சிறுகதை : டி.என்.ஏ

This entry is part [part not set] of 24 in the series 20081113_Issue

சோ.சுப்புராஜ்



– சோ.சுப்புராஜ்
*********************************************************************************************************************
இன்றைக்கு இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்பு
இந்தியாவின் தமிழக கிராமம் ஒன்றில்…..
பாண்டியம்மாள் இரவோடிரவாக வீட்டை விட்டு ஓடிப்போவதென்று தீர்மானித்தாள். அவளுக்கு வேறு வழி எதுவும் புலப்படவில்லை. அவளின் கிராமத்திலிருந்து ஆண்களும் பெண்களும் ஓடிப் போவது அப்படி ஒன்றும் புதிய விஷயமில்லை. காதலுக்காகவும், வேலைக்காகவும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் பாண்டியம்மாள் ஓடிப்போக நினைத்தது படிப்பதற்காக.
அவள் மேல்நிலை பொதுத் தேர்வில் ஆயிரத்துச் சொச்சம் மதிப்பெண்கள் பெற்று, அண்ணா பல்கலைக் கழகத்தில் இளநிலை பொறியியல் படிக்க அவளுக்கு இடம் கிடைத்திருந்தது. கழுதைகள் கற்பூர வாசனை அறியுமோ என்னவோ, கல்வி வாசனை அறியாதவர்கள் கண்டிப்பாய் வாழத்தானே செய்கிறார்கள். அதுவும் கல்வியின் சுகந்தத்தைக் கண்டு முகஞ் சுளிப்பவர்களில் பாண்டியம்மாளின் அப்பாவும் ஒருவர். அவர் “பொட்டப்புள்ள படிச்சு என்னத்தக் கிழிக்கப் போகுது…” என்ற பிடிவாதத்தில் அவளுக்கு கல்யான ஏற்பாடுகள் செய்து விட்டார்.
பாண்டியம்மாள் போராடிப் பார்த்தாள்; பட்டினி கிடந்தாள்; உள்ளூர் ஆசிரியர்கள் வந்தும் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தார்கள். அவர் எதற்கும் மசிவதாய் இல்லை. சொந்த மாப்பிள்ளை தட்டிப் போய் விட்டால் அப்புறம் அவளின் படிப்பிற்குத் தக்க மாப்பிள்ளை தேட வேண்டுமே என்கிற அவரின் கவலை அவருக்கு. “இப்ப எல்லாம் நம்ம சாதியில ஆம்பளைப் பயலுக எங்க படிக்குறானுங்க? பொட்டப் புள்ளைங்க தான் கருத்தாப் படிக்குதுங்க…!” என்கிற ஆதங்கமும், அப்படியே ஒருவேளை மாப்பிள்ளை கிடைத்தாலும் அதற்குத் தகுந்தாற் போல் வரதட்சணை வேறு கொட்டிக் கொடுக்க வேண்டுமே என்கிற கவலையும் அவரை அவர் நிலையில் பிடிவாதமாக இருக்கச் செய்து விட்டது.
பெண்கள் திருமணத்தை நோக்கியே வளர்க்கப் படுகிற அவலத்திற்கு தானும் பலியாக விரும்பாமல், இவளின் கல்யாணத்திற் கென்று அப்பா சேர்த்து வைத்திருந்த பணம், நகை எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, ஊரே அமைதியாய் உறங்கும் ஜாமத்தில், கால் கொலுசும் சப்திக்காதபடி மெதுவாய் நடந்து, வீட்டிலிருந்து வெளியேறி….இரயிலேறி, அடுத்த நாள் சென்னைப் பட்டணத்திற்கு வந்து சேர்ந்தபோது இருட்டத் தொடங்கியிருந்தது.
இரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து பார்த்தபோது ஒரே வெளிச்சக் காடாய் கிடந்தது. எங்கு போவது? யாரை விசாரிப்பது? எதுவும் புரியவில்லை. இவளின் விழிகளின் மிரட்சியிலிருந்து இவள் ஊருக்குப் புதியவள் என்பதைப் புரிந்து கொண்ட – இதற்காகவே அலைகிற சிலர் – இவளை தப்புக் காரியங்களுக்கு இழுத்துப் போக முயற்சிக்க, அவளின் உள்ளுணர்வில் ஒரு எச்சரிக்கை மின்னல் வெட்ட, சின்ன வயதில் அவள் பாடப்புத்தகத்தில் படித்தது – இக்கட்டான தருணங்களில் காவல் நிலையத்தை அணுகி உதவி கேட்கலாம் என்ற விஷயம் – ஞாபகத்திற்கு வர, மிக நம்பிக்கையாய் அருகிலிருந்த காவல் நிலையத்திற்குள் நுழைந்தாள்……

நிகழ்காலம் : அமெரிக்காவின் நியூயார்க் நகரில்…..
லேபிலிருந்து வந்திருந்த ரிப்போர்ட்டை ஆவலாய் வாங்கிப் பார்த்த அய்யனாருக்கு முதல் அதிர்ச்சி முகத்தில் அறைவதாய் இருந்தது. அவனே அவனுக்கு மிகவும் அசிங்கமானவனாய்த் தெரிந்தான். கழுவவே முடியாத களங்கம் தன்மேல் ஒட்டிக்கொண்டதாய் உணர்ந்தான். அம்மாவை நினைக்கும் போதோ குமட்டிக் கொண்டு வந்தது அவனுக்கு. சென்ற நிமிஷம் வரை அழகின் பேருறுவாய் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருந்தவள் சரசரவெனச் சரிந்து இந்த நிமிஷம் மிகவும் அருவருப்பானவளாய் மாறிப் போனாள்.
நல்ல வேளை! செல்சியா இப்போது வீட்டிலில்லை. இருந்திருந்தால் கெக்கொலி கொட்டிச் சிரித்திருப்பாள்.அப்பாவிடம் இந்த அசிங்கத்தை எப்படிச் சொல்வது? சொன்னால் அந்த மென்மையான மனதால் இதைத் தாங்கிக் கொள்ள முடியுமா? அப்பாவின் மேல் முதல் முறையாய் அவனுக்குள் ஒரு கரிசனம் முளைவிட்டது.
சின்ன வயசிலிருந்தே அய்யனாருக்கு அம்மா என்றால் தான் கொள்ளைப் பிரியம். அவளின் அழகும் கம்பீரமும் அவளை நெருங்கினாலே அவளிடமிருந்து கமழ்கிற நறுமண வாசனைகளும் அவனுக்கு அலாதியான சந்தோஷத்தைத் தரும். அவள் உடுத்தியிருக்கிற மடிப்புக் கலையாத சேலைக்குள் போய் பூனைக்குட்டியாய் ஒடுங்கிக் கொள்ளப் பிடிக்கும். அவளின் கைங்கரியத்தால் வீடு எப்போதும் சுத்தமாய் ஒவ்வொரு பொருளும் அதனதன் இடத்தில் பாந்தமாய்ப் பொருந்தி பளிச்சென்று இருக்கும். இத்தனைக்கும் அம்மா வேலைக்குப் போகிறவள். அவளின் அலுவலகத்தில் – இவள் நுழைந்தாலே எல்லோரும் அவரவர் இடத்தில் எழும்பி நின்று வணக்கம் சொல்கிற அளவிற்கு – பெரிய அதிகாரி.
அப்பா அமல்ராஜ் அம்மாவுக்கு நேரெதிர். எப்போதும் அழுக்கும் கிரீசுமாய் அரை டிராயருடன்தான் அலைவார். அவரை நெருங்கினாலே மக்கிய எண்ணெய் வாடை அடிக்கும். அவர் ஒரு சிறிய கம்பெனியில் மெக்கானிக். ஒழிந்த நேரங்களில் விவசாயிகளின் பம்பு செட்டுக்களைக் கொண்டு வந்து அக்கக்காய்ப் பிரித்துப் போட்டு ஏதாவது நோண்டிக் கொண்டிருப்பார். அவரைக் கண்டாலே அய்யனாருக்குப் பிடிக்காது. அவர் இவனைக் கொஞ்சுவதற்கு நெருங்கி வந்தாலே ஓடி ஒழிந்து கொள்வான்.
ஆனாலும் அப்பாவிற்கு அய்யனாரை ரொம்பப் பிடிக்கும். எது கேட்டாலும் உடனேயே வாங்கித் தருவார். எவ்வளவு பணம் கேட்டாலும் கேள்வியே கேட்காமல் எடுத்துக் கொடுத்து விடுவார். அம்மாவோ கேள்விகளால் குடைந்து விடுவாள். அப்பாவுடனும் சண்டைக்குப் போவாள். இவன் அமெரிக்காவில் வேலை கிடைத்து அங்கு போக வேண்டுமென்று சொன்னபோதுகூட அம்மா அனுப்ப முடியாதென்று தான் அடம் பிடித்தாள்.
அப்பாதான் இவனுக்கு ஆதரவாய்ப் பேசினார். “நாமதான் கிணத்துத் தவளையாட்டம் இங்கனக்குள்ளேயே உழண்டுட்டுக் கிடக்கிறோம்….அவனாவது நாலு நாடுகளச் சுத்திப் பார்த்துட்டு வரட்டும்; சந்தோஷமா அனுப்பி வை….” என்றார். “கெட்டுக் குட்டியச் சுவராய் திரும்பி வரப் போறான் பாருங்க..” என்றாள் அம்மா. “அப்படியெல்லாம் நீ பயப்புடுறாப்புல எதுவும் நடக்காது….நம்ம புள்ளய நாமளே நம்பாட்டா எப்படி?” என்று இவனுக்காக வாதாடி இவனை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார்.
அமெரிக்காவில் அய்யனாரின் ஆரம்ப நாட்கள் மிகவும் சந்தோஷமாகவே கழிந்தன. நியூயார்க் தான் நிஜமான சொர்க்கம் என்று மிதப்பில் அலைந்து கொண்டிருந்தான். மூன்று மாதங்கள் முடிந்து கம்பெனி கெஸ்ட் ஹவுஸிலிருந்து வெளியேறி சொந்தமாய் வாடகைக்கு வீடு தேடிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்தபோது தான், தான் வேரற்று வீதியில் நிற்குற உணர்வும், தன்னுடைய தற்போதைய சம்பளத்தில் தனிவீடு சாத்தியமில்லை என்கிற உண்மையும் உறைத்தது.
பகிர்ந்து கொள்ளும் அறை (Sharing Accomodation) தேடும் படலத்தில் ஒரு பத்திரிக்கை விளம்பரம் பார்த்துப் போனபோது தான் செல்சியா அறிமுகமானாள். ஐரிஸ் பெண். நெடுநெடுவென வளர்ந்து தகதகவென செவ்வரியோடிய மஞ்சள் தங்கமாய் மனதைக் கிளர்த்தும் வசீகரத்தில் இருந்தாள்.அவனுடைய நல்ல நேரம்; அவளுக்கு இந்தியர்களைப் பிடித்திருந்தது. இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அவளுடைய பிளாட்டில், ஒரு அறையில் அய்யனார் தங்கிக் கொள்ளலாம் என்றாள் ஒரே ஒரு நிபந்தனையுடன் – அய்யனார் மட்டுமே தங்க வேண்டும்; வாடகைச் சிக்கனத்திற்காக வேறு யாரையும் சேர்த்துக் கொள்ளக்கூடாது. அவள் அவனுக்கு கட்டுபடியாகும் வாடகையே சொன்னதால் இன்னொரு நபரைச் சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியமும் அவனுக்கு நேரவில்லை.
செல்சியாவுடன் அமெரிக்கன் ஒருத்தனும் தங்கி இருந்தான். ‘இருவரும் கணவனும் மனைவியுமா?’ என்று அய்யனார் ஒருமுறை எதேச்சையாய்க் கேட்டபோது இருவருமே அவசரமாய் மறுத்தார்கள். “இல்லை இல்லை; நாங்கள் சேர்ந்து வாழ்கிறோம்; அவ்வளவு தான்…..” அமெரிக்கன் மட்டும் அடிஷனலாக “திருமணத்தில் எல்லாம் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை.” என்று உதட்டைச் சுளித்தான்.
வெகுசீக்கிரமே அவர்களின் அன்யோன்யத்தில் விரிசல் விழுவதை அவர்களின் வரவேற்பறை சண்டைகளின் மூலமும் சில நாட்கள் இரவுகளில் அமெரிக்கன் வீட்டிற்கு வராமல் இருப்பதிலிருந்தும் புரிந்து கொண்டான் அய்யனார். ஒரு சாயங்காலம் அவர்களுக்கிடையேயான சண்டை விஸ்பரூபமெடுத்து இறுதியில் அமெரிக்கன் அவனுடைய உடமைகளை வாரிக் கொண்டு நிரந்தரமாய் வெளியேறியதில் முடிந்தது.
அடுத்தநாள் அய்யனார் செல்சியாவிடம் தானும் வெகு சீக்கிரம் வேறு அறை தேடிப் போய் விடுவதாகச் சொல்லவும் அவள் பதறிப் போனாள். “ஏன் நீ இங்கிருந்து போகணும்?”என்ற அவளின் கேள்விக்கு, “வயது வந்த ஆணும் பெண்ணும் ஒரே வீட்டில் தனியாக வசிப்பது அத்தனை உசிதமில்லை…” என்றான் இந்திய கட்டுப் பெட்டித் தனத்துடன்.
“இதுதான் இந்தியர்களிடம் எனக்கு மிகவும் பிடித்த பண்பு….” என்று சிலாகித்தவள் “ப்ளீஸ் அய்யனார், உடனே நீ போக வேண்டாம்; அந்த ப்ளடி பிட்ச்சை நான் மிகவும் நேசித்தேன். என்னை முறைப்படி கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்லி கெஞ்சினேன். ஆனால் அவன் என் சொத்துக்களுக்காகத் தான் என்னுடன் ஒட்டிக் கொண்டிருந்த உண்மை தாமதமாகத் தான் புரிந்தது. அதனால் அவனை வெளியே போகச் சொல்லி விட்டேன். நான் இப்போது மிகவும் மனக் குழப்பத்திலிருக்கிறேன். இந்நிலையில் நீயும் கிளம்பிப் போய் விட்டால் நான் மிகவும் உடைந்து போவேன். என் தனிமை என்னை தற்கொலை முயற்சிக்குத் தள்ளி விட்டுவிடும். அதனால் நீயாவது கொஞ்சம் ஆறுதலாக இங்கேயே இன்னும் கொஞ்ச நாட்களுக்குத் தங்கி இரு….” என்று கைகளைப் பிடித்துக் கொண்டு கண் கலங்கியவள், “பயப்படாதே! உன் கற்புக்கு எந்தப் பங்கமும் வராது; அதற்கு நான் கேரண்டி….” என்று மலர்ச்சியாய்ச் சிரித்தாள்.
அடுத்து வந்த நாட்களில் அமெரிக்காவின் விரைவு உணவுகள் வெறுத்துப் போய், அய்யனார் தனக்காகச் சமைத்துக் கொண்ட இந்திய உணவுகளை செல்சியாவும் ருசித்துச் சாப்பிட்டு அதன் காரத்தில் கண்ணீர் விட்டாள். அவன் பார்க்கிற அசட்டுத் தமிழ் சினிமாக்களை அவளும் கண் கொட்டாமல் பார்த்து இப்படிப்பட்ட காதல்கள் உங்கள் தேசத்தில் மட்டுமே சாத்தியம் என்று வியந்தாள். தமிழ் சினிமாக் காதல் எந்த தேசத்திலுமே சாத்தியமில்லை என்பதை அவன் அவளிடம் சொல்லவில்லை.
மெதுமெதுவாய் இருவரும் நெருங்கினார்கள். வயசும் வாலிபமும் தனிமையும் தவிப்பும் இருவரையும் அத்துமீற அனுமதிக்க உறவுகளில் எல்லை கடந்தார்கள். புணர்ச்சியின் உச்சகட்டத்திலிருந்த ஓரிரவில் செல்சியா அய்யனாரின் காதில் “இந்திய முறைப்படி என்னை திருமணம் செய்து கொள்கிறாயா?” என்று கிசுகிசுக்க, அடுத்த விமானம் பிடித்து இந்தியாவிற்குப் போய் திருமணம் செய்து கொண்டு, கொஞ்சநாள் ஊர் சுற்றிப் பார்த்து விட்டு அமெரிக்காவிற்கே திரும்பி வந்து தங்களின் தினப்பாட்டைத் தொடர்ந்தார்கள்.
அய்யனார் வேலை முடிந்து வீடு திரும்பிய ஓரிரவு செல்சியாவின் பழைய அமெரிக்கத் தோழன் பெரிய பொக்கேயுடன் காத்திருந்தான். இவனைக் கண்டதும் கைகுலுக்கி வாழ்த்துக்கள் சொன்னான். “இவன் தன் தவறுகளை உணர்ந்து விட்டான். கல்யாணம் கூட செய்து கொண்டானாம். காலம் எங்கள் காயங்களை ஆற்றி விட்டது. கசப்புகளை மறந்து நண்பர்களாகத் தொடரலாமென்றிருக்கிறோம்…” என்றாள் செல்சியா. அதற்கப்புறம் அவன் அவ்வப்போது வீட்டிற்கு வந்து போனான். இருவரும் வெளியிலும் சந்தித்துக் கொள்கிறார்கள் என்ற செய்தி அரசல் புரசலாக அய்யனாருக்கு வந்து கொண்டிருந்தது.
இதற்கிடையில் அய்யனார் – செல்சியா தாம்பத்யத்திற்கு சாட்சியாக ஒரு குட்டி தேவதை வந்து பிறந்தாள். அய்யனாருக்குள் சின்ன நெருடல் இலேசாய்த் தலை காட் டத் தொடங்கியது – குட்டி தேவதை தன்னுடைய உதிரத்தில் உதித்தவளா? அல்லது செல்சியாவின் மற்ற தொடர்புகளால் உருவான குழந்தைக்கு தான் இரவல் தகப்பனாக இருக்கப் போகிறோமா? சந்தேகக் குடைச்சல் அவனைத் தூங்க விடாமல் இம்சித்தது.
செல்சியா வீட்டிலில்லாத ஒரு தினத்தில் குழந்தையை வேலைக்காரியிடமிருந்து வாங்கி, காரில் கிடத்தி ஒரு இரத்தப் பரிசோதனைக் கூடத்திற்குக் கொண்டு போனன் – டி.என்.ஏ பரிசோதனை செய்து குழந்தைக்கு தான் தான் தகப்பனா இல்லையா என்று உறுதி செய்து கொள்வதற்காக. குழந்தையிடமிருந்து இரத்தம் எடுப்பதற்கான முயற்சிகளில் இருந்தபோது, அங்கு ஒரு புயல் போல நுழைந்த செல்சியா “இங்கு என்ன நடக்கிறது…?” என்ற கேள்வியுடன் பதில் எதையும் எதிர்பார்க்காமலேயே குழந்தையை அவர்களிடமிருந்து அபகரித்துக் கொண்டு வெளியேறினாள்.
வீட்டிற்குப் போனதும் “ஏன் இப்படி ஒரு அரக்கியைப் போல் நடந்து கொள்கிறாய்?” என்று செல்சியாவிடம் சண்டைக்குப் போனான் அய்யனார். “நீ தான் இரத்தக் காட்டேரியைப் போல் நடந்து கொள்கிறாய்! பச்சைக் குழந்தையிடமிருந்து இரத்தம் உறிஞ்சி என்ன செய்யப் போகிறாய்?” – செல்சியாவும் கோபத்தின் கொதிநிலையில் சத்தம் போட்டாள்.
“ஒரு சின்ன டி.என்.ஏ பரிசோதனை செய்து பார்த்து விடலாமென்று……” அய்யனார் முடிப்பதற்குள் சீறினாள் செல்சியா. “கடைசியில் உன் இந்திய சந்தேகப் புத்தியை காட்டி விட்டாயே! ஏன் உன் ஆண்மை மீது உனக்கே நம்பிக்கை இல்லையா?”
“உன்கிட்ட கள்ள மில்லைன்னா டி.என்.ஏ பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டியது தானே? – என்றான் அய்யனார்.
” உன் அம்மா ஒரு ஆணைக் காட்டி இவர் தான் உன் தகப்பன் என்று சொன்னபோது நீ நம்பினாய் இல்லையா! அதைப் போலவே இதையும் நீ நம்பித் தான் ஆக வேண்டும்…..”
“எனக்கு நம்பிக்கை இல்லை; அதனால் குழந்தைக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்தே தீர வேண்டும்…..” – பிடிவாதமாக இருந்தான் அய்யனார்.
“அப்படியென்றால் டி.என்.ஏ பரிசோதனை செய்து நீ உன்னுடைய தந்தைக்குத் தான் பிறந்தாய் என்று நிரூபி. அப்புறம் என் குழந்தையை பரிசோதனைக்கு உட்படுத்தலாம்…..” என்றாள் செல்சியா வீம்பாய்.
“இந்தியப் பெண்கள் கற்பையும் கலாச்சாரத்தையும் உயிரை விட உயர்வாகக் கருதுபவர்கள். உனக்கெங்கே அதெல்லாம் புரியப் போகிறது…..”
“ஆனால் உங்களின் சந்தேகம் மட்டும் புராண காலந்தொட்டு இன்றும் மாறாமல் தொடரும் அப்படித்தானே! எல்லா தேசங்களிலும் பெண்களின் ஆன்மா ஒன்று தான்; மனிதப் பலவீனங்களும் பொது தானென்று நம்புகிறவள் நான். உன் அன்னையின் மேலுள்ள நம்பிக்கையில் பாதிகூட என்மீது இல்லை என்றால்….. ஸாரி நாம் பிரிந்து விடுவதே எல்லோருக்கும் நல்லது…..” என்றாள் தீர்மானமாக.
அய்யனாருக்கு செல்சியாவைப் பிரிவதில் துளியும் விருப்பமில்லை. குழந்தைக்குத் தான் தான் தகப்பன் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டால் மட்டும் போது மென்றிருந்தது. “சரி, நான் என் அப்பாவிற்குத் தான் பிறந்தேன் என்பதை டி.என்.ஏ பரிசோதனை செய்து நிரூபித்து விட்டால் நம் குழந்தையையும் பரிசோதணைக்கு உட்படுத்த சம்மதிப்பாய் தானே?” என்று கேட்டான் அய்யனார் – விபரீதம் புரியாமல்.
வீம்புக்காக அவள் வைக்கும் வாதத்தை உடைப்பதற்காக அப்பாவையும் அம்மாவையும் சும்மா ஊர் சுற்றிப் பார்ப்பதற்காக என்று சொல்லி அமெரிக்கா வரவழைத்தான். ஹெல்த் செக்கப் என்று இருவரிடமும் இரத்தமெடுத்து டி.என்.ஏ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தான். ஆனால் பரிசோதனை முடிவுகள் அவனைப் பெரும் பதற்றமடைய வைத்தன. அம்மாவின் மேலிருந்த பிரேமை சிதறி அவளை வெறுக்கச் செய்தது. காரணம் அவனுடைய டி.என்.ஏ. அம்மாவின் டி.என்.ஏ.வுடன் ஒத்துப் போனது. ஆனால் அப்பாவின் டி.என்.ஏ. வுடன் ஒத்துப் போகவில்லை. அப்படி என்றால்…..அதன் காரணத்தை யோசிக்கவே அவனுக்கு அருவருப்பாய் இருந்தது.
செல்சியாவும் அம்மாவும் ஷாப்பிங் போயிருந்தார்கள். அப்பா மட்டும் கம்யூட்டரில் ஏதோ விளையாடிக் கொண்டிருந்தார். அவரிடம் போய், ” ஸாரிப்பா… நான் உங்களுக்கொரு உண்மையச் சொல்லப் போறேன்; அம்மா உங்களுக்கு மன்னிக்கவே முடியாத துரோகம் பண்ணியிருக்காப்பா…..நான் உங்களுக்குப் பொறக்கல….!”
பொளேரென்று கன்னத்தில் அறை விழுந்ததில் பொறி கலங்கியது அய்யனாருக்கு. அப்பா இத்தனை கோபப்பட்டு அவன் பார்த்ததே இல்லை. “என்கிட்ட சொன்ன மாதிரி உன் அம்மா கிட்ட எக்குத் தப்பா இப்படி ஏதாச்சும் கேட்டுத் தொலைச்சுடாத, அவள் செத்தே போயிடுவாள்……” என்றார் கண் கலங்கியபடி.
“நீ அம்மாவ கண்மூடித்தனமா நம்பலாம் ஆனால் நான் சொல்கிற உண்மைக்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் இருக்குப்பா….” என்று டி.என்.ஏ பரிசோதனை விபரங்களைக் காட்டி, செல்சியாவுடன் சண்டை தொடங்கியதிலிருந்து நடந்தவற்றை எல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தான்.
“முட்டாள்; தாம்பத்யத்தின் ஆணிவேரே நம்பிக்கை தாண்டா…..அதைத் தொலைச்சுட்டு நீ என்னத்த வாழ்ந்து கிழிக்கப் போற! முதல்ல அந்தப் பொண்ணுகிட்ட மன்னிப்புக் கேட்டு அதோட காயத்த ஆத்துற வழியப் பாரு. நீ இவ்வளவு தூரம் டி.என்.ஏ அது இதுன்னு வந்துட்டதால உன் பிறப்பப் பத்துன ரகசியத்தையும் சொல்லீடுறேன்…
“நீ என்னோட வித்தில்லைன்றது ஏற்கெனவே எனக்குத் தெரியும்; இதுல நீ கண்டுபிடிச்சுச் சொல்றதுக் கெல்லாம் ஒண்ணுமில்ல….உடனே உங்க அம்மா சோரம் போயி அதனால நீ பொறந்தேன்னு மறுபடியும் விபரீதமாக் கற்பனை பண்ணிக்காத….” என்றபடி கம்யூட்டரில் ஒரு தமிழ்த் தினசரியின் வலைப் பக்கத்திற்குப் போய், கடந்த வருஷங்களின் செய்தித் தாள்கள் ஸ்கேன் செய்து சேமிக்கப் பட்டிருக்கும் பகுதியில் உலவி, 25 வருஷங் களுக்கு முந்தைய ஒரு தினத்தின் செய்தி ஒன்றைப் பெரிது பண்ணி அய்யனாரை வாசிக்கச் சொன்னார்.
————————————————————————————————————————————————————————————-
வேலியே பயிரை மேய்ந்த விபரீதம் –
காவல் நிலையத்தில் பள்ளி மாணவி கதறக் கதறக் கற்பழிப்பு:
சென்னை ஜூலை 23, சென்னையின் பிரதான காவல் நிலையம் ஒன்றில் பள்ளி மாணவி ஒருத்தி அப்போது பணியிலிருந்த காவலர்களால் கதறக் கதற கற்பழிக்கப் பட்ட கொடுமை நடந்திருக்கிறது. இதனால் கொதித்துப் போன பொதுமக்கள் காவல் நிலை யத்தைச் சூறையாடினர். இந்த கொடும் பாதகத்தைச் செய்த இன்ஸ்பெக்டர் உட்பட மூன்று போலீஸ்காரர்கள் தலைமறைவு!
இது சம்பந்தமாக மேலும் கூறப்படுவதாவது.: இராமநாதபுரம் மாவட்டம் அழகன் குளத்தைச் சேர்ந்தவர் சீனிச்சாமி (48). இவருடைய மகள் பாண்டியம்மாள்(18). ப்ளஸ்டூ முடித்திருந்த இவருக்கு விருப்பத்திற்கு மாறாக, இவரின் தந்தை கல்யாண ஏற்பாடுகளைச் செய்ய, அவர் வீட்டைவிட்டு சென்னைக்கு ஓடி வந்திருக்கிறார். வந்த இடத்தில் ரவுடிகள் துரத்த, அவர்களிடமிருந்து தப்பித்து அடைக்கலம் கேட்டு காவல் நிலையத்தை அணுகியிருக்கிறார்.
அப்போது டூட்டியிலிருந்த இன்ஸ்பெக்டர் சண்முகநாதன்(40), தலைமைக் காவலர் சோம சுந்தரம்(37), மற்றும் காவலர் கண்ணப்பன்(45) மூன்று பேரும் அபயம் கேட்டு வந்த பள்ளி மாணவியை அலற அலற கற்பழித்திருக்கிறார்கள். அப்போது ஒரு புகார் கொடுப்பதற்காக காவல்நிலையம் போன அமல்ராஜ்(26) இதைப் பார்த்துப் பதறிப் போய் அக்கம் பக்கத்திலுள்ளவர்களைத் திரட்டிக் கொண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட, போலீஸ்காரர்கள் மூவரும் ஓடிப் போய் விட்டார்கள். கொதித்துப் போன பொதுமக்கள் காவல் நிலையத்தை சூறையாடிவிட்டார்கள். மயங்கிய நிலையிலிருந்த பாண்டியம்மாள் அருகிலிருந்த அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இப்போது உடல் நலம் தேறி நலமுடன் உள்ளார். தலைமறைவான போலீஸ்காரர்களைத் தேட தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது என்று போலீஸ் டி.எஸ்.பி. சிவராமன் தெரிவித்திருக்கிறார்…..
————————————————————————————————————————————————————————————-
செய்தியை வாசித்த அய்யனார், அதன் ஓரத்திலிருந்த புகைப்படத்தை உற்றுக் கவனித்தான். அதில் கலைந்த நிலையில் கதறி அழுதபடி இருந்தது அவனுடைய சிறுவயது அம்மாதான் என்று அறிந்ததும் அதிர்ச்சியில் உறைந்து விட்டான்.
“அந்த சம்பவத்துக்கப்புறம் பாண்டியம்மாள அவங்க வீட்டுல ஏத்துக்கல…சாகப் போனவளை சமாதானப் படுத்தி நான் தான் என் கூடவே கூட்டிட்டுப் போயி, அவள் ஆசைப்பட்டபடி அண்ணா யுனிவர்சிட்டியில பி.இ.படிக்க சேர்த்து விட்டேன். இதுக்கிடையில நீ உங்கம்மா வயித்துல கருவா உருவாகிட்ட. சின்ன வயசுங்கிறதால விவரம் போதாம, அஞ்சு மாசம் வரைக்கும் நீ வயித்துல வளர்றதே அவளுக்கு தெரியல. அப்புறம் தெரிந்த போது கலைக்கக் கூடிய கால கட்டத்தை கரு தாண்டியிருச்சுன்னும், கலைச்சா தாயின் உயிருக்கு உத்திரவாதமில்லைன்னும் டாக்டருங்க சொல்லிட்டாங்க. கல்யாணமாகாமலேயே குழந்தையான்னு அவள் ரொம்ப சங்கடப்பட்டதால, நானே அவளக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்….
“சின்ன வயசுலயே ரொம்ப சிக்கலான பிரசவமாகி, உனக்கப்புறம் இன்னொரு கர்ப்பம் அவளுக்கு சாத்தியப் படாமலேயே போயிருச்சு….இப்ப நீ வளர்ந்து அவள கொச்சைப் படுத்துற மாதிரி கேள்விகள் கேட்டுட்டு நிற்குற! இது தான் காலக் கொடுமைன்றது…..” என்று அமல்ராஜ் நீளமாய்ப் பேசி நிறுத்தவும் “என்னை மன்னிச் சுடுங்கப்பா…..” என்றபடி கண் கலங்கினான் அய்யனார்.

முற்றும்
(நன்றி : பெண்ணே நீ – நவம்பர் 2008)

Series Navigation

சோ.சுப்புராஜ்

சோ.சுப்புராஜ்