சிந்திக்க ஒரு நொடி : மனித நேயத்தின் உண்மை பரிமாணம்

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

வாஸந்தி


சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் கெளரவத்தை மீட்டுத்தருவது அவசியம்

மேற்கத்திய தொலைக் காட்சி சானல்களுக்கு இன்னமும் சொல்லி மாளவில்லை. உலக வரலாறு இதுவரை அறிந்திறாத, கண்டிராத இயற்கையின் சீற்றமும் அது காவு கொண்ட மனித எண்ணிக்கையும் நிகழ்ச்சிகளில் விடாமல் அலசப்படுகின்றன. செப்டம்பர் 11, இரட்டை கோபுரம் விபத்தில் மூவாயிரத்துச் சொச்சம் பேர் நியூ யார்க்கில் பலியானபோது அமெரிக்க நாடு முழுவதுமே எல்லாக் கேளிக்கைகளையும் ரத்து செய்து பல நாட்களுக்கு துக்கம் அனுஷ்டித்தது.தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.ஆசிய கடற்கரைகளில் ஒரு லட்சத்து அறுபத்தியெட்டாயிரம் பேரைக் கபளீகரம் செய்த சுனாமியின் தாக்கம் மேற்கு நாடுகளை வெகுவாக நெகிழ்வித்திருப்பது அசாதாரண விஷயமில்லை. ஆனால் நம்மால் கற்பனை செய்ய முடியாதது. ஏனென்றால் நாம் பேரழிவுகளுக்குப் பழக்கப் பட்டவர்கள். நூறு கோடி ஜனத்தொகை கொண்ட தேசத்தில் அநேகமாகப் பேரழிவுகளில் இறப்பவர்கள் வசதியற்ற சில ஆயிரம் மக்கள். அவர்களுக்கும் நகர்வாழ் மத்திய மேல் தட்டு வர்க்கத்தினருக்கும் சம்பந்தம் இல்லை என்ற நினைப்பினால் பேரிழப்பு காலகட்டத்திலும் நகரத்துக் கேளிக்கைகள் ஏதும் நிற்பதில்லை.சுனாமியின் பயங்கரம் பற்றின தகவல்கள் செய்தியை ஆக்கிரமித்தபோதும் சென்னையில் சங்கீதக் கச்சேரிகளும் நாடகங்களும் புத்தக வெளியீட்டு விழாக்களும் நடந்தவண்ணம் இருந்தன. மத்திய மேல் வர்க்க மெத்தனம் மட்டும் அதற்குக் காரணமில்லை. இந்திய மனோபாவமும் காரணம்.நமக்கு பிறப்பும் மரணமும் சமம். புனரபி மரணம் ,

புனரபி ஜனனம், புனரபி ஜனனீ ஜடரே சயனம். பிறப்பும் மரணமும் ஒரு சுழற்சி. மரணம் ஒரு அசம்பாவிதம் அல்ல.

ஆனால் பேரழிவில் உயிர் தப்பியவர்கள் ஒரு அசம்பாவிதம். உதவி செய்வதாக நினைத்து செய்யப்படும் நடவடிக்கைகளுக்கு அந்த எண்ணமே அடித்தளமாக இருப்பதாகத் தோன்றுகிறது. முக்காலத்தையும் இழந்தவர்களின் சோகத்தை புரிந்துகொள்ளும் துல்லியம் நகரத்தின் செளகர்யங்களின் சொகுசில் வாழும் நமக்கு எப்படி இருக்கமுடியும் ? பழைய துணி வேண்டாம், சமைத்த சோறு வேண்டாம் என்று அவர்கள் மறுத்தபோது உதவிக்கு சென்ற பலருக்கு ஆத்திரம் வந்ததாம். பணத்தில் புரளாவிட்டாலும் கண்ணியத்துடனும் சுயகெளரவத்துடனும் வாழ்ந்தவர்கள் அவர்கள் என்ற எண்ணம் நமக்கு ஏற்படாமல் போவதற்கு நமது தடித்தனமே காரணம்.ஆனால் கெளரவத்துடன், கர்வத்துடன் வாழ்ந்தவர்களை நாம் வெகு வேகமாக அந்தப் பண்புகளை மறக்கச் செய்து கொண்டிருக்கிறோம். உதவி, நிவாரணம் என்னும் பெயரில். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்பது வாழ்வுக்கான புனர் நிர்மாணப் பணி என்ற எண்ணமே மக்களுக்கு வரமுடியாமல் போகும் அளவுக்கு தற்காலிக சலுகைகள் கொடுத்துப் பழக்கம் நமது அரசுகளுக்கு. சலுகைகள் கொடுப்பது , ஆளுக்கு லட்ச ரூபாய் என்று அறிவிப்பது செளகர்யம். அடுத்த தேர்தல் வரை ஓடும். கிடைத்தவரை லாபம் என்று கை நீட்டிப் பழக்கம் மற்றவர்களுக்கு.அரசுத் துறை ஊழியர்களிலிருந்து, விவசாயிகள் வரை இலவசம் என்ற சொல் மந்திரமானது. தமிழ் குடிமக்களைப் பிச்சைக்கார இனமாக்கியது.

ஆரம்ப நிவாரண நாட்களில் லாரிகளிலிருந்து அட்டை பெட்டிகள் சம்பவ இடங்களில் கடாசப்படுவதையும், ஆண்களும் பெண்களும் முண்டியடித்துக் கொண்டு அதைப் பிடிக்க ஓடுவதையும் அயல் நாட்டு சானல்களில் பார்க்க சங்கடமேற்பட்டது. அந்த அடிதடியில் போட்டிப்போட திராணியற்ற முதியவர்களும் குழந்தைகளும் பின்தங்கிப் போனார்கள். இடர்நிலை மேலாண்மைக்குப் பழக்கப்படாத தன்னார்வக் குழுக்களும் அரசு நிர்வாகிகளும் வினியோகத்தை முறைப் படுத்ததத்தெரியாமல் தடுமாறியதில் முண்டியடித்து முன்னேறத்தெரிந்தவர்களே பலனடைந்ததாகப் நேரில் உதவச் சென்று வந்து நண்பர்கள் சொன்னார்கள். இடைக்கால நிவாரண முகாம்களில் வினியோகிக்கப்படும் உதவிப் பொருள்களைப் பெற பாதிக்கப்பட்டவர்களிடையே பெரும் சண்டையும் போட்டியும் பொறாமையும் பொச்சரிப்பும் அதிகரித்து வருவதாகவும் சொன்னார்கள். உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் சென்றோம், கண்யமற்ற சூழலை நாமே உருவாக்குகிறோமோ என்று தோன்றுகிறது என்றார்கள்.

பேரழிவுகளைப் பற்றின நிபுணரான ப்ஃரெட் க்யுனி ஒரு முறை சொன்னார்- ‘இயற்கைப் பேரழிவில் உயிர் தப்பித்தவர்கள் இரண்டாவது பேரழிவிற்கு இலக்காக நேரலாம் ‘. நிவாரணப் பணிகளைத்தான் அவர் இரண்டாவது பேரழிவாகக் குறிப்பிட்டார். இதென்ன முரணான வாதம் ? வீடும் வாசலும் உற்றமும் சுற்றமும் இழந்து நிற்பவர்களுக்கு உதவி தேவை இல்லையா ? தேவைதான். ஆனால் கொடுப்பதிலும் ஒழுங்கு முறை தேவை. மானுட கண்யத்துக்கு இழுக்கு ஏற்படாத வகையில். இடமறிந்து ,பாத்திரமறிந்து, தேவை உணர்ந்து இங்கிதத்துடன் செய்யப்படாத உதவிக்கு ஆக்கபூர்வமான விளைவு இருக்குமா என்பது கேள்வி. இழவு நடந்த வீட்டிற்கு துக்கம் விசாரிக்கச் சென்று இசகு பிசகாகப் பேசிவிட்டு வரும் நபர்களைப் போல, பாதிக்கப்ப் பட்டவர்களின் இழப்பின் பரிணாமம் விளங்காமல் நாம் நிவாரணம் என்ற பெயரில் அவர்களது சுய கெளரவத்தை சேதப்படுத்துவதைத் தான் க்யுனி சுட்டிக்காட்டினார்.

கார்நிக்கோபார் சுனாமி தாக்குதலில் உயிர்பிழைத்தவர் அங்கு உதவச் சென்ற நடிகர் ராஹுல் போஸிடம் சொன்னார். ‘உதவ விரும்புபவர்கள் வாருங்கள்- எங்கள் வாழ்வை மீட்டுக் கொடுக்க.எங்களுக்கு நீங்கள் வாழும் வாழ்வு தேவையில்லை.எங்களுக்கு உங்களது மினரல் வாட்டர் வேண்டாம்.உங்களுடைய ஜீன்ஸ் வேண்டாம். அதை அணிந்து மீன் பிடிக்க முடியாது. எங்களுக்கு எங்கள் நீர் ,எங்கள் லுங்கி வேண்டும்.எங்கள் வாழ்கை மீண்டும் வேண்டும். நாங்கள் வாழ்ந்த வாழ்வில் எத்தனையோ குறைகள் உண்டுதான்.அந்தக் குறைகளை நீங்கள் நிவர்த்தி செய்யலாம். ஆனால் படித்த பட்டிண வாசிகள் எங்களைப் பற்றி அக்கறை கொண்ட தேயில்லை.மன்னியுங்கள் நான் உங்களைத் தப்பு சொல்வதாக நினைக்கக் கூடாது. நீங்கள் பாவம் எங்களுக்கு உதவ வந்திருக்கிறீர்கள். ஆனால் என்ன செய்வேன் ? எனக்கு பயமாக இருக்கிறது.உயிர் பிழைத்திருக்கும் எனது ஒரு குழந்தையும் நானும் எங்கள் சுயகெளரவத்தை இழந்து விடுவோமோ என்று பயமாக இருக்கிறது. ‘

சுய மரியாதை மிக்க நாகைப்பட்டினம், கடலூர் மீனவர்களும் இதைத்தான் சொல்வார்கள். அவர்களுக்கு என்ன தேவை என்று அரசுகளும் தன்னார்வக் குழுக்களும் தீர்மானிக்கமுடியாது. அவர்களுக்கு என்ன தேவை என்று அவர்கள் சொல்லட்டும்.அவர்கள் சொல்லுக்கு மதிப்பளிப்பதே மனித நேயத்தின் முக்கிய பரிமாணம். பாதிக்கப்பட்டவர்கள் எவரானாலும், ஆணுக்கும் பெண்ணுக்கும் சொந்தக் காலில் நிற்கும் வாய்ப்பு கிடைக்கும் போதுதான் அச்சம் விலகும். சுயகெளரவம் திரும்பும். அதை அவர்களுக்கு மீட்டுக்கொடுப்பது நம் கடமை.

—-

vaasanthi@hathway.com

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி