கோபால் ராஜாராம்
இந்த ஆண்டின் சாகித்ய அகதமி பரிசு தி க சிவசங்கரனுக்குக் கிடைத்திருக்கிறது. சாகித்ய அகதமி பரிசு அந்தந்த ஆண்டின் சிறந்த படைப்புகளுக்குத் தரப் பட வேண்டும் என்பது நியதி. ஆனால், தமிழைப் பொறுத்த வரையில் அது ஒரு எழுத்தாளனுக்கான அங்கீகாரமாகத் தான் இருக்கிறதே தவிர படைப்புகளின் சிறப்பைக் குறிப்பிடுவதாய் இல்லை. பாரதி தாசனின் ‘ பிசிராந்தையாரு ‘ க்கும், லா ச ராவின் ‘சிந்தா நதி ‘க்கும் இந்தப் பரிசு கிடைத்தது இவ்விதமாகத்தான்.
தி க சி – ஒரு விதத்தில் , 1950-களில் தேங்கிப் போன கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களில் தங்கிப் போனவர். ‘சோஷலிச யதார்த்தவாதம் ‘ , ‘முற்போக்கு எழுத்து ‘ என்று கட்சி சார்ந்த கோஷங்களை எழுப்பிய அதே நேரம் சிறந்த எழுத்தையும் , எழுத்தாளர்களையும் அறிந்து கொள்ளவும் ஊக்கப் படுத்தவும் தெரிந்தவர். ரசனையில் உயர்ந்த தன் பரவலான படிப்பையும், விமர்சனங்களையும், கட்சிக் கண்ணோட்டத்தால் குறுக்கிக் கொண்டவர். ஆனால், இதையும் மீறி அவருடைய ‘தாமரை ‘ காலகட்டத்தில், பிரபஞ்சன், டி,செல்வராஜ், பூமணி, வண்ணதாசன், தமிழ் நாடன், அக்கினி புத்திரன் , சார்வாகன் , ஜெயந்தன் என்று பலரையும் இனங்கண்டு அவர்களின் எழுத்தைப் பரவலாக்கச் செய்தவர். தாமரை வெளியிட்ட சிறுகதைச் சிறப்பிதழ்கள் இந்த விதத்தில் , இன்று முக்கியமாகியுள்ள பல எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்வித்தது.
இன்று ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் தமிழ் நாட்டில் பரவலான அங்கீகாரத்தைப் பெற்று வருகின்றன. ஆனால், முதன் முதலில் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை உரிய முறையில் வெளியிட்டு தமிழின் தீவிரமான வாசக அக்கறைக்கு அவற்றைக் கொண்டு வந்த பெருமையும் தி க சிக்கே உரித்தானது என்பதைப் பலரும் நினைவில் கொள்வதில்லை. கைலாசபதி, சிவத் தம்பி, அகஸ்தியர், சாந்தன் , டொமினிக் ஜீவா போன்ற பலரையும் தாமரையில் எழுதச் செய்து, இலங்கைத் தமிழ் எழுத்தும் விவாதங்களும் தமிழ் கலாசார உலகின் மைய நீரோட்டத்தின் பிரிக்க முடியாத அங்கம் என்ற உணர்வைப் பதிய வைத்தவர் அவர். (முற்போக்கு விமரிசனம் என்ற பெயரில் எஸ்.பொ போன்றவர்க்குக் கிடைத்திருக்க வேண்டிய நியாயமான இடம் மறுக்கப் பட்டது எனினும், அது அவர் விமர்சனப் பார்வையின் வெளிப்பாடு என்று புரிந்து கொள்ளலாம்.)
கலாசார தளங்களில் இன்று இடது சாரி கட்சிகளின் செயல்பாட்டிற்கு முதன் முதலில் வித்திட்டவர் தி க சி தான். முன்பே வலதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி ‘கலை இலக்கியப் பெருமன்றம் ‘ என்ற அமைப்பைக் கொண்டிருந்தது. கே பால தண்டாயுதம், ஜீவானந்தம் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் இலக்கியப் பார்வையும் , சிறந்த இலக்கியப் படைப்புகள் பற்றி குறுகிய கண்ணோட்டமற்ற அபிப்பிராயங்களும் கொண்டிருந்தவர்கள். ஜீவானந்தமே ‘தாமரை ‘ ஏட்டை நிறுவியவர். பிறகு அதன் பொறுப்பேற்க வேண்டி செயல்பட்ட தி க சிவசங்கரன், சிறந்ததொரு இலக்கிய இதழாக அதனை மாற்றியவர். அந்த விதத்தில் மார்க்ஸிஸ்ட் கட்சி ஏடான ‘செம்மல ‘ ருக்கும் அவருடைய ‘தாமரை ‘ தான் வழிகாட்டியாய் அமைந்தது.
கல்கி ஏட்டிலிருந்து நா. பார்த்த சாரதி வெளியேற்றப் பட்ட போது அவருக்குக் களம் அமைத்துக் கொடுத்தது ‘தாமரை ‘. ஜெயகாந்தனின் படைப்பு விகடனில் நிராகரிக்கப் பட்ட போது அவர் படைப்பையும் ‘தாமரை ‘ வெளியிட்டதுண்டு. மெளனி, ஜெயகாந்தனின் பிற்கால இலக்கியப் படைப்புகள் , லா ச ரா பற்றிய கணிப்புகளில் வறட்டு கம்யூனிஸ இலக்கிய சித்தாந்தங்களை இறக்கி , அவற்றை நிராகரித்ததும் ‘தாமரை ‘ செய்த தவறு. ஆனால் கூடவே தி க சி- தமக்குப் பிடித்தமான சிறந்த புதிய எழுத்தாளர்களையும் தொடர்ந்து எழுதுமாறு தூண்டிப் பிரசுரம் பெறச் செய்தவர்.
முக்கியமான விமர்சனங்களையும், விவாதங்களையும், மொழி பெயர்ப்புகளையும் வெளியிட்டு தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் ‘தாமரை ‘யின் இடத்தை உறுதி செய்தவர் தி க சிவசங்கரன். இந்தக் காரணங்களை முன்னிறுத்தி, தி க சி க்குக் கிடைத்த சாகித்ய அகதமி அங்கீகாரம் பெருமைப் பட வேண்டிய ஒன்று.
**************
- தேவை
- போலீஸ்காரர் மகள்
- சாகித்ய அகதமி பரிசு பெறும் தி க சிவசங்கரன்
- குரூரம்
- அடை வேகுதே!
- ஒற்றைத் தீக்குச்சி
- பூச்சிக்கொல்லி கலவை பார்க்கின்ஸன் வியாதிக்குக் காரணமா ?
- பாதாங்கீர் பாயசம்
- உளுத்தம் பருப்பு போண்டா
- என் கதை – 3 (கடைசிப் பகுதி)
- சாகித்ய அகதமி பரிசு பெறும் தி க சிவசங்கரன்
- 1984ம் ஆண்டு ஜூன் மங்கை மாத இதழில் வெளியான ஆலோசனைகள்