ஒளியவன்
– சிறுகதை
இரக்கமற்ற இறந்த காலம் தகித்துக் கொண்டிருக்கும் எண்ணங்களைத் துணைக்குக் கூட்டிக் கொண்டு அவன் இரவில் தனிமையை விசும்பலாக்கிக் கொண்டிருந்தது, அதில் வழியும் கண்ணீரில் இரக்கமில்லாத ஒருத்தியின் இரும்புக் கரம் பற்றி சொற்கள் சிதறிக் கொண்டிருந்தன. அந்த ஊற்று அதன் இரு வருட பயணத்திற்குப் பின் சற்றே வற்றிய ரணமாய் வழிந்துகொண்டிருந்தது. வாழ்க்கைச் சமாதானத்திற்காக ஒரு வெள்ளைத் தாளை எடுத்து எழுதிக் கொண்டிருந்தான்…
அன்புள்ள அம்மா,
இரண்டு வருட காலமாக நான் உன்னிடம் இருந்த எல்லா இணைப்புகளையும் துண்டித்துக் கொண்டிருக்கிறேன். இந்த மடல் உனக்கு அதிர்ச்சியையோ மகிழ்ச்சியையோ கொடுக்கலாம். உன்னைப் பற்றி நான் ஊர்க்காரர்கள் சிலரிடம் கேட்டுக் கொள்வதோடு சரி. என் இதயத்துக்குள் ஒளிந்திருக்கும் சோகங்களைப் பகிர்ந்து கொள்ள உன்னை விட்டால் எனக்கு வேறு யாருமே இல்லையென்றாலும், உனக்கு எனது சோகம் வயதுக் கோளாறாக தோன்றியிருக்கக் கூடும். வலி கொடியதாயினும் அந்த சோகத்திற்கு பின்பு கிடக்கும் எனது உணர்வுகளின் ஈரம் இன்னும் காய்ந்துவிடவில்லை.
இந்த பூமியின் எத்தனையோ காதல்களில் எனதும் ஒன்று. அவள் பேச்சுக்களெல்லாம் குழந்தைத்தனமானது என எண்ணிக்கொள்வேன், அவள் ஒவ்வொரு முறையும் விபரீதமாக ஏதோவொன்றைச் செய்துவிடும்போதும் அல்லது சொல்லி விடும்போதும். அவளின் அந்தத் தன்மையே என்னை அவளின் உணர்வுகளுக்கு அருகே அழைத்துச் சென்றது. ஆம், அவளைச் சீர்படுத்தத் துணிந்து என்னைப் பாழ்படுத்திக் கொண்டேன். அவள் என்னை விட்டு பிரிய ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாய் என் உயிரை உறிய ஆரம்பித்தாள். அவளின் போக்கு இந்த முறை குழந்தைத் தனமானதாய் தெரியவில்லை, அது திட்டமிட்டதாய் தெரிந்தது. அவளின் இதயத்தில் எனக்கான ஒரு ஊசி முனையிடமும் ஒதுக்காததை உறுதி செய்தபடி இருந்தன அவள் செயல்கள். போகட்டும்… அவள் போன வழியே பழகிய நாயைப் போல சென்று கொண்டிருந்த மனது சற்று தூரத்தில் அவள் சுவடின்றி வந்த வழியே திரும்பி வந்து கொண்டிருந்தது. நீ கூட பார்த்திராத நான், ஏன் நான் கூட பார்த்திராத என்னைப் பார்த்தேன். அது என்னிடமிருந்து விலகியே நின்றது. என்னை விட்டு விலகி நிற்கும் என்னைப் பற்றிய சோகத்தில் மது ஒன்றே உணர்வுப் பாலமாய் இருந்தது. எனக்குப் பொழுதுபோக்காய் இணையம் அமைந்தது. ஆமாம் எனது நத்தை நகரலான நரக நேரங்களின் பொழுதுகளை நான் போக்கத்தான் வேண்டியிருந்தது. தமிழில் எழுதப்பட்ட அனைத்து காதல் தோல்வி கவிதைகளும் மனப்பாடமே ஆகிவிட்டது ஒரு சமயம். நானும் எழுதினேன் அவளுடன் பகிர்ந்து கொண்ட நாட்களின் வாசத்தையும் மோசத்தையும் விரல் முனை வழியே இணையத்தில். வாசித்தவர்கள் பாராட்டினார்கள், அதில் ஓடிக் கொண்டிருக்கும் வலி அறியாமல்.
யாருமற்ற அநாதையாய் தெரியும் நிலவினருகே நட்சத்திரம் ஒன்று பிரகாசமாகத் தெரிந்தது, அதை சிந்தித்துக் கொண்டே இருந்த பொழுது முகம் தெரியாத ஒரு பெண்ணிடமிருந்து எனக்கொரு மின்மடல், எனது படைப்புகளைப் பாராட்டி… ஏனோ தெரியவில்லை அந்த மடலுக்கு எனக்கு பதிலனுப்பத் தோன்றிற்று. அனுப்பினேன்… என் கசந்து போன வாழ்க்கையை வார்த்தைகளிலே ஏற்றுவதைத் தடுக்க முடியாமல் தோற்றுக் கொண்டே சென்றன அவளுக்கெழுதிய என் மடலின் சொற்கள். அவளும் அதை தேற்றும் விதமாக பதிலளித்தாள். அந்த பதில் எனக்குப் பிடிக்கவில்லை, எனது சோகத்தில் விளைந்த கர்வம் அதைப் பார்த்து எக்காளமாய்ச் சிரிக்கச் சொன்னது எனது உலர்ந்துகிடக்கும் உதடுகளை. எங்கள் மின்னஞ்சல் பயணம் சில மாதம் தொடர்ந்தது. வளர்ந்த குழந்தை தொட்டிலை விட்டு மெத்தைக்குத் தாவுவது போல் எங்களது வளர்ந்த பேச்சு மின்மடலை விட்டு மின்னரட்டைக்குத் தாவியது.
எந்த உறவைச் சொல்லியும் வளராத பேச்சு அது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பேச்சு அது. ஏனோ எனது எல்லா இரகசியங்களையும் அவளிடம் அம்பலப்படுத்தினேன், நீ சின்ன வயதில் என்னை அம்மணமாக நிறுத்தி அடித்தது முதற்கொண்டு. அவள் உம் கொட்ட மறந்ததேயில்லை. அவளுடைய அனுபவங்கள் சில சொல்வாள், நான் நினைத்துக் கொள்வேன் அவளது சொற்களைப் போலவே அவளும் குட்டையானவளோ என்று… ஆள் வேண்டுமெனின் குட்டையாக இருக்கலாம், ஆனால் அவள் எண்ணங்கள் குட்டையல்ல அது பாயும் நதி. அதில் ஒரு பரிசலில் பயணித்தேன், அதுவும் அவள் தந்த நம்பிக்கைப் பரிசலில்.
எனக்குள் அவள் மீதான ஈர்ப்பு அதிகரித்தது. என்னை விட அறிவாளியான அவளிடம் தோற்று மண்டியிட்டது என் நட்பு, அவள் பாதங்களைச் சரணடைந்த போது அது காதலாக பரிணமித்திருந்தது. அவளிடம் மனம் விட்டுக் கேட்டேன், என்னை இவ்வளவு தூரம் கரை சேர்த்த நீ வாழ்க்கை முழுதும் துணை வருவாயா என்று. அவள் ஒரு சிரிப்பானை மின்னரட்டையில் பதித்தாள். அதற்கான அர்த்தம் எனக்கு எட்டவில்லை. ஆனால் மறுபடி ஒரு முறை தோல்வியைச் சந்தித்தாலும் அதைத் தாங்கிக் கொள்ளும் வலிமையைக் கொண்டிருந்தேன், அதுவும் அவளளித்த பரிசு. நாங்கள் சந்திக்கும் தேதி முடிவானது.
சவரம் செய்தேன், இரண்டு வருடங்கள் கழித்து சற்று அலங்காரத்தைக் கண்டது எனது முகம். அவளைப் பார்த்தேன். எனக்கு முன்னரே வந்து அமர்ந்திருந்தாள் நான் சொன்ன அதே பூங்காவில், அதே இருக்கையில்…. அங்கே சென்றதும் என்னிடம் ஒரு துண்டுக் கடிதம் கொடுத்தாள். “என்ன மின்னரட்டைப் பழக்கம் போகவில்லையோ” என சிரித்துக் கொண்டே சொன்னேன், அப்படியே அவள் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். வாங்கி வாசித்தேன். தான் ஊமையென்றும், நான் ஒரு ஊமையை மணக்கவே ஆசைப்படுகிறேன் என்றும், அவளுக்கு என்னை விட ஒரு வயது மூப்பு என்றும் எழுதியிருந்தது. நான் பேச ஆரம்பித்தேன் கண்கள் வழியாக கண்ணீரின் துணை கொண்டு, வாய் பேச முடியாது ஊமையானேன். அவளைச் சம்மதிக்க வைத்து விட்டேன். உன்னைப் போல ஒரு தாயாக அவளிருப்பாள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. என்னை நீ இன்னும் நேசித்துக் கொண்டுதான் இருப்பாய். இந்த மடல் உனது கையில் கிடைத்த பிறகு அவளோடு நான் அங்கே இருப்பேன்.
அன்புடன்,
உன் பிள்ளை.
–
—
http://groups.google.co.in/group/oliyavan
எனது கவிதை, கதை, படக் குழுமம். விருப்பமிருந்தால் இணைந்து கொள்ளலாம்.
தோழமையுடன்,
ஒளியவன்
http://oliyavan-kavithaikal.blogspot.com/
http://oliyavan-baskar.blogspot.com/
http://oliyavan-sirukathaigal.blogspot.com/
http://olipadam.blogspot.com/
http://theneerneram.blogspot.com/
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 4 (காபா ஆலயத்தின் தூண்கள் மற்றும் கறுப்புக் கல்)
- வாழ்க ஜனநாயகம் !
- நவீன தமிழ் இலக்கிய கருத்தரங்கம்
- நர்கிஸ் – மல்லாரி சிறுகதை/ கவிதை போட்டி
- விரைவில் வெளிவரவிருக்கும் கூர் 2009
- நவீனத்தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் நூல்கள் அறிமுகம்
- கடிதம்
- விமர்சனக் கடிதம் – 2
- மெட்ரோ பட்டாம்பூச்சி கே ஆர் மணி கவிதைகள் – முன்னுரை
- சங்கச் சுரங்கம் – 17: குருதிப் பூ
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! பூமியின் காந்தத் துருவங்கள் திசை மாறுமா ?(கட்டுரை: 59)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதலில் ஏகாந்தம் >> கவிதை -10 பாகம் -2
- ஆதமி
- பனித்துளி புகட்டிடும் பாடம்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -39 உன் விழிகள் என் கொடி உயர்த்தும்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தெட்டு
- செத்தும் கிழித்த கமலா சுரையா
- நினைவுகளின் தடத்தில் – (32)
- விளம்பர இடைவேளைகள்
- வார்த்தை ஜூன் 2009 இதழில்
- சத்தமின்றிப் பூக்கும் பூ
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஆறாவது அத்தியாயம்
- மூன்றாவது நாற்காலியின் வெற்றிடம்
- தகவல்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -5
- அப்பா
- முட்டர்பாஸ் Mutterpass