சும்மாக் கிடந்த சங்கு

This entry is part [part not set] of 37 in the series 20100912_Issue

ராமலக்ஷ்மி, பெங்களூர்


வெத்தலயக் கொதப்பிக்கிட்டு
வீதிபாத்து நிக்கையில
வீசினாங்க பொதுசனங்க
போறபோக்குல கேள்விகள

”கோடிவீட்டுக் குப்புச்சாமி
சீட்டுப் புடிக்கப் போறாராமே?”

”அதிகவட்டிக்கு
ஆசைப்பட்டே..
உள்ளதும் போச்சு
நொள்ளக் கண்ணாதான்!”

“வூட்டல கோச்சுக்கிட்டு
பட்டணம் போன பரமேசு?”

”ஆத்திரமாக் கெளம்பி
அமாவாசைக்கு போனவன்
பகரணைக்கு ரெண்டுபகல் கெடக்கையில
பழய குருடி கதவத் திறடின்னு
பொட்டியோட வந்துப்புட்டான்!”

”சொலவட சொலவடயா
எடுத்தெடுத்து விடுதியே
இதும் பின்னால
ஏதாச்சும் கதயிருந்தா சொல்லேன்
பொழுதாச்சும் போவும்”

‘யாருக்குத் தெரியும்’
வந்த வார்த்தைய
வசதியா தொண்டைக்குள்ள
அமுக்கிப்புட்டு

”எடத்தக் கொடுத்தா
மடத்தப் புடுங்குதியே
தலக்கு மேல கிடக்கு வேல”
நொடிச்சிக்கிட்டுத் தப்பிச்சாலும்

முழுநாளும் கழிஞ்சுது
பழயகுருடியப் பத்திய நெனப்புல
போட்டது போட்டபடி கிடக்க
எப்படி சோடிக்கலாம் ஒரு கதயன்னு

சும்மாக் கிடந்த சங்கை
ஊதிக் கெடுத்தக் கதயா.
*** *** ***

Series Navigation

ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி