்ற பலவீனம் அவளை ஆட்கொண்டது.

‘ஊர் உலகத்திலே யாரும் காணாத பிள்ளையாட்டம் இருக்கே ‘.

‘ ஆமாம். நா மத்த வீட்டுப் பிள்ளைகள் மாதிரி இருக்கமுடியாது. அதைப் புரிஞ்சுக்கோ. ‘

‘அதுதான் ஏன்னு கேக்கறேன். நாலைஞ்சு பிள்ளைகள் இருந்தா, சரி ஒருத்தன் ஊருக்கு தத்தம்னு இருப்பேன். ‘

அவன் அவளது தாடையைத் தடவினான் செல்லமாக.

‘இந்த பிரமையெல்லாம் உனக்குக் கூடாது. பகவத் கீதையிலே என்ன சொல்லியிருக்குன்னு

அப்பாவைக் கேளு. அம்மா-பிள்ளை, அப்பா-பிள்ளை என்கிற உறவெல்லாம் எதேச்சையானது. உனக்கு நான் சொந்தம்னு நீ உரிமை கொண்டாட முடியாது. ‘

‘இதைச் சொல்லத்தான் வந்தியா ? ‘ அவளையறியாமல் குரல் உயர்ந்தது.

‘உஷ்! ‘ என்றான் அவன். ‘ஒரு உதவி கேட்க வந்தேன்.அவசரமா காசு வேணும். மூவாயிரம் ரூபாய். ‘

‘மூவாயிரமா ? எங்கிட்ட ஏது அத்தனைப் பணம் ? ‘

‘பணமா இருக்காது தெரியும்.பண்டமாத்தான் குடேன்! ‘

அவள் தலைக் குனிந்தபடி மெளனமானாள். இரண்டு கைகளிலும் இரண்டு தங்கக் காப்பு இருந்தன.

ஒன்றைக் கழற்றி அவனிடம் கொடுக்கும்போது, விளக்கு எரிந்தது. அவளுக்கு விரல்கள் லேசாக நடுங்கின. மார்பு படபடத்தது.

நிமிர்ந்தபோது பக்கத்துவீட்டு ராஜம்மா நின்றிருந்தாள்.

எதிரில் நிற்பது ராஜம்மா என்று புரிந்து கொள்ளவே கனகம்மாவுக்குச் சில விநாடிகள் பிடித்தன.

ராஜம்மாவின் முகம் பேயறைந்ததுபோல் இருந்தது.

‘கனகம்மா! ‘ என்றாள் ராஜம்மா பிசுபிசுத்த குரலில்.ஏற்கனவே அகன்ற கண்கள் இன்னும் அகண்டுபோனதுபோல் இருந்தன.

‘உங்க மகன் பேரு ரமணா தானே ? ரமணா ஸ்ரீநிவாச ராவ் ? ‘

‘ஆமாம் ராஜம்மா, உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்! ‘

ராஜம்மாவுக்கு மூச்சு வாங்கியது.

‘இப்பத்தான் டி.வி. செய்தியிலே சொல்றாங்க அவனைப்பத்தி. ‘

கனகம்மா விருட்டென்று எழுந்தாள்.

‘என்ன சொல்றாங்க ? ‘

ராஜம்மா தயங்கினாள்.

கனகம்மா அவள் தோளை இறுக பற்றினாள். ‘என்னடி சொல்றாங்க ? ‘

‘போலீஸ் ரமணாவை சுட்டுடுத்தாம். ‘

கனகம்மா உறைந்து போனாள்.

‘ என்னது ? என்னடி சொல்றே ? ‘

‘ரமணா ஒரு தீவிரவாதி.ரொம்ப நாளா போலீஸ் தேடிக்கிட்டிருந்திருக்கு ‘.

ராஜம்மாவுக்குப் பின்னால் நின்றிருந்த சரோஜாதான் அதைச் சொன்னாள்.ராஜம்மா அதைச் சொல்லியிருந்தால் கனகம்மா அவள் கழுத்தை நெரித்திருப்பாள்.

‘பொய்! ‘ என்றாள் கனகம்மா கோபத்துடன். ‘போலீஸ் வேணும்னே அப்படிக் கதைக் கட்டிவிட்டிருக்கு.ரமணா நல்ல பிள்ளை. ஒரு தப்பும் அவன் செய்யல்லே ‘.

‘ரெண்டு வருஷத்துக்கு முந்தி ரமணா ஒரு வங்கியைக் கொள்ளையடிச்சிருக்கான். 12 லட்சம்

திருடினான்னு சொல்றாங்க. பல கொலைகள்ளையும்… ‘

‘சரோஜா, நீ உள்ளே போடா! ‘

திமு திமுவென்று தெருவே கூடிவிட்டது திண்ணையில்.கனகம்மாவுக்கு அவர்கள் எல்லாம் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று விளங்கவில்லை. யார் அவள் எதிரில் நின்றாலும் ‘அவன் நல்லவன் ‘ என்றாள்.

இடையில் ராஜம்மா வந்து அருகில் அமர்ந்தாள். ‘போலீஸ் ஸ்டேஷன்லேந்து போன் வந்திருக்கு.சடலத்தை ஏத்துக்கிறிங்களான்னு கேக்கறாங்க. ‘

அவள் பேசவில்லை.குண்டு துளைத்த உடம்பையா ? எதுக்கு, எதுக்கு இனிமே ?

‘ஏத்துக்காமெ ? ‘ என்றார் விட்டல்ராவ். ‘ரமணா அநாதையில்லே. பெத்தவ பார்க்க வேண்டாமா ? ‘

‘வேண்டாம் ‘ என்று அவள் சொல்லிக்கொண்டாள்.யாருக்கும் காதில் விழவில்லை.

நா ஒரு தப்பும் பண்ணல்லே நீ என்னை நம்பணும் என்றான் ரமணா காதருகில். நம்பறேன்

நம்பறேன் என்று அவள் தலை அசைத்தபடி அமர்ந்திருந்தாள்.

போலீஸ் வந்திருக்கு,போலீஸ் வந்திருக்கு என்றார்கள்.அவளுக்குப் புதிதாக அடிவயிற்றை கலக்கிற்று. ஒரு போலீஸ்காரர் வாசலில் ஜோடுகளைகழற்றி வைத்து உள்ளே வந்தார்.அவள் எதிரில் யாரோ கொண்டுவந்து போட்ட ஸ்டூலில் அமர்ந்தார்.சுபாவமான கூச்சமும் பயமுமாக அவள் சுவரில் ஒண்டிக்கொண்டாள்.

‘உங்களைத் தொந்திரவு செய்யமாட்டேன் பயப்படாதீங்க ‘ என்றது போலீஸ். ‘உங்க மகன் தானே

ரமணா என்கிறது ? ‘

‘ஆமாம் ‘.

‘அவனை நீங்க பார்த்து எத்தனை வருஷமாச்சு ? ‘

அவள் ஒரு பெருமூச்சுடன் சொன்னாள். ‘இருபது வருஷமாச்சு. ‘

‘ இருபது வருஷமா அவன் இங்கே வரவேயில்லையா ? ‘ போலீஸ் நம்பாதமாதிரி இருந்தது.

‘இல்லே. ‘ என்றார் அங்கு நின்றிருந்த விட்டல் ராவ். ‘பத்து வருஷம் முந்தி அவங்க அப்பா செத்துப்போனபோது பேப்பர்லே போட்டோம் அவன் வருவானோன்னு. அப்பவும் வரல்லே. ‘

‘கடைசியா பார்த்து அப்ப இருபது வருஷமாச்சுங்கறீங்க. அப்ப ஏதானும் பேசினானா ? ‘ என்றது போலீஸ் கனகம்மாவிடம்.

‘கடைசியா அவன் வந்தப்ப பணம் வேணும்னான். என் கை வளையைக் கழட்டிக்கொடுக்க இருந்தப்ப, அவனுடைய அப்பா வந்து சத்தம் போட்டார். அவனைத்திட்டி விரட்டிட்டார். அதுக்கப்புறம் அவன் வரவேயில்லே. ‘

போலீஸ் எழுந்தது. ‘இந்தப் பக்கத்திலே பயங்கர தீவிரவாதத்தைப் பரப்பினவன் அவன். வங்கிக் கொள்ளை கொலை எல்லாத்திலேயும் ஈடுபட்டவன். தேடிக்கிட்டிருந்தோம்.கையிலே ஏ.கே 47 வெச்சுக்கிட்டு திறிஞ்சவன். பிடிபட்டப்ப எங்களைக் கொல்லப் பார்த்தான். அதனாலெதான் அவனைச் சுடவேண்டிவந்தது. ‘

‘நீ சொல்றது அண்டப் புளுகு ‘ என்று சொல்ல நினைத்து கனகம்மா எல்லாரிடமும் சொல்வது

போல போலீஸைப் பார்த்து ‘ரமணா நல்லவன் ‘ என்றாள்.

போலீஸ் ஒரு விநாடி அவளை நிதானமாகப் பார்த்தது.பிறகு குனிந்து அவள் தோளைத் தட்டிவிட்டுச் சென்றது.

நடுக்கூடத்தில் ரமணா படுத்திருந்தான். அவள் வியப்புடன் கூர்ந்து பார்த்தாள்.கழுத்தில் மாலை

இருந்தது. செவந்தி மாலை. இது கனவுதான் என்று அவளுக்கு உறுதியாகத் தோன்றிற்று.

—-

vaasanthi@hathway.com

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி