சங்கச் சுரங்கம் – 3 : குப்பைக் கோழி

This entry is part [part not set] of 30 in the series 20090219_Issue

சு. பசுபதி, கனடா



” சார், படம் பார்த்துவிட்டு மனசு ஒரே ‘பேஜாராய்’ இருக்கிறது . இன்றைக்கு நான் வகுப்பிற்கு
வரவில்லை” என்று தொலைபேசினான் ராஜு. எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ராஜு என் மிக நெருங்கிய நண்பரின் மகன். தந்தையோ ஒரு பெரும் தமிழ் அறிஞர். தவப் புதல்வனோ
திரைப்பட மோகக்கடலில் மூழ்கிய ஓர் ‘ஆழ்வார்’. எப்படியாவது அவனுக்குத் தமிழில் ஆர்வம் வரச்
செய்யவேண்டும் என்பது என் நண்பரின் அன்புக் கட்டளை. அதனால், வாரம் ஒரு முறை,
ராஜுவிற்கு ஒரு தமிழ் வகுப்பு எடுத்து வந்தேன்.

” ராஜு, என்னடா, குண்டைப் போடறே? என்ன சமாச்சாரம்?” என்றேன். ” எப்படி, சார், அந்தப் பையனைச் ‘சேரிநாய்’ன்னு கூப்பிடலாம்? எனக்கு ஒரே வருத்தம், கோபம், சார்” என்றான். முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் , அவன் அண்மையில் வெளிவந்த ‘ஸ்லம்டாக் மில்லியனேர்’ என்ற ஆங்கிலப் படத்தைப் பற்றிப் பேசுகிறான் என்று புரிந்தது.

நான் சொன்னேன், ” இதோ, பார், இதெற்கெல்லாம் நீ வருத்தப் படக் கூடாது. சங்கப் புலவர் ஒருவர் இருந்தார். அவரை இன்றுவரை எல்லோரும் ‘குப்பைக் கோழி’ என்றுதான் கூப்பிடுகிறார்கள். அது உனக்குத் தெரியுமா? நீ வீட்டிற்கு வா! அவருடைய பாடலையும், ஏன் அவரை அப்படிக் கூப்பிடுகிறோம் என்றும் சொல்கிறேன். மேலும், இன்றைக்கு மாமி அடை, அவியல் வேறு பண்ணப் போகிறாள்.” என்றேன். நான் சொன்னதில் எது வேலை செய்ததோ தெரியாது; அரை மணிக்குப் பிறகு ராஜூ என் வீட்டில் ‘டாண்’ணென்று ஆஜர்.

அவனுக்குச் சொன்ன பாடலை உங்களுக்கும் சொல்கிறேன், சரியா?

தம் மகளுக்குக் காதல் நோய் என்று யூகித்த பெற்றோர் அவளை வீட்டிற்கு வெளியே அனுப்பவில்லை. வீட்டிலே அடைந்து கிடந்த மங்கையும், காதலனாவது மணத்திற்கு ஏதேனும் முயற்சிகள் செய்ய மாட்டானா என்று ஏங்கி , ஏங்கி, எதிர்பார்த்து ஏமாறுகிறாள்; பிறகு தோழியிடம் புலம்புகிறாள்.

” தலைவரைக் கண்ட கண்கள் எனக்குக் கொடுத்த காதல் தீ என் எலும்பையும் தாக்கி வருத்துகிறது. இருப்பினும் , நாம் அவரைப் போய்ப் பார்க்கும் நிலையில் இல்லை. அவராவது
வந்து நம் துன்பத்தைக் களைந்தாரா என்றால், அதுவும் இல்லை. இந்த நிலையில், என் காம நோய் பிறர் ஏவிவிடாமலும், இடையில் எவரும் பிரித்து விடாமலும் , தாமே சண்டை போடும் குப்பைக் கோழிகளின் போரைப் போல் உள்ளது. தானே அழியும் வகையில் அழிந்தாலன்றி, இந்த நோயைக் களைபவர் யாரும் இல்லை ” என்கிறாள் தலைவி .

கண் தர வந்த காம ஒள் எரி
என்பு உற நலியினும், அவரொடு பேணிச்
சென்று, நாம் முயங்கற்கு அருங் காட்சியமே;
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே;
உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார்
குப்பைக் கோழித் தனிப் போர் போல,
விளிவாங்கு விளியின் அல்லது,
களைவோர் இலை — யான் உற்ற நோயே. ( குறுந்தோகை, 305 )

[ என்பு – எலும்பு , அருங்காட்சியம் – காட்சி அரியம், காணமுடியாத நிலையில் உள்ளோம் , அஞர் – துன்பம் , ஆற்றலர் – செய்யமாட்டார், உய்த்தனர் விடாஅர் – செலுத்தி விடார் , விளிவாங்கு – அழியும் வகையில் ]

குப்பைக் கோழிகளின் தனிப்போரைக் காதல் நோய்க்கு உவமையாக அழகாக, மிக தனித்துவத்துடன் சொன்னதால் இந்தப் புலவர் ‘குப்பைக் கோழியார்’ என்றே அறியப் படுகிறார்.

“‘ஏன், சார், தமிழ்ப் படத்தில் நான் பார்த்திருக்கிறேனே? அந்த ‘சண்டைக் கோழி’கள்
போர்தானே? இதில் என்ன, சார், பெரிய விசேஷம்? ” என்றான் ராஜு.

” ராஜு, அதுதான் இல்லை. பொதுவில் சண்டைக் கோழிகளை சண்டைக்கென்றே யாராவது வளர்ப்பார்கள். போரைத் தொடங்குமுன் , அவற்றை உசுப்பிவிட்டு ஏவிவிடுவார்கள். இது மக்கள் கூட்டத்தின் நடுவில் நடக்கும். வேண்டுமானால், சண்டையை நடுவில் நிறுத்தவும் செய்வார்கள்.
இது எஜமானர்கள் ஏவி, இரண்டு வேலைக்காரர்கள் செய்யும் சண்டை போல. போரைத் தொடங்குவதொ, முடிப்பதோ இரண்டும் ‘அடிமைக்’ கோழிகளின் கைகளில் இல்லை.ஆனால் இந்தக் ‘குப்பைக் கோழி’ப் போர் அப்படி இல்லை. இது தனிமையில் , அவர்களாகவே விரும்பி நடத்தும் போர். வேறு யாரும் தூண்டவும் இல்லை, யாரும் இவற்றின் போரை நிறுத்தவும் மாட்டார்கள். யாரும் பார்த்துக் கொண்டும் இருக்க மாட்டார்கள். இது ஒரு துவந்த யுத்தம்! சண்டை தொடங்கிவிட்டால், வெற்றி தோல்வியில் தான் போர் முடியும். அதே மாதிரி, தலைவியின் காதல் நோய்க்கு ஒரே மருந்து காதலன் வந்து அவளை மணமுடித்தலே. திருமணம் இல்லையென்றால் அழிவுதான் ஒரே முடிவு. ”

ராஜுவிற்குப் பாடல் பிடித்திருந்தது. பாடலை ஒரு மெட்டில் முணுமுணுத்துக் கொண்டே போனான்.
அடுத்த வாரம் வழக்கம் போல அவன் வருகைக்குக் காத்திருந்தேன். தொலைபேசி மணி அடித்தது. வேறு யாரு? ராஜுதான்.

” மன்னிச்சிடுங்க, சார்! அந்தக் குறுந்தொகைப் பாடலின் தாக்கம், சார். ஒரு திரைக் கதை எழுதிக் கொண்டு இருக்கிறேன். இப்போது ஒரு ‘கிளைமாக்ஸ்’ காட்சி .நடுவில் விட்டு வர முடியாது, சார். ஒரு முக்கோண ‘ஷாட்’ . ஒரு கோடியில் ; கதாநாயகி. இன்னோரு கோடியில்; குப்பைக் கோழிகளின் ஆக்ரோஷச் சண்டை. மூன்றாவது கோடியில்: இரண்டு ‘ஹீரோ’க்களின் துவந்த யுத்தம். பின்புலத்தில், ‘குத்துப் பாட்டு’ மெட்டில் ‘குப்பைக் கோழியாரின்’ பாட்டு ரத்தத்தைச் சூடாக்கும்! அட, என் படத்தின் பேரை உங்களுக்குச் சொல்லலையே? ‘ குப்பைக் கோழி கோடீஸ்வரன்’ . தலைப்பிலே எப்படி.. நீங்கள் சொல்லிக் கொடுத்த மோனை துள்ளுது, பார்த்தீங்களா? கதை ஐடியா எப்படி, சும்மா, அதிருது இல்லை? ”

தற்செயலாக அப்போது அறைக்குள் வந்த என் மனைவி கேட்டாள். “ஐயயோ, ஏன் இப்படி உங்கள் தலையில் நீங்களே குட்டிக் கொள்கிறீர்கள்? ” நான் விஷயத்தை விளக்கினேன்.

“ஆமாம், நான் சின்ன வயசில் ஒரு பழமொழியைக் கேட்டிருக்கிறேன். ‘குப்பையும் கோழியும் போலக் குருவும் சீடனும்’ என்பார்கள். அந்தப் பழமொழிக்கு என்ன அர்த்தம்? ” என்றாள் மனைவி.

அவளை கண்களால் சுட்டெரித்தேன்.

~*~o0O0o~*~

pas_jaya@yahoo.ca

Series Navigation

சு. பசுபதி, கனடா

சு. பசுபதி, கனடா