க‌ற்ற‌து த‌மிழ்…

This entry is part [part not set] of 41 in the series 20101010_Issue

ராம்ப்ரசாத்


அந்த ஒண்டுக்குடித்தன வீட்டில், ஓரமாய் முடங்கி இருந்த மேஜையை ஒட்டின நாற்காலியில் முருகன் தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்தான்.இவன் ஒருதலையாய் காதலிக்கும் அடுத்த‌ தெரு மாலதியை பெண் பார்க்க பெரிய இடத்திலிருந்து வந்திருந்தார்கள் என்ற செய்தி தான் அதற்கு காரணம்.

மாலதி பி.ஏ படிக்கிறாள். அதுவும் தமிழில். முருகனிடம் சீனியர் என்கிற முறையில் பேச ஆரம்பித்தது. மாலதி, முருகனின் தமிழ் கவிதைகளின் விசிறி. அப்படியே ஏற்பட்ட நட்பு, முருகனின் மனதில் காதலை விதைத்திருக்கிறது.

தன் காதலை போய் மாலதியிடம் சொல்லிடலாம் தான். ஆனால் எப்படி சொல்வது. அவனுக்கோ வேலைவெட்டி இல்லை. கிராமத்தில் அப்பம் விற்று அம்மா அனுப்பும் தொகையில் தான் இங்கு சென்னையில் இந்த பேசிலர் ரூமில் தங்கிக்கொண்டு அவன் வேலை தேடுகிறான். என்னதான் தமிழில் எம்.ஏ, டிஸ்சிங்சனில் பாஸ் செய்திருந்தாலும், வேலை கிடைப்பதென்னவோ குதிரைக்கொம்பாக இருக்கிறது. எங்கு போய் வேலை கேட்டாலும் துரத்துகிறார்கள். வங்கிகளில் மார்கெட்டிங் துறை இந்த ரெசசனில் படுத்து விட்டது. அதை விட்டால் ஐ.டி துறையில் பி.பி.ஒ வில் தான் வேலை வாய்ப்பு இருக்கிறது. மற்றவை எல்லாம் தற்காலிக வேலைகளே. இங்கிலீசில் சரளமாய் பேச வேண்டுமாம். டிகிரிக்கேற்றார்போல் சம்பளம். ஆனால் பள்ளியிலிருந்தே தமிழ் மீடியத்தில் படித்ததில் ஆங்கிலம் அவ்வளவாக பழகவில்லை. இதில் எங்கிருந்து சரளமாய் பேசுவது, வேலை வாங்குவது, பெண் கேட்பது.

ஏதாவ‌து செய்ய‌ வேண்டும். இத்த‌னை வ‌ருட‌ம் த‌ன்னை க‌ஷ்ட‌ப்ப‌ட்டு படிக்க‌ வைத்த‌ அம்மாவை அவ‌ளின் வ‌ய‌தான‌ கால‌த்திலாவ‌து ந‌ன்றாக‌ வைத்து காப்பாற்ற‌ வேண்டும். தலை நிமிர்ந்து மாலதியிடம் தன் காதலை சொல்ல வேண்டும். மால‌தியின் பெற்றோரிட‌ம் க‌வுர‌வ‌மாய்ப் பெண் கேட்க‌ வேண்டும். இத‌ற்கெல்லாம் தேவை நல்ல சம்பளத்தில் ஒரு வேலை. என்ன‌ செய்ய‌லாம். எப்ப‌டிச் செய்ய‌லாம்.

முருக‌னுக்கு இருப்பு கொள்ள‌வில்லை. ஆண்பிள்ளைக்கு அழ‌காய் ல‌ட்ச‌ண‌மாய் வேலையில் இல்லாம‌ல் இருப்ப‌து அவ‌ன் ம‌ன‌தை பார‌மாய் அழுத்திய‌து. த‌ன் காத‌லை த‌ன‌க்கு சொந்த‌மாக்கிக் கொள்ள‌ முடியாத‌ நிலை அவ‌ன் தூக்க‌த்தை, பசியை விர‌ட்டிய‌து. பெற்று வளர்த்த தாயை காப்பாற்ற இயலாத தன் இயலாமையை கண்டு அவன் மீதே அவனுக்கு வெறுப்பு வந்தது.

விர‌க்தி த‌னிமைப்ப‌டுத்தும். அவ‌னையும் த‌னிமைப்ப‌டுத்தியிருந்த‌து மொட்டை மாடியில். இந்த‌ விர‌க்தியை வாழ்நாளில் ஒருமுறையேனும் ச‌ந்திக்காத‌ ம‌க்க‌ள் யாருமில்லை. கோழைக‌ள் விப‌ரீத‌ முடிவைத் தேடுவார்க‌ள். முருக‌ன் கோழைய‌ல்ல‌. நிதான‌மாய் சிந்தித்தான்.

க‌டின‌மான‌ காரிய‌த்தை முத‌லிலேயே செய்து விட்டால் பின் வ‌ரும் அனைத்துக் சுல‌ப‌மே. க‌டின‌மான‌தும், அதிக‌ ச‌ம்ப‌ள‌ம் கிடைக்க‌ப்பெறுவ‌துமான‌ வேலைக்கு முய‌ற்சி செய்தால்தான், குறைந்த‌ப‌ட்ச‌ வேலையாவ‌து க‌ட்டாய‌ம் கிடைக்கும். அந்த‌ வ‌கையில் பி.பி.ஒ வேலைக‌ள் தான் முத‌லில் வ‌ருகின்ற‌ன‌. பி.பி.ஒ
வேலைவாய்ப்புக்க‌ளில் முக்கால் ச‌த‌வீத‌ம் ஆங்கில‌ப்புல‌மையை சார்ந்தே இருக்கிற‌து. வ‌ள‌ர்த்துக்கொள்ள‌ வேண்டிய‌ திற‌மையும் அதுதான். 216 எழுத்துக்க‌ளைக் கொண்ட‌ த‌மிழைக் க‌ரைத்துக்குடிக்க‌ முடியுமென்றால், அதில் எட்டில் ஒரு ப‌ங்கு ம‌ட்டுமே உள்ள, மொத்த‌மே 26 எழுத்துக்க‌ளை ம‌ட்டுமே கொண்ட‌ ஆங்கில‌ம் எப்ப‌டி ச‌வாலாக‌ இருக்க‌ முடியும். மேலும், தொட‌ர்பு கொள்ளும் எந்த வெளிநாட்ட‌வ‌ரிட‌மும்‌ அதிக‌ம் போனால் ஐந்து நிமிட‌ங்க‌ளுக்கு மேல் பேச‌ வேண்டிய‌ தேவை இராது. ஐந்து நிமிட‌ங்க‌ளில் என்னென்ன‌ பேசிவிட‌ முடியும் என்று சுல‌ப‌மாக‌ க‌ணிக்க‌லாம். அதை, ச‌ப்த‌ம் முத‌ற்கொண்டு ஒரு பாட‌ல் போல ம‌ன‌ப்பாட‌ம் செய்துவிட்டால் வேலை முடிந்த‌து. த‌மிழின் வெண்பா, தொல்காப்பிய‌ம், அக‌நானூறு முத‌லானவ‌ற்றில் உள்ள‌, உச்ச‌ரிக்க‌ க‌டின‌மான‌‌ பாட‌ல்க‌ளையே அடிப்பிற‌ழாம‌ல் ம‌ன‌ப்பாட‌ம் செய்து ஒப்பித்த‌ த‌ன்னால், 26 எழுத்துக்க‌ளில் ஆங்கிலத்தை அவர்கள் எதிர்பார்க்கும் ஸ்டைலில் பேச‌ முடியாதா? நிச்ச‌ய‌ம் முடியும். எந்த‌ வித்தையும் ப‌ழ‌க‌ ப‌ழ‌க‌ வ‌ச‌ப்ப‌டும்.

முருக‌ன் ந‌ம்பிக்கை பூண்டான். பி.பி.ஓ வேலைவாய்ப்புக‌ளுக்கு த‌யார் செய்யும் ஒரு க‌ன்ச‌ல்ட‌ன்சி க‌ம்பெனியை ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்து அனுகி, த‌வ‌ணையில் 3500 ஃபீஸ் க‌ட்டுவ‌தாக‌ச் சொல்லிச் சேர்ந்தான். அங்கு ஆங்கில‌ உச்ச‌ரிப்பு ப‌ழ‌கினான். ஒரு தொலைபேசி உரையாட‌லில் அதிக‌ப‌ட்ச‌ம் என்னென்ன‌ அம்ச‌ங்க‌ள் இருக்குமென்று வ‌கை பிரித்து, ஒவ்வொன்றாய் பேசிப் ப‌ழ‌கினான். வீட்டில் த‌னிமையில் க‌ண்ணாடி முன் அம‌ர்ந்து ஒரு பாட‌ல் போல் சொல்லிப்பார்த்து ப‌ழ‌கினான். அவ‌ன் எதிர்பார்த்த‌தையும் விட‌ ஆங்கில‌ம் மிக‌ சுல‌ப‌மாக‌ வ‌ந்த‌து. த‌மிழின் தொன்மைக்கு முன் ஆங்கில‌ம் எம்மாத்திர‌ம்.

