முனைவர் சி.சேதுராமன்
முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை,
E.Mail. sethumalar68 yahoo.com
பண்டைத் தமிழகத்தில் பாணர் என்போர் வாழ்ந்து வந்தனர். பாண் (யாழ்) வாசிக்கும் தொழில் காரணமாக இவர்களைப் பாணர் என்றழைதனர். பாணருள் இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர், என்ற மூவகையினர் இருந்தனர். இசைபாடுவோர் இசைப்பாணராவர். யாழ் வாசிப்போரை யாழ்ப்பாணர் என்றும், பிறரிடம் சென்று இரந்துண்டு வாழ்ந்தவர் மண்டைப் பாணர் ஆவர். பெரிய யாழை வாசிப்போர் பெரும்பாணர் என்றும், சிறிய யாழை வாசிப்போர் சிறுபாணர் என்றும் வழங்கப்பட்டனர். பாணர், பொருநர், கூத்தர் ஆகியோர் தமக்குப் பரிசளிப்போரைப் புகழ்ந்து பாடுவர். இவர்கள் அரசர்கள், சிற்றரசர்கள், குறுநிலத் தலைவர்கள் ஆகியோரின் குடும்ப நண்பர்களாக விளங்கினர். இத்தகையோர் அக வாழ்க்கையில் தூதுவர்களாகவும் செயல்பட்டனர்.
பாணர்களை ஆற்றுப்படுத்தும் இரு ஆற்றுப்படை நூல்கள் பத்துப்பாட்டுள் இடம்பெற்றுள்ளமை நோக்கத்தக்கது. அவையாவன, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை என்பனவாகும். சிறுபாணரை ஆற்றுப்படுத்தும் சிறுபாணாற்றுப்படையில் நல்லூர் நத்தத்தனார் ஓய்மாநாட்டு நல்லியக் கோடனின் வள்ளல் தன்மையைப் பாராட்டும்போது அவன் கடையெழு வள்ளல்களைப் போன்ற கொடையாளியாவான் எனக் கடையெழு வள்ளல்கள் பற்றிக் கூறுகின்றார். அவ்வள்ளல்கள் எவ்வாறு வறுமை தீர வாரிவாரி வழங்கினரோ அதுபோன்று இவனும் வழங்குவான் எனப் பரிசில் பெற்ற பாணன், பரிசில் பெறாத பாணனிடம் கூறுவதாகப் புலவர் அமைத்துப் பாடியிருப்பது சிறப்பிற்குரியதாகும்.
நல்லூர் நத்தத்தனார், ஒவ்வொரு வள்ளலும் செய்த அரிய செயலைச் சுட்டிக் காட்டி அவர்களை அறிமுகப்படுத்துகின்றார். கடையெழு வள்ளல்களைப் பற்றி 84-வது அடிமுதல் 111-வது அடிவரையில் உள்ள 28 வரிகளில் சிறுபாணாற்றுப்படை எடுத்துரைக்கின்றது.
பேகன்
இவ்வள்ளலை வையாவிக் கோமான் பெரும் பேகன் என்றும் அழைப்பர். ஆவியர் குடியின்ன். இவனை கபிலர், பரணர், வன்பரணர், அரிசில் கிழார், பெருங்குன்றூர்கிழார் ஆகியோர் பாடியுள்ளனர் (புறம்141-147 158). மழை வளமுடைய மலையின் பக்கத்தில் மயிலொன்று தோகையை விரித்து ஆடிக் கொண்டிருந்த்து. அதனைக் கண்டவுடன் குளிர் தாங்காமல் நடுங்குகின்றது என்று எண்ணினான். உடனே தனது போர்வையை அதன் மீது போர்த்தினான். வலிமை வாய்ந்தவன். இத்தகைய சிறப்புகளை,
‘‘வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கானமஞ்சைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியல் பெருமகன்
பெருங்கடல் நாடன் பேகனும்“ (சிறுபாண்84-87)
என சிறுபாணாற்றுப்படை எடுத்துரைக்கிறது.
பாரி
முந்நூறு ஊர்களையுடைய பறம்பு நாட்டிற்கும், பறம்பு மலைக்கும் தலைவனாக விளங்கியவன் இவன். வேளிர் குலத் தலைவன். வாளாண்மையாலும், வள்ளன்மையாலும் தனக்குத் தானே நிகரென விளங்கியவன். மூவேந்தரும் ஒருங்கே முற்றுகையிட்டும் கைப்பற்ற இயலாத வலிமை படைத்தவன். அவர்களால் வஞ்சகமாக அழிக்கப்பட்டவன். கபிலர் இவனுடைய கெழுதகை நண்பராக விளங்கினார். இவனைப் பற்றி 105-120, 158,176,236 ஆகிய புறநானூற்றுப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன.
இப்பாரி வள்ளல் முல்லைக்குத் தேர் கொடுத்துப் பெரும் புகழ் பெற்றான். சுரபுன்னை மரங்கள் நிறைந்த நெடுவழியிலே முல்லைக் கொடியொன்று பற்றிப் படர கொழு கொம்பின்றித் தவித்துக் கொண்டிருந்தது. அதைத் தேரில் வந்த பாரி பார்த்து தான் ஏறிவந்த பெரிய தேரினை அம் முல்லைக் கொடி படரும்படி அதன் அருகிலே நிறுத்தி வைத்தான் என்ற எல்லா உயிரும் தம்முயிர் போல் எண்ணி இரங்குகின்ற அன்பினை,
“கரும்புண
நறுவீ உறைக்கும் நாகம் நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்க வெள்ளருவி வீழும் சாரல்
பறம்பின் கோமான் பாரியும்” (சிறுபாண். 87-91)
என நத்தத்தனார் விளக்குகிறார். சிறு முல்லை – பெருந்தேர் என முரண் வைத்து வள்ளலின் சிறப்பினை புலவர் கூறியிருப்பது எவ்வுயிரையும் தம்முயிர் போல் கருதும் மாண்பினை தெளிவுறுத்துவதாக அமைந்துள்ளது.
காரி
இவ்வள்ளல் பெண்ணையாற்றங்கரையிலுள்ள திருக்கோவலூரில் இருந்தவன். முள்ளுர் மலைக்கு உரியவன். இவனைக் காரி என்ற குறிப்பதும் உண்டு. சோழனுக்கும், சேரர்க்கும் படைத் துணையாக விளங்கியவன். இவனை அழித்தவன் அதிகமான் நெடுமான் அஞ்சியாவான். இவனை கபிலர், மாறோகத்து நப்பசலையார் ஆகியோர் பாடியுள்ளனர். இவனைப் பற்றிய செய்திகளை, புறநானூற்றில் இடம்பெற்றுள்ள, 121,124,160 ஆகிய பாடல்கள் எடுத்துரைக்கின்றன.
உலகம் வியக்கும்படி ஒலிக்கின்ற மணிகளையும் வெண்மையான பிடரிமயிரினையும் உடைய குதிரைகளையும், ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்களுக்கு இல்லை என்று கூறாது கொடுத்து உதவியவன் காரி. நெரப்பைப் போன்று சுடர்விடுகின்ற வேலை உடையவன். வீரக்கழலையும், தோள் வளையத்தையும் அணிந்தவன். நீண்ட கையை உடையவன் என இவ்வள்ளலின் தோற்றத்தை,
“கறங்குமணி
வால் உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல் தொடித் தடக்கைக் காரியும்” (சிறுபாண். 91-95)
எனக் காட்டுகிறது. இரவலர்களின்மனங்குளிருமாறு அன்பான வார்த்தைகளைக் கூறி அவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்து மகிழ்ந்தவன் என இவ்வள்ளலின் வள்ளல் தன்மையினைப் புலவர் ‘‘ஈர நன்மொழி“ என்ற சொல்லால் விளக்கியிருப்பது போற்றுதற்குரியது.
ஆய்
ஆய் அண்டிரன் என்றும் இவ்வள்ளலை அழைப்பர். இவ்வள்ளல் வேளிருள் கொடையால் மேம்பட்ட தலைவர் சிலருள் ஒருவன். பொதியில் மலைப்பகுதித் தலைவனாக விளங்கியவன். இரவலர்க்குக் கொடுத்து மகிழும் சிறந்த பண்பாளன். நீலநாகம் தனக்கு நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வற்கு கொடுத்த சிறப்பினன். உறையூர் ஏணிசேரி முடமோசியார். உமட்டூர்கிழார் மகனார் பரங்கொற்றனார். துறையூர் ஓடைக்கிழார், குட்டுவன் கீரனார், காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், பரணர், பெருஞ்சித்திரனார், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் ஆகிய புலவர்கள் இவனது கொடையை வியந்து பாராட்டிப் பாடியுள்ளனர். இவனைப் பற்றி, 127-136, 240, 374-375 ஆகிய புற்நானூற்றுப் பாடல்கள் பல்வேறு குறிப்புகளை நவில்கின்றன.
சிவபெருமானுக்கு அளித்த கொடையின் சிறப்பினையும், இரவலர்களை அன்புடன் நன்மொழி கூறி ஆதரித்த வள்ளல் தன்மையையும்,
“நிழல் திகழ்
நீலநாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வர்க்கு அமர்ந்தன்ன் கொடுத்த
சாவந்தாங்கிய சாந்குபுலர்திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆயும்” (சிறுபாண்., 95 – 99)
என சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. தன்னை நாடி வரும் இரவலர்களை பண்புடனும், இனியன கூறியும் ஆதரித்தான் என்பதனை, “ஆர்வநன்மாழி ஆய்“ என்று புலவர் குறிப்பிடுகிறார். இல்லாதாரை இனியன கூறி அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதே சிறந்த்து. இரப்போர் தானே என்று கருதி அவர்களை மனித்த் தன்மையற்று ஆய் நடத்தவில்லை. மனித மதிப்புகளுக்கு ஊறுநேரா வண்ணம் அவ்வறிஞரை இன்மொழி கூறி உபசரித்தான் என்பதனையே புலவர் பெருமகனார் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
அதியமான்
இவ்வள்ளலை அதியமான் நெடுமான் அஞ்சி என்றும் குறிப்பிடுவர். தற்போது தர்மபுரி என்று அழைக்கப்படும் தகடூரிலிருந்து அரசாண்டவன். குதிரை மலைக்குத் தலைவன். மழவர் கோமான். கரும்பைத் தமிழ் நாட்டிற்குக் கொண்டுவந்தோரின் வழி வந்தவன். உண்டோரை நெடுங்காலம் வாழச் செய்யும் தன்மை உடையதும், அரிதாகக் கிடைக்கக் கூடியதுமாகிய அரு நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஔவைக்கு ஈந்தவன். சேரர் குடும்பத்தைச் சார்ந்தவன். வள்ளல்களுள் ஒருவனாகிய மலையமான் திருமுடிக்காரியை சோழர் துணையோடு வென்றுபுகழ் பெற்றவன்.
ஔவையார், பரணர், பெருஞ்சித்திரனார், பொன்முடியார், அரிசில்கிழார், ஆகிய புலவர் பெருமக்கள் போற்றிப் பாடியுள்ளனர். இவனது புகழைக் கண்டு இவனை அழிக்கக் கருதிய சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேரமன்ன்ன் இவனை வென்று தகடூரையும் அழித்தான். இத்தகடூர்ப் போரை மையமாக வைத்து தகடூர் யாத்திரை என்ற நூல் அப்போது எழுதப்பட்டது. அப்போரில் அதியமான் கொல்லப்பட்டான். பாரியும் கபிலரும் போன்று அதியமானும், ஔவையும் நல்ல நட்பாளர்களாக இருந்தனர். தகடூர் யாத்திரை எனும் நூல் அதியனின் புகழைப் பாடும் நூலகத் திகழ்கின்றது. புறநானூற்றில் இடம் பெற்றுள்ள, 87-95, 97-101, 102-104, 158, 206, 231-232, 235, 310, 315, 390 ஆகிய பாடல்கள் அதியனின் வள்ளல்தன்மைக்குச் சான்று பகர்கின்றன.
அதியனின் சிறப்பை,
“மால்வரைக்
கமழ்பூஞ்சாரல் கவினிய நெல்லி
அமிழ்துவிளைதீம்கனி ஔவைக்கு ஈத்த
உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக்கடல்தானை அதிகனும்“ (சிறுபாண். 99-103)
என சிறுபாணாற்றுப்படை நுவல்கிறது. மலைச்சாரலிலே உள்ள நெல்லி மரத்தில் கிடைத்த அமுதத்தைப் போன்ற இனிய நெல்லிக் கனியைத் தான் உண்ணாமல் ஔவைக்களித்தான் என அதியனது கொடைத்தன்மையை முன்னர் கூறி, இவ்வதியன், பகைவர்களிடம் வலிமையைக் காட்டுவான், சினத்தைச் செலுத்துவான், வேற்படையை உடையவன், கடல் போன்ற பெரும் படையை உடையவன் என அவனது போராற்றலைப் புலவர் எடுத்துரைப்பது சிறப்பிற்குரியதாகும். இரவலர்க்கு இரங்கும் இரக்க குணம் உடையவன் மட்டுமல்லாமல், பகைவிரட்டும் சிறந்த போர்வீரனாகவும் அதியன் திகழ்ந்தான் என்பதை இவ்வரிகளில் நத்தத்தனார் மொழிவது சிறப்பிற்குரியதாக அமைந்துள்ளது. வீரமும், ஈரமும் உடையவன் அதியன் என்பதை புலவர் நன்கு புலப்படுத்துகிறார்.
நள்ளி
கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகிய இவனை கண்டீரக்கோப்பெருநள்ளி என்றும் கூறுவர். நள்ளி தோட்டிமலைக்கும், அதனைச் சார்ந்த பகுதிகளுக்கும் உரியவனாக விளங்கினான். வன்பரணர், பெருந்தலைச்சாத்தனார், கபிலர், காக்கைப் பாடினியார், நச்செள்ளையார், பரணர், பெருஞ்சித்திரனார் ஆகியோர் இவனைப் போற்றிப் பாடியுள்ளனர். காட்டிடத்திலேயே இரவலருக்கு உணவும், மார்பிற் கிடந்த ஆரமும், முன்கைக்கடகமும் தந்து உபசரிப்பவன் இவ்வள்ளல். அவ்வாறு உபசரித்துவிட்டு தனது நாட்டைப் பற்றியோ, தனது பெயரையோ கூறமாட்டான். அத்தகைய புகழ் விரும்பாப் பண்பாளனாக நள்ளி விளங்கினான் எனப் புலவர் (புறம்.150) போற்றி உரைக்கின்றார்.
இவ்வள்ளலின் சிறப்பை, 148-150, 151,158 ஆகிய புறநானூற்றுப் பாடல்கள் புலப்படுத்துகின்றன. நள்ளியின் பண்பின் திறத்தை,
“கரவாது
நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாடன் நள்ளியும்“ (சிறுபாண். 103-107)
என நத்தத்னார் மொழிகிறார். தன்னிடம் உள்ள பொருளை ஒளிக்க மாட்டான். தன்பால் அன்பு காட்டுவோர் அனைவரும் மகிழும் வண்ணம் செய்வான். வறியோர்களுக்கு அவர்கள் இல்வாழ்வை இனிது நடத்துவதற்குரிய எல்லாச் செல்வங்களையும் கொடுப்பான் என இவனது பண்பினை எடுத்துக் கூறி, பின்னர், இவன் போரில் வெல்லும் திறம் படைத்தவன், நீண்ட கைகளை உடையவன். இத்தகைய வீரம் உடையவன் குளிர்ந்த மலைநாட்டிற்குத் தலைவனாக விளங்கினான் எனத் தெளிவுறுத்துகிறார்.
ஓரி
இவ்வள்ளலை வல்வில் ஓரி என்றும் கூறுவர். கொல்லி மலைக்கும் அதனைச் சார்ந்துள்ள பகுதிகளுக்கும் தலைவனாக விளங்கியவன். இவனை, ‘ஆதனோரி‘ என்றும் குறிப்பர். வில்லாற்றலில் சிறந்தவன் ஆதலால் இவனை வல்வில் ஓரி என்றழைத்தனர். சேரனுக்கும் இவனுக்கும் பகைமை ஏற்பட்டது. சேரனுக்காக மலையமான் திருமுடிக்காரி என்ற பிரிதொரு வள்ளல் இவன் மீது படையெடுத்து வந்து போர் புரிந்தான். அப்போரில் ஓரி இறந்தான். இவ்வள்ளலை, வன்பரணர், கழைதின் யானையார் உள்ளிட்ட புலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். இவ்வள்ளலின் சிறப்பை, 153-154, 158, 214 ஆகிய புறநானூற்றுப் பாடல்கள் புலப்படுத்துகின்றன
நெருங்கிய கிளைகள் பூத்துக் குலுங்கியிருக்கின்ற நல்ல மலர்கள், இளமையும், முதிர்ச்சியும் உடைய சுரபுன்னை மரங்களும் சிறிய மலைகளும் அமைந்த நல்ல நாட்டைக் கூத்தாடுவோருக்குப் பரிசாகக் கொடுத்தவன் ஓரி. காரி என்னும் குதிரையை உடைய மலையமான் திருமுடிக் காரியுடன் போர் செய்தவன். ஓரியென்னும் குதிரையை உடையவன் இவ்வல்வில் ஓரி என்ற வரலாற்றுக் குறிப்பை,
‘‘நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்துக்
குறும்பொறை நன்னாடு கோடியர்க் கீந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த
ஓரிக்குதிரை ஓரியும்“ (சிறுபாண். 107-111)
என்று நத்தத்தனார் எடுத்துரைக்கின்றார். இதில் முதலில் வள்ளலின் கொடைத் தன்மையை எடுத்துரைத்து, பின்னர் வள்ளலின் போர்த்திறத்தைப் புலவர் கூறுகிறார்.
சிறுபாணாற்றுப்படையானது வள்ளல்களின் சிறப்புப் பண்புகளை எடுத்துரைக்கின்றது. அதன்பின் அவர்களின் போராற்றலை எடுத்துரைக்கின்றது. இவ்வள்ளல்கள் ஈகைக் குணம் மட்டும் கொண்டவராக இல்லாது வீரமறவராகவும் திகழ்ந்தனர் என்று வள்ளல்களின் புகழ்பாடுகின்றார் நத்தத்தனார். ஒவ்வொரு வள்ளலது நாட்டின் சிறப்பினை கண்முன் கொண்டுவந்து காட்டுகின்ற புலவரின் புலமைத்திறம் போற்றுதற்குரியதாகும்.
இவ்வள்ளல்கள் தம்மிடம் வந்து இரந்தோரை மதித்துப் போற்றினர். இழிவாக நடத்தவில்லை. அவர்களுக்கு இனியன கூறி மகிழ்வித்தனர். மனித மதிப்பை உணர்ந்த மாண்பாளர்களாகவும், மனிதநேய மிக்கவர்களாகவும் இவ்வள்ளல்கள் விளங்கினர் என்பதை சிறுபாணாற்றுப்படைப் புலவர் நன்கு எடுத்துரைக்கின்றார் இவ்வள்ளல்களைப் போன்றவன் என நல்லியக் கோடனின் புகழையும் புலவர் இணைத்துப் பொருத்திக் காட்டுகின்றார். ஒருவரைப் புகழ்வதற்காக மற்றவரைப் பழித்தோ, குறைத்தோ கூறாது, ஒருவரின் சிறப்புகளை எடுத்துக் கூறி அவர்களைப் போன்றவன் இம்மன்னன் என்று கூறியிருப்பது வியப்பிற்குரியதாகும். புலவரின் பண்பும், புரவலரின் பண்பும் ஒருங்கே இச்சிறுபாணாற்றுப்படையில் புலப்படுவதை நன்கு கண்டுணரலாம்.
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம்- பாடம் 1
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -1
- ஞாநியுடன் ஒரு கலந்துரையாடல் – நியூயார்க் – நியூஜெர்ஸி
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2
- எழுத்தாளர் விழாவும் புலம்பெயர் எழுத்தாளர்களும்
- குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருப்பது எப்படி?
- சூழ்வெளிச் சூடேற்றத்தில் சூரிய வடுக்களின் (Solarspots) பங்கு என்ன ? [கட்டுரை: 1]
- கனவும் நனவும்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -20
- கவிதை கூறும் சிறுகதை: எதிர்காலச் சித்தன்!
- சிறுபாணாற்றுப்படையில் புலவரின் பண்பும், புரவலரின் மாண்பும்
- வேத வனம் விருட்சம் 92
- சுப்ரபாரதிமணியன் பண்ணத்திர “நூலின் முன்னுரை
- நம்பிக்கைச் சுடர் பாரதியின் சுய சரிதையில் தன் வெளிப்பாடுகள்
- தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர்.மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து நடத்தும் POETRY WORKSHOP கவிதைப் பட்டறை
- ஆதியோடு அந்தமுமாக ஒளிவு மறைவில்லாத இந்து சமய தத்துவங்கள்
- ஸ்ரீமதி கிரிஜா ராகவன் அவர்களுக்கு:…
- கிரிஜா ராகவன் கடிதத்தை ஒட்டி சில சிந்தனைகள்
- பேராசிரியர் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி மற்றும் தியாகி கக்கன் அவர்களது சகோதரர் விஸ்வநாதன் கக்கன் ஆகியோர் உரை
- நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும் – ஜமாலன் – புத்தக அறிமுகம்
- விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தேழு
- தவித்துழல்தல்
- ஒலியும் மொழியும்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் – ஊழ்விதி கவிதை -30 பாகம் -2
- ஒவ்வொரு விடியலும்….
- ஊமையர்களின் கதையாடல்
- நாளை தேசத்தைக் காக்க இன்று கடப்பாவைக் காப்பாற்றுவோம்
- நினைவுகளின் சுவட்டில் – (50)
- முஸ்லிம்தலித் – சாதிய கணக்கெடுப்பின்வழி
- சாதியும், கணக்கெடுப்பும் –
- போதி மரம்
- எனக்கான ‘வெளி’
- ஆட்டோ பயோகிராஃபி ஆஃப் சைல்ட் – 3
- பழைய வாத்தியார்
- கனம் 1 கதை 10 – வரிசை 6 ஆதலினால் காதலே
- முள்பாதை 35