சுயதரிசனம் (26.01.004)

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

பிச்சினிக்காடு இளங்கோ


முளைக்கொட்டு மாரியம்மன்
கோவில் திருவிழா
நினைவுக்கு வந்தது

முளைப்பாலிகை போடுவதும்
மதுக்குடம் ஏந்துவதும்
இரவெல்லாம் நிலவில்
கும்மிகொட்டுவதும்
நினைவுக்கு வருகின்றன

ஒருநாள் தங்குமுளை…
தாங்காது மனம்
தவிக்கும் குரங்காய்…!

அத்திவெட்டி
ஆனந்தவல்லி அம்மன் திருவிழாவுக்குப்
பொசுக்கும்
சித்திரை வெயிலில்
தகிக்கும் சாலையில்
காவடிச் சகிதமாய்க்
கொட்டும் முழக்குமாய்
ஆனந்தம் கரைபுரளும்
அந்தநாள் இனிக்கிறது

முளைகொட்டும் நாளன்று
தேங்காய்ச் சிதறுவதும்
சிதறுதேங்காய் பொறுக்குவதும்
மஞ்சள்தண்ணிர் அடிப்பதும்
மறக்கமுடியாத விளையாட்டுகள்

சாதியால்
ஏழைச்சகோதரர்கள்
வளைந்து நெளிந்து
தேங்காய்பொறுக்கும் வேளையில்
தண்ணிர்அடி வலிக்குமென்று
சிரித்தது மனம் …அப்போது

பொறுக்கும் சகோதரர்களுக்குத்
தண்ணீர்அடி
வலித்ததோ இல்லையோ
வலிக்கிறது மனம்
இப்போது…
—-
ilango@stamford.com.sg

Series Navigation

பிச்சினிக்காடு இளங்கோ

பிச்சினிக்காடு இளங்கோ