சிந்திக்க ஒரு நொடி – வாழ்தலும் சாதலும்

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

வாஸந்தி


மனச் சோர்வும் மூளையின் ரசாயனக் கோளாருமே தற்கொலைகளுக்குக் காரணம்

வாழ்க்கைச் சூழ் நிலை தற்கொலையைத் தூண்டக்கூடியதாக இருந்தாலும் ஆரோக்கியமான மூளை ரசாயனக் கலவை கொண்ட ஒரு நபர் தற்கொலை என்கிற விஷயத்தைப் பற்றி நினைக்கக்கூடமாட்டார்—

மனிதர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பது பற்றி National Mental Health Association வெளியிட்டிருக்கும் கட்டுரையிலிருந்து.

அமெரிக்க நாட்டில் நிகழும் மரணங்களுக்குச் சொல்லப்படும் காரணங்களின் வரிசையில் தற்கொலை என்பது எட்டாவது இடத்தில் இருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது.நமது பாரதப் புண்ணிய பூமியில் தினம் தினம் செய்திகளிலேயே அடிபடும் தற்கொலைகளைப் பற்றிக் கேள்விப் படும் போது நமது சாவுகளுக்கு அதுவே [ மனித/ அரசுகளின் அசட்டையால் ஏற்படும் விபத்துகளின் மூலம் நிகழும் மரணங்களுக்கு அடுத்தபடியாக] முக்கிய காரணங்களுள் ஒன்றாக இருக்குமோ என்று அச்சமேற்படுகிறது. ஆந்திர மாநிலத்திலும் கர்நாடக மாநிலத்திலும் வறட்சியையும் கடன் சுமையையும் தாங்கிக்கொள்ள வலுவில்லாமல் உயிரை மாய்த்துக்கொள்ளும் போக்கு பயங்கர தொற்று நோயாய் விவசாயிகளிடையே பரவி வருவது பீதியை அளித்து சங்கடப்படுத்தும் வேளையில் ரஜனி என்ற ஏழை மாணவி மேற் படிப்புக்குக் கடன் கொடுக்க

வங்கி மறுத்ததால் சோர்வடைந்து கேரளத்தில் தற்கொலை செய்து கொண்டது நெஞ்சைப் பதற வைத்தது. அது அடங்கும் முன், புகழும் வசதியும் இளமையும் அழகும் ஆரோக்கியமும் கொண்ட நபீஸா ஜோஸப் போன்றவர்களின் தற்கொலைகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

‘அரிது,அரிது, மானுடராய்ப் பிறத்தல் அரிது ‘ என்று மானுட வாழ்வை, பிறப்பின் மிக உன்னத பரிணாம வளர்ச்சியாக நினைத்துப் பாடிய நமது சித்தர்களெல்லாம் இப்போது பித்தர்களாகிப் போனார்கள்.மானுடம் மிகக் கீழ் நிலையில் இறங்கிப் போனதின் பரிமாணமாகத்தான் இந்த இரண்டு வகைத் தற்கொலைகளுமே தோன்றுகிறது.நமது சமுதாயத்தின் இரண்டு முகங்களைக்காண்பிக்கும் அடையாளமாக. ஒன்று நிஜ முகம் ;மற்றது பொய் முகம். இந்த இரண்டு வகைத் தற்கொலைகளுமே இந்தியாவின் இரு முகங்களின் அடையாளங்கள்.

விவசாயிகளின் தற்கொலைகள் எல்லாமே கருணையற்ற இயற்கையும், அனுசரணையற்ற சமூகமும் விளைவித்தவை என்று சொல்வீர்களானால்,இரக்கமற்ற நமது நிர்வாக அமைப்பே ரஜனியைக் கொன்றது என்கிற பிரக்ஞையில் உடம்பு கூசிப்போவீர்கள். ‘கழுத்து வரைக் கடன் ‘ ‘விழி பிதுங்கும் நிலை ‘ என்கிற சொற்களிலேயே சாவு நிழலாடுவது போல வறட்சிமிகுந்த காலத்தில் நிலத்தையும் குடும்பத்தையும் பராமரிக்க வாங்கிய கடனின் வட்டி ஏற அசலைத் திருப்ப முடியாமல், கடன் கொடுத்தவர்களின்தொல்லை பொறுக்கமுடியாமல் சாவை நாடியவர்களின் கதைகள் நிஜமான இந்திய கிராம அவலங்கள்.ரஜனியின் கதையோ இந்திய நகர்புரத்து ஏழை மாணவர்களின் அவலம். திருவனந்தபுரத்து மாணவி ரஜனிக்கு ஹாஸ்டல் கட்டண பாக்கி இருந்தது.தகுதியின் பேரில் இஞ்சினியரிங் கல்லூரியில் சீட் கிடைத்தது. வங்கியிலிருந்து கல்லூரிக்கட்டணத்திற்குப் பணம் கிடைக்கும் என்றார்கள்.அவளுடைய எதிர்காலத்துக் கனவுகள் விரிந்தன. ஆனால் வங்கி அலுவலர்கள் அவள் குடிசையில் வசிப்பதைக் கண்டபிறகு அவளால் கடனைத் திருப்பித்தர இயலாது என்று கடன் கொடுக்க மறுத்து விட்டார்கள். குடும்பத்தைக் காப்பாற்றப் போகிறோம் என்கிற கனவு சிதைந்து ரஜனி தற்கொலை செய்துகொண்டாள். நபீஸா ஜோஸப்பைக் கொன்றது யார் ?

புத்திசாலியான ஒரு இளம் பெண், அழகும் புகழும் சுபிட்சமான எதிர்காலமும் கொண்ட நவ யுகத்துப் பெண், காதலன் ஏமாற்றிவிட்டான் அல்லது முன்பு திருமணம் ஆனதை மறைத்து விட்டான் என்கிற ஆத்திரத்தில் உயிரை மாய்த்துக் கொள்வதா ? அவர் வாழ்ந்த போலி உலகத்து மதிப்பீடுகளே அவரை மாய்த்துவிட்டன,நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் துணிவையோ விவேகத்தையோ கொடுக்கவில்லை என்றுதான் முடிவு கட்ட வேண்டும். இத்தனைக்கும் அவருக்கு உதவ நிறைய ஆட்கள் இருந்தார்கள். சமூக சேவையில் ஆர்வம் கொண்ட நபீஸாவுக்குத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தெரியாமற்போனது எப்படி ?

தற்கொலையை யார் செய்துகொண்டாலும் அவை நியாயப் படுத்தமுடியாதவை. தற்கொலை முயற்சி சட்டத்துக்கு விரோதமானது.நமது பிறப்புக்கு நாம் எப்படி பொறுப்பில்லையோ அதுபோல நமது உயிரை மாய்த்துக்கொளும் உரிமை நமக்கு இல்லை. ‘மனிதர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள் ? ‘ என்பதைப் பற்றி ஆய்வு செய்யும் அமெரிக்க தேசிய மன வள மையம் சொல்கிறது:

‘ எந்த தற்கொலை முயற்சியும் ஒரு நபரின் மிக ஆழமான மனச் சோர்வின் அடையாளம்.

ஏழையோ பணக்காரரோ தற்கொலை செய்துகொள்பவருக்கு அநேகமாக மன-உள நிலையில் கோளாறு இருக்கும். ‘ வாழ்வின் துன்பங்களும் பிரச்சினைகளும் சாவுகளுக்குத் தூண்டுதலாக இருந்தாலும் மன நிலை குன்றியவர்களே,மூளையில் ஏற்படும் ஒரு ரசாயனக் கோளாறினாலேயே,[brain chemistry disorders] தற்கொலை செய்துகொள்வார்கள் என்கிறது ஆய்வு.

நமது தமிழ் நாட்டில் மொழிக்காகவும் தலைவர்களுக்காகவும் உயிரைத் தியாகம் செய்தவர்களின் பட்டியலுடன் வேறு எந்த மாநிலமும் போட்டியிடமுடியாது. ‘இந்தி ஒழிக தமிழ் வாழ்க ‘ என்றும் ‘உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு ‘ என்று கோஷமெழுப்பி தமது உயிரையும் அதை நம்பி வாழ்ந்த குடும்பத்தையும் துச்சமாக எண்ணி உயிரை மாய்த்துக் கொண்டவர்கள் அநேகமாக வசதியற்ற சாமானியர்கள்.மொழிக்காக பலர் உயிர் விட்ட சேதி கேட்டு உலகம் மாய்ந்து போனது. அமெரிக்க ‘டைம் ‘ மற்றும் ‘நியூஸ் வீக் ‘ பத்திரிக்கைகள் மதத்திற்காக உயிர்த்தியாகம் செய்த வியட்னாம் பிட்சுக்களுடன் அதை ஒப்பிட்டது. உயிர் தியாகம் செய்வது நமக்குப் பெருமை தரும் விஷயம். எம்.ஜி.ஆர் அவர்களுக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விபட்டவுடன் தற்கொலை செய்துகொண்டவர்கள் பலர். அவர் இறந்தபின் இன்னும் பலர் வீர சொர்க்கம் புகுந்தார்கள். கருணாநிதி கைது செய்யப்பட்ட செய்தி கேட்டு, ஜெயலலிதா கைது செய்யப்பட்டவுடன், வைக்கோ தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டவுடன் என்று மாண்ட தியாகிகளும் பலர்.

[சிறைக்குச் செல்வதற்குமுன் நமது தலைவர்கள் ‘விபரீத முடிவுக்குச் செல்லவெண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ‘ என்று தொண்டர்களுக்கு அறிக்கை விடுவது வழக்கமான ஒன்று. ] அவர்களது சாவு தலைவர்களின் செல்வாக்கின் அடையாளம். தனக்காக உயிர் விட்ட மூன்று இளைஞர்களின் புகைப்படங்களைப் பெருமையுடன் வைக்கோ தன் வீட்டுச் சுவரில் மாட்டிவைத்திருப்பதை ஒரு வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர் என்னிடம் சொல்லி அதிசயித்தார்.

அமெரிக்க ஆய்வு மையம் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். அவர்களது கெமிஸ்ட்ரி வேறு.நமது வேறு.

—-

vaasanthi@hathway.com

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி