சுநாதர்

This entry is part [part not set] of 45 in the series 20071108_Issue

ஜெயந்தி சங்கர்


அன்று வழக்கமான சுறுசுறுப்பில் இல்லாதிருந்த சுநாதரின் நெற்றியில் சிந்தனைக் கோடுகள். அவனின் கைகள் அனிச்சையாக ஒன்றைத் தொடந்து இன்னொன்றாக விறகு வெட்டுவதிலும், வெட்டியவற்றை சமையலறை மூலையில் வைப்பதும், வீட்டைக்கூட்டி மெழுகுவதுமாக இருந்தான். மதியம் துணிகளைத் துவைப்பது, பாத்திரங்களைத் துலக்குவது என்று தொடர்ந்து மாலையில் அரிக்கன் லாந்தர் விளக்குகளை ஒவ்வொன்றாகத் துடைத்து ஒழுங்குபடுத்தித் தயாராய் வைப்பதிலும் தவலையை எடுத்துக்கொண்டு அடுத்த நாளுக்கு வேண்டிய குடிநீர் சேந்திவரப் போய்வருவதுமாக இருந்தாலும் அவன் ஏதோ கவலையில் இருந்தது முகத்தில் தெரிந்தது. ஒவ்வொரு வேலையையும் தான் புவியில் பிறந்ததே அதற்காக என்று எண்ணிக்கொள்பவனைப்போன்ற ஒருவித தீவிர ஈடுபாட்டுடன்தான் எப்போதும் செய்வான். அவன் செய்த வேலைகளின் அளவிற்கும் நேர்த்திக்கும் அவனுக்குக் கொடுக்கப்பட்ட ஊதியம் மிகமிகக் குறைவு தான். ஆதிவாசி இனத்தவனான சுநாதருக்கு அவனை வளர்த்த வயதான அப்பாவழிப் பாட்டியைத் தவிர யாருமில்லை. சாம்பாதித்ததையெல்லாம் அவளிடமே கொடுத்து வந்தான்.

குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதைத் தவிர சமையலறையில் ஏற்றியிறக்குவதை மட்டுமே அலமேலு செய்து வந்தாள். மற்ற எல்லா வேலையையும் சுநாதர் தான் செய்து வந்தான். இரண்டு சிறுகுழந்தைகளுடன் தவித்த அலமேலுவுக்கு அவனின் உதவிகள் மிகப்பெரும் பக்கபலமாகயிருந்தன. இன்னும் ஒரு மாதத்தில் அவ்வூரை விட்டு மாற்றலாகிப் போக வேண்டியிருந்ததில் ஆளையே மூழ்கடிக்கும் உயரத்துக்கு கோப்புகள் மேசையிலிருக்க, முடிக்கவேண்டிய வேலை மிக அதிகமாமிருந்தது. எப்போதுமே ஏதோ ஒரு காட்டுவாசியை மணந்துகொண்டு விட்டோமோ என்ற லேசான அதிருப்தியை உள்ளூரக் கொண்டிருந்த அலமேலுவுக்கு அந்தக்காட்டுப் பிரதேசத்திலிருந்து கிளம்பிடும் நன்நாள் நெருங்குவதில் ஒரு பரபரப்பான உற்சாகம். பலநாட்களுக்கு இரவு உறங்கிட மட்டுமே வீட்டுக்குப் போன எனக்கு ஒவ்வொரு வேளைக்குமான உணவை சுநாதர் வீட்டிலிருந்து கொண்டு வந்தபடியே இருந்தான்.

காலையில் அலுவலகத்தில் பார்த்தபோதும் கூட சுநாதர் கண்களில் ஒளியில்லாது அப்படியே தான் இருந்தான். அவன் போனபின்னர் சௌத்ரியிடம் கேட்டபோது, ‘அதுவா, அது ஒரு கத சாப்’, என்றவர் தொடர்ந்து, ‘உங்களுக்குத் தெரியாதில்ல? சுநாதருக்கு ஒரு காதலி இருக்கா சாப்’, என்றார் சிரித்தபடியே. ஆச்சரியமான செய்திதான். ஆனால், ‘அதற்காக ஏன் உற்சாகத்தை இழக்கவேண்டும்?’, என்ற கேள்வி என் பார்வையில் இருந்திருக்க வேண்டும். கையிலிருந்த கோப்பை என் முன்னே வைத்தபடியே, ‘இப்ப, அந்தப்பொண்ணுக்கு வேற எடத்துல கல்யாணம் பேசறங்க சாப், அதான் ஒரே சோகமாயிருக்கான்’, என்றார். அப்போது தான், சுநாதரின் மாறுதலுக்கான காரணம் லேசாகப் புரிந்தாற்போலிருந்தது. இருந்தாலும் வேலை மும்முரத்தில் நான் அதை அதிகம் பொருட்படுத்தவில்லை. ஆனால், பொருட்படுத்தாமல் போனோமே என்று வாழ்நாள் முழுவதும் மிகவும் வருந்திடும்படியாயிற்று.

***

தன் கையெழுத்தைப் போடவும் ஒரிய மொழியில் எழுத்துக் கூட்டிப் படிக்கவும் தெரியும் என்பதில் சுநாதருக்கு ஒரு விதகர்வமே உண்டு. பொதுமொழியாக எங்களிடையே புழங்கப்பட்ட இந்தியை அவன் புரிந்துகொண்டாலும் பதிலளிப்பது வங்கமொழிக்கு மிக அருகில் வந்ததுபோல ஒலிக்கும் ஒரியாவில் தான். பத்து வரிகள் கொண்ட ஒரு பத்தியை அவன் எழுத்துக் கூட்டிப் படித்து முடிப்பதற்குள் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ‘அம்பகூடா’வுக்கு ஜீப்பில் போய்த் திரும்பிவிடலாம். பொழுதுப்போக்கென்று என்று நான் குடைந்து பார்க்கும் பழைய வால்வு ரேடியோவின் உதிரிபாகங்கள் வாங்கிடவேனும் மாதமொருமுறையேனும் போய் வருவேன் ஜீப்பில். சிலவேளைகளில் வீட்டிற்கு வேண்டிவற்றையும் சேர்த்து. அலமேலு மிக அரிதாகவே உடன் வந்தாள்.

நிரந்தரப் புன்னகை அணிந்திருந்த சுநாதர் எங்கள் வீட்டுக்குப் போய் தன் வேலையைத் துவங்கும் முன்னர், அலுவலகத்தைச் சுத்தம் செய்து விடுவான். பலமுறை சுநாதரிடம், ‘சுநாதர், உனக்கு கோபமோ சலிப்போ வரவேவராதா?’, என்று கேட்டிருக்கிறேன். வரும் என்கிறானா வராது என்கிறானா என்றே புரிந்துகொள்ள முடியாதபடி அதற்கும் சிரிப்பையே பதிலாக ஒவ்வொரு முறையும் கொடுத்துவிட்டிருந்தான். இசைக்கு மொழி தேவையில்லையென்ற கூற்றை உணர்ந்துகொண்ட முதல் ஆள் சுநாதர் தானோ என்று நினைத்து வியந்ததுண்டு. வேறு எதற்குமே தன்வேலைகளை நிறுத்தாது தொடர்பவன் அக்காலத்தின் ஒரே பொழுதுபோக்கு ஊடகமான ரேடியோவில் ஒலிபரப்பாகும் எந்த மொழிப் பாட்டாக இருந்தாலும், சொற்களற்ற வாத்திய இசையேயானாலும், கைவேலையைக் கொஞ்சநேரம் நிறுத்திவிட்டு ரசிப்பான்.

அந்த வனாந்திரத்திலிருந்த அலுவலகத்தில் சௌத்ரி ஒரு டிரா�ப்ட்ஸ்மேன். அவரைத் தவிர பொறியாளரான நான் மட்டுமே. அலுவலகம் என்றால், முறையான கட்டிடமே இல்லை. ‘தண்டகாரண்யா புரோஜெக்ட்’டிற்காக சிலவருடங்களுக்கு முன்னர் அமர்த்தப்பட்டிருந்த அவ்வலுவலகம் அவ்வட்டாரத்தில் இருந்த பத்துப்பதினைந்து குடிசையைப் போலவே ஒரு வேயப்பட்டகுடிசை தான். அரசாங்க தயவில் எங்களுக்குக் கிடைத்திருந்த கொஞ்சம் பெரிய அளவிலான குடிசை. சுமாரான சிமெண்ட் தரை மட்டுமே என் வீடு மற்றும் அவ்வலுவலகம் ஆகிய இரண்டையும் அவ்வெளிய மக்களின் குடிசைகளிலிருந்து வேறு படுத்தியிருந்தது. தேவைகள் மிகக்குறைவான தனிக்கட்டையான சௌத்ரிக்கு அந்த அலுவலகத்தை ஒட்டியிருந்த பகுதியே வாழ்விடமாகியிருந்தது. சிலவருடங்களில் ஓய்வு பெறவுமிருந்தார் அவர்.

***

மின்வசதி இல்லாத அந்த கிராமத்துக்கு மாற்றலாகிப் போன நாள் என்னால் மறக்கக்கூடியதில்லை. அன்று நசநசவென்று மழை பெய்து அப்போது தான் சற்று ஓய்ந்திருந்தது. ‘ஸி.பி.டபிள்.டி’ என்றெழுதப்பட்டிருந்த குடிசையை அடையாளம் வைத்து ஓட்டுநர் ஜீப்பை நிறுத்தினார். வந்து இறங்கிய என்னை சௌத்ரிதான் கையில் மடக்கிய குடையுடன் வந்து வரவேற்றார். பின்னால் ஒரு உருவம் ஓலையில் வேயப்பட்டிருந்த மேற்புறம் கூம்பி, பின்னால் நீண்டிருந்த தொப்பியை அணிந்து குனிந்து நின்றுகொண்டிருந்தது. அதைத் தொப்பி என்று சொல்வதையே அம்மக்கள் ஆட்சேபித்தனர் என்று சீக்கிரமே தெரிந்துகொண்டேன். அவனின் முகத்தை அப்போது பார்க்கமுடியவில்லை.
அலுவலகத்துக்குள் போய் உட்கார்ந்ததும் வெல்லம் போட்ட கட்டாங்காப்பியைக் கோப்பையில் சுடச்சுட ஊற்றிக்கொடுத்தபோது தான் அவனை முழுமையாகப் பார்த்தேன். கருங்கல்லில் செய்து வைத்த சிலையாக இருந்த அவனுக்கு இருபது வயதுக்கு மேலிருக்காது. அடிக்கடி தன் வெண்பற்களைக் காட்டவென்றே சிரிப்பதைப்போல் ஒரு சிரிப்பு. ஆனால், தன் உருவத்திலிருந்த வசீகரத்தை அவன் அறிந்திருக்கவில்லை என்றன அவனின் ஒவ்வொரு மெய்ப்பாடுகளும்.

அக்காலத்தில் மனிதனின் பேராசை படிந்திராத அந்த வனங்களைப்போலவே காணுமிடமெல்லாம் குளுமையும் பசுமையுமாக இருந்த அந்தச் சிற்றூரின் மக்களின் மனங்களும் தூய்மையாகவும் இயல்பாகாவும் இருந்தன. வசதிகள் இல்லாமல் வாழ்க்கை எப்படியிருக்குமோ என்று முதலில் தோன்றினாலும் பச்சென்ற காய்கறிவகைகளும் கீரைகளும், சாறு சொட்டும் கனிகளும் தேவைக்கான விறகுகளுமாக இயற்கைசார்ந்த வாழ்க்கை சீக்கிரமே எனக்குப் பிடித்துப்போனது.

குடித்து முடித்து கோப்பையை நகர்த்தவே காத்திருந்து, எடுத்துக் கழுவுவதும், உண்டு முடித்து கையைக் கழுவும் போது துண்டை எடுத்துக்கொண்டு தயாராக இருப்பதுமாக சுநாதர் ஒவ்வொன்றையும் கவனித்து செய்ததெல்லாம் பழகிட எனக்குத்தான் சிலநாட்களாகின. ஆனால், அவனிலோ ‘இதென்ன பிரமாதம்’, என்ற ஓர் அலட்சியம். ஒரே மாதத்தில் சுநாதரின் பெயர் என் வாயில் அடிக்கடி வர ஆரம்பித்தது. அலுவலகமும், எனக்கெனத் தயாராயிருந்த குடிசையும் சுநாதரின் கைவண்ணத்தில் தூய்மையில் பொலிந்தன. சர்வே செய்திடவென்று காட்டிற்குள் செல்லும் போது எங்களுக்கு அவனின் துணையும் சேவையும் இன்றியமையாததாகவே இருந்தன.

