சிருங்காரம்: தமிழ்த்திரைப்படம் – மலையாளிகளின் சிம்மாசனங்களுக்கு மத்தியில்….

This entry is part [part not set] of 34 in the series 20051223_Issue

சுப்ரபாரதிமணியன்


இவ்வாண்டில் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேசத்திரைப்பட விழாக்களில் இடம் பெற்ற தமிழ் திரைப்படங்கள், சிம்மாசனங்களுக்கு மத்தியில் உடைந்த நாற்காலிகளையே

நாபகப்படுத்துகின்றன.

கோவாவில் நடைபெற்ற சர்வதேசத்திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில்

21 இந்திய மொழிப்படங்களில் மூன்றில் ஒரு பங்காய் ஏழு படங்கள் மலையாளிகளுடையது.

தமிழில் இடம் பெற்றிருந்தது அமீரின் இயக்கத்திலான ராம். மன சிதைவு நோய்

கநாயகர்களின் பாத்திரத்தன்மையில் வன்முறைக்காட்சிகளுக்கும், திகில் சூழலுக்கும் குறைவு

வைப்பதில்லை என்பதை கடந்த ஆண்டுகளில் தமிழில் வந்திருக்கும் இவ்வகைப் படங்கள்

காட்டுகின்றன. ஓரளவு நேர்த்தியுடன் இப்படங்கள் வெளிவருவதே தமிழர்களின் பாக்கியம் என்றாகி விட்டது.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பத்தாவது கேரளா சர்வதேசத்திரைப்பட விழாவில் கோவாவில் இடம் பெற்றிருந்த ஏழு மலையாளப் படங்களும் இடம் பெற்றன. இதுவரை காணாத அளவு 4500 பிரதிநிதிகள். அதில் 50 சதவீதம் இளைநர்கள். கல்லூரி மாணவர்கள். 7 தியேட்டர்களில் படங்கள். மலையாளிகளின் அக்கறை எல்லா விடங்களிலும் மிளிர்ந்து கொண்டிருந்தது. தமிழில் சாரதா ராமனாதனின் இயக்கத்திலான ‘சிருங்காரம் ‘ படம் இடம் பெற்றது. தேவாதாசிகளை மையமாகக் கொண்டது என்பதும் , லால்குடி ஜெயராமனின் இசை , தோட்டத்தாரணியின் கலை இயக்கம் போன்றவற்றின் தன்மையாலும் எதிர்பார்புகளை ஏற்படுத்தி இருந்தது.

1940களை மையமாகக் கொண்டிருக்கிறது இப்படம்.தேவதாசிகளின் பொட்டுகட்டும்

பழக்கத்தை இது விவரிக்கிறது. 40 வருடங்களாய் தேவதாசியாய் இருந்தவள் வயது முதுமை காரணமாக தனது மகளுக்கு அப்பட்டத்தை எந்த வித மன சிக்கலும் இன்றி பெரும் சடங்குடன் ஒப்படைக்கிறாள். மிராசுவின் பாலியலுக்குத் தீனி போடுகிறாள். நாட்டியமும் ஊர்

பந்சாயத்தில் அவளுக்கு தரப்படும் முன்னிலை நாற்காலியும் பெருமையாகப்படுகிறது. அதே

சமயம் ஊர் காவலாளி கோவில் நாட்டியத்தை வேடிக்கை பார்ப்பது குறித்து பாவச் செயல் என ஊரிலிருந்து விலக்கப்படுவது குறித்த முணுமுணுப்பு கூட பலனில்லாததாகிறது. தேவதாசிக்கு இளம் கோவில் காவலாளியின் நாட்டிய ரசனை மற்றும் சிறு உதவிகள் உவப்பாக இருக்கின்றன. அவள் ஆடும் போது கால் சலங்கையிலிருந்து நழுவுபவற்றை எடுத்து அவன் எடுத்து வைத்து காட்டுவது கூட ஊர் மக்களின் பேச்சில்

அவலாகிறது. சுதந்திரப் போராட்டத்தின் போராளிகளாக அந்த கிராமத்தில் தென்படும் நாலைந்து பேர் உள்ளூர் மிராசுவை கொலை செய்யத்திட்டமிட்டிருப்பதை அறிந்து

இளம் காவலாளி தகவல் தரப்படுவதை மிராசு ஊர்காவலாளி கிளப்பி விட்ட புரளி என குற்றம் சுமத்தி அவனை ஊரிலிருந்து விலக்கி வைக்கிறார். மிராசு சீமையில் படித்தவர் என்றாலும் அவரின் இவ்வகை செயல்கள் தேவதாசி, இளம் கோவில் குருக்கள் உட்பட

சிலரின் முணுமுணுப்பினால் எந்த எதிர் விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை.இளம் கோவில்

காவலாளி ஊரிலிருந்து விலக்கப்பட்டு காட்டிற்குள் இருக்க வேண்டியாகிறது. தேவதாசி மீதான தனது ஈடுபாட்டின் காரணமாக மிராசுவால் தான் கொல்லப்படலாம் என்ற பயம் ஏற்படுகிறது. சுதந்திரப்போராட்ட போராளிகளூடன் சேர்ந்து கொள்கிறான். அந்த கிராமத்திற்கு வரும் கலெக்டருக்கு தேவதாசி இணங்க வேண்டும் என்பதை மறுத்து கோவில் பொட்டினை சன்னதியில் சமர்ப்பித்து விட்டு வெளியேறும் தாசி சுதந்திரப்போராளிகளுடன் சேர்ந்து கொள்கிறாள். தாசிப் பொட்டு திருடு போகிறது.ஊர் காவலாளியும், சுதந்திரப்போராளிகளும் காவல் துறையால் கைது செய்யப்படுகிறார்கள்.

மிரசுவால் கர்பமாகியிருக்கும் தாசி குழந்தையைப் பெற்றெடுத்து விட்டு மரணமடைகிறாள். அக்குழந்தை பெரியவளாகி பிராமணர் ஒருவரின் பராமரிப்பில் வளர்ந்து

குடியரசு தின விழாவில் நாட்டியமாட அழைக்கப்படும் போது அவளுக்கு அவளின் பூர்வீகம் சொல்லப்படுகிறது.

தந்சைப்பின்னணியில் கதை சொல்லப்பட்டுருக்கும் விதமும், லால்குடி ஜெயராமனின் இசையும், தோட்டத்தாரணியின் கலை நயமும், இவ்வகை படங்களுக்கேயான குறைந்த பட்ஜெட் என்ற குறை இல்லாமல் எடுக்கப்பட்டிருப்பதும், கதை நாயகியின் மிகச்சிறந்த நாட்டியமும், சதிரின் ஆதாரங்களும் இப்படத்ிதை பார்க்க ஏதுவாக்குகின்றன. ஆனால் படத்தின் இறுதிப்பகுதியின் குழறுபடிகள் இப்படக்கலைநர்களின் ஈடுபாட்டை வீணாக்கி விட்டது.

தாலிப்பொட்டை திருடும் போராளி ஊர்காவலன் அதை கோவில் மண்டபத்தில் புதைத்து வைத்ததை அறிந்து தாசி அதை தோண்டிஎடுத்து அணிந்து கொண்டு மெய்மறப்பதும், அவளின் விருப்பமான கோவில் தீப்பந்தத்திலிருந்து தீ கொண்டு வந்து தனது பிணம் எறிக்கப்பட வேண்டும் என்பதை அவள் மகள் நிறைவேற்ற தீப்பந்தத்தை எடுத்து வந்து கல்லறை தீ வைத்து வழிபடுவதும், ஊர்க்காவலாளி தூக்கிலிடப்படும் கணத்தில் தாசியின் குழந்தை பிறபப்பதும், மிராசுவின் பாலியல் மற்றும் பணத்திற்காக தாசி மெய் மறந்து அனுபவிப்பவளாக இருப்பதும், கலைக்டருடன் படுக்க வேண்டும் என்பதே அவளின் உறுத்தலாக அமைந்து அவள் பொட்டை கழற்றி கோவிலுக்கு சமர்ப்பிப்பதும், தாசி பொட்டு கட்டும் முறை பற்றின உறுத்தலோ அருவருப்போ படத்தின் எந்த கணத்திலும் வெளிப்படாமல்

தாலி என்னும் புனிதம் பற்றின வெளிப்பாடுகளும் அதை காப்பதற்கான

அக்கறையும் வெளிப்பட்டிருப்பதும் இப்படத்தின் நோக்கத்தை சந்தேகப்படுத்துபவனாக இருக்கின்றன.இந்திரா செளந்திர ராஜனின் வசனங்கள் இயல்பான சூழலுக்கு பொருந்தி வருபவையாக அமைகிற முயற்சிகள் வீணாக்கப்பட்டிருக்கின்றன. உரையாடலின் ஒரு பகுதி பேச்சு முறையிலும், இன்னொரு பகுதி உரைநடையாகவும் முரணாக அமைக்கப்பட்டிருப்பதில் செயற்கைத்தனம் வழிகிறது. பல சம்பவங்கள் அதன் தர்க்கத்திற்கு

முரணாக பல கேள்விகளை எழுப்புகின்றன.

சாரதா ராமனாதனின் முதல் முயற்சி என்ற முறையிலும், அதை வெளிப்படுத்த அக்கறை

கொண்டிருப்பதும் ஆறுதல் தருபவை. பெண்ணியத்தில் அக்கறை கொண்டவையாக அவரின் பேச்சு வெளிப்படும் நிலையில் பெண்ணியம் பற்றின புரிதலை சந்தேகத்திற்குள்ளாக்குவதாக இப்படம் அமைந்து விட்டிருக்கிறது.

= சுப்ரபாரதி மணியன்

srimukhi@sancharnet.in

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்