சிறுகதைச் சிற்பி கு.ப.ராஜகோபாலன்

This entry is part [part not set] of 41 in the series 20110102_Issue

முனைவர் சி.சேதுராமன்


முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com

தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துக்கொண்டவர் கு.ப.ரா. என்று அனைவராலும் அழைக்கப்பட்ட கு.ப.ராஜகோபாலன் ஆவார். தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு வித்திட்ட கு.ப.ராஜகோபாலன் கும்பகோணத்தில் கர;ண கம்ம என்ற தெலுங்கு அந்தணர் வகுப்பில் 1902-ஆம் ஆண்டில் பட்டாபிராமய்யர், ஜானகி அம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
கு.ப.ரா.விற்கு ஆறு வயது ஆன போது அவரது குடும்பம் திருச்சிராப்பள்ளிககச் சென்றது. அங்கே உள்ள கொண்டையம் பேட்டைப் பள்ளியில் அவருடைய கல்வி வாழ்க்கை தொடங்கியது. 1918-ஆம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் வகுப்பில் கு.ப.ரா. தேர்ச்சி பெற்றார்.
பின்னர் அவர் தேசிய கல்லூரியில் (நேஷனல் காலேஜ்) சேர்ந்து (புகுமுக வகுப்பு(இண்டர்மீடியட்) படித்தார். கு.ப.ரா. படித்துக் கொண்டிருக்கும்போதே அவருடைய தந்தையார் இறந்தார். இது கு.ப.ராவின் வாழ்வில் நிகழ்ந்த பெருந்துயரமாகும். துந்தையார் இறந்தபோது கு.ப.ராவிற்கு பதினெட்டு வயதாகும். துந்தையாரின் மறைவிற்குப் பின்னர் அவரது குடும்பம் மீண்டும் கும்பகோணததிற்குச் சென்றது. குடும்பப் பொறுப்பு முழுவதும் கு.ப.ராவின் மேல் விழுந்தது. அந்த நிலையிலும் அவர் சோர்ந்துவிடாமல் நன்கு படித்து புகுமுக வகுப்புத் தேர்வில் வெற்றிபெற்றார்.
புகுமுக வகுப்பில் வெற்றி பெற்ற கு.ப.ரா. கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ.வகுப்பில் சேர்ந்து படித்தார். கல்லூரியின் முதல்வர் சாரநாதனும், ஆங்கிலப் பேராசிரியர் ஏ. ராமய்யரும் கு.ப.ரா.விடம் அன்பு காட்டி அவரை இலக்கிய உலகில் ஈடுபடுத்தினர். அவர்களுடைய உதவியால் அவர் ஆங்கிலம், வடமொழி ஆகிய இரண்டிலும் உள்ள இலக்கியங்களைக் கற்றார்.
ஒருமுறை வங்கக் கவிஞர; தாகூர; கு.ப.ரா. பயின்ற கல்லூரிக்கு வந்து தமது கவிதைகளைப் பாடிக் காட்டினார். தாகூரின் பாட்டு கு.ப.ராவின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. வங்க மொழியின் சிறப்பு அவருடைய உள்ளளத்தைக் கவர்ந்தது. எனவே அவர் வங்க மொழியில் புலமை பெற்றிருந்த பேராசிரியர் ஏ.ராமய்யரிடம் சென்று ஓய்வு நேரத்தில் வங்க மொழியைக் கற்றார்.
இலக்கியங்களைப் படிப்பதோடு மட்டுமன்றி இலக்கிய வள்ச்சிக்கான செயல்களிலும் கு.ப.ரா. ஈடுபட்டார். ஆர்.வி.கிருஷ்ணமாச்சாரியார் என்ற வடமொழி அறிஞருடன் சேர்ந்து காளிதாசர் என்ற பெயரில் அவர் ஒரு மாத வெளியீட்டை நடத்தினார். ஷேக்ஸ்பியர் சங்கம் என்ற அமைப்பிலும் அவர் முக்கிய பங்கினை எடுத்துக் கொண்டார்.
இளமையில் கு.ப.ரா.வுக்கு எழுத்தாளர் ந. பிச்சமூர்த்தியின் நட்பு கிடைத்தது. அந்த நட்பு அவருடைய கலையுள்ளத்தின் வளர்ச்சிக்கு நல்ல அடிப்படையாய் அமைந்தது. ‘‘இரட்டையர்கள் என்று என்னையும் கு.ப.ரா.வையும் ஸ்ரீ வ.ரா குறிப்பிடுவது வழக்கம். எங்கள் ஊரில் கூட எங்களை ராமலட்சுமணர்கள் என்று சொல்லுவது வழக்கம் என்றும் கும்பகோணத்தில் எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரன் ராஜகோபாலன் படிப்புக்காக வெளியூர் போன போதிலும் திரும்ப விடுமுறைக்கு வரும் நாட்களில் என்னுடனேயே தான் காணப்படுவான். ஆவன் உத்தியோகம் பார்த்த காலத்திலும் கூட கும்பகோணம் வரும்போது எப்போதும் எங்கள் இருவரையும் சேர;ந்துதான் பார்க்க முடியும் இருவரும் சேர்ந்து ஏறக்குறைய ஒரே சமயத்தில் எழுத ஆரம்பித்தோம் என்று ந.பிச்சமூர்த்தி தமக்கும், கு.ப.ராவுக்கும் இடையே நிலவிய தொடர்பினைப் பற்றி எழுத்து இதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிடுகின்றார்.
கு.ப.ரா. தமது இருபத்து நான்காம் வயதில் அம்மணி அம்மாள் என்னும் அம்மையாரை மணந்தார். திருமணத்திற்குப் பின்னர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மேலூரில் உள்ள தாலுகா அலுவலகத்தில் அவர் கணக்கராகச் சேர்ந்தார். இலக்கியங்களைப் படிபபதிலும் படைப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்த கு.ப.ரா.விற்கு தாலுகா அலுவலகத்தின் கணக்கர் வேலை பிடிக்கவில்லை. இருப்பினும் குடும்ப சூழல் காரணமாக கு.ப.ரா.வேலைபார்த்து வந்தார்.
கு.ப.ராவின் முப்பத்திரண்டாம் வயதில் காட்ராக்ட் என்னும் நோயால் கு.ப.ரா.வின் கண்பார்வை பாதிக்கப்பட்டதால் அவர் தாலுகா அலுவலகக் கணக்கர் வேலையைவிட்டு விலகி சிகிச்சைககாகக் கும்பகோணம் சென்றார். அந்தநிலையில் தான் ஒரு எழுத்தாளராக மலரும வாய்ப்பு கு.ப.ரா.விற்குக்கு ஏற்பட்டது.
கண்பார்வை குறைவுற்ற நிலையிலேயே அவர் ‘மணிக்கொடி’ போன்ற பத்திரிகைகளுக்குக் கதைகளம் கட்டுரைகளும் எழுதினார். கண் பார்வை முழுதும் பாதிக்கப்பட்டிருந்தபோதும் அவர் எழுதுவதை விடவில்லை. அவர் சொல்லச் சொல்ல அவருடைய தங்கையான கு.ப.சேதுஅம்மாள் எழுதினார். இருவரும் சேர்ந்து இலக்கியப் பணியாற்றினர்.
மூன்றாண்டுகளுக்குப் பிறகு டாக்கடர் ஆர். மகாலிங்கம் அளித்த சிகிச்சையின் காரணமாக கு.ப.ராவுக்கு மீண்டும் கண்பார்வை கிடைத்தது. தம் எழுத்து வாழ்வு தொடருவதற்குக் காரணமான டாக்கடரின் உதவியை கு.ப.ரா மறக்காமல் துர்க்கேச நந்தினி என்ற மொழிபெயர்ப்பு நூலின் உரிமையுரையில் இலக்கியத் தொண்டிற்கு எனக்குப் பார்வை அளித்த என் நண்பர் கும்பகோணம் டாக்டர் ஆர்.மகாலிங்கம் அவர்களுக்கு இந்த மொழிபெயர்ப்பு சமர்ப்பணம் என்று குறிப்பிட்டு மகிழ்ந்தார்.
கண்பார்வை பெற்ற கு.ப.ராவால் வேலையைத் திரும்பப் பெறஇயலவில்லை. இந்த நிலையில் அவர் வாழ்க்கைக்கு நடத்துவதற்குரிய வேலையைத் தேடி சென்னைக்குச் சென்று அங்க முழுநேர எழுத்தாளராகத் தமது வாழ்க்கையைத் தொடங்கினார். எழுத்து ஒன்றையே கருவியாகக் கொண்டு சமுதாயத்தோடு போராடுவதற்காகச் சென்னைக்கு வந்தபோது கு.ப.ரா.வின் வாழ்க்கையில் துன்பங்கள் பல தொடர்ந்து வந்தன.
வாழ்க்கை துன்பமும் போராட்டமும் நிறைந்ததாக இருந்தாலும், கு.ப.ரா. முழுமூச்சோடு இலக்கியப் பணியில் ஈடுபட்டது சென்னை வாழ்க்கையில்தான் எனலாம். நிலையான வேலை கிடைக்காத நிலையில் அவர் மணிக்கொடி, கலைமகள், சுதந்திரச் சங்கு, சூறாவளி, ஹனுமான், ஹிந்துஸ்தான் போன்ற பத்திரிக்கைகளில் கதைகளும் கட்டுரைகளும், கவிதைகளும், நாடகங்களும் எழுதினார். இக்காலத்தில்தான் அவர் வங்காள மொழியிலிருந்து பங்கிம் சந்திரரின் நாவல்களையும், ஆங்கில மொழியிலிருந்து ஸ்டீவன்ஸனின் டாக்டர் ஜெகில் அண்ட் மிஸ்டர் ஹைட் என்ற நாவலையும், ரஷ்ய மொழியிலிருந்து டால்ஸ்டாய் சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்தார். 1939-ஆம் ஆண்டு கு.ப.ரா. வ.ரா. ஆசிரியராக இருந்த பாரத தேவி என்னும் வாரப் பத்திரிக்கையில் துணையாசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதில் அவர் இயற்பெயரிலும், பாரத் வாஜன் கரிச்சான், சதயம் என்னும் புனைப்பெயர்களில் எழுதினார். பாரததேவி வெளிவருவது நின்ற பிறகு, அவர் கா.சீ வேங்கடரமணி நடத்திய பாரத மணி என்ற பத்திரிக்கையிலும் கு.ப.ரா. சிறிது காலம் பணியாற்றினார். இந்த நிலையில் இரண்டாம் உலகப்போர் தொடங்கவே அவர் குடும்பத்துடன் சென்னையிலிருந்து வெளியேறி மீண்டும் தமது சொந்த ஊரான கும்பகோணத்திற்குச் சென்றார்.
கும்பகோணத்திற்கு வந்த கு.ப.ரா. தமது வீட்டுத் திண்ணையிலேயே மறுமலர;ச்சி நிலையம் என்ற பெயரில் புத்தக விற்பனை நிலையம் ஒன்றைத் தொடங்கினார். ஆனால் கு.ப.ரா.வால் புத்தக விற்பனையில் கண்டிப்புடன் நடந்துகொள்ள முடியவில்லை. ஒரு முறை கு.ப.ரா. வைப் பார;க்கச் சென்றிருந்த சிட்டி அவருடைய புத்தக வியாபார முறையைக் கண்டு திகைப்புற்று, கு.ப.ரா.விடம் வியாபாரத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற கூறினார். அதற்கு கு.ப.ரா. சிட்டியிடம்,‘‘என்ன செய்வது? தாட்சண்யமாய் இருக்கிறது. அவர;கள் புத்தகங்களை விரும்பிப் படிக்கிறார்களே அதுவே ஒரு நல்ல காரியம் தானே?’’ என்று கூறியதாக சிட்டி தனது இரட்டையர்களில் ஒருவர் என்ற கு.ப.ரா.வின் சிறிது வெளிச்சம் என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகின்றார்.
கு.ப.ரா வானொலியிலும் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். அவருடைய சிறுகதைகள் பல வானொலியில் ஒலிபரப்பாயின. அப்பொழுது அவரை வானொலியில் தொடர்ந்து பணியாற்ற வைக்க வேண்டும் என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது கு.ப.ரா. தாம் எழுத்தையே நம்பி வாழ்வது என்று முடிவு செய்துவிட்டதாகக் கூறி உறுதியாக அப்பணி வாய்ப்பினை மறுத்துவிட்டார்.
கு.ப.ரா. தம் முழு நேர உழைப்பையும் இலக்கியததிற்காகவே செலவழித்தார். இலக்கியத்தையே அவர் வாழ்க்கைக்கு உரிய தொழிலாகக் கொண்டு உழைத்தார். இலக்கியம் அவருக்கு வறுமையையே கொடுத்தது. வறுமையைக் கொடுத்தாலும் தனது கொள்கையில் கு.ப.ரா உறுதியாக இருந்தார்.
கு.ப.ரா. 77 சிறுகதைகளையும், அகலிகை என்ற நாடகத்தையும், ஸ்ரீ அரவிந்த வரலாறு என்ற வாழ்க்கை வரலாற்று நூலையும், ஒரு கட்டுரையையும், நான்கு மொழிபெயர்ப்பு நூல்களையும், கண்ணன் என் கவி என்ற இலக்கியத் திறனாய்வையும் எழுதித் தமிழுக்குப் பலதுறைகளிலும் தொண்டாற்றியுள்ளார். எனினும் இவர் சிறுகதை ஆசிரியர் என்ற வகையிலேயே அவரை தமிழிலக்கிய உலகம் போற்றுகின்றது.
குடும்ப வாழ்க்கையை உரிப்பொருளாகக் கொண்டு கதைகள் படைப்பதில் தமிழ் சிறுகதை உலகில் கு.ப.ரா முன்னோடியாகத் திகழ்ந்தார் எனலாம். சமுதாயம், வரலாறு, புராணம், இதிகாசம் நான்கிலிருந்தும் கு.ப.ரா. தம் கதைகளுக்கு உரிய பொருள்களைத் தேர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய கதைகளில் உளப் போராட்டங்களின் செல்வாக்கு மிகுதியாக உள்ளது. தமக்கு நன்கு அறிமுகமான நடுத்தரக் குடும்பத்தாரின் வாழ்க்கையின் ஒரு கோணத்தையே தமது கதைகளில் கு.ப.ரா. அவர்கள் சித்திரித்துள்ளார். கு.ப.ரா. பண்பாட்டின் எல்லைக்குள் நின்றே துணிவோடு ஆண்-பெண் இருவரின் பாலியல் பண்புகளைத் தமது கதைகளில் படைத்துக்காட்டினார் என்பது நோக்கத்தக்கது.
இவ்வாறு சிறுகதையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த கு.ப.ரா.வின் இறுதிக் கால வாழ்க்கை துயரம் நிறைந்ததாக அமைந்தது. இறுதிக்காலத்தில் மரணப்படுக்கையில் கிடந்த புதுமைப்பித்தன், ‘‘சிதம்பரம் இலக்கிய ஆசை உனக்கு உண்டு. இருக்கட்டும். உன் முழு நேர உழைப்பையும் அதற்காகச் செலவழித்துவிடாதே. அது உன்னைக் கொன்று விடும். இலக்கியம் வறுமையைத் தான் கொடுக்கும். அதைப் பொழுதுபோக்காகவே வைத்துக்கொள்’’ என்று தம் நண்பர் சிதம்பர ரகுநாதனுக்குப் உருக்கமான அறிவுரை ஒன்றினைக் கூறியதாக ரகுநாதன் புதுமைப்பித்தன் வரலாறு பற்றிய நூலில் குறிப்பிடுவார். புதுமைப்பித்தனின் அறிவுரைக்கேற்பவே கு.ப.ராவின் வாழ்க்கையும் அமைந்தது எனலாம்.
1943-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார், திருலோகசீதாரம் ஆகிய இருவரின் வேண்டுகோளுக்கு இசைந்து கு.ப.ரா. துறையூரிலிருந்து வெளிவரும் கிராம ஊழியன் என்ற பத்திரிகையின் சிறப்பாசிரியராகப் பொறுப்பேற்றார். கும்பகோணத்தில் இருந்து மறுமலர்ச்சி நிலையத்தைக் கவனித்தவாறே சிறப்பாசிரியர் பொறுப்பையும் அவர் செம்மையாக மேற்கொண்டு வந்தார். 1944-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கு.ப.ரா.கிருஷ்ணசாமி ரெட்டியாரின் அறிவுரைப்படி துறையூருக்கே சென்று கிராம ஊழியனின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார. அப்போது ‘காங்கரின்’ என்னும் கொடிய நோய் அவருடைய கால்களைத் தாக்கி அவரைப் படுக்கையில் கிடத்தியது. இறுதியில் அந்நோய் அவரது உயிரையும் கொள்ளை கொண்டது.
கு.ப.ரா.வின் மறைவு எழுத்தாளர்களின் மனதில் நீங்காத வடுவை ஏற்படுத்தியது. கு.ப.ரா.வின் மறைவுக்குப் பிறகு அவரின் எழுத்தையும் வாழ்வையும் பற்றி கலைமகள் இதழில் எழுதிய ந.பிச்சமூர்த்தி, ‘‘கு.ப.ராஜகோபாலன் இன்று கதையாகிவிட்டான். உத்தியோகம் என்பதில்லாமல் எழுத்துக்களை மட்டும் நம்பி உயிர் வாழ வேண்டி வந்த அவனுடைய நிலைமையைப் பார்த்து நான் வேதனைப் பட்டிருக்கிறேன். அவன் வேதனையைச் சொல்லத் தேவையா?…ஆனாலும் அவன் எழுதுவதில் சளைக்கவில்லை. வறுமை ஏற ஏறப் பத்திரிக்கைகளில் அவன் எழுத்துக்கள் அதிகப்பட்டன. இம்மனநிலை தான் அவன் துறவையும் லட்சியத்தையும் சாதனையையும் காட்டும் திறவுகோல்’’ எனக் குறிப்பிடுகின்றார். அவரது வரிகள் அனைவரது உள்ளத்தையும் உருக்கவல்லனவாய் அமைந்துள்ளன. சிறுகதைச் சிற்பி கு.ப.ரா. மறைந்தாலும் அவருடைய எழுத்துக்கள் வழி என்றும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எனலாம்.

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.