செல்வராஜ் ஜெகதீசனின் “இன்னபிறவும்” கவிதை நூல் மதிப்புரை

This entry is part [part not set] of 32 in the series 20100711_Issue

க. அம்சப்ரியா


நீள்வாசிப்பில் புரிபடும் கவிதைத்தளம் – க. அம்சப்ரியா

கவிதை தன்னை மரபுக் கவிதையிலிருந்து தோலுரித்துக்கொண்டு புதுக்கவிதையென்று உருவங்கொண்ட கால இடைவெளியில் எண்ணற்ற புதுக்கவிதைகள் தோன்றத் துவங்கின. மன எழுச்சியும் மன எழுச்சிப் போலியும் அப்படியான கவிதைகளை உருவாக்கின. கவிதை எழுதப்பட்டதா? உற்பத்தி செய்யப்பட்டதா? என்று வியக்கும்படியாக எண்ணிக்கையளவிலும் பல்கிப்பெருகின. உண்மையில் இத்தனை மக்கள் தொகையைச் செம்மைப்படுத்த இவைகள் போதாதவைகளே!

புதுக்கவிதையை புறம்தள்ளிக்கொண்டு நவீன கவிதை எழுந்திருக்கும் என்று கூறிவிட இயலாது. புதுக்கவிதைக் காலத்திலே, மரபின் மிச்சத்தை எளிய சொற்களாக்கி புதுக்கவிதையென்று கொடுத்துக்கொண்டிருந்தவர்கள் மத்தியில், புதுக்கவிதைகளுக்குள்ளேயே மரபின் ஆழத்தையும், புதுக்கவிதையின் புதுமையையும் கலந்து நவீனத்தை உருவாக்கியவர்களும் ஆங்காங்கு இருக்கத்தான் செய்தார்கள். பத்திரிக்கைகளில் அவ்வப்போது ஓரிரு கவிதைகளை படைத்துவிட்டு, வாழ்வின் வேகச்சூழலில் வழமையான வேலைகளில் தொலைந்து போனவர்கள் உண்டு.

எழுதப்படுவதற்கும், வாசிக்கப்படுவதற்கும் வாழ்க்கை ஒவ்வொரு வினாடியும் புதுப்புது அனுபவங்களையும் பாதிப்புகளையும் வைத்தே இருக்கின்றது. அதனால்தான், கவிஞர்களால் புதுப்புது தொகுப்புகளை உருவாக்க முடிகிறது. நவீனக் கவிதையின் வேர்களையும் புதுக்கவிதையின் சாயலையும் கொண்டு இயங்கும் தளமாய், நான் வாசிக்க நேர்ந்த தொகுப்பு “இன்ன பிறவும்”

நவீன கவிதையின் வெளிப்படையான அடையாளமாக, நெறிபடும் வாழ்வனுபவத்தைச் சொல்லலாம். கணநேர ரசிப்புப் பார்வைகள் கூட ஆழ்ந்த மொழி அனுபவத்தால், ஒரு நவீன கவிதையாகிவிடலாம் என்பதற்கு செல்வராஜ் ஜெகதீசன் எழுதியுள்ள “கொஞ்சமும்” கவிதையைச் சொல்லலாம்.

புனைவுகளின் எளிய வாழ்வு, நவீன கவிதையின் நல்ல வடிவமைப்பு, புதிய பார்வையும், சொல்ல வந்ததை வார்த்தைகளை செலவழிக்காமல் சொல்லியிருப்பதும் சிறப்பானது.

காதலைச் சொல்லியிருக்கிறார், நாற்காலிகளைச் சொல்லியிருக்கிறார், தானாய் விழும் அருவியைச் சொல்லியிருக்கிறார்… இப்படி நிறைய சொல்லியிருக்கிறார் என்று சொல்லக் காரணமிருக்கிறது. முதல் வாசிப்பில் எதுவும் ஈர்ப்பில்லாதது போலிருந்தாலும், சற்றே வாசிப்பை நிறுத்திவிட்டு யோசிக்கையில், கவிதையின் சூட்சுமம் புரிபடுகிறது.

இரண்டாவது தொகுப்பில் சில சோடைகள் நேர்ந்துவிட, இரண்டு காரணங்கள் வெளிப்படையானது. முதல் கவிதைத் தொகுப்பை சராசரியான பார்வையில், எல்லோராலும் பாராட்டும்படியாய் நாம் பார்த்துக் கொள்வது. அதிலும் குறிப்பாக வாசிப்பு அனுபவமற்ற தளத்திலிருக்கிறவர்களின் கைகளில் தொகுப்புகள் வசப்பட்டு, மொண்ணையான விமர்சனங்கள் எழுவது. இதையே பிடித்துக்கொண்டு, அடுத்த தொகுப்பிற்கும் கவிஞன் துணிந்து விடுவது.

பல சிறந்த கவிதைகளைப் படைத்திருக்கும் ஜெகதீசனின் தொகுப்பினுள்ளும், சில சாதாரன கவிதைகள் இருப்பதற்கான காரணம், இரண்டாவது தொகுப்பிற்கான அவசரமே. அந்த அவசரத்தில் எழுதப்பட்ட கவிதைகளில், பல நல்ல வார்த்தை தெளிப்புகளும் அடங்கியுள்ளன. இது இன்னும் அவர் தவக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கைதான்.

எழுதுவதும், வாசிப்பதும், இயல்பான போக்கில் வாய்க்கிற படைப்பாளிக்கு, நல்ல கவிதையைக் கொடுப்பது சிரமமானது அல்ல.

வாசிக்கவும்…விமர்சிக்கவும் பொருத்தமான தொகுப்பு “இன்ன பிறவும்”

O

Series Navigationஇவர்களது எழுத்து முறை – 1 – லா.ச.ராமாமிர்தம் >>

க. அம்சப்ரியா

க. அம்சப்ரியா