சித்தனாய் நானிருந்தால்.. ?

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

கவியோகி வேதம்


‘சித்தனாய் நானிருந்தால் ‘-ஓ!

..செகமுருட்டும் நற்தலைப்பு!

பித்தனாய் மாறிவிட்டேன்!-கனல்

.பீறிடத், தொடங்கிவிட்டேன்!

..

சித்தனாய் யானிருந்தால் ?,-என் தாய்

..தேசத்தை மாற்றிடுவேன்!

எத்தர்கள் கையிலவள்-படுதுன்பம்

..யானேதான் நன்கறிவேன்!

..

தாயின் வளங்களெல்லாம்-பல

..தருக்கர் திருடுகின்றார்!

மாயப்போர் வையில்சென்(று)-அவரை

..மாய்க்க வழிசெய்வேன்!

..

கொஞ்சமும் நேசமின்றி-பலர்

..கொடூரம் விளைக்கின்றார்!

நஞ்சென மாறிடுவேன்-சித்தால்

..நயமாக வென்றிடுவேன்!

..

மரங்களை வெட்டிநின்று-தாயின்

..மழைக்கருணை தடுப்போரின்

கரங்களைச் சாய்த்துநின்று-அவர்தம்

..கண்ணை நடுங்கவைப்பேன்!

..

காமம்தம் கண்ணில்மின்ன-பல

..கன்னியரைக் கெடுப்போரின்

தீமை உறுப்பினையே-நொடியில்

..தீய்க்க வழிவகுப்பேன்!

..

சட்டசபை தன்னைதினம்-ஒரு

..சண்டைசபை யாக்குவோரை

இட்டப்படி முடியுலுக்கி-அவரை

..எளிதில்மா றச்செய்வேன்!

..

‘வீரப்பனை ‘த் தேடிநிதம்-சொத்தை

..வீணாக்கு கின்றனரே!(அவனை)

ஈரமுள்ள பசுவாக-மாற்றி

..எஞ்சிய சொத்துகாப்பேன்!

..

பிஞ்சுகளின் கல்விமுறை-மாற்றப்

..பெரிசுகளைப் படுத்திடுவேன்!

அஞ்சிடா(து) அனைவர்க்கும்-மூளையில்

..அறிவுஎழ விதிவகுப்பேன்!..

..

சாராயப் போத்தல்களை-எங்கும்

..சட்டென மறைத்திடுவேன்!

மாறாகக் குடியர்நெஞ்சில்-த்யானம்

..மலர வழிவகுப்பேன்!

..

தண்ணீர் வளமிலையென்(று)-இனித்

..தள்ளாட்டப் பேச்சுவேண்டா!

எண்ணிலாக் கிராமத்திலும்-நதிகளை

..இணங்கி வரச்செய்வேன்!

..

சித்தனிங்கு வந்துவிட்டேன்!!-யாரும்

..தீமைகள் எண்ணமாட்டார்!

சுத்திடும்-என் மனக்கண்ணில்-அவை

..சுருக்கெனத் தெரிந்துவிடும்!

..

கள்ளம் பிறக்குமுன்பே-என்கை

..காத்துத் தடுத்துவிடும்!

பள்ளங்கள் தோன்றுமுன்பே-என் கண்

..பாய்ந்து தடுத்துவிடும்!

..

பூட்டே இனிவேண்டா!-வீடுகள்

..பொழுதும் திறந்திருக்கும்!

கூட்டுக் குடும்பங்கள்-இனிக்

..குலவி மகிழ்ந்திருக்கும்!

..

என்தாய்மண் மீதினிலே-மலர்கள்

.. எங்கும் கொலுவிருக்கும்!

என்தாய் கண்களிலோ-மகிழ்ச்சி

..என்றும் ததும்பிநிற்கும்!

..

மேகங்கள் சூல்கொண்டால்-இந்த

..மேதினி செழிக்காதோ ?

ஊகங்கள் உண்மையென்றால்-என்றன்

..ஓர் சித்து பலிக்காதோ ?

..

சித்தன் ‘என யான் ‘உலவ-காளி

,,சீக்கிரம் வரம்தருவாள்!

பத்தரைமாற் றுப்பொன்,என்-பாரதம்

..பாரிலென மாறிடும்,பார்!

&&&&(கவியோகி வேதம்)

kaviyogi_vedham@yahoo.com

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்