வாஸந்தி
சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நவீனப் பெண்ணுக்கு பெண்ணியவாதம் அர்த்தமற்றதாகிவிட்டதா ?
‘ பெண்ணின் உடலில் இருக்கும் x-க்ரோமோஸோம் மரபணுக்களே அவளது சக்தியின் ரகசியம். அதுவே அவளை ஆணைவிட திறமை மிக்கவளாக்குவது.–ஆஷ்லீ மான்டெகு
‘ஆண்களைவிட பெண்கள் பிஸினெஸ் துறையில் திறமை மிக்கவர்கள். சந்தேக மில்லை. அவர்கள் அந்தத் துறையில் இருக்ககூடாது என்பதற்கு அதுவே ஒரு முக்கிய காரணம் ‘ — ஜி.கே.செஸ்டர்டன்
பெண்ணியவாதமா என்று யாரும் முகத்தைச் சுளுக்கவேண்டாம், தயவு செய்து.நான் பெண்ணியம் பேசப் போவதில்லை. அதைக்கேட்க இப்போது யாருக்கும் பொறுமை இல்லை. தற்காலப் பெண்கள் உள்பட.
‘நீங்கள் ஒரு பெண்ணிய வாதியா ? ‘ என்று அவர்களைக் கேட்டுப் பாருங்கள். நீங்கள் வேறு யாரையோ அந்தக் கேள்வியைக் கேட்டது போல நிற்பார்கள். இல்லாவிட்டால் ஏதோ படு அபத்த கேள்வி ஒன்றைக் கேட்டு விட்டது போலச் சிரிப்பார்கள்.அல்லது அதிர்ந்து , ‘ஓ. நோ ! ‘ என்பார்கள் அவசரமாக,
நீங்கள் தீவிரவாதியா, என்று கேட்டுவிட்டதுபோல.
இஷ்டப்படி உடை உடுத்த, பிடித்தமானவர்களுடன் நட்பு கொள்ள, மனதுக்குப் பிடித்த வேலையில் சேர , படிக்க, சினிமாவுக்குப் போக, கணவனை வரிக்க என்று முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆணுக்கு சமமாக சுதந்திரமும் சில சமயங்களில் [பெண் என்பதால்]அதிகப்படி சலுகைகளும் அனுபவிக்கும்போது பெண்ணியவாதமாவது
புண்ணாக்காவது ? ‘Feminism is passe ‘ என்பார்கள் நுனி நாக்கு ஆங்கிலத்தில். பெண்ணியவாதம் வழக்கு
ஒழிந்து போன வார்த்தை இல்லையோ ?
இலக்கியத்தில் நவீனத்துவம், பின்- நவீனத்துவம் என்று பேசப்படுவதுபோல், பின்- பெண்ணியவாதம் இப்போது சர்ச்சிக்கப்படுகிறது.
சமீபத்தில் ஒரு தெற்காசிய கருத்தரங்கில், ‘பின்- பெண்ணியத்தின் பிரச்சினைகள் ‘ என்ற தலைப்பு வாதத்தைக் கிளப்பிற்று. நேபாளத்திலிருந்து வந்திருந்த பிரதினிதி, ‘நேபாளத்தில்
இன்னும் முன்- பெண்ணியம் கூட வரவில்லை! ‘ என்று அங்கலாய்த்தார். அதைத் தொடர்ந்த விவாதத்தில்,
இன்றைய இளைய தலைமுறைப் பெண்கள், பொதுவாக, உலகெங்கிலும், முதல் இரண்டு பெண்ணியவாத அலைகளில் தீவிர பங்கு கொண்ட அவர்களது இருபதாம் நூற்றாண்டு சகோதரிகளிலிருந்து விலகியிருப்பதாக, அதை ஒரு அரசியலாகப் பார்க்க விரும்பாததாக ஒருமித்தக் கருத்து வெளிப்பட்டது.
அது வெளிப்பட்டது தான் தாமதம், ‘ஆ, இந்த இயக்கம் இப்படித்தான் முடியும் என்று தெரியுமே ‘ என்றார்கள் சில பழமைவாதிகள். ‘இயற்கையை விரோதிக்கும் மிகைப் படுத்தப்பட்ட எதிர்ப்பு வெறியல்லவா அது ?
என்றார்கள். ‘அதில் பெரும்பான்மை பெண்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை ‘ என்றார்கள்.
விவாதத்தில் பங்கு கொண்ட இந்திய பெண்ணியவாதி ரித்து மேனன், பட்டென்று பதில் கொடுத்தார். ‘பெரும்பான்மை மக்கள் சோஷலிசத்துடனும் மார்க்ஸிசத்துடனும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. அதற்காக இரண்டுமே இன்று அர்த்தமற்றவை என்று கொள்ளமுடியுமா ? ‘
புரட்சிகரமான கருத்துக்கள், மரபை எதிர்க்கும் போக்குகள் எல்லாம் ஜனரஞ்சகக் கருத்துகளாக
இருக்கமுடியாது. மிகக் கடுமையான சமூகக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்பவை அவை. பெண்ணியம் என்பது
விதிவிலக்கல்ல. கலாச்சார சித்தாந்தரீதியாகவே ஆண் சமூகத்திடமிருந்து மட்டுமல்ல, மரபிலிருந்து விலகத் தயங்கும், பயப்படும் பெண் சமூகதிலிருந்தும் எதிர்ப்பை சந்திக்கக் கூடியது. பல இசம்களைப்போல இதற்கு
அனைத்துலக அங்கீகாரம் கிடைக்கக்கூடிய கருக்கோள் இல்லை. ஒரே விதமான ப்ரிச்சினை இல்லாததால் ஒரே குரல் இல்லை. வெள்ளைப் பெண்ணியம்,கருப்பர் பெண்ணியம், தலித் பெண்ணியம், முஸ்லிம் பெண்ணியம் என்று வேறு வேறு களங்களிலிருந்து பேசப்படுவது. எல்லாக் களங்களும் மற்றதன் ப்ரச்னையைப் புரிந்துகொண்டதாக அர்த்தமில்லை. அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதோ , இருக்கும் ஸ்தாபனங்களை ஒழித்துப் புதிய ஸ்தாபனங்களை நிர்மாணிப்பதோ இதன் நிகழ்ச்சி நிரலில் இல்லை. அதனாலேயே ஒருங்கிணைப்பதும் ஸ்தாபனங்களை உருவாக்குவதும் இதற்கு இயலாமல் போகிறது. தன்னிடம் எல்லா வினாக்களுக்கும் விடை இருப்பதாக இது
பீற்றீக்கொள்ளக்கூட முடியாது. பின் எதற்காகப் பெண்ணியம் பேசப்படவேண்டும் ? ‘Feminism is passe ‘.
தந்தைவழி சமூக மரபுகள், சிந்தனைகள், நிர்பந்தங்கள் இருக்கும் வரை, பெண்ணியவாதம் வழக்கு ஒழிந்துபோனதாகக் கருத முடியாது. இளையதலைமுறையினருக்கு இருக்கும் மெத்தனத்திற்குக் காரணம் வேறு. அரசியலில் பொதுவாக இருக்கும் அசிரத்தைப் போன்றதுதான் பெண்ணியம் என்ற கருத்துக்கு இருக்கும் அசிரத்தையும். திறந்த பொருளாதாரமும், நுகர் கலாச்சார ஆக்ரமிப்பும், சமூகக் கட்டுப்பாடுகள் தகர்ந்ததும், சம வாய்ப்புகளும் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம், வரலாற்றையும் இன்னமும் கணிசமான பெண்சமுதாயம் அவதிப்படும் யதார்த்தங்களையும் இந்தத் தலைமுறையின் பார்வையிலிருந்து விலக்கிவிட்டன. இந்திய பெண்ணியம் மேற்கத்திய பெண்ணிய கோஷங்களுடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்ளவில்லை. Pro-Choice,Pro-Life குழப்பமில்லை இங்கு. அடிப்படை சம தர்மம், சம-கெளரவத்துக்கான போராட்டமாகப் பல பெண் இயக்கங்களால் வளர்ந்தது இங்கு. வரதட்ஷணை எதிர்ப்பு, வீட்டுக்குள் வன்முறை, பாலியல் பலாத்காரம், பாலியல் அநீதி போன்றவற்றுக்கான வீதிப் போராட்டமாக. ராஜஸ்தான கிராமத்தில் ரூப் கன்வர் ‘சதியாக்கப்பட்ட ‘ போது மெத்தனமாக தில்லியில் அமர்ந்திருந்த மத்திய அரசையே பெண் இயக்கங்கள் கோஷம் போட்டு கதிகலங்க அடித்தன. ‘சதி ஆராதனை ‘ கண்டிக்கப்படவேண்டியதன் அவசியத்தை உணர்த்தின. மத அடிப்படைவாதமும் பழமை வாதமும் கோலோச்சத்துவங்கும் தருணமெல்லாம், பெண்ணினத்துக்குத்தான் அச்சுறுத்தல். இந்தியப் பெண் இயக்கங்கள்
ஏற்றி வைத்த பொறி இன்று சிற்றூர்களில் பற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. புதுக்கோட்டையில் ஒரு முஸ்லிம் பெண் மெளலாக்களைக் கேள்வி கேட்கிறாள். முஸ்லிம் பெண்களுக்குத் தனி மசூதிக்கு வழி சொல்கிறாள். கேள்விப்பட்டதுண்டா முன்பு ? நகர் வாழ் பெண்களுக்குத் தெரியாமல் பல புரட்சிகளை கிராமத்துப் பெண்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள், வீட்டிலும் வெளியேயும் ஆண் ஆதிக்கத்துடன் போராடும் அன்றாட யதார்த்தத்தோடு வாழ்பவர்கள். அனுபவ ரீதியில் பாதிப்பை உணராமல் போனாலும் இன்றைய தலைமுறைக்கு அரசியல் பிரக்ஞை வேண்டாமா ?
பெண் விடுதலை என்பது தனி நபர் சமாச்சாரம் அல்ல. சங்கிலியாக எல்லாரையும் பிணைப்பது. என் விடுதலை, அடுத்தவளின் விடுதலையோடு சம்பந்தப்பட்டது. இதை நவீனப் பெண் உணர்ந்துகொண்டால்
அப்போது தெரியும்- அவள் பெண்ணியவாதியாக இருந்தாலும் இல்லாமல் போனாலும் போராட்டம் தொடர வேண்டிய ஒன்று என்று.
—-
vaasanthi@hathway.com
- தொடர்ந்து ஒலிக்கும் குரல் – (வெங்கட் சாமிநாதனின் உரையாடல்கள் )
- பெரியபுராணம் – 36
- நினைவிருக்கிறதா ?
- உயிர்த்தேன்
- வடகிழக்கில் ஒரு புதிய குரங்கினம் -100 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு-
- மனிதகுலம்: உலகின் மிகக்கொடிய சுரண்டல் கும்பல்-குற்றஞ்சாட்டுகின்றனர் விஞ்ஞானிகள்
- பூகோள காந்த துருவங்கள் இடமாற்றம், துருவ முனையில் விண்ணிற ஒளித் தோரணங்கள் [Geomagnet Poles Reversal, Arctic Auroras] (8)
- மீண்டும் வரும் நாட்கள் :மு.புஷ்பராஜன் கவிதைகள்
- அதிர்ச்சியும் ஆற்றாமையும் (சுகுமாரனின் மொழிபெயர்ப்புக் கவிதைகள்)
- பார்த்திப ஆண்டு உதயம்
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-6
- கீதாஞ்சலி (18) உன்னைத் தேடும் போது … ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- என்ட வீடும் அப்புன்டேயும் கறுப்பு
- அவளால்…!
- பரிமளத்திற்குப் பதில்மடல்
- தமிழவன் கட்டுரை பற்றி…
- இனவாத ஈவெரா ?
- அன்புள்ள ஆசிரியருக்கு
- பால்வினைத் தொழில்
- ஹினா- மட்சுரி
- ஆட்காட்டிப் புற்கூண்டில் வசிக்கும் இதயம்
- கலைந்துபோன ‘திராவிடஸ்தான் ‘ கனவுகளும், கண்ணகியைப் பழித்த கருஞ்சட்டைத் தலைவரும்! – 1
- ஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது!
- இருந்ததனால்….
- பாம்புகள்
- சேதி வந்தது
- சீதாயணம் ஓரங்க நாடகத்தின் பின்னுரை
- பிம்ப உயிர்கள் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)
- மழலைச்சொல் கேளாதவர் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)
- Pope John Paul II
- தமிழில் பிறமொழி கலத்தலும் திரைப்படத் தலைப்பும்
- கண்கள்
- தமிழ் அறியாத தமிழர்கள்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – சுபாஷ் சந்திர போஸ்
- சிந்திக்க ஒரு நொடி – விட்டு விடுதலையாகி
- சிந்திக்க ஒரு நொடி – சாஸனம் பொய்த்ததா, மானுடம் பொய்த்ததா ?
- இதற்காக இருக்கலாம்!
- பயணம்
- முன்னேறு
- மகள்…
- உயிரினினும் இந்தப் பெண்மை இனிதோ ?