சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
சைனாவின் இரண்டாம்
விண்ணுளவி
சந்திரனைச் சுற்றுகிறது !
சில மாதங்கள்
நிலவைச் சுற்றி வந்து
தளத்தில் வீழ்ந்தது
முதல் விண் கப்பல் !
ஆசிய முன்னோடி களாய்ச்
சைனாவின் தீரர் இருவர்
அண்டவெளிப் பயணம் செய்து
விண்வெளியில் நீந்தி
வெற்றி மாலை சூடி
மண்மீது கால் வைத்தார்
மறுபடியும் !
அமெரிக்காவின்
விண்வெளி வீரர்கள் போல்
விண்சிமிழில் ஏறி
வெண்ணிலவைச் சுற்றி வர
முன்னோடிப் பயிற்சிகள் இவை !
நிலவைச் சுற்றி வர
மனிதரிலா விண்ணுளவி இரண்டை
அனுப்பியது சைனா !
இன்னும்
பனிரெண்டு ஆண்டுகளில்
சைனா
பாதம் பதித்திடும்
நிலவின் களத்திலே
நீல் ஆர்ம்ஸ் டிராங் போல !
“சைனாவின் சாங்கி -2 துணைக்கோள் சந்திர தளத்தில் மெதுவாய் இறங்கும் பொறி நுணுக்கத்தையும், சந்திரனுக்கு அப்பால் செல்லும் பயண அனுபவத்தையும் பெற முனையும், விண்ணுளவி விரைவாய்ச் செல்லும் ! நிலவை மிகவும் நெருங்கி தணிவுப் பாதையில் சுற்றிவந்து தெளிவாக ஆராயும்.”
உவு வைரன், சைனாவின் சந்திரச் சுற்றியின் பிரதம டிசைன் திட்ட அதிகாரி (Wu Weiren, Chief Designer, China’s Lunar Orbiter Project)
“சைனா தேசத்தின் நிலவுத் தேடல் திட்டங்கள் ரஷ்ய, அமெரிக்கச் சாதனைகளுக்கு 40 ஆண்டுகள் பிந்தி இருப்பினும், மனித இனத்தின் விண்வெளித் தேடலில் அந்த முயற்சிகள் தேசப் பொறுப்புக்கு தேவையானவை.”
கியான் வைபிங் (சைனாவின் இரண்டாம் விண்ணுளவி பிரதம டிசைனர்)
“பூமியில் உள்ள எரிசக்தி ஹீலியம் -3 இன் கொள்ளளவு 15 டன் என்று மதிப்பிடும் போது, நிலவில் இருக்கும் ஹீலியம் -3 இன் மொத்த அளவு 1 முதல் 5 மில்லியன் டன் என்று கணக்கிடப் படுகிறது. இதை பூமிக்கு எடுத்து வந்து மின்சக்தி ஆக்கினால், சைனாவுக்கு ஓராண்டுத் தேவை 10 டன் ஹீலியம் -3. உலகத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 டன் போதும்.”
ஔயாங் ஸியுவான் (Ouyang Ziyuan) Head of First Phase of Lunar Exploration
“(விண்சிமிழ் சுற்றுவீதியைத் தொட்டதும்) சூரியத் தட்டுகள் (Solar Panels) விரிந்தன. நாங்கள் பூரிப்படைகிறோம் ! தூரத்தில் உளவும் கருவிகள் அனுப்பிய சமிக்கைகள் (Remote-Measuring Singnals) விமானிகளின் இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் போன்ற உடலியக்க அளவுகளை உடனே அறிவித்தன !”
செங்சோவ் -7 விண்சிமிழ்த் தளக் கண்காணிப்பாளர் [செப்டம்பர் 27, 2008]
“பரந்த விண்வெளியில் நமது தாய்நாட்டை நினைத்து நான் பெருமைப் படுகிறேன். . . . தேசத்தின் எல்லா மக்களுக்கும், உலகத்தின் எல்லா மாந்தருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள் !”
ஸை ஸிகாங் – முதல் சைனா விண்வெளி நீச்சல் விமானி (Zhai Zhigang, Chinese Taikonaut)
“அண்டவெளி நீச்சல் இன்று புரிந்தது சைனாவின் விஞ்ஞானத் துறைகளை வலுவாக்கும். எங்கள் மக்கள் தொகை பெரியது ! எங்கள் விஞ்ஞானிகள் நியதிகளில் மேன்மை பெற்றுச் செயற்பாட்டில் குறைந்தவர் (Theoretical not Practical) ! நாங்கள் இன்னும் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா நாடுகளுக்குப் பின்னால்தான் இருக்கிறோம் ! அந்த நாடுகளை எட்டிப் பிடிப்பது எங்களால் இயலாது !”
கவோ கியான் – தகவல் பொறியியல் பட்டதாரி (Cao Qian, Electronics & IT Graduate)
“ராக்கெட் என்ன ஓர் உருளைக் கிழங்கைக் கூடச் சைனா விண்வெளியில் ஏவிட முடியாது.”
மா சேதுங் (1957) – சைனாவின் விடுதலைப் பிதா (Mao Tse-Tung, China Liberator)
(1893-1976)
“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன் தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம். அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் வேண்டும். நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு ஏராளமாய்க் கிடைக்கிறது.”
டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை [ஜனவரி 26, 2008] (International Conference on Aerospace Science & Technologies)
சந்திரனை நோக்கிச் சைனா ஏவும் இரண்டாவது விண்ணுளவி
2010 அக்டோபர் முதல் தேதி ஸிசாங் துணைக்கோள் ஏவு தளத்திலிருந்து (Xichang Satellite Launch Centre – XSLC) சைனாவின் “சாங்கி -2” (Chang’e -2) என்னும் தனது இரண்டாவது விண்ணுளவியைச் சந்திரனை நோக்கி “நீண்ட மார்ச் CZ-3C” (Long-March CZ-3C) ராக்கெட்டில் ஏவியுள்ளது. சாங்கி -2 மிகத் தணிவாக 9 மைல் (15 கி.மீ) உயரத்தில் 6 மாதங்கள் நிலவைச் சுற்றிவந்து தள ஆராய்ச்சிகள் நடத்தும். முதலில் ஏவிய சந்திர விண்ணுளவி “சாங்கி -1” 2007 அக்டோபரில் பயணத்தைத் துவக்கி 16 மாதங்கள் நிலவைச் சுற்றி முடிவில் தளத்தில் விழுந்து நொறுங்கியது. வடிவத்தில் சாங்கி-2 முதலில் பயணம் செய்த சாங்கி -1 விண்ணுளவியைப் போன்றதே ! சாங்கி -1 நிலவை 120 மைல் (200 கி..மீ) உயரத்தில் சுற்றி வந்தது. சாங்கி -2 இன் முக்கியப் பணி : நிலவிலும் நிலவுக்கு அப்பாலும் சென்று புதிய விண்வெளிப் பயண நுணுக்கங்களைச் சோதிப்பது. அடுத்து வரப் போகும் சாங்கி -3 & சாங்கி -4 விண்ணுளவிகள் இறக்கும் தளவூர்திகள் ஊர்ந்து நகரும் இடங்களைத் தீர்மானிப்பது.
தளங்களின் படங்களை புதிய காமிராக்கள் மூலம் கூர்ந்து விளக்கமாகக் காண்பது. தற்போது சாங்கி-2 சந்திரனை நெருங்கி 60 மைல் (100 கி.மீ.) உயரத்தில் அதனைச் சுற்ற ஆரம்பிக்கும். குறிப்பணித் திட்டப்படி சில தினங்களில் விண்ணுளவி மிகத் தணிவான 9 மைல் (15 கி.மீ) உயரத்தில் சுற்றத் துவங்கிச் சந்திர தளத்தைக் கூர்ந்து உளவு செய்யும்.
இந்தியாவும், சைனாவும் 21 ஆம் நூற்றாண்டில் நிலவை நோக்கித் தேடிப் போவதின் உள் நோக்கம் ஹீலியம் -3 எரிசக்தியே. “பூமியில் உள்ள ஹீலியம் -3 இன் கொள்ளளவு 15 டன் என்று மதிப்பிடும் போது, நிலவில் இருக்கும் ஹீலியம் -3 இன் மொத்த அளவு 1 முதல் 5 மில்லியன் டன் என்று கணக்கிடப் படுகிறது. இதை பூமிக்கு எடுத்து வந்து மின்சக்தி ஆக்கினால், சைனாவுக்கு ஓராண்டுத் தேவை 10 டன் ஹீலியம் -3. உலகத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 டன் போதும்.” என்று ஔயாங் ஸியுவான் (Ouyang Ziyuan) (Head of First Phase of Lunar Exploration) கூறுகிறார். அணுப் பிணைவு முறையில் மின்சக்தி உண்டாக்கினால் அமெரிக்காவுக்கு ஓராண்டுத் தேவை 25 டன் ஹீலியம் -3 ! அதாவது பல்லாயிரம் ஆண்டு உலக எரிசக்தி தேவையை நிலவின் ஹீலியம் -3 வாயு பூர்த்தி செய்ய முடியும்.
இரண்டாம் நிலவுப் பயணத் திட்டத்தின் வேறுபாடுகள்
துணைக்கோளைத் தூக்கிச் சென்ற ராக்கெட், விண்ணுளவியை “நிலவைச் சுற்றும் மாற்றுப் பாதையில்” (Trans-Lunar Orbit) விட்டதும் அதன் சூரியத் தட்டுகள் விரிந்து மின்சக்தியை அளித்தன. பூமியைச் சுற்றும் அப்பாதையின் மிகை நீளம் (Apogee) : 230,000 மைல் (380,000 கி.மீ.) குறு நீளம் (Perigee) 120 மைல் (200 கி.மீ.) இந்தப் பாதையில் விண்ணுளவி சென்று 5 நாட்களில் நிலவை அண்டிச் சுற்ற முடியும். முதலில் நிலவுக்குப் பயணம் செய்த சாங்கி -1 நிலவை நெருங்க 12 நாட்கள் எடுத்தன. சாங்கி -2 காமிராவின் கூர்மை நோக்குத் திறன் : 33 அடி (10 மீடர்). சாங்கி -1 கூர்மை நோக்குத் திறன் : 400 அடி (120 மீடர்). 180 அடி (54 மீடர்) உயரமுள்ள ராக்கெட் 345 டன் தூக்கு எடைத் தகுதி உள்ளது. ராக்கெட் சுற்றுப் பாதையில் இடும் எடைத் தகுதி : 4 டன். விண்ணுளவியின் எடை : 2.5 டன். விண்ணுளவிக்கு இட்ட பெயரான “சாங்கி” என்பது சைனாவின் இதிகாச நிலவுக் கடவுள் !
சைனாவின் இரண்டாம் விண்ணுளவி வெண்ணிலவை 6 மாதங்கள் சுற்றி 2013 இல் ஏவப் போகும் சாங்கி -3 ஒரு தளவுளவியோடு இறங்கப் போவதற்கு வேண்டிய தகவலைச் சேமிக்கும். “சைனாவின் சாங்கி -2 துணைக்கோள் சந்திர தளத்தில் மெதுவாய் இறங்கும் பொறி நுணுக்கத்தையும், சந்திரனுக்கு அப்பால் செல்லும் பயண அனுபவத்தையும் பெற முனையும், விண்ணுளவி விரைவாய்ச் செல்லும் ! நிலவை மிகவும் நெருங்கி தணிவுப் பாதையில் சுற்றிவந்து தெளிவாக ஆராயும்.” என்று சைனாவின் சந்திரச் சுற்றியின் பிரதம டிசைன் அதிபர், உவு வைரன் (Wu Weiren, Chief Designer, China’s Lunar Orbiter Project) கூறினார். இந்த இரண்டாம் சாங்கி நிலவுத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கு சுமார் 134 மில்லியன் டாலர் (2010 சைன நாணய மதிப்பு 900 மில்லியன் யுவான்).
இதுவரைச் சைனா சாதித்த விண்வெளிச் சாதனைகள்
1957 ஆம் ஆண்டு ரஷ்யா தனது ஸ்புட்னிக் விண்சிமிழை அண்டவெளியில் முதன்முதல் ஏவி உலகத்தாரைப் பெரு வியப்பில் ஆழ்த்தியது. அது முதல் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவும் விண்வெளிச் சாதனைப் போட்டிகள் அடுத்தடுத்துத் தொடுத்தன. அமெரிக்காவின் முதல் துணைக்கோள் 1958 இல் விண்வெளியில் ஏவப்பட்டது ! இரண்டு வல்லரசுகளும் தமது விஞ்ஞானப் பொறியியற் சாதனைகளைக் காட்டி விண்வெளித் தேடலில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளன !
1969 ஆண்டு ஜூலை 20 இல் அமெரிக்க விண்வெளித் தீரர் நீல் ஆர்ம்ஸ்டிராங் முதன்முதல் வெண்ணிலவில் தடம் வைத்து 20 ஆம் நூற்றாண்டின் அற்புதச் சாதனையாகச் செய்து காட்டினார். அதற்குப் பிறகு 1972 வரை 5 முறை சென்று அமெரிக்க விண்வெளி வீரர் நிலவில் நடந்து தளவூர்தியிலும் சென்று தகவல் சேமித்தார்.
அண்டவெளித் தேடலில் ரஷ்ய, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பங்கீட்டுக்குப் பிறகுச் சைனா வெகு தாமதமாக முனைந்து விண்வெளிப் பயணங்களைத் துவங்கியது. 1958 ஆம் ஆண்டில் சைனா தனது விண்வெளி ஏவுகணைத் தளத்தைக் கோபி பாலைவனத்தில் நிறுவியது. சைனா முதல் துணைக்கோளை அண்டவெளியில் வெற்றிகரமாக 1970 இல் ஏவியது. 1990-2002 ஆண்டுகளில் சைனா “சாங்கி I, II, III & IV” (Chang’e -1, 2, 3, & 4) விண்சிமிழ் பொறித்துறை நுணுக்க விருத்தியை (Shenzhou I to IV Spacecraft Developments) மேற்கொண்டிருந்தது.
2003 அக்டோபரில் சைனா முதல் மனித விண்சிமிழ்ப் பயணக் குறிப்பணியை (Manned Space Mission) மேற்கொண்டு செங்சோவ் -5 மூலம் (Shenzhou V) வெற்றிகரமாகச் செய்து உலகை வியக்க வைத்தது ! இரண்டு ஆண்டுகள் கழித்து 2005 அக்டோபரில் ஸென்ஸாவ் -6 மூலம் இரட்டை விமானிகள் ஓட்டும் விண்சிமிழ் ஏவப்பட்டு பூமியைச் சுற்றி வந்தது. அடுத்து 2007 அக்டோபரில் நிலவை நோக்கி சாங்கி-1 மனிதரற்ற விண்ணூர்தி ஒன்று அனுப்பப் பட்டது ! 2008 செப்டம்பரில் மூவர் அமர்ந்த விண்சிமிழை முதன்முதல் ஏவி சைன விண்வெளி விமானி அண்டவெளியில் 20 நிமிடங்கள் நீச்சல் புரிந்தது ஆசியாவின் முதல் விண்வெளி மைல் கல்லாக ஓங்கி நிற்கிறது.
விண்வெளி நிலையம் அமைக்கச் சைனாவின் திட்டம்
1998 இல் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து கண்காணித்துப் பராமரித்து வரும் அகில நாட்டு விண்வெளி நிலையத்தை (International Space Station) அமைத்துப் பூஜிய ஈர்ப்பு விசையில் புரளும் விண்வெளி விமானிகளை நீண்டகாலப் பயிற்சியில் ஈடுபடுத்தி வருகின்றன. அதன் முக்கிய நோக்கம் 2020 ஆண்டுகளில் விண்வெளி விமானிகள் செவ்வாய்க் கோளுக்குப் பயணம் செய்யும் திட்டங்கள் உருவாகி வருகின்றன. அதற்கு விண்வெளி விமானிகள் போய் மீளக் குறைந்தது 12 அல்லது 16 மாதங்கள் நீடிக்கலாம். சைனா தனது நீண்டகால விண்வெளிப் பயிற்சிக்குத் தனியாகவே ஒரு விண்வெளி நிலையத்தை (China Space Station) அமைக்கத் திட்டமிட்டுள்ளது. அதன் “டியான்காங் -1 (Tiangong -1 Space Module) முதலரங்குச் சட்டத்தைச் சைனா 2011 ஆண்டில் ஏவ முடிவு செய்திருக்கிறது. டியான்காங் என்றால் “தெய்வீக அரண்மனை” (Tiangong = Heavenly Palace) என்று அர்த்தம். அதன் எடை 8.5 டன் இருக்கும். அந்த சுற்றும் அரண்மனையில் விவெளி விமானிகள் பூஜிய ஈர்ப்பு விசையில் நீண்ட காலப் பயிற்சியில் ஈடுபடுவார். சைன விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றி வரும் போது அதன் செங்சோவ் -8 (Shenzhov -8) விண்கப்பல் இணைப்பு / அவிழ்ப்புப் (Docking) பணிகளில் பயிற்சி செய்யும்.
செங்சோவ் என்றால் “தெய்வீகக் கப்பல்” (Divine Vessel) என்று பொருள் ! செங்சோவ் -9 & -10 விண்கப்பலில் இரண்டு அல்லது மூன்று விமானிகள் பயணம் செய்து புதுப் பயணிகள் நுழையவும், பழைய பயணிகள் மீளவும் திட்டங்கள் தயாராகி யு/ள்ளன.
ஆசிய நாடுகள் மறைமுகமாகச் செய்யும் அண்டவெளிப் பந்தயம் !
இந்தியா ஏவிய முதல் துணைக்கோள் ஆரியபட்டா 1975 இல் 300 மைல் உயரத்தில் பூமியை 90 நிமிடங்களுக்கு ஒருமுறைச் சுற்றியது. சந்திரனைச் சுற்றப் போகும் இந்தியாவின் முதல் பேரிச்சைத் திட்டம் 2008 அக்டோபர் 19 ஆம் தேதி நிறைவேற சந்திராயன் -1 விண்சிமிழ்ச் (Chandrayaan-1) சோதனைகள் நடைபெற்றன. அப்பயணத்தில் சந்திராயன் -1 விண்சிமிழ் நிலவுக்கு வெகு அருகில் நீள்வட்டச் சுற்றுவீதியில் சுற்றி வந்து உளவுகள் செய்தது ! அதே சமயம் இந்தியா தன் மூவர்ணக்கொடி வரைந்த சதுரப் பேழை ஒன்றை சந்திர தளத்தில் இறக்கியது ! அந்த விண்வெளிப் பயணத்துக்கு இந்தியாவுக்கு ஆகும் செலவு 91 மில்லியன் டாலர் (4 பில்லியன் ரூபாய்) (2008 நாணய மதிப்பு) என்று தெரிகிறது ! 2016 இல் இந்தியா மனிதர் ஓட்டிப் புவிச் சுற்றும் விண்வெளிப் பயிற்சிக்கு ஜப்பான் திரவ எரிசக்தி ராக்கெட்டை விருத்தி செய்து அதன் முதல் விண்வெளித் திட்டம் 1970 இல் ஆரம்பமானது. 2003 இல் செய்த விண்வெளித் தேடல் முயற்சியில் ராக்கெட் ஏவுதல் பழுதாகித் தோல்வி அடைந்தது ! இறுதியில் 2005 இல் ஜப்பான் அனுப்பிய முதல் துணைக்கோள் வெற்றிகரமாகப் பூமியைச் சுற்றியது.
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ஒருபுறம் மேம்பட்ட விண்வெளித் தேடல்களில் போட்டி இட்டுக் கொண்டுள்ள போது ஆசியாவில் சைனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகள் அண்டவெளிப் பந்தயங்களை மேற்கொண்டிருக்கின்றன. இப்போது சைனா முதல் விண்வெளி நீச்சலைப் புரிந்து ஆசியாவில் தனது முற்போக்கு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் வல்லமையைக் காட்டியுள்ளது !
2017 ஆண்டுக்குள் சைனா நிலவுத் தள மண் மாதிரியை எடுத்து பூமிக்கு மீளும் திட்டத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறது. இறுதியாக 2020 ஆம் ஆண்டில் சைனா தனது பேரிச்சைத் திட்டமான நிலவுத் தளத்தைத் தொடும் மனிதப் பயணத்தை அமெரிக்காவைப் போல் நிறைவேற்ற முற்பட்டுள்ளது. அதே காலத்தில் அமெரிக்காவின் விண்வெளித் தீரர்கள் செவ்வாய்த் தளத்தில் தடம்வைக்கப் பயணம் செய்து அதைச் சுற்றி வருவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது ! ஆசியாவின் மகத்தான விண்வெளி வெற்றியின் போது முரண்பட்ட வாசகம் என்ன வென்றால் சைனாவின் விடுதலைப் பிதா மா சேதுங், “ஓர் உருளைக் கிழங்கைக் கூடச் சைனா விண்வெளியில் ஏவ முடியாது” என்று இகழ்ச்சியாகக் கூறியது !
சைனாவின் விண்வெளி ராக்கெட் நுணுக்கத் தேர்ச்சி
1956 இல் சைனா தனது முதல் ராக்கெட் ஏவுகணை ஆய்வுக் கூடத்தை நிறுவியது. அடுத்து ரஷ்ய உதவியில் சாங்செங் [Changzheng (CZ)] முதல் ராக்கெட்டைச் செய்து முடித்தது. 1970 இல் சைனா தனது முதல் துணைக்கோளை அனுப்பிப் பூமியைச் சுற்ற வைத்து, அவ்விதம் செய்த ஐந்தாம் உலக நாடாகப் போற்றப் பட்டது. 1992 இல் மனிதன் இயக்கும் துணைக்கோளை ஏவி ரகசியமாய்ச் செய்தது. 1995 இல் ஏவும் போது CZ–2E ராக்கெட் ஒன்று வெடித்து 6 பேர் உயிழந்தனர். 1999 நவம்பர் 20 இல் செங்ஸோவ் துணைக்கோள் ஒன்று ஏவப்பட்டு 14 தடவை சுற்றி வந்து பிரச்சனையில் பூமிக்கு மீண்டது ! 2002 ஆம் ஆண்டில் செங்சோவ் -3 ஏவப் பட்டு 108 சுற்றுகள் செய்த பிறகு பூமிக்கு மீண்டது. அதே ஆண்டு டிசம்பர் 29 இல் செங்ஸோவ் -4 ஏவப்பட்டு 2003 ஜனவரி 4 இல் திரும்பியது. 2003 அக்டோபர் 15 இல் செங்ஸோவ் -5 மனிதனோடு முதன்முதல் அனுப்பப் பட்டு 14 முறை பூமியை சுற்றி மீண்டது. அடுத்து 2007 இல் சாங்கி-1 முதன்முதல் நிலவுக்குப் பயணம் செய்து சந்திர தளத்தின் தெளிவான படங்களை அனுப்பியது. 2008 இல் சைனாவின் விண்வெளி விமானிகள் அண்ட வெளி நீச்சலைப் புரிந்தனர். 2010 அக்டோர் முதல் தேதி சாங்கி -2 சந்திரனை நோக்கிச் சென்று அதன் புவியீர்ப்பில் நுழைந்தது. ஆசிய நாடுகள் சைனா, ஜப்பான், இந்தியா மூன்றுக்குள்ளும் விண்வெளித் தேடலில் ஓர் மறைமுகப் பந்தயம் உருவாகி வருவதில் பயன் அடையப் போவது ஆசிய மக்களே !
(தொடரும்)
தகவல்:
Picture Credits: Boston Globe, Christiamn Monitor, Xinhua News Agency & China Daily Reporter, BBC News, The Hindu.
1. BBC News – Chinese Astronaut Walks in Space [Sep 27, 2008]
2. BBC News – China Puts its First Man in Space [Sep 27, 2008]
3. BBC News – China Astronauts Blast into Space [Sep 27, 2008]
4. BBC News – Timeline Space Flights of the World Countries (2005)
5. BBC News What’s Driving China Space Efforts By : Paul Rincon [Sep 27, 2008]
6. BBC News – China Could Reach Moon By 2020 By : Paul Rincon [Sep 27, 2008]
7. BBC News – China Spacecraft Returns to Earth [Sep 27, 2008]
8. Boston Globe : China Stokes National Pride with Celebrated First Spacewalk – Maneuver Tests Nation’s Mastry of Technology, By : Barbara Demick [Sep 28, 2008]
9. Christian Monitors – China First Spacewalk : No Cold-War Race This Time By : Peter Spootts [Sep 25, 2008]
10. The Times of India – India Space Program Will Put Rover on Moon [Sep 19, 2008]
11. Christian Monitor – India Launched its First Satelite (Jan 11, 2007)
12 The Economic Times – Chandrayaan All Set for Moon Mission (Sep 26, 2008]
13. Asiaone – Singapore Firm Offers – Chinese Astronaut Completes Nation’s First Space Walk
[Oct 1, 2008]
14. China Daily Reporter – Shenzhou VII Spacecraft Lauched fir First Spacewalk By : Hu Yinan [Oct 1, 2008]
14 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40810021&format=html
அண்டவெளியில் நீந்திய சைனாவின் முதல் விண்வெளித் தீரர் !
14 (b) http://jayabarathan.wordpress.com/2010/09/10/chandrayaan-2/ (இந்தியாவின் இரண்டாம் நிலவுப் பயணம்)
15 Xinhua News Agency – Lunar Orbiter a Milestone for Space Agency (October 2007)
16 The Hindu -Facts & Figures about China’s Second Lunar Probe Chang’e -2 (Oct 1, 2010)
17 China Launches Second Lunar Probe – Xinhua News Agency (Oct 2, 2010)
18 Daily Galaxy : China Launches Second Moon Mission (October 3, 2010)
19 Four Chinese Lunar Launders Mooted – By : Morris Jones, Australia (Oct 6, 2010)
20 China’s Chang’e-2 Heads for Moon – Xinhua News Agency (October 4, 2010)
21 Beijing Chinese Space Centre- Xinhua News Agency – Lunar Probe & Space Exploration is Chaina’s Duty to Mankind (October 7, 2010)
******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) [October 9, 2010]
http://jayabarathan.wordpress.com/
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 1)
- இவர்களது எழுத்துமுறை -10 வண்ணநிலவன்
- சந்திரனை நோக்கிச் சைனாவின் இரண்டாம் விண்ணுளவி !
- வெளிச்சத்தைத் தேடி – எஸ்.ராமகிருஷ்ணனின் “செகாவின்மீது பனிபெய்கிறது”
- காப்பியங்களில் திருப்பு முனைகள்
- ஓதி எறிந்த சொற்கள் – என். டி. ராஜ்குமாரின் ‘‘பதனீரில் பொங்கும் நிலா வெளிச்சம்’’ கவிதை நூல் பற்றிய கட்டுரை / காலச்சுவடு வெளியீடு
- கண்ணதாசனின் பாடல்களில் சமுதாயப் பார்வை
- பெங்களூருவில் ஹிந்து சமய-சமூகத் தகவல் மையம்
- பால சாகித்திய புரஸ்கார் மற்றும் விருதுகள்
- சொல்புதிது’ இலக்கியவிழா
- புலம் – நூல் வெளியீடும் கருத்தரங்கமும்
- சுதேசி – புதிய தமிழ் வார இதழ்
- தேடாமல் வந்தது.
- மழையில் காலை
- நிசப்தம்
- விலகிப் போனவன்
- அசம்பாவிதம்
- பாவனை
- இன்ப வேரா ,துன்ப போரா ?
- ஓர் இரவு வானம்
- தேவை ஒரு மரணம்…
- விசாரம்
- பரிமளவல்லி 15. ஜெனிவா, இல்லினாய்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -16
- பலி
- கற்றது தமிழ்…
- அடடா
- பலிகேட்கும் தேர்வுகள்
- கானல்
- சகபயணி ஒருவரின் தடங்களில் விரித்துப் போடப்பட்ட முட்கள்
- திருப்பூர் : தற்கொலை நகரம்
- கபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள் – பகுதி – 2
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -22என் நாக்கின் வடிவு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -34 பாகம் -2பூரணம் அடைவது
- விட்டிலாயிராமல் விலகியிரு…
- உயிர் உறை ரகசியம்
- நாவின் நுனியில் உடைந்து தொங்கும் நிமிடங்கள்..
- இரவின் நிழல்
- பயங்கள்
- மழையின் காதலன்
- முள்பாதை 50