ஜூடித் பர்னெட் (தமிழில்: ஆசாரகீனன்)
சவுதி அரேபிய பால் அரசியலுக்குள் ஒரு பயணம்
ஒரு வாரத்துக்கு முன்னால், பல அமெரிக்க வியாபாரப் பெருந்தலை (ஆண்)களுடன் சுவாரசியமாகப் பேசியபடியே ஜெத்தாவில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் நுழையும் போது, ‘ஆண்கள் நுழையுமிடம் ‘ என்று குறிக்கப்பட்ட கதவை நோக்கித் தவறுதலாகச் சென்றுவிட்டேன். நான் ஏதோ ஒரு துணிச்சலான அரசியல் அறிக்கையை விடுக்கிறேன் என்பதைப் போல அரண்டு போய், அங்கு காவலுக்கு நின்றவர் ‘பெண்கள், பெண்கள், ‘ என்று பதறினார். தனித்தனியான நுழைவாயில்களை நான் பயன்படுத்தியே பல ஆண்டுகள் ஆகி விட்டன. கடந்த பல ஆண்டுகளாக மத்திய கிழக்கு நாடுகளில் பயணம் செய்திருந்தாலும், கடைசியாக எனக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது அங்கே இல்லை. முரண்நகையாக, இந்த அனுபவம் வாஷிங்டன் நகரில் பிரபலமாக இருந்த சில சமூக சங்கங்களில் 80-களின் இறுதி வரை இவ் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வந்ததால் அங்குதான் ஏற்பட்டது. மீண்டும் இதை எதிர்கொள்ள நேர்ந்த போது, பல ஆண்டுகளாக எனக்குக் கிட்டிய அறிவுரை சரிதானோ என்று நினைக்கத் தொடங்கினேன்: [அதாவது] சவுதியில் வணிகம் செய்வதென்பது ஆண்களுக்கு மட்டுமே உரியது.
ஆனால், சவுதி முடியரசின் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் பற்றிய வருடாந்திர மாநாட்டில் அந்த வருடம் கலந்து கொண்ட குறிப்பிடத்தக்க சவுதிப் பெண் வணிகர்கள் அத்தகைய கருத்தைப் பெருமளவு பொய்யாக்கி விட்டனர்.
நான்கு பெண்களையும் 16 ஆண்களையும் கொண்ட அமெரிக்கப் பிரதிநிதிகள் குழு, அரங்கத்தில் 1200 ஆண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பெரிய பகுதியில் ஒன்றாக அமர முடிவு செய்தோம். வெளி நாட்டினரான எங்களை யாரும் எதுவும் கேட்கவில்லை. இதற்கு மாறாக மிகவும் சிறியதாக இருந்த, பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதிக்குச் சென்று சில சவுதியினருடன் காபி அருந்திய பின், பெரும்பாலான நிகழ்ச்சிகளை வழி நடத்திய, தடுப்புக்கு அப்பால் இருந்த, ஆண்களுடன் மீண்டும் சேர்ந்து கொண்டேன். ஒரு கேள்வி-பதில் நிகழ்ச்சியின் போது, ‘பெண்கள் பகுதி ‘யிலிருந்து கேள்வியை எதிர்பார்த்த ஒரு மட்டுறுத்துனர், ‘அங்கே இருட்டில் இருக்கும் ‘ பெண்கள் பகுதியில் அமர்ந்திருப்பவர்களைப் பார்க்க முடியவில்லை என்று குறிப்பிட்டார். மேடைப் பகுதியை வெளிச்சம் குளிப்பாட்டிக் கொண்டிருக்க, பெண்கள் பகுதியோ உடலை முழுவதும் மறைக்கும் 300 கருப்பு அங்கி (அபயா)களின் கடலாகக் காட்சியளித்தது. ஒரு பெண் பிரதிநிதி, ‘நாங்கள் ஒன்றும் இருளில் இல்லை, நீங்கள்தான் எங்களைப் பார்ப்பதில்லை ‘ என்று பதிலளித்தார். இன்னும் நிழல் மறைவிலேயே இருப்பதாகக் கருதப்படும் இந்தப் பெண்கள், உண்மையில் அவ்வாறு இல்லை என்னும் நிலை அதிகரித்து வருகிறது.
