திலகபாமா
எங்களூருக்கு கிழக்கே
எரியாத மலையும், தாகம்
தணியாத மலையுமுண்டு
கனன்ற சூரியன்
கழன்று விழுந்தும் தீப்பற்றி
எரியாத மலையுமுண்டு
அடிவாரத்தில் இருந்த
அணையில் முட்டக்குடித்தும்
தாகம் தணியாது
மேகத்துடன் கெஞ்சிக்
கிடந்த மலையுமுண்டு
கண்மாயின் கண்ணீரில்
முழுதும் மூழ்கியிருந்தும்
அழுகாது பச்சையாய்
சிரிக்கின்ற கருவேலமுண்டு
மெல்லிய இதழ் வெடிப்பாய்
விரிசலிட்டு காய்ந்து கிடந்தாலும்
மண்ணாம் இதயத்துள்
புதைகின்ற வேர்தனுக்கு
தாய்ப்பாலாய் சுரக்கின்ற செங்காடுண்டு
நினைத்ததை சாதிப்பதாய்
நித்திரையில் இருப்பதாய்
நிஜம்காட்டும் கும்பகர்ணருண்டு
கற்பின் கனலுக்கிடும் எல்லை
காற்றிற்கிடும் எல்லையென
இலட்சுமனன் கிழித்த கோட்டை
படி தாண்டி கனலை
பார் நிறைத்த சீதையுண்டு
சிலம்பின் சிரிப்பில் கூட
சீர்கேடு எரிக்கும் நெருப்பின்
கரு உண்டெண்று
கனன்றிட்ட கண்ணகியுண்டு
சீதையை விடுத்து
மண்டோதரியை சிறை வைத்த
இராவனேஸ்வரர்கள் உண்டு
நேருக்கு நேர் நிற்பின்
நிறை சக்தி குறையுமென்று
அவதாரமாய் இருந்தும்
மறை அம்பு தொடுத்த இராமனாய்
உணர்வு கொன்று உடல் திங்க
தாலிக்குள் தஞ்சமடைந்துஎன்
தன்மை கொல்லும் இராமனுமுண்டு
மரங்களின் கிளை ஒடித்து
கோடாரிக் காம்பு செய்து
ஆதித் தாயாண்மை சரித்த
வேடர் கூட்டமுண்டு
சாபங்கள் கரு
தாங்குபவளுக்கு மட்டுமே என
விதித்த விசுவாமித்திர கூட்டமுண்டு
பெண்ணை மணமுடித்து
தேச தூரம் அனுப்பிவைத்து
கண்ணென வளர்த்தவளை தாலி
கட்டி அனுப்பிவைத்து
அடிவயிற்று நெருப்பை
அணைத்ததாய் நினைத்திருந்தார்
நெஞ்சில் பாரம் சுமப்பது
நெடுங்கதையாய் போகுமென்று
நினைக்காது நாங்களிருந்தோம்
அன்னை ,தந்தை கண்களில்
அலறல் கண்டிருந்தும்
கல்லாய் ,மரமாய், மண்ணாய்
கண்ணீர் மட்டும் பேசியபடி
சுவரோடு நாங்களிருந்தோம்
தாய் வீட்டு உறவுகளோடு
தாரமானவள் சேரக்கூடாதென்று
பங்காளிகள் சேர்ந்திங்கு
பங்கு போட நினைக்குறாங்க
ஆதி சிவனார் முதல்
தாய் வீடு அனுப்புதல் ஒரு
தண்டனையாயும்
அனுப்பாதிருத்தல் ஒரு
சாபமாயும் சாதித்த
திருவிளையாடலாய்
அண்ணனுக்குள்ளும்,தந்தைக்குள்ளும்
அடுத்த தலை முறை பிள்ளைக்குள்ளும்
தாயாண்மை யை அழிக்கத் தூவப்பட்ட
வித்துக்கள் திரும்பத் திரும்ப
முளை விட்டபடி
மூளை சலவை செய்தபடி
தட்டிட்டு போயிடலாம்
தாலி கழற்றியபடி
விட்டிட்டு போயிடலாம் சிறகு
விரித்தபடி
வீட்டோட மகள் பார்த்து
கூட்டொட குதூகலம் போகும்
புழுக்கத்தில் எமை புரளவிட்டு
புரளுவார் இவர் வென்றிட்டதாய்
விழுப்புண்ணோடு எமை வாட விட்டு
விரித்திடுவார் அவர் சிறகை
தாலியில் புது உறவுகள்
தங்கம் மட்டுமன்றி
தானும் கோர்க்கப்படலாம்
காலியான கருவறை
வெட்டிப்போடலாய்
கருவறை வழி வந்த
உறவுகள் தட்டி விடாத
உணர்வு தரும் சுதந்திரத்தை
வேண்டியபடி
அடிவயிற்றுள்
அடங்கியிருக்கும் குஞ்சுகளின்
அதிர்வுக்காய் குட்டுப்பட்டபடி
நகையோடு பெண்டிர்
நடமாடும் சுதந்திரம் கேட்டார்
தொண்டுக் கிழவன் காந்தி
நகையோடு வேண்டாம்
நானும் மனுசியாக உலாவர
கனவுகளோடு கை சேர
புரியாததாய் பாவனை நிகழ்த்தும்
புருசர்கள் புரிந்து கொள்ள
வாழ்வுகள் எம்மோடு அல்லாது
தாலியோடு வந்த உறவுகளோடு
நிர்ணயிக்கப்பட்டதில்
நிர்வாணமாய் நிற்கின்ற சமூகம்
வெட்கமோ எமக்கு மட்டுமே உரியதாய்
நிலவுக்கு பின்னே நிழல்
புவிக்குப் பின்னே
இருள் சூழ்ந்த இரவு
கற்பாறைக்குப்பின்னே
கண்ணாடி பளிங்கு
முகத்துக்குப்பின்னே முதுகு
மலைக்குப் பின்னே சமவெளி
அருவிக்குப் பின்னே ஆறு
விருட்சத்திற்கு பின்னே விதை
விதைக்குப் பின்னே விருட்சமென
பின்புலங்கள் நிறை உலகில்
முன்னுக்கும் பின்னுக்கும்
முரண்கள் இல்லாது
திரும்பிய பக்கமெல்லாம் திகட்டும்
ஒளிவெள்ளம் பாய்ச்சியபடி
மறுபக்கம் இல்லாத சூரியனே
பெண்ணாய் எமை நோக்கும்
பேதங்களற்ற ஒளி நோக்கி
கண்ணென எமைச் சொல்லி
தூசியிலும், வெப்பத்திலும்
துணை நிற்குமென்று
கறுப்புக் கண்ணாடி மாட்டிவிட்டு
உலகை இருளாய் உணரச் செய்த
உன்மத்தர்கள் இல்லா
உலகு நோக்கி
உனக்கும் கிழக்கே
கண்களில் தூசியும்
காதுகளில் இரைச்சலும்
உதிர்த்து விட்டு போகாத
புதுப்பயணம் தேடியபடி
இயந்திரத்துடன் பயணித்தும்
இயந்திரமாகிப் போன
இதயங்களில்லாத இதயம் தேடியபடி
வீழ்ந்தும் எழுந்தும் வியனுலகு நிறைந்தும்
எரிந்தும் கனன்றும், எல்லாமாகி இருந்தும்
பாரின் ஒளியாய், வேரின் வழியாய்
விதை உள்ளிருக்கும்
விருட்சம் வெளிக்கொணரும்
ஒளியாய், உயிராகி இருக்கும்
சூரியனுக்கும் கிழக்கே
கண்கள்கூசச் செய்யும்
கவின் மிகு ஒளி தரும்
மறுபக்கம் இல்லாத மனங்கள்
தேடியபடி என் பயணமும்
நிதம் நிதம்
நித்திரை கலைந்து விடியல் வந்தும்
விடிந்து படாத இந்த வாழ்வால்
உறவுகளை புதுப்பிக்கும்
இரவல் வாங்கா ஒளியை
உன்னிலிருந்து பிறக்க வைக்கும்
புதிய விடியல்விடியுமென
சூரியனுக்கும் கிழக்கே
சுடரும் தாகத்தோடு காத்திருந்தபடி
எங்களுருக்கு கிழக்கே
எரியாத மலையும், தாகம்
தணியாத மலையுமுண்டு
- 1. ஆதலினால் காதல் செய்வீர் – 2. நல்லவர்கள்
- மூன்று குறும்பாக்கள்
- நகரத்துப் புறாக்களுக்கு மத்தியில் நான்
- சூரியனுக்கும் கிழக்கே
- பட்டினிப் படுக்கைகள்…
- பசுபதியின் கவிதை படித்து…
- மெளனியின் படைப்புலகம்: ஒரு கலந்துரையாடல்
- மதமரபு அதிகாரம் தலித்தியம் தமிழ்த்தேசியம்
- தம் ஆலூ (உருளைக்கிழங்கு)
- கோழிக்கறி சாஷ்லிக்
- அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு தங்க நங்கூரம் வேண்டும்
- பன்றியை வெறுப்பவர்களும், பன்றியை விரும்புபவர்களும். -2
- முரண்கள்
- சேவல் கூவிய நாட்கள் -2 (குறுநாவல்)
- காிசல் காட்டு வார்த்தைகள்
- நீ…நான்..நாம்…
- கற்பக விருக்ஷம்
- ஒரு தண்ணீாின் கண்ணீர்.
- பாரம்
- குழப்பங்கள்
- காசுப்பா(ட்)டு
- மதமரபு அதிகாரம் தலித்தியம் தமிழ்த்தேசியம்
- பன்றியை வெறுப்பவர்களும், பன்றியை விரும்புபவர்களும். -2
- அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு தங்க நங்கூரம் வேண்டும்
- சாதி என்னும் சாபக்கேடு
- சித்த சுவாதீனம்.