அவ‌ன் முய‌ற்சியை, புத்திசாலித்த‌ன‌மாய், ஒரு தொலைபேசி உரையாட‌லைக் குறிவைத்து, வ‌கை பிரித்து அவ‌ன் அணுகிய‌ முறையை, அதில் காட்டிய‌ க‌டின‌ உழைப்பை, உச்ச‌ரிப்பில் காட்டிய‌ நுணுக்க‌த்தை க‌ன்ச‌ல்ட‌ன்சி வெகுவாக‌ப் பாராட்டிய‌து. அதுவே அவ‌னை ஒரு ந‌ல்ல‌ பி.பி.ஓ க‌ம்பெனிக்கு நேர்காண‌லுக்கு சிபாரிசு செய்த‌து. நேர்காண‌லில் த‌ன் வெற்றியைப்ப‌திவு செய்த‌ முருக‌னுக்கு மாத‌ம் பதினைந்தாயிர‌ம் ச‌ம்ப‌ள‌த்தில் வேலை கொடுத்தது அந்த கம்பெனி. அது த‌விர‌, மெடிக்க‌ல் இன்ஷுர‌ன்ஸ், போக்குவ‌ர‌த்து, திற‌மையாய் வேலை செய்யும் ப‌ட்ச‌த்தில் ஆறு மாத‌த்திற்கொருமுறை ச‌ம்ப‌ள‌ உய‌ர்வும் அளிப்ப‌தாக‌ உறுதிய‌ளிக்க‌ப்ப‌ட்ட‌து.

முருக‌ன் இறைவ‌னுக்கு உள‌மாற‌ ந‌ன்றி சொன்னான். கிராம‌த்திற்கு சென்று அம்மாவிட‌ம் வேலை கிடைத்த‌து ப‌ற்றி சொன்னான். பெற்ற‌வ‌ள் வ‌யிறு குளிர்ந்தாள். ம‌க‌னை உச்சி மோர்ந்தாள். அம்மாவை சென்னைக்கு கூட்டி வ‌ந்து வாட‌கைக்கு வீடு பிடித்து குடிய‌ம‌ர்த்தினான். கேஸ் வ‌ச‌தியும், தவணையில் ஃப்ரிஜ் ம‌ற்றும் வாஷிங்மெஷின் வாங்கி, வ‌ய‌தான‌ அம்மாவிற்கு அதிக‌ வேலையில்லாம‌ல் பார்த்துக்கொண்டான்.

ஒரே ஏரியா என்ப‌தால் மால‌திக்கும், அவ‌ள் வீட்டாருக்கும் விஷ‌ய‌ம் போயிற்று. மால‌தி வீட்டார் முருக‌னைப் பெருமையாய் பேசினார்க‌ள். ஒரு ந‌ல்ல‌ நாளில், மால‌தியிட‌ம் த‌ன் ம‌ன‌ம் திற‌ந்தான் முருக‌ன். மாலதி மெளனமாய் சிரித்து சம்மதம் சொன்னாள். மாலதி மூலமாக அவள் வீடு வ‌ரை விஷ‌ய‌ம் போயிற்று. முருக‌ன் மால‌தியின் ச‌ம்ம‌த‌த்துட‌ன், த‌ன் அம்மாவுட‌ன் மால‌தி வீடு வ‌ந்து பெண் கேட்டான். இரு வீட்டாருக்கும் ச‌ம்ம‌தமாக‌, ஒரு ந‌ல்ல‌ நாளில் மால‌தி முருக‌ன் திரும‌ண‌ம் இனிதே ந‌ட‌ந்த‌து.

சென்னையில், சொந்த‌மாய் வாங்கிய‌ ப்ளாட்டில், கார் வ‌ச‌தியுட‌ன், மால‌தி முருக‌ன் த‌ம்பதியை, நான்கு வ‌ய‌து குழ‌ந்தை ஒன்று, 60 வ‌ய‌துக் குழ‌ந்தை ஒன்றுமாக இரண்டு குழந்தைகளாய் வைத்து அழகு பார்த்தது அடுத்து வந்த ஐந்து வ‌ருட‌ங்க‌ள். முருக‌னின் த‌மிழ்ப்ப‌ற்று, ஐந்து வருட தமிழ் கல்லூரி படிப்பு, அதையும் ஆர்வமுடன் பயின்றது அவ‌னின் டி.என்.ஏ வில் ப‌திந்திருந்த‌து. அந்த‌ நாவ‌ன்மையின் சாரம், அவ‌னின் நான்கு வ‌ய‌துப் பெண், த‌மிழ‌ர‌சியின் நாவில் சேர்ந்திருந்த‌து. த‌மிழ‌ர‌சி, ச‌ங்கீத‌ம் ப‌யின்றாள். முருக‌னின் க‌விதைக‌ளைப் பாட‌ல்க‌ளாக்கி த‌மிழ‌ர‌சிக்கு சொல்லிக்கொடுத்தாள் மால‌தி. த‌மிழ் அந்த வீட்டையே தமிழாக்கியிருந்தது.

Series Navigation

ராம்ப்ரசாத்

ராம்ப்ரசாத்