முனைவர் சி.சேதுராமன்
Malar.sethu@gmail.com
இறைவனை அடைவதற்குரிய சாதனங்களைச் சமைப்பது அல்லது பக்குவப்படுத்துவது சமயமாகும். சமயம் நமது கண்ணால் காணப்படும் உலகத்தையும், அனுமானத்தால் அறியத் தகுந்த அன்மாவினையும், இறைவனையும் இனிது காட்டும் ஞான ஒளியாகும். மனிதனின் உள நலத்திற்கும், உடல் நலத்தற்கும் உதவும் அமுதம் சமயமாகும். இச்சமயத்தில் இறைவனை அடைவதற்குரிய வழி வகைகளுள் தலையாயதாக விளங்குவது பக்தி உணர்வாகும்.
பக்தி எனும் நல்வழி
சமுதாயம் நல்வழியில் செல்ல பக்தி உணர்வு அவசியமாகிறது. இப்பக்தி எனும் நல்வழியை நம் பெரியோர்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு வகைப்படுத்துவர். இதனை,
“விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்பு மலர் காய் கனிபோல் அன்றோ பராபரமே“
என்று தாயுமானவரும்,
“சன்மார்க்கஞ் சகமார்க்கஞ் சற்புத்திர மார்க்கந்
தாதமார்க்கம் என்றும் சங்கரனை அடையும்
நன்மார்க்கம் நாலவை தாம்“
என்று சிஞான சித்தியாரும் குறிப்பிடுவர்.
சரியை-தாஸமார்க்கம்
சரியை என்பதற்கு ஒழுங்கானவழி நடத்தல் என்பது பொருள். ஆண்டவனாகிய எஜமான்னிடம் நாம் தொண்டாற்றி அவனால்அளிக்கப்படும் பேற்றினைப் பெறுவதற்கு உரியதாதலின் இதனைத் தாஸமார்க்கம் எனக் கூறுவர். இதனை ஆண்டான்-அடிமை எனக் கூறலாம். பக்தி எனும் இந்நல்வழியில் தொண்டு செய்து பேறு பெற்றவர் திருநாவுக்கரசு சுவாமிகளாவார். பெரிய புராணம் இவரது தொண்டைச் சிறப்பித்துக் கூறும்.
கிரியை அல்லது சற்புத்திர மார்க்கம்
இறைவனைத் தந்தை நிலையிலும் அடியவர் தன்னைக் குழந்தை நிலையிலும் வைத்து வழிபடுவது கிரியை எனும் சற்புத்திர மார்க்கமாகும். திருஞான சம்பந்தர் இந்நெறியில் நின்று இறையருள் பெற்றதை பெரியபுராணத்தின் வழி நாம் உணரலாம்.
யோகம் அல்லது சக மார்க்கம்
இறையடியவன் தனது வெளித் தோற்றங்களைத் துறந்து உள்ளடங்கி இறைவனோடு ஒன்றி இறையின்பம் நுகர்தல் யோகம் எனப்படும். இறைவனைத் தோழமையுடன் அணுகி வழிபட்டு இறையருள் பெறுவதே இந்நெறியாகும். இவ்வழியில் நின்றருள் பெற்றவர் சுந்தரமூர்த்தி நாயனார் ஆவார்.
ஞானம் அல்லது சன்மார்க்கம்
இறையடியவன் இறைவனை ஆசிரியராகவும் தன்னைப் பாடம் கேட்கும் மாணவன் நிலையிலும் வைத்து வழிபட்டுஇறையருள் பெறுவது ஞானமார்க்கம் எனப்படும்இந்நெறியில் தொண்டு செய்து இறையருள் பெற்று உயர்ந்ததனை மாணிக்கவாசகர் வரலாறு நமக்குத் தெற்றெனப் புலப்படுத்தும். நம்முன்னோர்கள் இந்நான்கு நெறிகளில் நின்றுஇறையருள் பெற்றதோடு சமுதாயத்திற்கு நல்வழி காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பக்தியும் மனித வளமும்
பரபரப்பான இவ்வியந்திர வாழ்க்கையில் மனிதனின் மனதைப் பக்குவப்படுத்தி அவனின் வாழ்க்கைக்கு வளமூட்டுவதாக அமைந்திலங்குவது பக்தி உணர்வே ஆகும். சமய நல்லுணர்வுகளை மையாக வைத்தே சமுதாயத்தை மேம்பாட்டையச் செய்ய முடியும் என்பார் சுவாமி விவேகானந்தர். அவ்வழிதான் பாரத்த்தை உலகில் உயர்த்தும் ஒப்பற்ற வழியாகும்.
ஆதி முதல் மனித குலத்திற்கு நல்வழிகளைக் காட்டி மனிதன் மனிதனாக வாழ வழி செய்வது இப்பக்தி உணர்வேயாகும். இப்பக்தி உணர்வை நல்லாற்றுப்படுத்துவதன் மூலம் மனிதவள மூலங்களை உயர்நிலை பெறச் செய்யலாம். சமுதாய மேம்பாடும், தனிமனித மேம்பாடும் பக்தி உணர்வினால் வளமுறும் எனலாம்.
சமுதாய மேம்பாடு
சமுதாயம் முன்னேற்றம்அடையுமானல் நாடு முன்னேற்றமடையும். பல நாடு முன்னேற்றம் அடைந்தால் உலகம் முன்னேறும். இவை அனைத்தும் முன்னேற்றம் காணும் வண்ணம் பக்தியை நாம் நன்னெறியில் பயன்படுத்திக் கொள்ளலாம். சமுதாயம் மேன்மையுற பொதுநலச் சிந்தனை வேண்டும். பக்தி உணர்வினால் இப்பொது நலச் சிந்தனையை மக்கள் மனதில் உருவாக்கலாம்.
பொதுநலம்
கல்வி, மருத்துவம், ஆதரவற்றோர் இல்லங்கள், பெண்கள் நலமையங்கள் முதலிய அறநிலையங்களை மடங்களின் வாயிலாக நிறுவி அதன்மூலம் மக்களுக்குத் தொண்டுகளைச் செய்து பக்கதி உணர்வை வளர்க்கலாம்.
கல்வி
கல்வி அழியாத செல்வமாகும். அனதாலேயே வள்ளுவரும் கல்வியை, “கேடில் விழுச்செல்வம்“ என்று குறிப்பிடுகிறார். அறியாமை என்னும் நோயகலவேண்டுமெனில் அறிவாகிய மருந்துதான் தேவையானதாகும். “அறிவால் மக்களுக்குச் செய்யப்படும் உதவியே மிகச் சிறந்த உதவியாகும். உணவு, உடைகளால் செய்யப்படும் உதவியைக் காட்டிலும் மேலானது. ஏனென்றால் ஒருவனுடைய உண்மையான வாழ்க்கை அறிவால் மட்டுமே அமைந்துள்ளது. அறிவுதான் வாழ்வு. அறியாமை மரண அறிவின் ஒளி இல்லாமல் அறியாமையிலும் இருளிலும் மூழ்கி வாழ்கின்ற வாழ்க்கை பயனற்ற வாழ்க்கை“ என்கிறார் பாரதத்தின் ஞான ஒளியாம் விவேகானந்தர்(கர்மயோகம், ப., 4).
சமய அறிவினை ஆலயங்களின் வழி கொடுத்து வாழ்க்கையின் உண்மையினை மக்கள் உணரும் வண்ணம் செய்யலாம். மூட பக்தியினை ஒழிப்பதற்கு இக்கல்வியறிவு மிகவும் அவசியமானதாகும். அறியாமை அகல அகல மக்களை, யாரும் எளிதில் ஏமாற்ற முடியாத நிலை ஏற்படும். ஆலயங்கள் இறைபக்தியுடன், உலகியல் நிலைகளையும் உணர்த்தும் சமுதாய உணர் வுமையங்களாக மாறி சமுதாயக் கடமைகளை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
மருத்துவம்
உடலும் உள்ளமும் ஒன்றையொன்று சார்ந்தவையாகும். நல்ல உடலில் தான் நல்ல தூய்மையான உள்ளம் இருக்க முடியும். தூய பக்தி உணர்வு நல்ல உள்ளத்திலேயே எழ முடியும். இதனை உணர்ந்திருந்த திருமூலர்,
“உடம்பார் அழியின் உயிரால் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவுமாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே“
என்கிறார். பிறருக்கு உடல் பிணிகளை நீக்க மருத்துவநிலையங்களை தனிநபர்அல்லது பலரும் சேர்ந்து ஏற்படுத்தி மக்களின் நோய்களை அகற்றித் தொண்டு செய்து அதன்மூலம் இறைவனை அடையலாம் என மக்கள் உணரும் வண்ணம் பக்தியுணர்வின் வாயிலாகச் செய்தல் வேண்டும்.
மக்கள் தொண்டு
“என்கடன் பணிசெய்து கிடப்பதே“ என்றார் திருநாவுக்கரசர் பெருமான். பிற உயிர்களுக்குத் தொண்டு செய்வதன் மூலம் இறைவனை அடையலாம் என்ற உணர்வைப் பக்தியே மக்களிடம் வளர்க்கிறது. “நடமாடும் தெய்வங்கள் என மக்களை“த் திருமூலர் கூறி அவர்களுக்குச் செய்யும் தொண்டுதான் இறைவனுக்குச் செய்யும் தொண்டு எனக் கூறுகிறார். இதனை, “மக்கள் சேவையே மகேசன் சேவை“ என விவேகானந்தரும் வலியுறுத்தியுள்ளதை நாம் அறியலாம்.
உயிர்களிடத்தில் அன்பு
எல்லா உயிர்களிலும் இறைவன் உறைந்துள்ளான் என்ற உண்மையை பக்தி உணர்வுதான் மக்களுக்கு உணர்த்துகிறது. “இறைவன் அன்பு வடிவமானவன். அவனை அன்பின் மூலமாகத்தான் அடையலாம்“. இக்கருத்தினை,
“எல்லா உயிரும் தம்முயிர்போல் எண்ணி
இரங்கவும் நின் தெயவ அருட்கருணை
செய்யாய் பராபரமே“
என்கிறார் வள்ளலார்.
ஒவ்வொரு உயிரினமும் அதனதன் வடிவத்திலேயே இறைவனைக் காண்கின்றன. அதுபோன்றே மனிதனும் தன் வடிலேயே இறைவனைக் காணுகின்றான். “இறைவனை நாடுகிற நீ அவரை மானுட சொரூபத்தில் அவர் வியாபகமாவது போன்று வேறு எதிலும் வியாபகமாவதில்லை“ என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர் (ஸ்ரீஇராமகிருஷ்ணர் உபதேசம், ப.,169) இவ்வாறு அனைத்தையும் மனிதன் உணரும் வண்ணம் பக்தியுணர்வு செய்கிறது.
அன்பும் ஆண்டவனும்
அன்பு நெறிதான் உலகில் மிகச் சிறந்த நெறி. அன்பு மிக்கார் ஆண்டவனின் மிக அருகில் நிற்பார். “அன்பில்லாதவற்றை அறம் காயும்“ என்பார் திருவள்ளுவர். எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறார். தாயன்புக்கும் குழந்தை அன்புக்கும் உள்ள உறவே ஆண்டவனுக்கும், உயிர்களுக்கும் உள்ள அன்புறவு. அன்பே ஆண்டவன். இதனை,
“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பும் சிவமும் ஒன்றாவது யாரும் அறிகிலார்“
என்கிறார் திருமூலர். இத்தகைய அன்பு நெறியை பத்தி உணர்வின் வாயிலாக மக்களுள்ளத்தில் ஏற்படுத்தி அதன் மூலம் உயிர்களுக்குத் தொண்டு செய்து நாட்டையும் உலகையும் புனித நெறிக்கு இட்டுச் செல்ல்லாம். வன்முறையைக் கைவிட்டு அன்புவழி நடக்கப் பக்திநெறி பெரிதும் கைகொடுக்கிறது.
பொய்நெறியும், மெய்நெறியும்
இன்றைய சூழலில் சிலர் மக்களிடம் காணப்படும் அதீத பக்தி உணர்வைப் பயன்படுத்தி கடவுளின் பெயரால் பொய்கூறி தவறான வழிகளில் மக்களை இட்டுச் செல்கின்றனர். இதனால் உண்மையான பக்திநெறியும் ஐயப்பாட்டிற்கு உரியதாகி விடுகிறது. தெய்வத்தை வசப்படுத்தும் எந்திரக்கலை, தந்திரக்கதை போன்ற பூஜை முறைகளையெல்லாம் கூறி சடங்குகளாக நெறிப்படுத்திக் கொண்டிருப்பவர்களும் கடவுளையும் மெய்நெறியையும் உணராமல் மக்கள் செல்கின்ற நிலையைத் தடுத்து உண்மையான நெறியில் மக்கள் செல்ல சமய ஆச்சார்யர்கள் வழிகாட்டலாம்.
சமய வேடதாரிகள்
இன்று கடவுள் நெறியையும் அறியாது கடவுள் பெயரால் மதுபானங்களைக் கடவுளுக்கும் படைத்துத் தாங்களும் அருந்தி பெண்களின் பக்தி உணர்வைப் பயன்படுத்தியும் அவர்களுக்குத் தீங்கிழைக்கும் போலி வேடதாரிகளைக் கண்டுபிடித்துத் தண்டித்து மேலும் தீய வழியில் செல்லாது நல்ல வழியில் நிறுத்தி அறத்தையம், சமயத்தையும் காப்பது அரசின் கடமையாகும். இதனை,
“மால் கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல் கொண்டு தண்டஞ் செய்வேந்தன் கடனே“
என்கிறார் திருமூலர். உண்மையான பக்தி உணர்வு சமுதாயத்தில் நில பெயச் சமய வேடதாரிகளை ஒழித்தல் வேண்டும்.
தனிமனித மேம்பாடு
தனிமனிதன் மேம்பட்டால்தான் சமுதாயம் மேன்மையுறும். தனிமனிதனைத் தூயவனாக்குவதில் பெரும்பங்கு வகிப்பது பக்தி உணர்வே எனலாம். இன்றையச் சூழலில் தனிமனிதன் தூய உள்ளத்தவனாகத் திகழ்ந்தால் தான் சமுதாயம் தலை நிமிர்ந்து உயர முடியும். சமுதாயப் பார்வை உள்ளவனாகத் தனிமனிதனை பக்தியே மாற்றுகிறது.
மனவளம்
இளைஞர்கள் நல்ல மனதை உடையவர்களாக அமைந்தால்தான் வலிமையான நாடாக நமது நாடு ஆக முடியும். இதனை உணர்ந்தே பாராதி,
“இளைய பாரத்த்தினாய் வா வா வா
எதிரிலா வளத்தினாய் வா வா வா“
எனப் பாடியுள்ளார். மாறி வரும் இன்றையச் சூழ்நிலைகள் இளைஞர்களின் உள்ளத்தை விரக்தியின் கூடாரமாக ஆக்கியுள்ளது. அவர்களை விரக்தியிலிருந்து மீட்கும் உன்னத மருந்தாக இப்பக்தி உணர்வை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
போதை, தீய நெறி, போன்றவற்றிலிருந்து மீள பக்தி இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறது. மனவளமுள்ள இளைஞர்களை நோக்கியே விவேகானந்தர், “எழுமின் விழிமின் விழித்தெழுமின்“ என்றார். கோவில்களில் மனதைப் பண்படுத்தும் மனவளக்கலைப் பயிற்சிகளை இளைஞர்களுக்கு வழங்கி சமுதாயம் மேன்மையடையும் வண்ணம் செய்யலாம்.
மதவெறி
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்“ என்ற உன்னதக் கருத்தினை மக்களின் மனதில் உருவாக்குவது பக்தி உணர்வு ஆகும். மதவெறியைத் தூண்டி இன்று மக்களிடையே மதக் கலவரத்தை ஏற்படுத்தி சுயலாபம் சிலர் தேடுகின்றனர். இதனைப் பக்தி உணர்வால் விரட்டுதல் சுலபமாகும். “மதவெறி பிடித்திருக்கிறவர்கள் அவரவர் மதத்தின் மூலமாகத் தான் ஈசனை அடைய முடியும் என்று விவாதிக்கின்றனர். இந்த மனப்பான்மை பக்தன் ஒருவனுக்கும் பொருந்தாது. பல தரப்பட்ட மார்க்களுள் எந்த மார்க்கத்தின் மூலமாகவும் ஈசனை அடைய முடியும்“ என்கிறார் ஸ்ரீஇராமகிருஷ்ணர்.
பண்பாட்டை வளர்த்தல்
எவ்வளவு கற்றிருந்தாலும் தற்போது படித்தவர்களிடையே பண்பாடு என்பது இன்று குறைந்து வருகின்றது. பெரியவர்களிடமும் பெற்றோர்களிடமும் பண்பாட்டுடன் நடந்து கொள்ளும் முறையினைப் பக்தி உணர்வின் வாயிலாக வளர்க்கலாம். “பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்“ எனக் கலித்தொகை நவில்கிறது. “அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வங்கள்“ என்ற பண்பாட்டுணர்வைப் பக்தி நமக்கு வழங்குகிறது.
கூட்டுப் பிரார்த்தனை மூலம் மக்களிடையே ஒற்றுமையான மனநிலை ஏற்படச் செய்யலாம். மழை வேண்டல், நாட்டில் அமைதி நிலவ வேண்டுதல், பிறர் நோயினின்றும் நீங்க வேண்டுதல் போன்ற சமுதாயப் பண்பாட்டுணர்வை இப்பக்தி உணர்வு மக்களிடையே கொண்டுவர முன்னிற்கிறது. மேலும் பிற மதத்தினருடன் இணக்கத்துடனும், ஒற்றுமையுடனும் நடந்து கொள்ளவும், மதக்கல்வியினைக் கோவில்களின் வாயிலாக வழங்கி அதன் மூலம் மத ஒற்றுமையை வளர்க்கவும் இப்பக்தி நெறி வித்திடுகிறது.
தன்னம்பிக்கையை வளர்த்தல்
தங்களின் மீது நம்பிக்கை குறைந்தவர்களாக இன்றைய இளைஞர்கள் திகழ்கிறார்கள். அவநம்பிக்கையுடன் வாழ்கின்றனர். நல்லெண்ணங்களை அவர்களுடைய மனதில் எழச் செய்தால் நம்பிக்கை எனும் ஒளி இளைஞர்கள் உள்ளத்தில் எழும். இத்தகைய நல்லெண்ணங்களை உருவாக்குவது பக்தி உணர்வு எனலாம். இளைஞர்கள் தங்களது ஆற்றலை அறியாமல் தவறான வழியில் சென்று தீவிரவாதிகளாக மாறும் சூழல் இன்று ஏற்பட்டுள்ளது. இதற்கு இளைஞர்களிடத்தில் காணப்படும் தன்னம்பிக்கை குறைவே காரணம் ஆகும். தன்னம்பிக்கை ஊட்டும் அடியவர்களின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளை சொற்பொழிவாகவோ, நாடகமாகவோ, வரலாற்றுக் கல்வியாகவோ கோவில்களில் அல்லது சமுதாய அறநிலையங்களில் வழங்கி இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றலாம். இதனால் சமுதாயமும் நாடும் வளம் பெறும்.
பக்தியின் பெயரால் மனிதர்களை அடிமைப்படுத்தாமல், துன்புறுத்தாமல், சுரண்டாமல், தூய பக்தி உணர்வை வளர்த்து, தீயதை ஒழித்து, தன்னம்பிக்கையுடன் நாடும், நாமும் முன்னேறி, உலகை அமைதிப் பூங்காவாக மாற்றுவோம். அன்பும், அறமும் பெருகி, சமுதாயம் முன்னேற்றமடைய பக்தி உணர்வை நன்கு பயன்படுத்தி நலமாக அனைவரும் வாழ்வோம். வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!.
- சுதேசி – புதிய தமிழ் வார இதழ்
- சனியின் ஒளிவளையம் நோக்கிய கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் [Christiaan Huygens] (1629-1695)
- கபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள்:
- மூன்றாவது கவிதைத் தொகுதி –
- வெட்சி (சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறை கருத்தரங்க கட்டுரைகளை முன்வைத்து…)
- பரிமளவல்லி பற்றி
- இனிக்கும் கழக இலக்கியம்
- திருப்பூரில் பதியம் இலக்கியக் கூடல்
- அன்புள்ள அய்யனார்—சுந்தர ராமசாமின் கடிதங்கள்
- சிங்கப்பூர்த் தமிழ் இணைய இதழ் ‘தங்கமீன்
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் மூன்றாவது குறுந்திரைப் பயணம் கல்பாக்கம் (கடலூர் கிராமம்)
- இவர்களது எழுத்துமுறை – 9. –இந்திராபார்த்தசாரதி
- அம்ஷன் குமார் நடத்தும் குறும்பட ஆவணப்படங்களுக்கான இருதின பயிற்சிப்பட்டறை
- படைப்பாளி
- கடந்து செல்லும் கணங்கள்…
- குடைக் கம்பிகள் எழுதும் கதைகள் …
- அதிகாரப்பூர்வமாக!
- நீர்க்குமிழி
- நிராகரிப்பு
- மழை வரப்போகிறது இப்போது !
- பச்சைவண்ண சிட்டுக் குருவியின் மனு
- பரிமளவல்லி – 14. மஞ்சள் கேக்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -15
- மொழிவது சுகம்:- தலைவர்களும் மனிதர்களும்
- நினைவுகளின் சுவட்டில் – (54)
- சூடாமணி, இலக்கிய மகுடம் சூடிக்கொண்ட மணி
- ராமச்சந்திர குஹாவின் “இந்திய வரலாறு காந்திக்கு பிறகு ”- விமர்சனம்
- முஹம்மது யூனூஸின் “எனது பர்மா குறிப்புகள்”
- சமுதாய மேம்பாடும் பக்தி உணர்வும்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -21 நடனம் ஆடப் புல்லாங்குழலிசை
- சங்கத் தேய்வு இலக்கியம் – திணைமாலை நூற்றைம்பது.
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) பூரணம் அடைவது கவிதை -34 பாகம் -1
- பெயெரெச்சம்..
- ஏதோவொரு நாள்
- அவன் இவள்…
- அவனும், அவளும்
- பைத்தியக்காரர்களின் உலகம்
- இடம்பெயர்ந்தவர்களின் முகாமிலிருந்து எழுதுகிறேன்
- முள்பாதை 49