[அமெரிக்க அரசின் முன்னாள் ஜனாதிபதியான] கிளிண்டன் நிர்வாகத்தில், வணிகத் துறையில் வியாபார முன்னேற்றப் பணி புரியும் ஓர் அதிகாரியாகவும், தற்போது தனிப்பட்ட ஆலோசனையாளராகவும், வழக்கறிஞராகவும் பணிபுரியும் நான் எகிப்து, ஜோர்டான், துனிஸியா, கட்டார், மொராக்கோ நாடுகளில் – அதாவது, சவுதி தவிர்த்த ஏனைய இடங்களில் எல்லாம்- உள்ள எனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக உதவ முடியும் என்று முடிவு செய்திருந்தேன். எனது தொழில் வளர்ந்தாலும், பல வாடிக்கையாளர்களின் 80 சதவீத சந்தை சவுதி அரேபியாகவே இருந்ததால், என் வீச்சு மட்டுப் படுவதை உணர்ந்தேன். எனவே, சுமார் 10 வருட காலமாகக் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் மத்திய கிழக்கு நாடுகளில் பயணம் செய்த பின்னர், இந்த முறை ‘பெண்கள் காணப்படாத நிலம் ‘ ஆன சவுதி அரேபியாவில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள முடிவு செய்தேன். அங்கு என்ன எதிர்பார்ப்பது என்பது எனக்குச் சற்றும்ம் தெரிந்திருக்கவில்லை. நான் என்ன கண்டறிந்தேன் என்றால், மேலை நாடுகள் நினைப்பதை விட மிக வேகமாகவே சவுதி பெண்களின் பங்கெடுப்பு மாறி வருகிறது என்பதையே.
டாவோஸிலோ (Davos), ஜெனிவாவிலோ அல்லது வாஷிங்டனிலோ நடைபெறும் எந்த மாநாட்டையும் போலவே, பெரும் செல்வாக்கு மிக்க பொருளாதார நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைக்க உண்மையாகத் தேவைப்படும் மாற்றங்களை விவாதிப்பதில் இருந்து, மாநாடு தொடங்கியது. பின்னர், பிரிட்டனின் வணிக மேலாண்மைக் கல்லூரி ஒன்றின் தலைவர், சவுதி பொருளாதாரத்தை சீரமைத்தல் மற்றும் தொடர்ந்து கட்டிக் காத்தல் பற்றிப் பேசினார். மேலும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் மற்றும் நெடுங்காலம் வெற்றிகரமாக வாணிபம் நடத்துவதற்கும் பெண்கள் எவ்வாறு உந்து சக்தியாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஒரு நிபுணர் குழுவின் அமர்வு விளக்கியது.
ஆனால், ஒன்று மிகவும் மாறுபாட்டு இருந்தது. இந்த உரைகளை எல்லாம் நிகழ்த்தியது பெண்கள்: பல நூறு கோடி டாலர்கள் சொத்துள்ள ஓலயன் நிதி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான லுப்னா ஓலயன், மாநாட்டின் ஐந்தாண்டு கால வரலாற்றிலேயே முதன் முறையாகத் தலைமை உரை ஆற்றிய பெண். சவுதி அரேபியா எப்படித் தன் பொருளாதார வளத்தைக் கட்டிப் பாதுகாப்பது என்பது பற்றிப் பேசிய லாரா டைஸன், லண்டன் பொருளாதாரக் கல்லூரியின் தலைவர். இவர் அமெரிக்க அதிபர் கிளிண்டனின் பொருளாதார ஆலோசகர்கள் குழுவின் தலைவராகவும் இருந்தவர்.
ஜெத்தாவில் வெளியாகும் ‘அரபுச் செய்தி ‘ தினசரி அடுத்த நாள் கொட்டை எழுத்துகளில் தலைப்புச் செய்தியாகப் பிரசுரித்தது – ‘ஜெத்தா பொருளாதார மாநாட்டில் பெண்களின் ஆட்சி! ‘.
சில சவுதி ஆண் வணிகர்கள் பெண்கள் பேசுவதை மிகுந்த கவனத்துடன் கேட்டுக் கொண்டிருக்கையில், பிறர் கைகளைக் கட்டிய படியும், தங்கள் சகாக்களுடன் ரகசியமான குரலில் ஏதோ பேசியபடியும், இத்தகைய மாற்றத்தை எப்படி எதிர் கொள்வது என்பது புரியாதது போன்ற தோற்றத்தில் உட்கார்ந்திருந்தனர்.
இதற்கு மாறாக, காபிக்கான இடைவேளைகளில் பெண்கள் பகுதிப் பேச்சில் இருந்து, பெண்களில் பலரும் மாற்றங்கள் மிக மிக மெதுவாக நடக்கின்றன என்று நினைப்பது தெளிவாகத் தெரிந்தது. சட்டம், பொறியியல், கட்டிடவியல் போன்ற முக்கியமான துறைகளில் கல்வி பெறும் உரிமை மறுக்கப்படுவது பற்றிய அவர்களது வெறுப்பை வெளிப்படுத்தினர். தனது நெருங்கிய ஆண் உறவினர் ஒருவரின் வெளிப்படையான அனுமதி அல்லது பங்கெடுப்பு இல்லாமல், ஒரு வேலையைப் பெறவோ அல்லது சொந்தமாகக் தொழில் தொடங்கவோ தனக்கு அனுமதி இல்லை என்று ஒரு பெண் புகார் சொன்னார்.
‘காலப் போக்கில் இந்த நிலை மாறும் ‘, என்று ஆண்கள் சொன்னார்கள். ‘எப்போது ? ‘, என்று கேட்டனர் பெண்கள். முதல் நாள் இரவு விருந்தின் போது ஒரு முன்னாள் அமைச்சர், ஓட்டுனர்களைப் பணிக்கு அமர்த்தியிருப்பதால் தன் வீட்டுப் பெண்கள், தங்களுக்கு வாகனங்களை ஓட்டும் உரிமை மறுக்கப்படுவது பற்றிக் கவலைப் படவில்லை என்றும், அவர்கள் இந்த நிலை தொடர்வதையே விரும்புகிறார்கள் என்றும் சொன்னார். ‘1990-ஆம் வருடம் ஒரு பெண்களின் குழு ஓட்டுனர் உரிமையை வலியுறுத்தியதே, பெண்களின் உரிமைகள் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டதற்குக் காரணம் ‘ என்றார். மேலும், ‘பல மாற்றங்கள் ஏற்படக் கூடும், ஆனால் மாற்றங்கள் காலம் கனியும் போதுதான் வரும் என்பதை அந்தப் பெண்கள் உணர வேண்டும் ‘ என்றும் சொன்னார். முக்காடு அணிந்திருந்த ஓர் இளம் பெண் அமைதியாகப் பதிலளித்தார், ‘அந்தப் பெண்களில் நானும் ஒருத்தி. அது நடந்தது 13 வருடங்களுக்கு முன். இன்னும் எத்தனை காலம்தான் நாங்கள் காத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் ? ‘
சந்திப்புகளின் போதும், இரவு விருந்துகளிலும் மட்டுமல்லாமல் தங்கும் விடுதியிலிருந்த உணவகத்தின் குடும்பப் பகுதியில் (இது ஆண்-பெண் இரு பாலாரும் அனுமதிக்கப்படும் இடம்) நடந்த சாதாரண உரையாடல்களிலும் பேசப்படும் முக்கியமான விஷயமாக இருந்தது – மாற்றம் என்பதே. சவுதியினரும், இந்த நாட்டைப் பற்றிய அதிக அனுபவம் உடைய வெளிநாட்டினரும் சவுதி அரேபியா மாறிக் கொண்டிருப்பதை ஒப்புக் கொண்டாலும், இதற்கான வேறு வேறு காரணங்களைக் குறிப்பிட்டனர். சிலர், பொருளாதாரமே மாற்றத்தின் அடிப்படையாக விளங்குகிறது என்றனர்; சவுதியின் பொருளாதாரம் அலைப்பான மாற்றத்தில் (flux) உள்ளது, அது முற்றிலும் எண்ணெயை அடிப்படையாகக் கொண்டதாக தற்போது இருக்கவில்லை என்றும் சொன்னார்கள். மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதத்தினர் 20 வயதுக்கும் உட்பட்டவர்கள், அதிகாரபூர்வமான வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை 10 சதவீதம். இதில் பெண்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளப் படாததோடு, வேலையில்லாத ஆண்களின் எண்ணிக்கை கூட குறைத்து மதிப்பிடப் பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். வேறு சிலர், கடந்த ஆண்டு ரியாத்தில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதல், தங்களது பாதுகாப்பு மற்றும் நிலைப்புத் தன்மை பற்றிய சவுதிகளின் நம்பிக்கையை உலுக்கியிருப்பதாகக் கருதினார்கள். ஆனால், பெண்களின் பங்கு மாறாமல் அப்படியே இருக்க முடியாது என்பதைப் பெரும்பாலானவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.
ஒரு மாலையில், மாநாட்டு நிகழ்வுகளுக்குப் பின்னர், சில அமெரிக்கர்கள் சேர்ந்து கடைத் தெரு(Souk)-க்குப் போனோம். எங்களை சவுதியில் கவனித்துக் கொண்டவர், முன் கூட்டியே அபயாக்களை அனுப்பியிருந்தார். சரியாக அணியும் முறை தெரியாமலேயே, அந்த நீளமான கருப்பு நிற அங்கியை அணிந்து, முக்காடையும் போட்டுக் கொண்டேன். தொடக்கத்தில், அபயா அணிவதின் நன்மைகள் பற்றி வேடிக்கையாக நான் இப்படிக் கற்பனை செய்து கொண்டேன்: தெற்குக் கடற்கரை உணவு இனி தேவையில்லை [உடல் பருமன் குறைய உதவும் ஓர் உணவு முறை, அமெரிக்காவில், குறிப்பாகப் பெண்கள் நடுவே பிரபலமானது – மொ.பெ.] , மேலும் மேலை நாட்டு ஆடை வடிவமைப்பாளர்களுக்கு இனி அடிமையாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், சில மணி நேரத்துக்குப் பின், நான் காணாமல் மறைந்து போனது போல உணர்ந்தேன். நான், அமெரிக்கப் பெண்கள் இயக்கம் நடத்திய ‘அமைதிப் புரட்சி ‘யில் பல ஆண்டுகள் ஈடுபட்டு, என் மகள் தான் விரும்பும் சட்டக் கல்லூரியில் படித்து பின் அவள் விரும்பும் பட்சத்தில் ‘கண்ணாடிக் கூரை ‘களை உடைத்து மேலெழும் வாய்ப்பு பெறுவதற்காக உழைத்திருக்கிறேன் [Glass Ceiling – கண்ணாடிக் கூரை என்பது மேல் நாடுகளில் பண்பாட்டு அல்லது ஆணாதிக்கப் பழக்கவழக்கங்களின் தாக்கத்தால், பெண்கள் நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளில் தலைமைப் பதவிகளுக்கு வரவிடாமல் தடுக்கப்படுவதைக் குறிக்கும் ஒரு குறியீடு. தூர இருந்து பார்க்கும்போது அமைப்புகள் மிகவும் தடைகளற்ற திறந்த வெளி போலத் தோன்றும், கிட்ட நெருங்கி தாண்டிச் செல்ல முயன்றால் தடுக்கும் கண்ணாடிச் சுவர் அல்லது கூரை போன்றவை இந்த நடைமுறைகள் என்பது உட்பொருள் – மொ.