அடுத்த மாதத்திலேயே வாழ்நாளில் நான் மறக்கவே முடியாத ஒரு காட்சி. பாம்புக்குட்டிகள் நூற்றுக்கணக்கில் ஓடின. கிட்டத்தட்ட ஒரே நிறத்தில் சின்னதும் பெரியதுமாக, கோடு கிழித்தாற்போல் ஒரே திசையில். ஏதோ கனவுக் காட்சி போலிருந்தது. குட்டிகளேயானாலும் அதைக்கண்டு கிடுகிடுவென்ற ஒரு சிலிர்ப்பு என் உடலில். எதற்கு எங்கே ஓடின என்று யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. சொல்லப் பட்டவையெல்லாம் சுவாரஸியமான நம்பமுடியாத கதைகள். ஒரு குறிப்பிட்ட திசையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி ஒவ்வொரு மாதமும் பாம்புக்குட்டிகள் நூற்றுக்கணக்கில் ஓடும் போது வழியில் இருக்கும் எதுவுமே அவற்றுக்குப் பொருட்டில்லை. சிலநாட்கள் அக்காட்சி மனதில் விலகாமல் இருந்தது. அடுத்தடுத்த மாதங்களில் பார்க்கப்பார்க்க வெயிலையும் மழையையும் போல இதுவும் எனக்கு இயல்பாகிப்போனது.

***

அடுத்த ஒரே வருடத்தில் எனக்குத் திருமணம் நடந்தது. ஒரு மாதத்திற்கு மாயவரம் போய் கல்யாணம் முடிந்து அலமேலுவுடன் நான் திரும்பிப் போனபோது, மீண்டும் சுநாதர் வரவேற்பு தோரணம் என்று கிராமத்தையே வண்ணமயமாக்கி என்னை மீண்டுமொரு முறை வியப்பில் ஆழ்த்தினான். அதுவரை நான் பார்த்திராத ஆதிவாசிகள் நடனத்திற்கும் ஏற்பாடு செய்ந்திருந்தான். அதிகம் நெருங்கி வந்து விடாமல், தூரத்தில் நின்றபடியே அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். வந்திறங்கியதுமே, ‘சாப், உங்களுக்கு ஓர் இனிய அதிர்ச்சி இருக்கிறது’, என்று என் காதில் ரகசியமாகச் சொன்னதிலிருந்து என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். கூடமும் சமையலறையுமாக இருந்த வீட்டை ஒட்டி இன்னும் ஓர் அறையை அழகாக உருவாக்கியிருந்தது தான் அக்கணத்தில் எனக்கு இனிய ஆச்சரியம்.

மதியம் கள்ளமற்ற சிரிப்பும் வெகுளித்தனமும் கொண்ட உள்ளூர் பெண்களெல்லோரும் புதுக்கல்யாண ஜோடியைப் பார்க்கும் ஆர்வத்துடன் மூங்கில் கூடைகளில் தேன், நெல், கிழங்கு, காட்டுப்பூக்கள் என்று கைக்குக் கிடைத்ததை அவரவர் வசதிக்கேற்றாற்போல் கொண்டு வந்து வைத்துவிட்டு, அலமேலுவைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். கல்யாணம் நடந்தது ஏதோ தங்களுக்கே போல் வெட்கமாகச் சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்த அவர்களைப் பார்த்துக் கொண்டு அறை வாயிலில் சுநாதர் நின்றுகொண்டிருந்தான். கனத்த வளையல்களும் மூக்கு நாக்குகளில் பெரியபெரிய அணிகளுமாக, ரவிக்கையில்லாமல் கச்சம் வைத்துக் கட்டியிருந்த புடைவையின் தலைப்பைக் கொண்டு முகத்தையும் தலையையும் மூடியும் மூடாமலும் இருந்த அப்பெண்கள் எதற்கெடுத்தாலும் சிரித்தார்கள்.

அரைமணிநேரத்தில் பெரிய மனித தோரணையுடன், ‘கெளம்புங்க, இன்னொரு நாளைக்கிப் பார்த்துக்கலாம், ம்..’, என்று எல்லோரையும் கிளப்பினான். அதற்கும் சிரித்துக்கொண்டே எழுந்துபோனார்கள். மிளகாயைக்காட்டி அதற்குரிய சொல்லையும் மழையைக்காட்டி அதற்குரிய சொல்லையும் என்று அந்நிய மொழியை அவர்களிடமிருந்தே கற்றாள் அலமேலு. அப்பெண்களுடன் பழகிவந்த அவளுக்கு ஆதிவாசிகளின் கொச்சை ஒரியமொழியையே பேசவந்தது. ஒழுங்கான ஒரியமொழி கடைசி வரை தெரியாமலே போனது.

மாலையில் இருகைகளையும் பின்புறம் மறைத்தபடியே வந்தான். எனக்கு வைத்திருந்த இனிய அதிர்ச்சியைக் கொணர்ந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டே என் முகத்தின் முன்னால் இருகைகளிலும் இரு சிறுத்தைக் குட்டிகளைக் காட்டியதுமே உண்மையிலேயே அதிர்ச்சியில் நின்றுவிட்டேன். பெரிய பூனையைப் போல மின்னும் ரோமத்துடன் இருந்த அவற்றைக் கையில் வாங்கிப் பார்த்தேன். பிறந்து சிலநாட்களே ஆகியிருந்த குட்டிகள். அடர்காட்டினுள் வேட்டையாடப் போன தன் மாமன் கொண்டு வந்ததாகச் சொன்னான். தாயிடமிருந்து குட்டியைப் பிரித்திருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. சொன்னதும், ‘அங்க இன்னும் ரெண்டு இருக்கே சாப் ,..உங்களுக்குப் பிடிக்குமேன்னு தான்,..’ என்று இழுத்தான். ஒரே வாரத்திற்கு அவனின் திருப்திக்காக வீட்டில் வைத்துக் கொண்டிருந்துவிட்டு, காட்டிற்குள் விட்டுவிடும் படி கொடுத்தனுப்பி விட்டேன்.

***

அப்படித் தான் அவ்வூருக்கு நான் வந்த புதிதில் மயில் குஞ்சு ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்திருந்தான் சுநாதர். என் விருப்பத்தை தான் அறிந்திருந்ததை வெளிப்படுத்திடக் கிடைத்த வாய்ப்பை என்றுமே தவறவிடாதவன். அவ்விலங்கைப்பற்றிய என் அறிவோ அதை வளர்த்திட நான் எதிர்நோக்கக் கூடிய சவால்களோ அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை. ஏனெனில், விலங்குகளுடன் சுநாதருக்கான உறவு சகமனிதர்களுடனானதாக இருந்தது. எனக்கென்று கொண்டுவந்தாலும் பார்த்துக் கொள்வதெல்லாம் பெரும்பாலும் அவன் தான்.
வந்த சில நாட்களிலேயே ஒருநாள் மயில் குஞ்சு எரிந்து கொண்டிருந்த நெருப்பினால் வசீகரிக்கப் பட்டதில், மறுபறம் திரும்பி நான் எதையோ எடுத்த கணத்தில் நேராக நெருப்புக்குள் புகுந்து பொசுங்கி விட்டது. அதிர்ச்சியில் அப்படியே அடுப்பில் நீரூற்றி அணைத்து விட்டு உறைந்து உட்கார்ந்து விட்டேன். ஒன்றுமே ஓடவில்லை. தாமதமகிப்பொனதால், ஓடோடி வந்த சுநாதரிடம் விஷயத்தைச் சொன்னதும் அப்படியே மௌனமாகிவிட்டான். ‘நான் வந்து உங்களுக்கு காபிபோட்டிருப்பேனே, சாப். கொஞ்சநேரம் தாமதமாயிடுச்சு, அதுக்குள்ள..’, என்று வருந்தினான். மயில் வளர்ந்து தோகைவிரிக்கும் காட்சிக்காகக் காத்திருந்தவன் மிகவும் ஏமார்ந்து போயிருந்ததாக சௌத்ரியிடன் கவலையுடன் சொல்லிக் கொண்டிருந்தபோது, நான் அறைக்குள் நுழைவதைக் கண்டு விருட்டென்று மறுபக்கம் போய்விட்டான். அது பெண் மயிலாகவும் இருந்திருக்கலாமென்று அவனுக்குத் தோன்றவில்லை. இரண்டு நாட்களுக்கு என் முகத்தை நேராகப் பார்ப்பதைத் தவிர்த்தான்.

அடுத்த வாரமே ஒரு குரங்குக் குட்டியை, என்னை மகிழ்விக்கவென்றே கொண்டு வந்ததாகச் சொல்லி நீட்டினான். ஓரளவிற்கு வளர்ந்த குட்டி தான். கோபத்திலோ எரிச்சலிலோ அது காட்டிய முகபாவம் மனிதனின் சிரிப்பைப் போலவும் மகிழ்ச்சியில் அது சிரித்தது மனிதனின் கோபச்சிரிப்பு போலவும் இருந்ததெல்லாம் பழகிட எனக்குச் சில நாட்களானாலும், சீக்கிரமே அது என்னுடன் பழகி விட்டது. வீட்டிலிருந்து நான் அலுவலகத்துக்குக் கிளம்பும் போது பின்னால் ஓடிவந்து என் சைக்கிளின் பின்னிருக்கையில் குதித்து ஏறிக்குந்திவிடும். பாதி வழியில் திருப்பத்தில் தான் என் கண்ணில் படும். மீண்டும் வீட்டுக்கு வந்து, விட்டுவிட்டுக் கிளம்பினால், மறுபடியும் அதேபோல ஓடி வந்து ஏறி உட்கார்ந்துவிடும். கட்டிப்போட்டால் ஜென்மவிரோதியைப் பார்ப்பதுபோல சீரிமுறைக்கும். ஆனால், அம்மாதிரியான நேரங்களில் வேறு வழியில்லாமல் நீ�ண்ட கயிற்றால் கட்டித்தான் போட்டேன்.

சில மாதங்களிலேயே ஒரு விடுமுறை நாளில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தேறியது. குரங்குக்குட்டி என் பணப்பையை எடுத்து உள்ளேயிருந்து ஒரு நூறு ரூபாய் தாளை உருவியெடுத்ததைப் பார்த்த நான் கைவேலை அப்படியே போட்டு விட்டு பின்னால் போனேன். என் கவனம் தன் மீது திரும்பியதில் உள்ளூர மகிழ்ந்து, நான் துரத்தத் தரத்த ஓடியது. கொஞ்சம் அதட்டலாய் ரூபாயைக் கேட்டேன். பரட்டென்று கிழித்துவிட்டது இரண்டாக. ஒரு கணம் அது விலங்கென்பதையும் மறந்து லேசாக ஒரு தட்டு தட்டி விட்டேன். நான் அடித்ததை அந்தக் குரங்கு அத்தனை தூரத்துக்கு தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. குடுகுடுவென்று தொலைவுக்கு ஓடிச் சென்று, நின்று திரும்பி என்னைப் பார்த்தது. நான் கூப்பிடக் கூப்பிட அது வரவேயில்லை. வீட்டுக்கு வழி தெரியும், வந்துவிடும் என்று எண்ணிக் கொண்டே நான் வீட்டுக்கு போய் விட்டேன். ஆனால், இரண்டு நாட்களாகியும் குரங்குக் குட்டி திரும்பி வரவேயில்லை. வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் குரங்குக் குட்டியிலாத குறையை உணர ஆரம்பித்திருந்தேன். சுநாதர், ‘அவனுக்கு அவ்ளோ ரோஷம்னா விடுங்க சாப். வருத்தப்படாதீங்க. வேற ஒரு குரங்குக் குட்டி கொண்டு வரேன்’, என்றான். காட்டிற்குள் ஏதேனும் கொடியவிலங்கிடம் சிக்கியிருக்குமோ என்றுதான் அதிகமும் கவலைப்பட்டேன்.

***

டைபாய்டில் அம்புலு விழ, இரண்டு வாரங்களுக்கு சிகிச்சைக்கென்று அம்பகூடா மருத்துவமனையில் இருந்திட வேண்டியிருந்தது. குழந்தைகளை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாமல் தவித்துப் போனேன். அதே நேரத்தில் சுநாதருக்கு அம்மை போட்டிருந்ததால் தகவல் சொல்லியனுப்பிவிட்டு அவன் வீட்டிலேயே இருந்துவிட நேர்ந்தது. அவன் மட்டும் உடன் இருந்திருந்தால் தந்தியடித்து அம்மா வரவழைத்திருக்கவே வேண்டியதில்லை.

கூஜா தண்ணீர், தானே பிழிந்த தேன்குழல் மற்றும் பூவன்பழங்களை மட்டும் வைத்துக் கொண்டு மூன்று நாள் பயணம் செய்து வந்துசேர்ந்தாள் அம்மா. அண்ணா ரயில் ஏற்றிவிட்டிருந்தான். ஒரு சொல் கூட இந்தி தெரியாமலிருந்த போதிலும் குருட்டு தைரியத்தில் துணையின்றிக் கிளம்பி வந்திருந்தாள். அறுபதுகளில் விரைவு ரயில் இல்லை. அம்மா வந்து இறங்கும் போது வாசற்படியில் அழுது ஓய்ந்து தன் அம்மாவுக்காகக் காத்திருந்த பெரியவளுக்கு இரண்டு வயது. ஆறே மாதக்குழந்தையான சின்னவளோ தூளியில் சிணுங்கிக் கொண்டேயிருந்தாள்.

வேலைக்குப்போகாமல் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தேன். நிற்காமல் நீராகக் கழிந்து கொண்டிருந்த சின்னவளுக்கு எதைக் கொடுக்கவேண்டும் என்றுகூடத் தெரியாமல், அவள் அழும் போதெல்லாம் பால்மாவைக் கரைத்துக் கரைத்துக் கொடுத்திருந்தேன். இடையிடையே துணி அலசிடும் வேலைவேறு. உடனடியாக ‘ஆரோருட்’ மாவு வேண்டும் என்று அம்மா கேட்டதும் ஜீப்பில் போய் வாங்கி வந்தேன். குழந்தைக்கு கஞ்சிபோட்டு ஆறவைத்துக் கொடுத்தாள். வயிற்றால் போவது நின்று, வயிறு ஒரு வழிக்கு வந்து அமைதியாகித் தூங்கினாள். அழுதுகொண்டே இருந்த பெரியவளைச் சமாதானப்படுத்திச் சாப்பிடவைத்தாள். அலமேலு வீடு திரும்பிய பின்னரும் மேலும் சிலமாதங்களுக்கு அம்மா இருந்துவிட்டு தான் ஊருக்குத் திரும்பினான்.

அம்மாவின் சாடைப்பேச்சைப் புரிந்துகொண்டு, போகப்போக சில தமிழ்சொற்களை பதிலாகச் சொல்லக் கற்றுக்கொண்டிருந்தான். எந்த நேரத்தில் எந்த வேலைக்கு அம்மா அவனின் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவாள் என்று அத்துப் படியானது அவனுக்கு. வீட்டுக்குள் வரக்கூடாது, எதையும் கேட்காமல் எடுக்கக்கூடாது போன்ற சின்னச்சின்ன விதிமுறைகளை உடனுக்குடன் அனுசரித்தான். வேலைகுறைந்து போனதில் மனக்குறை அவனுக்கு. சுநாதருக்குப் பிடித்த காய்கறிகள் சேர்த்த உப்புமாவையும் மிளகுமணக்கும் பொங்கலையும் சமைத்திடும் போது அவனுக்கும் சேர்த்தேதான் அம்மா சமைத்தாள். அம்மாவின் சில கைப்பக்குவங்கள் அவனுக்கு மிகவும் பிடித்துப் போயின. எல்லாவற்றையும் கற்றுக் கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டினான். குடிநீர் பிடிக்கும் இடத்துக்கு அம்மா தானும் அவனுடன் போனாள் ஒவ்வொரு நாளும். ஒரு நீண்ட பருத்த மூங்கில் கழியின் இருபுறமும் அம்மா தானே கிணற்றில் இறைத்து நிரப்பி எடுத்து மாட்டிய பெரிய இருவாளிகளையும் சுநாதர் தூக்கி வந்தான்.

இரண்டு மாதங்கள் போனதும், ஒருநாள் அம்மா தன் அன்றாட வேலைகளை முடித்து சாப்பிட உட்கார்ந்து முதல் வாய் சாதத்தை எடுத்து வாயருகே கொண்டு போனவள் விட்டத்தில் குறுக்கே கட்டியிருந்த மூங்கிலில் ஒரு பெரிய மலைப்பாம்பு சுற்றியிருந்ததைப் பார்த்து பீதியில் உறைந்து விட்டாள். மெதுவாக நடந்து கூடத்துக்கு வந்து வெளியேறி, ‘பாம்பு, பாம்பு’, என்று கத்தியிருக்கிறாள். துரதிருஷ்ட வசமாக அன்று நானும் அம்புலுவும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பொருட்கள் வாங்கிவரப் போயிருந்தோம். அம்மாவின் கூக்குர கேட்டு சுநாதர் ஓடோடி வந்து பார்த்து விட்டு வேறு சில ஆட்களைக் கூப்பிட்டு வந்து மலைப்பாம்பை மெதுவாக விரட்ட முயன்றிருக்கின்றனர். பசியில் இரைதேடி வந்திருந்த அந்த ஏழடி நீளப் பாம்பு முரண்டவுடன், வேறு வழியில்லாமல் வெட்டிக் கொன்றுவிட்டதில், வீடு முழுவதும் இரத்தமும் சதையுமாகி விட்டிருந்தது. அவ்வப்போது வீட்டுள்ளே பாம்பு வருவது நாங்கள் அறிந்த ஒன்றுதான். ஆனால் அத்தனை பெரிய மலைப்பாம்பு வீட்டுக்குள் வருவதென்பதைக் குறித்து அவ்வூர் அம்மக்களே கூட வியந்தனர். வெளியே போயிருந்த நாங்கள் வீடு திரும்பும் போது சுநாதர் வீட்டைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தான். வெள்ளையடிக்கப்பட்ட வீடு போலக் களேபரமாகக் கிடந்தது. ஒரே ஆளாய் மளமளவென்று சீராக்கியவனின் முகத்தில் இருந்த லேசான அசௌகரியத்திற்கான காரணம் அடுத்தநாள் சௌதிரியிடம் அவன், ‘மாஜீ பாவம், மொதல்ல ரொம்பவே பயந்து போயிட்டாங்க. ஒரே வேள சாப்பாடு, அதுவும் இல்லாமப் போயிடுச்சு. மறுபடியும் சமைச்சி ராத்திரி தான் சாப்டாங்க’, என்ற போது தான் புரிந்தது.

***

அவ்வூரை விட்டு மாற்றலாகிக் கிளம்பும் போது குழந்தைகளைத் தடவிக்கொண்டும் என்னைப்பார்த்தும் சுநாதர் பெண்ணைப்போல கண்ணைத் துடைத்துக் கொண்டே பிழியப்பிழிய அழுதான். ஒருவாரம் முன்பு தான் அவனுக்கு விஷயமே தெரியும். ‘சாப், இவன் யார் போகும் போதும் இப்டி அழுததேயில்ல’, என்று சௌத்ரி சொன்னபோது இருக்கலாம் என்றுதான் தொன்றியது. சுநாதரின் அன்பின் அலையை ஏற்கனவே உணந்திருந்த நான் அன்று அவனின் நெகிழ்ச்சியில் பேச்சற்றுப் போயிருந்தேன். என்னுடைய ஒரு சட்டையையும் காற்சட்டையையும் கொடுத்தபோது வாங்கிக் கொண்டான். அவனுக்குப் பாட்டுக்கேட்கப் பிடிக்கும். ஆகவே, என்னுடைய பழைய வால்வு ரேடியோவையும் கொடுத்தபோது கொஞ்சம் தயங்கியபடியே வாங்கிக் கொண்டான்.
மூன்று வருடங்களுக்குப் பிறகு, நாக்பூரிலிருந்து மாற்றலாகி அஸ்ஸாமில் ‘சில்சார்’ருக்கு மாற்றப்பட்டபோது, அங்கு தான் சௌத்ரியைச் சந்திக்க நேர்ந்தது. அடுத்து வருடமே அவர் ஓய்வு பெறவிருந்தார். வருடங்கள் சுமந்துவந்திருந்த கதைகளையெல்லாம் பேசி, சுநாதரின் பேச்சு வந்தபோது மிகவும் வருத்ததுடன் பேசினார்.

ஆழ்அருவியில் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்த காதலியைக் காப்பாற்றிட அவளுக்குப் பின்னால் அவசரத்தில் சட்டென்று குதித்தவன் பாறையில் விழுந்திருக்கிறான். அவளையும் காப்பற்றவும் முடியாமல் தானும் பலமாக அடிபட்டு மருத்துவமனையில் பத்துநாட்கள் உயிருக்குப் போராடி, சித்தப்பிரமை பிடித்து விட்டிருந்ததாம். அவர்களின் இனவழக்கப்படி பெண் வீட்டார் கேட்ட ஆயிரம் ரூபாயைப் புரட்டிக் கொடுக்க முடியாமல் தான் சுநாதர் குழம்பியிருக்கிறான். சௌத்ரிக்குமே எல்லாம் நடந்த பிறகுதான் இதெல்லாம் தெரிந்திருக்கிறது. அதைக் கேட்டறிய முடியாத எனக்கமைந்த சூழலின் குற்றமா? என்ன ஏதென்று நான் கேட்டு உதவியிருந்தால், சுநாதர் தன் மனதிற்குப் பிடித்தவளோடு நன்றாக வாழ்ந்திருப்பானே. அவன் எனக்குச் செய்ததற்கெல்லாம் நான் என்ன செய்திருந்தேன். இதையாவது செய்திருப்பேனே. அவனின் பிரச்சனைக்குச் செவிகொடுக்கத் தவறிய என்னை என்னால் மன்னிக்கவே முடியவில்லை. ஐந்து வருடம் பழகிய என்னிடம் சுநாதர் ஏன் ஒரு வார்த்தை சொல்லவில்லை என்று தான் எனக்குப் புரியவேயில்லை.

உயிர் எழுத்து – அக்டோபர் 2007


sankari01sg@yahoo.com

Series Navigation

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர்