சங்கச் சுரங்கம் – 18 : பட்டினப்பாலை

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

சு. பசுபதி, கனடா



பிரபல இந்தியத் தொழிலதிபர் ‘வி.எம்’ டொராண்டோவிற்கு ஒரு திடீர் விஜயம் செய்திருந்தார்; என் வீட்டில் தான் அவர் தங்கி இருந்தார். சுற்றுலாப் பயணிகள் பலரும் செல்லும் ‘முன்னோர்களின் கிராமம் ’ ( Pioneer village) என்ற ஓர் இடத்திற்கு அவரை அழைத்துப் போகச் சொன்னார். நானும் ‘ஏன்?எதற்கு?’ என்று கேட்காமல் அவரை அழைத்துச் சென்றேன். அந்தத் திடலில் கனடாவின் பழங்குடிகள் எப்படி எப்படி எல்லாம் முன்காலத்தில் வாழ்ந்தார்களோ, அந்தந்த வகைகளில் எல்லா காட்சிகளும் அமைக்கப் பட்டிருந்தன. அங்குப் பணிபுரிவோரும் பழங் கால உடைகள் அணிந்து அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். வீடுகள், தெருக்கள், கிணறுகள், உணவுகள், உடைகள் எல்லாம் தத்ரூபமாகப் பழங் காலத்தைப் பிரதிபலித்தன. வீட்டிற்குத் திரும்பினபின், வி.எம் அந்தக் கிராமத்தைப் பார்க்கத் தான் சென்னையிலிருந்து வந்ததின் உள்நோக்கத்தை விளக்கினார். அவர் சென்னைக் கடற்கரையில் ஓர் இடத்தை விலைக்கு வாங்கி, இம்மாதிரி ஓர் ‘முன்னோர் கிராமம்’ அமைத்து, அதைச் சுற்றுலாப் பயணிகள் மொய்க்கும் ஓர் மிகச் சிறந்த வளாகமாக்க எண்ணுகிறாராம். அதற்காகத் தான் ‘பயனீர் வில்லே’ஜை ஒரு சிறந்த முன்மாதிரியாகக் கருதி அதைப் பார்க்கத் திடீரென்று டொராண்டோவிற்கு வந்தாராம்.

நான் சிரித்தேன். “ அட, இதற்காகவா இவ்வளவு தூரம் வந்தீர்கள்? ஒரு சங்க நூல் இருக்கிறது. அதை நீங்கள் படித்தாலே போதுமானதாக இருந்ததே? அதில் இருக்கிற மாதிரி உங்கள் கிராமத்தை ஜோடனை செய்தால், அமர்க்களமாக இருக்குமே!” என்றேன். வி.எம் அதை பற்றி மேலும் விவரிக்கச் சொன்னார். கரும்பு தின்னக் கூலியா எனக்கு வேண்டும்? நீங்களும் கேட்கிறீர்களா, சொல்கிறேன்!

“ பட்டினப்பாலை என்ற நூல் பத்துப் பாட்டில் ஒன்பதாவது நூல். 301 அடிகள் கொண்ட இந்த நூலைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். இதைக் கேட்டுவிட்டுக் கரிகாற் பெருவளத்தான் என்ற சோழ அரசன் புலவருக்குப் பதினாறு லட்சம் பொன் கொடுத்தான் என்று சொல்வர்; பதினாறு கோடி என்று சொல்வாரும் உண்டு. பொதுவாக, பட்டினம் என்றால் ஒரு துறைமுக நகரைக் குறிக்கும்; இங்கே அது காவிரிப் பூம்பட்டினத்தைக் குறிக்கிறது. காதலரிடையே ஏற்படும் பிரிவைப் பற்றிப் பேசும் அகப்பொருள் திணையைப் ‘பாலை’த் திணை என்பர். பிரிவைப் பற்றிப் பேசுவதாலும், பட்டினத்தின் சிறப்பைப் பற்றி விவரமாகப் பாடுவதாலும் இந்த நூலிற்குப் ‘பட்டினப் பாலை’ என்ற பெயர் ஏற்பட்டது. உண்மையில், காதல், பிரிவு இவற்றைப் பற்றி நூலில் மூன்றே மூன்று அடிகள் தாம் உள்ளன! மற்ற அடிகள் எல்லாம் பூம்புகாரைப் பற்றியும், கரிகாலனைப் பற்றியும் தான்! அதனால், இந்த நூலில் பூம்புகாரைப் பற்றி வரும் அற்புதமான வர்ணனைகள் சிலவற்றை உங்கள் ‘பட்டின’த்தில் அமைத்தால், பிரமாதமாக இருக்கும் ! சில காட்சிகளை மட்டும் வர்ணிக்கிறேன் , கேளுங்கள்!” என்றேன்.

முதல் காட்சி. வீட்டு வாசல் ஒன்றில் நெல் உலர்த்தியிருக்கிறார்கள். பறவைகள் நெல்லை உண்ணாமலிருக்கப் பல இளம் பெண்கள் காவல் இருக்கின்றனர். அப்போது சில கோழிகள் நெல்லை உண்ண வருகின்றன. பெண்களுக்கு என்ன அலுப்போ, சோம்பேறித்தனமோ, தெரியவில்லை! அந்தப் பெண்கள் இடத்தை விட்டு எழுந்திருக்காமலேயே அக்கோழிகளை விரட்ட நினைக்கின்றனர். கையில் கற்கள் ஏதும் கிட்டவில்லை; அதனால் தம் காதுகளில் உள்ள பொற்காதணிகளைக் கழட்டி, அவற்றை வீசி எறிந்து கோழிகளை ஓட்டுகின்றனர்! ( சோழநாடு அவ்வளவு செல்வம் படைத்த நாடு என்கிறார் புலவர்! ) இப்படிப் பெண்கள் வீசி எறிந்த பொற்குழைகள் வீதியெங்கும் கிடக்கின்றன. அந்தத் தெருவில், சில சிறு குழந்தைகள் மூன்று சக்கர மர வண்டிகளை ஓட்டிக் கொண்டு போக முயல்கின்றன. ஆனால், அந்தக் காதணிகள் சக்கரங்களில் மாட்டிக் கொண்டு, வண்டிகள் போக முடியாமல் தடுக்கின்றன!

அகல்நகர் வியல்முற்றத்து
சுடர்நுதல் மடநோக்கின்
நேர்இழை மகளிர் உணங்குஉணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை
பொன்கால் புதல்வர் புரவிஇன்று உருட்டும்
முக்கால் சிறுதேர் முன்வழி விலக்கும்.

[ அகல் நகர் – அகன்ற வீட்டின் : வியல் முற்றத்து – பரந்த முற்றத்தில் , சுடர் நுதல் – ஒளியுடைய நெற்றியையும்; மட நோக்கின் – கள்ளம் கபடற்ற பார்வையையும் ; நேர் இழை மகளிர் – பொருத்தமான நகைகளையும் அணிந்த பெண்கள்; உணங்கு உணா – உலரும் நெல்லை; கவரும் கோழி – உண்ணவரும் கோழியை ( விரட்ட) ; கொடுங்கால் கனம் குழை – வளைந்த, பொன்னால் செய்த தோடுகளை; பொன்கால் புதல்வர் – அழகான கால்கள் உள்ள சிறுவர்; புரவி இன்று உருட்டும் – குதிரைகள் இல்லாமல் கையால் உருட்டி ஓட்டுகின்ற; முக்கால் சிறுதேர் – மூன்று சக்கரங்களையுடைய சிறிய தேர் ; முன்வழி விலக்கும் – முன்னே செல்ல முடியாமல் தடை செய்யும். ]

இன்னொரு காட்சி. புலிச்சின்னம் பொறிக்கப் பட்ட மதிற் கதவுகளின் பின், உணவு சமைக்கும் ‘அட்டிற் சாலைகள்’ உள்ளன. ‘ சோழ நாடு சோறுடைத்து’ அல்லவா? சமைத்த உணவிலிருந்து வடிக்கப் பட்ட கஞ்சியோ வீதியில் ஆறாக ஓடுகிறது. அதைக் குடிக்கப் பல எருதுகள் ஒன்றோடொன்று சண்டை இடுகின்றன. அதனால், மண்ணோடு கலந்து கஞ்சி சேறாகிறது. அப்போது, தெருவில் பல தேர்களும் விரைந்து வருவதால் பெரும் புழுதி எழுகின்றது. அது ஓவியங்கள் தீட்டப் பட்ட அரண்மனைச் சுவர்கள் மீது படிந்து , அச்சுவர்களை அழுக்காக்கிறது. அப்போது அந்த அரண்மனையைப் பார்த்தால், சாம்பலில் புரண்டு எழுந்த யானையைப் போல் இருக்கிறது!

இதைக் கேட்டவுடன் ‘வி.எம்’ மிற்கு ஒரே குஷி. “ பிரமாதம்! என்னால் இந்தக் காட்சியைக் கற்பனை செய்ய முடிகிறது. நான் நிர்மாணிக்கப் போகும் ‘பட்டினத்தில்’ தினமும் மதியம் 12 மணிக்கு தெருவெல்லாம் அதிர , நான்கு குதிரைகள் இழுக்கும் ஒரு ரதம், ‘பென்ஹர்’ படத்தில் வருவதுபோல், பறந்து வரும்! சரியாய் ஒரு வீட்டிற்கு முன் தேர் வரும்போது, வீதியில் ஓர் அண்டாவில் கொண்டுவந்த கஞ்சியைக் கொட்டுவார்கள் சமையற்காரர்கள். தேர் கஞ்சி மீது ஏறி , புழுதியைக் கிளப்பிக் கொண்டு போக…. சபாஷ்! இந்தக் காட்சியைக் காணவே சுற்றுலாப் பயணிகள் வீதியின் இருபக்கமும் மொய்ப்பார்கள்! ” என்றார் .

“ இன்னும் சில காட்சிகளை விவரிக்கிறேன், கேளுங்கள் ” என்றேன்.

சமணப் பள்ளிகளும், வேள்வி புரியும் முனிவரின் ஆசிரமங்களும், காளி கோயிலும் அங்குள்ளன. நகரின் இன்னொரு பக்கம், பரதவர் வசிக்கின்றனர். ஆட்டுக் கடாக்களையும், கௌதாரிகளையும் போர் செய்ய விட்டுப் பார்ப்பர். தாங்களும் பொழுதுபோக்கிற்காகக் கைகளாலும், படைக்கலங்களாலும் சண்டை போடுவர். அவர்கள் பௌர்ணமியன்று ( கடலின் கொந்தளிப்பு அதிகமாக இருக்குமாதலால்) மீன்பிடிக்கச் செல்லாமல், விளையாடி மகிழ்வர். பாவம் போகக் கடலில் குளித்து ஆடியபின், உப்பு நீங்க வேறு நல்ல நீரில் குளிப்பர்.

“ ஆகா! வேள்வி, மல்யுத்தம், வாள்போர், சேவல் சண்டை. . . ” என்று ஆர்ப்பரித்தார் வி.எம்.

“சரி, பட்டினப்பாலையில் வரும் அடுத்த காட்சியைச் சொல்கிறேன். அதையும் அரங்கேற்றுவீர்களா என்று சொல்லுங்கள்! புலவர் இப்போது ‘மாடினி ஷோ’விலிருந்து ‘நைட் ஷோ’விற்குப் போகிறார். இரவுக் காலத்தில் மாடி வீடுகளில் அழகிய மங்கைகள் கள்ளைத் தவிர்த்து விட்டு, வேறு மதுவகைகளைப் பருகுகின்றனர். பட்டாடையைக் களைந்து, அதை விட உயர்ந்த வெண்துகில் உடுத்தி, தம் கணவருடன் கூடி மகிழ்கின்றனர். பாடல் கேட்டும், நாடகம் கண்டும் மகிழ்ந்து கடையாமத்தில் உறங்குகின்றனர்”

“ ஐயா, என்ன விளையாடறீங்களா? ‘செம்ம ஸீன்’தான்..ஆனால், இதை நான் அரங்கேற்றினால் இந்த ‘வி.எம்’முக்குப் ‘பி.எம்’ கிட்ட இருந்தே ஒரு ‘கால்’ வரும்” என்றார் நண்பர்.

சிரித்துவிட்டு நான் தொடர்ந்தேன்.

கடலுக்கு அருகே ஒரு பண்டசாலை. அங்கே ஏற்றுமதியும், இறக்குமதியும் நடைபெறுகின்றன. பொருள்களின் மீது அரச சின்னமான புலிப் பொறியைப் பொறிக்கின்றனர் சுங்கம் கொள்வோர். தெருக்களிலோ பல வகையான கொடிகள். முருகனுக்கும், மற்ற தெய்வங்களுக்கும் விழா எடுக்க வீட்டு வாசல்களில் ஏற்றியிருக்கும் கொடிகள். எந்த பண்டம் விற்கின்றது என்று காட்டும் கொடிகள். பல நூல்கள் கற்ற ஆசிரியர்கள் வாது செய்ய அழைக்கும் கொடிகள். கப்பல்களில் பறக்கும் கொடிகள். ஏன், கள்ளுக் கடையில் கட்டிய கொடிகள். இப்படி எங்கும் ‘ கொடி மயம் ’ !

“ ஆமாம், அங்கே என்ன என்ன பொருள்களை விற்றுக் கொண்டிருந்தனர்? நானும் அதே மாதிரி நிஜமாகவே ஒரு கடை வீதி அமைப்பேனே!” என்றார் வி.எம்.

கடல் வழியாக வந்த குதிரைகள். மிளகு மூட்டைகள். வடமலைகளிலிருந்து வந்த மணிவகைகள், பொன்கட்டிகள். பொதிகை மலையில் விளைந்த சந்தனமும், அகிலும். தென்கடலில் மூழ்கி எடுத்த வெண்முத்துகள். கீழ்கடலில் தோன்றிய செம்பவளங்கள். கங்கை , காவிரி நதிகளில் விளைந்த செல்வங்கள். ஈழ தேசத்து உணவுப் பொருள்கள். கடார( பர்மா . . மியான்மார் ) தேசத்துப் பொருள்கள். இவை யாவும் அங்கே விற்கப் பட்டன.

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகு

[ நிமிர் பரிப் புரவி – நிமிர்ந்துள்ள, விரைந்த நடையுள்ள குதிரைகள் , காலின் வந்த – வண்டியின் மூலம் வந்த, கறி –மிளகு, குடமலை – மேற்கு மலை, ஆரம் – சந்தனம், குணகடல் – கீழ்கடல், துகிர் – பவளம், வாரி –பொருள், காழகம் – கடாரம் (பர்மா), மறுகு – தெரு. ]

“ சரி, சரி, நான் அங்கே ஒரு கடை வீதியை ஏற்படுத்திக் கொடுத்தால், நம் வணிகர்கள் புகுந்து விளையாடி விடுவார்கள் ! ” என்றார் வி.எம்.

“ ஆனால், ஜாக்கிரதை! புகார் நகரத்து வணிகர்கள் மிகவும் நேர்மையானவர் என்கிறார் உருத்திரங் கண்ணனார். நடுநிலை தவறாமல் வியாபாரம் செய்வர்.
அதிகமான விலை சொல்ல மாட்டார்கள்; கொடுக்கும் பண்டத்தின் அளவையும் குறைக்க மாட்டார்கள். லாபம் எவ்வளவு என்பதை வெளிப்படையாகச் சொல்லி விற்பார்கள்.”

“சரி, சரி! எல்லா விஷயத்திலும் அன்று மாதிரி இன்று பண்ண முடியுமா?” என்று இழுத்த வி.எம். “ பூம்புகார் மிகவும் பிரசித்தி பெற்ற நகராக இருந்ததோ?” என்று கேட்டார்.

“ ஆம், அந்தக் காலத்திலேயே தமிழ் நாட்டினர் வேறு பல நாட்டினருடன் வணிக உறவு கொண்டிருந்தனர். அதனால், பல நாடுகளிலிருந்தும் பலமொழிகளைப் பேசுவோர் அங்கு வந்தனர் என்கிறார் புலவர்.

மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்
முட்டாச் சிறப்பின் பட்டினம்

[ தேஎத்து – நாட்டுடைய, முட்டாச் சிறப்பு – அழியாத பெருமை ]

“ ஓ, … அப்படியானால், நான் இந்தப் ‘பட்டின’ வளாகத்தைத் தமிழ் நாட்டில் ஒரு சுற்றுலா இடமாய்க் கட்டி முடித்தபின், நீங்களும் ஒரு ‘புலம் பெயர்ந்த’ தமிழராய் வந்து அதைப் பாருங்கள்” என்றழைத்தார் வி.எம்.

“பார்க்கலாம். ஆனால், பார்க்காமலும் இருக்கலாம்” என்றேன் நான் .

“ ஏன்? ஏன் வரமாட்டீர்கள்?” என்று பதைபதைத்தார் வி.எம்.

“ தன் பாடலில் அன்னிய நாட்டிலிருந்து வந்தவர்களைப் “ புலம் பெயர் ‘மாக்கள்’ ” என்று சொல்லி விட்டாரே புலவர்! அந்த அடியில் ‘மக்கள்’ என்று சொல்லி இருந்தால் நான் நிச்சயமாய் உங்கள் ‘பட்டின’த்திற்கு வருவேன் என்று உறுதிமொழி கொடுத்திருப்பேன்! ” என்றேன்.

~*~o0O0o~*~
s dot pasupathy at yahoo dot ca

Series Navigation

சு. பசுபதி, கனடா

சு. பசுபதி, கனடா