பெ.] அவற்றிற்கும் இங்குள்ள பிரச்சினைகளுக்குமம் இடையே வெகு தூரம் இருந்தது. சவுதியின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் நான் ஆழமாக மதிப்பவள் என்றாலும், அபயா அணிந்திருந்தபோது வேறு யாருடைய உலகத்தையோ தொலைவில் இருந்து நோக்கும் செயற்கைக் கோள் போல உணர்ந்தேன். [கட்டுரை ஆசிரியர் satellite என்ற பதத்தை இரு அர்த்தங்களில் பயன்படுத்துகிறார். தமிழில் ‘செயற்கைக் கோள் ‘ என்றால், இது இரட்டை அர்த்தத்தில் தொனிப்பதில்லை. Satellite என்பதில் சக்தியுள்ள ஒருவரின் பின்னால் வால் பிடித்து (அல்லது தன் சக்தி இல்லாது, அவரது சக்தியால்) வெறுமே சுற்றி வரும் ஒரு நபரைக் குறிக்கும் அர்த்தமும் உள்ளது – மொ.பெ.]
பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றிய விவாதத்தின் போதும் சில பேச்சாளர்கள், குறிப்பாகப் பெண்கள், சவுதி சமூகத்தில் மாறிவரும் பெண்களின் பங்கு பற்றி வெளிப்படையாகப் பேசினர். சவுதியின் தனியார் பெருநிறுவனத் தலைவர் ஓலயன், ‘மாறுதல் இல்லாமலே முன்னேறுவது என்ற தத்துவத்தைக் கைவிட வேண்டும் ‘ என்று மாநாட்டில் கலந்து கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் துணிச்சலாக வற்புறுத்தினார். இதன் பொருள், மாற்றம் குறித்து எதுவும் செயல்படாமல் வெறுமனே பேசிக் கொண்டிருப்பதைக் கைவிட வேண்டும் என்பதே. மேலும் அவர், ஒரு நபருடைய உறவுகள் மற்றும் குடும்பத்தைக் கணக்கிலெடுக்காது, திறமை மற்றும் தகுதி அடிப்படைகளை வைத்துக் கட்டப்படும் வணிகப் பொருளாதாரம் மலர வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். ‘சவுதி அரேபியா முன்னேற வேண்டும் என நாம் விரும்பினால், மாற்றங்களை ஏற்றுக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை ‘, என்ற அவர், ‘நமது அடிப்படையான இஸ்லாமிய விழுமியங்களைப் பாதுகாக்கும் விதத்தில் இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் ‘ என்றும் அழுத்திச் சொன்னார்.
பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட ஒரு கலந்துரையாடலில், சவுதியின் பெரும் எண்ணெய் நிறுவனமான ஆராம்கோவின் திட்டமிடல் ஆலோசகர் துரய்யா அர்ரயெத், பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க, ‘பெண்களுக்குச் சரியான பயிற்சி தருவதும், வேலை வாய்ப்பு அளிப்பதும் அவசியம் ‘ என்றார்.
ரியாத்தில் உள்ள அரசர் ஃபய்ஸல் சிறப்பு மருத்துவமனையின் கண் சிகிச்சைத் துறையின் தலைவரான ஸெல்வா அல்-ஹட்ஜா (பெண்), பெண்கள் வாகனங்களை ஓட்டுவது பற்றிய ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில், ஒரு பெண் வாகனம் ஓட்டுவதைக் காண சமூகம் தயாராக இல்லை என்று தனக்குத் தோன்றுவதாகச் சொன்னார். இதை மறுத்த அர்ரயெத், ‘உங்கள் மகளை ஓர் ஓட்டுனராகப் பார்க்க நீங்கள் விரும்பாமல் இருக்கலாம், பிறரைத் தடுக்காதீர்கள் ‘ என்று பலத்த கை தட்டல்களிடையே அறிவுறுத்தினார்.
நான் வியக்குமளவு, பெரும்பாலான சவுதி அரசு அதிகாரிகள், வணிகப் பெருந்தலைகள், மேலும் மாநாட்டிற்கு வந்த மற்றவர்களை, ஆண் பெண் வித்தியாசமின்றி, அங்கு பங்கெடுத்தவர்கள் அனைவராலும் அணுக முடிந்தது. மேலை நாட்டினருக்கு சிறப்பு மரியாதையே கூட இருந்தது. பேச்சாளர்கள் பேசி முடித்து மேடையை விட்டு இறங்கி வரும் இடம் ஆண்கள் பகுதி என்பதால் அங்கு அமர்ந்திருந்த சில மேலை நாட்டுப் பெண்களுக்கு அவர்களிடம் உரையாடுவது மிகவும் எளிதாக இருந்தது. அதிகார பூர்வமான அமர்வுகளின் போது மட்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. கேள்வி கேட்கும் வாய்ப்பு ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியிலிருந்தவர்களுக்கு மாறி மாறித் தரப்பட்டது. நானோ ஆண்கள் பகுதியில் அமர்ந்திருக்கும் பெண் என்பதால் என்னுடைய கேள்வியை எந்த வகையில் சேர்ப்பது என்பதை மட்டுறுத்துனர்களால் முடிவு செய்ய முடியவில்லை. இறுதி அமர்வின் போதுதான், பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகையில், ஒரு துணிச்சலான ஆண் என்னைச் சுட்டிக் காட்டி, ‘சரி, நீங்கள் கேளுங்கள் ‘ என்றார்.
ஊருக்குத் திரும்பும் போது, விமான நிலையத்தில் வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் செய்தியாளர் ஒருவரிடமிருந்து, இந்த மாநாடு நாடு தழுவிய அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருப்பதை அறிந்து கொண்டோம். சவுதியின் மூத்த இஸ்லாமிய நீதிபதி (mufti) ஒருவர் ‘ஜெத்தா பொருளாதார மாநாட்டில் பெண்கள் வரம்பு மீறி நடந்த ஆபாசக் காட்சிகளை ‘க் கண்டித்தார். ‘இனி ஜெத்தா வரலாறாக மட்டும் இல்லை, ஆனால் மக்களிடையே புழங்கும் பெரும் கதையாகி விட்டது ‘ என்றும் அவர் அறிவித்தார். ஆண்களும் பெண்களும் கலந்து பழகியதையும், ‘கடவுளிட்ட கட்டளையான முக்காட்டை (ஹிஜாப்) அணியாமல் ‘ சில பெண்கள் தோன்றியதையும் கண்டித்த அவர், ‘இத்தகைய நடைமுறைகள் ஏற்படுத்தப் போகும் படுமோசமான பின் விளைவுகள் பற்றியும் நான் எச்சரிக்கிறேன் ‘ என்றதாகச் செய்தி வந்தது. இந்த எச்சரிக்கையின் படி உண்மையாகவே பின் விளைவாகத் தண்டனை கொடுக்கப்படுவது ஒரு சாத்தியம்தானா அல்லது பீதியோடு எப்படியாவது கடந்த காலத்துப் பழக்கங்களைக் கட்டிப் பிடித்து வைக்கும் போக்கா என்பது தெளிவாகவில்லை. ஆனாலும், சவுதி பெண்கள் முழுச் சுதந்திரம் கொண்டவர்களாக இல்லா விட்டாலும், இனி புறக்கணிக்கப் படவே முடியாதவர்களாகப் பொது வெளிக்கு வந்து விட்டார்கள் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. ஜெத்தாவில் இருந்த இந்த மூன்று நாட்களிலும், தொட்டிலை ஆட்டும் அதே கை, உலகை ஆளும் கையாகவும் இருக்கக் கூடும் என்பதை அவர்கள் நிரூபித்தனர்.
நன்றி: ஜனவர் 25, 2004 வாஷிங்டன் போஸ்ட் இதழ்
கட்டுரையாளரின் மின் அஞ்சல்: jbarnett@thebarnettgroup.biz
கட்டுரையாளரைப் பற்றிய விவரங்களுக்கு: http://thebarnettgroup.biz/Judith%20Barnett.htm
aacharakeen@yahoo.com
- சென்ற வாரங்கள் அப்படி… (பரிசோதனை, சோதனை, பரிபோல வேகம், பரி வியாபாரம், வேதனை, சாதனை, நாசம்)
- ஒரு விருதும் நாவல் புனைவிலக்கியமும்
- புதுக்கவிதையின் வழித்தடங்கள்
- சாகித்ய அகாதெமியின் சார்பில் மூன்று நாள் இலக்கிய விமர்சனக் கருத்தரங்கு
- இலக்கியப் பற்றாக்குறை
- சண்டியர் மற்றும் விருமாண்டி – முன்னும் பின்னும் சில பார்வைகள் மற்றும் பதிவுகள்
- எழுத்தாளர் விழா 2004- ஒரு கண்ணோட்டம்
- எமக்குத் தொழில் டுபாக்கூர்
- கடிதங்கள் – ஜனவரி 29,2004
- பெற்றோர் பிள்ளைகள் இடையே தலைமுறை இடைவெளி குறையுமா ?
- பங்களாதேஷ் அரசுகள் தொடர்ந்து நசுக்கும் மதச்சிறுபான்மையினர்
- விருமாண்டி – ஒரு காலப் பார்வை..!
- ஒரு சிறு பத்திரிக்கை வாசகியின் கையறு நிலை
- சொல்வதெப்படியோ
- அன்புடன் இதயம் – 5 – வேங்கூவர் – கனடா
- பாண்டிச்சேரி நாட்கள்!
- சரணாகதி
- தடுத்து விடு
- முத்தம் குறித்த கவிதைகள்
- நம்பிக்கை இழந்துவிட்டேன் நாராயணா..
- இன்னும் காயாமல் கொஞ்சம்!!
- பிலடெல்பியா குறும்பட விழா, 2003-ல் அருண் வைத்யநாதனின் குறும்படம்
- ம(ை)றந்த நிஜங்கள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திமூன்று
- நீலக்கடல் – (தொடர்) அத்தியாயம் -4
- விடியும்!-நாவல்- (33)
- ஒன்னெ ஒன்னு
- வேறொரு சமூகம்
- பொன்னம்மாவுக்குக் கல்யாணம்
- கல்லட்டியல்
- வாரபலன் –
- ஒரு புகைப்படமும், சில சிந்தனைகளும்
- சவுதி அரேபிய அரசியலில் பெண்கள் : ஓர் அனுபவம்
- கரிகாலன்
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -9)
- மறு உயிர்ப்பு
- தமிழ் அமிலம்
- மூன்று கவிதைகள்
- கறுத்த மேகம் வெளுக்கின்றது
- என்னை என்ன
- பெண்கள்
- க்வாண்டம் இடம்-பெயர்த்தல்
- மெக்ஸிகோ நகரைத் தாக்கிய மிகப் பெரும் பூகம்பமும், சுனாமி [Tsunami] கடற்பொங்கு அலைகளும்! [1985]
- எனக்குப் பிடித்த கதைகள் – 96 – பொறாமை என்னும் நெருப்பு – ந.சிதம்பர சுப்ரமணியனின் ‘சசாங்கனின் ஆவி ‘
- அலகிலா விளையாட்டு – ஒரு வாசகனின் பார்வை