விக்ரமாதித்யன்
இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே ஓர் ஒழுங்கமைவுக்குள்ளும் ஒழுங்கமைப்புக்குள்ளும் தான் இருந்து கொண்டிருக்கின்றன என்றே எனக்குத் தோன்றிக் கொண்டிருக்கின்றது. இயற்கை, சமூகம், வாழ்க்கை இப்படி எல்லாமே ஓர் ஒழுங்கமைவில் (system) அல்லது ஒழுங்கமைப்பில்தான் இருக்கின்றன. தன்னியல்பில் ஓர் ஒழுங்கு கொண்டிருப்பனவற்றை ஒழுங்கமைவு என்றும் ஏற்படுத்திவைத்திருக்கிற ஓர் ஒழுங்கு கொண்டிருப்பனவற்றை ஒழுங்கமைப்பு என்றும் குறிப்பதாகக் கொள்ளவேண்டும். இரண்டுமே ஒழுங்கின் பிற்பட்டவைதான். அதாவது, சீரானதாகவும் சரியானதாகவும் அமைந்தவை/அமைக்கப்பட்டவை ஆகும். மனிதனும் தவிர்க்கமுடியாதபடிக்கு ஓர் ஒழுங்கமைப்புக்குள்ளேயே இருக்க வேண்டியவனாக இருக்கிறான். இப்படி ஒழுங்கமைவும் ஒழுங்கமைப்பும் கொண்டிருப்பதாலேயே பிரபஞ்சம் அழிந்துவிடாமல் இருக்கிறதென்றும் படுகிறது.
என் வாழ்வனுபவங்களிலிருந்தும் மனவுணர்வுகளிலிருந்தும் தெரிந்து கொண்டதுதான் இது. எப்பொழுதாவது இந்த ஒழுங்கமைவு குலையலாம்; இந்த ஒழுங்கமைப்பு சிதையலாம். மறுபடியும் அது தன்னைப்போல முன் நிலைக்கு வந்துவிடும்; பழையபடி வந்து தானாக வேண்டும். இல்லாதபோது அது அழிவில் கொண்டுபோய்விடும்.
பருவமழை பொய்த்தால் என்ன நடக்கும். கடல் கொந்தளித்தால் என்ன நேரும். தனுஸ்கோடி என்ற ஊரையே நம் காலத்தில்தான் கடல் கொண்டது. வானம் பார்த்த பூமியில் மழை தப்பும் காலம் ஜனங்கள் பஞ்சம் பிழைக்கப் பட்டணக்கரை போகிறார்கள். எப்பொழுதாவது பூகம்பம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகிப் போவதைத் தினசரிகளில் பார்க்கையில் ஒரு கணம் துணுக்குறுகிறோம் தானே. ஜப்பான் மாதிரி நாடுகளில் சமயத்தில் எரிமலை வெடித்து அழிவு நேர்கையில் ஒரு கலக்கம் உண்டாகவில்லையா. புயலும் சூறாவளியும் பயமுறுத்தவில்லையா. இயற்கையின் ஒழுங்கமைவு குலைகையில் என்னென்ன இழப்புகள் சம்பவிக்கின்றன.
மனித வாழ்க்கையும் ஒரு ஒழுங்கமைவுக்குள் தான் இருக்கிறது. நேரத்துக்குப் பசிக்கிறது; தூக்கம் வருகிறது; தாகமெடுக்கிறது. குழந்தைகளாக இருக்கிறோம்; வளர்ந்து ஆளாகிறோம்; திருமணம் செய்து கொள்கிறோம்; வேலைக்குப் போகிறோம்; வீடு திரும்புகிறோம். சலிப்பு ஏற்படும் வேளையில் கேளிக்கைகளில் ஈடுபடுகிறோம். பொழுது போக்கென்று திரைப்படம் பார்க்கிறோம்; சீட்டாடுகிறோம்; குடிக்கிறோம்; மீண்டும் தினசரி வாழ்வுக்கே திரும்புகிறோம். இதெல்லாம் என்ன. இதுபோல ஒழுங்கமைப்புக்குள் இருக்கிறவர்கள்தாம் கோடானுகோடி எளியமக்களும். இந்த ஒழுங்கமைப்பை மீறுகிறவர்கள் என்ன ஆகிறார்கள். இயற்கையின் உற்பாதம் போலவே மனிதர்கள் அலைக்கழிவுகளுக்கு உள்ளாகிறார்கள். ஒழுங்கமைப்பை யாரும் தாண்டிப் போவது தாங்கமுடியாத துன்பத்தில்தான் முடிகிறது. காலங்காலமாக, யுகயுகமாக, எல்லா உயிர்களும் இதற்குள்தான் இருந்து வருகிறார்கள்.
system, ஓர் ஒழுங்கமைவுதான் வாழ்வு. வேறே வழியேயில்லை. இந்த ஒழுங்கமைப்புக்குள்தான் இருந்தாக வேண்டும். திருமணம் என்பது ஓர் ஒழுங்கமைப்பு. வேலை என்பது ஓர் ஒழுங்கமைப்பு; கல்வி என்பது ஓர் ஒழுங்கமைப்பு; குடும்பம் என்பது ஓர் ஒழுங்கமைப்பு; எல்லாமே ஓர் ஒழுங்கமைப்புதான்.
எப்படியும் ஜனங்கள் வீடுதான் திரும்புகிறார்கள்; எப்படியும் பிழைப்புக்கு ஒரு வழி செய்து கொள்கிறார்கள்; எப்படியும் நிம்மதியாக/சந்தோஷமாக வாழவே முற்படுகிறார்கள். சமூகத்தோடு பொருத்திக்கொள்கிறார்கள். இந்த மாதிரி ஒரு ‘சிஸ்டத் ‘துக்குள் இருக்கமுடியாதவர்கள் கதையும் நமக்குத் தெரியும்.
இதையெல்லாம் என் வாழ்விலிருந்தே கண்டுகொண்டேன். எங்கள் அப்பா வழமையான குடும்ப வாழ்க்கையிலிருந்து மீறிப்போய் இன்னொருப்பெண்ணை இணைத்துக் கொண்டு எங்களைக் கவனிக்காதிருந்த பத்து வருஷங்களை இன்று வரை எங்களால் சமனப்படுத்த முடியவில்லை. திரைப்படத்தில் நடிக்க என்று நாற்பது வருஷங்களுக்கு முன்பாக அவர்கள் சென்னைப் போனதில் நாங்கள் எங்கள் சொந்த ஊரான திருநெல்வேலியை முற்றிலுமாக இழந்துப் போனோம். முறையான கல்வி, நல்ல வேலை வாய்ப்பு, இனிய வாழ்க்கை எல்லாமே துண்டிக்கப்பட்டு விட்டன. எங்கள் அம்மாவின் வைராக்கியமும் தைரியமும் முயற்சியும் உழைப்பும் இல்லையென்றால் நாங்கள் உயிர்பிழைத்திருப்போமா என்பதே சந்தேகம் தான். இது எங்கள் அடிமனசில் இன்னும் இருந்துக் கொண்டிருக்கிறது.
எங்கள் பெரியம்மா மகன் அண்ணன் ஒருவர் நாம் தமிழர் இயக்கம், ஆதித்தனார் தொடர்பு என்று அழைந்ததில் அவர் வாழ்க்கை சென்னை பங்களாக்களில் வெள்ளையடிக்கும் தொழிலாளி என்று கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. இவ்வளவுக்கும் அவர் நிரம்ப புத்திசாலி. நல்ல ரசனையுள்ளவர். சத்தியன் நடித்த ‘நீங்கள் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கினீர்கள் ‘, மது நடித்த ‘நதி ‘ இதுமாதிரி நல்ல மலையாளப் படங்களெல்லாம் அவருடன் தான் பார்த்தது. வயலார் பாடல்கள் அவர்மூலம் தான் அறிமுகம்.
உயர்நிலைப் பள்ளியில் படித்த என் நண்பர்கள் சிலபேர் இந்த ஒழுங்கமைப்பை கடந்து குடிகாரர்களாகவும் பேட்டை ரவுடிகளாகவும் சீரழிந்துப் போயிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க நேர்கிறது.
இவ்வளவு எதற்கு. என்னையே சொல்லலாம். பேசாமல் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எழுதி தாலுகா ஆபீஸ் குமாஸ்தாவாகப் போயிருந்தால், செத்தால் கூட குடும்பத்துக்கு ஒரு லட்சம் கிடைக்கும். தராசு, நக்கிரன் பத்திரிக்கைகளில் பஞ்சம் பிழைப்பதற்காகப் போய் பார்த்து வந்த உதவியாசிரியர் வேலையிலேயே இருந்திருந்தால் சென்னை நகரப் பிரமுகர்களில் ஒருவனாகவே வாழ்ந்திருக்கலாம். முதலமைச்சரிலிருந்து தலைமைச் செயலகம் வரையிலும் செல்வாக்குச் செலுத்த முடியும். தமிழ், கவிதை என்றெல்லாம் எடாத எடுப்பெடுத்து இப்படியெல்லாம் அவஸ்தைப் படும்படி ஆகியிருக்காது.
யாரால் ஜி.நாகராஜன், மணிக்கண்ணன் மாதிரி வாழமுடியும். முடியாது/வேண்டாமென்றுதான் பத்து முதல் ஐந்து வரை ஏதோ ஒரு நிறுவனத்துக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். ஓய்ந்த நேரங்களில் இலக்கியம் செய்கிறார்கள். இது என்னது. ‘சிஸ்டம் ‘. இலக்கியம் சோறு போடாது என்று தெரிந்து இந்த ஒழுங்கமைப்புக்குள் பத்திரமாக இருக்க விரும்பி இருந்துக் கொண்டு இருக்கிறார்கள். பாதுகாப்பாக இருக்க விழைவதே மனித இயல்பு. சஞ்சலம் இல்லாமல் வாழ ஆசைப்படுவதே முறையானது. ‘சிஸ்டம் ‘ தான் சவுகரியம் என்றே தெரிவு செய்துக் கொண்டிருக்கிறது மனித மனம்/மனித சமூகம். இதில் யார் விதிவிலக்காக விரும்புவார்கள். விலகி வந்து வில்லங்கப்பட சம்மதிப்பார்கள்.
தமிழைப் பொருத்தவரையில் எல்லோருமே முப்பது வயசுக்குள்ளேயே இந்த ஒழுங்கமைப்பை ஏற்றுக்கொள்கிறவர்களாகவே இருக்கிறார்கள். எந்தக் கவிஞன் குடித்துவிட்டு வீடு திரும்பாமல் இருக்கிறான். எந்தக் கலகக்காரன் அண்டை வீட்டாரோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான். ஏன் எல்லாக் கவிஞர்களும் சொந்தத்திலேயே கவிதைத் தொகுதி வெளியிட வேண்டும். எந்தக் கவிஞன் நூலக ஆணைக் குழுவில் கவிதை புஸ்தகங்களை எடுக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுதிக் கேட்கிறான். எல்லாமே ‘சிஸ்டம் ‘தான், இல்லையா.
ஒரு வம்புக்குச் சிறுபத்திரிகை இலக்கியக் கூட்டத்தில் கலகம் செய்யலாம்; மூத்த எழுத்தாளர்களை நக்கலடிக்கலாம்; விடிய விடிய எங்கேயாவது செளகரியமாய் இருந்து குடிக்கலாம்; குடித்துவிட்டு நண்பர்களைச் சீண்டலாம். பின்னே, நவீனமாய் எழுதிப் பார்க்கலாம். மறுபடியும் இந்த ‘சிஸ்டத் ‘துக்குள் தான் வந்துவிட வேண்டும். வந்து இருந்தாக வேண்டும். இப்படித்தான் எல்லாருமே இருக்கிறோம்.
ஞானிகளும் கலைஞர்களும் புரட்சிக்காரர்களும் கலகக் காரர்களும் தவிர மற்ற எல்லோருமே ஏதோ ஓர் ஒழுங்கமைப்புக்குள்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த ‘சிஸ்டம் ‘ சரியில்லை என்று சொல்லிக்கொண்டே இதில் இருந்து கொண்டிருக்கிறோம். இதன் வசதிகளையெல்லாம் எடுத்துக் கொள்கிறோம்; இந்த ‘சிஸ்டத் ‘திலேயே எவ்வளவு செளகரியமாக இருக்கமுடியுமோ அதைவிடவும் அதிகமாகவே செளகரியங்களை ஏற்படுத்திக் கொள்கிறோம். என்ன ஒரு வினோத முரண் இது.
கொஞ்சம் வசதியுள்ளவர்கள் வேண்டுமானால் வேறொரு ‘சிஸ்டத் ‘தை ஏற்படுத்திக் கொள்ளலாம். ‘சிஸ்டம் ‘ மாறலாம்/மாறுகிறது. எனில், அது இன்னொரு ‘சிஸ்டமா ‘கவே. எல்லோரும் ஒழுங்காகத்தான் வேலைக்குப் போகிறோம்; ஒழுங்காகத்தான் சாப்பிடுகிறோம்; ஒழுங்காகத்தான் தூங்குகிறோம்; எல்லாமே கச்சிதமான ஒழுங்கு. வேறென்ன செய்ய. வெகு சில பேர் ‘சிஸ்டத் ‘தை விட்டு வெளியே வருகிறார்கள்தாம், தன்னியல்பில். வெகுநுட்பமாகப் பார்த்தால் அவர்களும் ஒரு ‘சிஸ்டம் ‘ வைத்திருப்பார்கள். ‘சிஸ்டத் ‘தில் இல்லாதவர்களுக்காகவே நமது சமூகம் சிறைச்சாலைகளையும் மனநல விடுதிகளையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. அங்கே போக யாருக்கு இஷ்டம்.
எனக்குத் தெரிந்து ‘சிஸ்டத் ‘தைவிட்டு வெளியே வந்தவர்கள் மூன்றே பேர்தாம். முதலாமவர், கவிஞர். கம்பதாசன். என்னுடைய பதினைந்து இருபது வயதுகளில், ‘தினத்தந்தி ‘யில், ‘கவிஞர் கம்பதாசன் கைது குடிபோதையில் இருந்ததாக ‘ என்று அடிக்கடி வரும். தமிழ் சினிமா கவிஞர்களிலேயே முதன்முதலில் கார் வாங்கியவர். கடைசிக் காலத்தில் மயிலாப்பூர் போஸ்ட் ஆபிஸ் திண்டிலேயே வசித்து வந்தார். இரண்டாமவர், ஜி. நாகராஜன், மூன்றாமவர், நண்பர் உதக மண்டலம் மணிக்கண்ணன். ஊட்டி மார்க்கெட்டில் பெரிய புரொவிஷன் ஸ்டோர். ஒரே பையன். சின்ன வயதிலேயே குடித்தே செத்துப் போனான். இந்த மூன்று பேருமே அழிவைக் கட்டித்தழுவிக் கொண்டவர்களாகவே அறியப்படுகிறார்கள். இவர்கள் மூவருமே பின் நாள்களில்தான் அப்படியெல்லாம் தலைப்படுகிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
இந்த ‘சிஸ்டம் ‘, இதற்குள் தவிர்க்க முடியாமல் இருக்க வேண்டியிருப்பது, இருக்க முடியாமல் போவது, இருப்பதால் கிடைப்பதும் இழப்பதும், இருக்கமுடியாமல் போவதில் நேர்வதும் வருவதும் என்னை விடாது துன்புறுத்திக் கொண்டே இருக்கின்றன. இந்த யோசனைகளைச் சொல்லத் தோன்றி எழுதியதென்றுதான் சொல்லவேண்டும், ‘கோயிலுக்கு ‘ கவிதை.
கோயில் என்பதும் கோட்டை என்பதும்தான் தமிழ்வாழ்வில் உச்ச பட்சமான ‘சிஸ்டம் ‘. கோட்டை அதிகாரம் சார்ந்தது என்றால், கோயில் ஆன்மிகம் சார்ந்தது. எனக்குக் கோட்டை தெரியாது, கோயில்தான் தெரியும் என்பதாலேயே கோயிலைக் குறியீடாக வைத்து எழுதியிருக்கிறேன். அதுவும் சின்னவயதில் எங்கள் அம்மாவுடன் நிறைய முறை போய் வந்த ஸ்ரீ நெல்லையப்பர் கோயில் சூழலையே விவரணங்கள் தகவல்களாக அடுக்கி, வழக்கம்போல ஒரு சொடுக்குச் சொடுக்கி முடித்திருப்பதாகச் சொல்லவேண்டும்.
ஒரு முக்கியமான விஷயம். ஒரு திட்டமிட்டு எல்லாம் இந்தக் கவிதையை எழுதவில்லை. என்னுடைய நல்ல கவிதைகள் எல்லாமே தன்போக்கில் வந்தவைதான். இதுவும் அப்படித் தன்னெழுச்சியாகத் தோன்றி வந்ததுதான். என் நல்ல கவிதைகளையெல்லாம் நான் எழுதியது என்று சொல்லத் தயக்கமாகவே இருக்கிறது. ஏதோ ஒரு தேவதை எனக்குள் மாயமாய் வந்து புகுந்து எழுதிவிட்டுப் போய்விடுகிறது என்றுதான் கற்பனை செய்து வைத்திருக்கிறேன்.
பிறகு ஒரு உண்மை. ஒரு நெடுங்கவிதையின் தொடக்கமாக எழுதிப் போட்டிருந்த சில வரிகள், அது எழுதப்பெறாமல் கிடந்ததில், திரும்பப் பார்க்கையில், இதன் முதல் பத்தி ஒரு தூண்டலைத் தந்தது. இதையே தனியே ஒரு கவிதையாக்கலாமே என்று தோன்றி எழுத முற்பட்டதில், திருநெல்வேலிக் கோயிலையே விவரணங்களாக விரித்துக் கொண்டு போனால் சரியாக இருக்குமென்று, அடுத்தடுத்த பத்திகளாக வளர்த்தி எழுதி முடித்ததுதான் இந்தக் கவிதை.
இந்தக் கவிதைக்காக நான் நன்றிசொல்ல வேண்டியது, ஸ்ரீ நெல்லையப்பர் கோயிலைக் கட்டிய பிற்காலப் பாண்டியர்களுள் ஒருவரான முழுதும் கண்ட ராம பாண்டியனுக்குத்தான். தமிழ்நாட்டிலேயே இது போல விஸ்தாரமான / முழுமையான கோயில் வேறெங்கும் பார்த்ததில்லை. ஒரு தனி அமைப்பில் கட்டியிருக்கிறான் பாண்டியன். இந்தக் கோயில் கட்டமைப்பின் பூர்ணத்துவம் இன்றும் எனக்குக் கவர்ச்சிகரமானதாகவே இருந்து கொண்டிருக்கிறது. ஒரு விழா நாளில் போய் வருகிற யாரும் இதை உணரலாம். கருத்தாக்கமாகவோ/கருத்தாக்கக் கவிதையாகவோ போய்விடாமல் இருப்பதற்குக் கோயில் விவரணங்கள் தகவல்கள் பெரிதும் உதவியிருக்கின்றன. விவரணங்கள், தகவல்களாலேயே கவிதை கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தெய்வத்துக்கே ஓர் ஒழுங்கமைப்பு வேண்டியிருக்கிறது என்பதுதான் விஷயமே. அப்பொழுது தான் தேடிவரும் பக்தர்களுக்கு செளகரியம். இந்த ஒழுங்கமைப்புதான் எல்லாவற்றையும் இனிதாய்க் கொண்டு செலுத்துகிறது என்று சுட்டுகிறது கவிதை. என்றால் இந்த விஷயத்தைக் கோயிலை முன் வைத்துத்தான் சொல்லமுடியும் என்று இப்பொழுதும் தோன்றுகிறது. கடைசிவரிகளான ‘தெய்வமும்/ஐதிகத்தில் வாழும் ‘ என்னளவில் முக்கியமான வரிகள். அவைதான் உள்ளபடியே கவிதைவரிகள்; அதுதான் கவிதையே. மற்றவரிகள் எல்லாம் விவரணங்களும் தகவல்களும் தானே. ஒரு விஷயத்தைச் சரியாகச் சொல்வதற்காகக் கட்டமைத்த வரிகளாகவும் கவிதை வடிவம் சமைப்பதற்காகக் கட்டிய வரிகளாகவும் எடுத்துக் கொள்ளவேண்டும். இந்த வரிகளின் வழியே, இதுபோல ஒழுங்கமைப்பு என்பது இருப்பை இருப்பாக மட்டுமே ஆக்கிவிடும் அபாயம் கொண்டது என்றும் சொல்வதுதான் என் உத்தேசம்.
ஊர்த்துவ தாண்டவம் ஆட இந்தக் கோயில் போதாது. பிக்ஷாடளராகப் புறப்பட்டுப் போக இது காணாது. கால பைரவராகக் கிளம்ப வெளியில்தான் வரவேண்டும். கோயிலுக்குள்ளிருந்து திரிபுரம் எரிக்க ஆகாது. பாகீரதியைத் தலையில் ஏந்திக்கொள்ள முடியாது. சோமனைச் சூடிக்கொள்ள இயலாது. திருவிளையாடல்கள் நிகழ்த்த முடியாது. இவற்றிற்கெல்லாம் வெளியேதான் வந்தாக வேண்டும். சிவனுக்குத் தெரியும், எங்கே எதைச் செய்ய வேண்டும் என்று; எப்பொழுது அதைச் செய்ய வேண்டும் என்பது. இங்கே அவன் இருந்து அருள்பாலிக்கலாம், தேடிவரும் பக்தர்களுக்கு. அதற்கு ஒரு நல்ல இடம் வேண்டும், அவ்வளவுதான். இவ்வளவும் வேண்டும் அருள்பாலிக்க என்பதுதான் கவனம் கொள்ள வேண்டியது. ஐதிகம் என்ற வடசொல் சம்பிரதாயம், நம்பிக்கை, வழிவழி வருவது, நிகழில் இருப்பது என்றெல்லாம் பொருள் குறிப்பதாகும்.
எங்கள் அம்மா வழிக் குலதெய்வமான குற்றாலம் பதினெட்டாம் படி கருப்பசாமிக்குப் பங்குனி உத்ரத்து அன்று கொடை நடக்கும். அன்றைக்குக் கூடுமான வரையில் போய்விடுவேன், ஊரில் இருந்தால். இதே போல என் மனைவி வழியில் கயத்தாற்றுப் பக்கமுள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி குலதெய்வம். கொடை வரும்பொழுது கூடப் போவேன். திரும்பும்பொழுது மனசு ஒரு காரியமாய் சங்கடப்படும், இவர்களெல்லாம் முறையான பூஜையில்லாமல் இருக்க வேண்டியதிருக்கிறதே என்று. எப்பொழுதாவதுதான் போய் வழிபடும்படி இருக்கிறதே என்று. பெரிய கோயில்களுக்கு எந்த நாளிலும் போகலாம். இப்படி இருக்கிறது, ‘சிஸ்டம் ‘ நிற்க.
* * *
இந்தக் கவிதை எந்த இலக்கியப் பத்திரிகையிலும் வரவில்லை. எதில் வெளியானது தெரியுமா. ‘பருவகாலம் ‘ என்கிற பாலியல் இதழில். இது மட்டுமல்ல, ‘துண்டுப் புலிகள் ‘ மாதிரி நல்ல கவிதைகளும் கூட. இலக்கியப் பத்திரிகைகளின் குழு மனப்பான்மையைப் பார்த்துப்பார்த்து வெறுத்துப்போன ஒரு மனநிலையில் அந்த ‘செக்ஸ் ‘ பத்திரிகைக்குக் கொடுத்தேன் என்பதுதான் நிஜம்.
பின்னே, இந்தக் கவிதைக்கும் நண்பர் சி.மோகன் அவர்களுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. இந்தக் கவிதை கொண்ட என் மூன்றாவது கவிதைத் தொகுப்பு, ‘உள்வாங்கும் உலகம் ‘ அவருடைய மிதிலா அச்சகத்தில்தான் தயாரானது என்பது ஒன்று. இரண்டு, படைப்பாளியே வெளியிட்டால் நூலக ஆணைக்குழு எடுத்துக்கொள்ளும் என்ற விதியை நம்பி ஆயிரம் பிரதிகள் போட்டு (தமிழில் கவிதையென்றால் ஐநூறே அதிகம்) 4 பக்க அமைப்புக் கருதி விட்டிருந்த வெற்றிடத்தைக் காரணம் காட்டி நூலகத்துறையில் நூலகத் துறையில் எடுக்காது விட்டதில், இவ்வளவு புஸ்தகங்களையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்த சமயத்தில் மோகன் தான் முன் வந்து, ‘நம் அச்சகத்திலேயே வையுங்கள் ‘ என்று ஆதரவு தந்ததோடு தன்னுடைய ‘வயல் ‘ வெளியீட்டு நிறுவனத்தின் மூலம் விற்றும் தந்தார். மூன்றாவதுதான் நிரம்ப சுவாரஸ்யமானது. தொகுப்பு முடிந்திருந்த வேளையில், மோகனை ஏதோ ஒரு காரியமாகப் பார்க்க வந்திருந்த மதிப்புக்குரிய கவிஞர் பிரமிள், மேஜைமீது கிடந்த புஸ்தகத்தைப் புரட்டிப் பார்த்திருக்கிறார்; இந்தக் கவிதை கண்ணில் பட, மோகனிடம் சொல்லியிருக்கிறார்: ‘இதில் ஒரு பிழை விட்டிருக்கிறார், நம்பி. நான் இதுபோலத் தப்புப் பண்ணியிருந்தால் பெஞ்ச் மேல் ஏறி நிற்பேன். ‘ பிரமிள் பிழையென்று சொல்லியது, ‘பட்டர் சொல்லும் மந்திரம் ‘ என்ற வரியிலுள்ள ‘பட்டர் ‘ என்ற சொல்.
‘சிவன் கோயில் அர்ச்சகர்களைக் ‘குருக்கள் ‘ என்றுதானே சொல்லவேண்டும்; பட்டர் என்பது பெருமாள் கோயில் அர்ச்சகரையல்லவா குறிக்கும் ‘ என்றும் கேட்டிருக்கிறார். நான் ‘மிதிலா ‘வுக்குப் போனதும் மோகன் இந்த விஷயத்தை என்னிடம் சொன்னார்.
நான் பதில் சொன்னேன்: ‘திருநெல்வேலி ஊருக்கு மட்டும் இது பொருந்தாது, மோகன்; பிரமிளுக்குத் தெரியாது. திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்களின் உட்பிரிவினரான ‘குருக்களையா ‘ என்பவர்களைக் குறிக்கும் என்பதாலோ என்னவோ அங்கே பட்டர் என்று சொல்கிறார்கள் போல. எங்கள் அப்பா பட்டர் என்றுதான் சொல்வார்கள். ‘
பயிலரங்கத்துக்கு இந்தக் கவிதையைத் தெரிவு செய்த பிறகு கூட என் மனைவியிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டேன், அவள் குடும்பம் கோயில் பணி சார்ந்தது என்பதால். கவிதையில் ஒரு சொல் எவ்வளவு முக்கியம் என்பதற்காகவே இதை இங்கே விரிவாகப் பேசியது.
எனில், நான் ஒரு பிழை விட்டிருந்தேன். நூலில், ‘ஐந்து கால பூஜை ‘ என்றே இருக்கும். அது தவறு. ‘ஆறு கால பூஜை ‘ என்பதே சரி. இதை மோகனிடம் எடுத்துக் காட்டியவர் பெரியநாயகி அச்சகம்/டி.கே.புக்ஸ் குமாரசாமி அண்ணாச்சி அவர்கள். பிறகு, என் தவறை உணர்ந்து கொண்டேன். கவிஞனுக்கு எவ்வளவு கவனம் வேண்டியிருக்கிறது.
இப்பொழுது இந்தக் கவிதையை நின்று நிதானமாகப் பார்க்கிறபொழுது ஒன்று புலனாகிறது. என் உத்தேசத்தையெல்லாம் மீறி கவிதை வேறொரு தளத்திலேயே இயங்குகிறது என்று உணர்கிறேன். இவ்வளவும்/எல்லாம் -யாந்திரிகமாக- இருக்கிறது, நடக்கிறது; தெய்வமும் சும்மா இருக்கிறது; அதாவது, இல்லாமல் இருக்கிறாது; இந்த களே பரத்தில் ஒன்றும் செய்யமுடியாததாகப் போய்விட்டது என்று தொனிக்கிறதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. இது எப்படி நேர்ந்தது. உள் மனசில் இதைத்தான் சொல்ல நினைத்திருந்தேனா. ‘தெய்வமும்/ஐதிகத்தில் வாழும் ‘ என்ற வரிகள் எப்படி மாற்றி விட்டன,பொருளை, இந்தக் கவிதை என்னதான் சொல்கிறது. ‘எல்லாம் ஒழுங்காகவே இருக்கிறது, உயிர்ப்புதான் இல்லை ‘ என்கிறாற் போல அர்த்தம் வந்தது எப்படி. கவிதை, என் கைமீறிப் போய்விட்டிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். ‘இதுபோலக் கவிதைகளுக்கெல்லாம் கவிஞன் ஒருகாலும் பொறுப்பேற்க முடியாது ‘ என்று தப்பித்துக் கொள்ளலாமா. சற்றே யோசித்துத்தான் சொல்லவேண்டும். தயவு செய்து, பொறுத்துக் கொள்ளுங்கள்.
எனக்கே என் கவிதைகள் சிலவற்றை நிரம்ப நிரம்பப் பிடித்துப் போகும், ஏனென்றே தெரியாமல், அப்படியான கவிதைகளில் இதுவும் ஒன்று. அண்மைக் காலமாகவே பூடகமானதும் இருண்மை கொண்டதும் மாயம் கொண்டிருப்பதுமான கவிதைகளையே வெகுவாக விரும்புகிறேன். எதார்த்தமாகவும் வெளிப்படையாகவும் இருக்கிற கவிதைகள் பெரிதாக மனம் கவருவதில்லை. இந்தத் திசையிலேயே இனி வரும் நாள்களில் எழுத வேண்டும் என்று தோன்றிக் கொண்டிருக்கிறது. எழுதுவேனா முடியுமா என்றெல்லாம் சொல்லமுடியாது. அப்படி ஆசை இருக்கிறது. வாய்த்தால் நல்லது.
‘கோயிலுக்கு ‘ கவிதையில் ஒரு நிரந்தரமான விஷயத்தை/நிரந்தரமான உண்மையைக் கருத்தாக்கம் என்றாகாது அநுபவ/உணர்வுத் தளத்திலேயே சொல்லியிருக்கிறேன் என்பதுதான் கவிஞன் என்ற முறையில் சந்தோஷம் தருகிறது. என் வாழ்நாளில் இப்படிப் பத்து நல்ல கவிதைகள் எழுதியிருந்தால், அதுவே என் பிறவிப்பயன் என்று திருப்திப்பட்டுக் கொள்வேன்.
இந்தக் கவிதையும் பெரிதாகக் கவனிக்கப்பட்டதாகச் சொல்லமுடியாதுதான். மதிப்புக்குரிய நகுலன் அவர்கள் ‘கனவு ‘ மதிப்புரையில் குறிப்பிட்டிருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. ‘கோயிலுக்கு ‘ – இக்கவிதையில் கோயில் எவ்வளவு சிறப்பாக விவகரிக்கப்படுகிறதோ, அதைப்போலவே அதன் சீரழிவும். ‘தெய்வமும் ஐதிகத்தில் வாழும் ‘. உடையவர்கள் எதைத்தான் விட்டு வைத்தார்கள் ‘ என்று எழுதியிருப்பார். ‘மீட்சி ‘ மதிப்புரையில் என் அன்பு கொண்ட பிரம்மராஜன் அவர்கள் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்: ‘கவிதைகளின் வாசிப்புக்கு ஊடாக நமக்கு இரு அமைப்பாக்கங்கள் தெரிய வருகின்றன. முதல் அமைப்பாக்கம், லட்சிய குணங்கள் பொருந்திய, சுய பாதுகாப்பு நிறைந்த கோயில் என்கிற அமைப்பாக்கம். இரண்டாவது வீடு. ‘ அவரும் கடைசி வரிகளை மேற்கோள் காண்பித்திருப்பார். மற்றபடி, வேறு எவரும் எங்கும் இக்கவிதையைக் கண்டு கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும். சற்றே வித்யாசமாக உள்ள கவிதைகள் மதிப்பிடப் பெறுவதும் விமர்சனத்துக்குட்படுத்தப்படுவதும் இலக்கியத்தில் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் என்பது மட்டுமில்லை, கவிதை பற்றிய விழிப்புணர்வையும் உண்டுபண்ணும். குறைந்த பட்சம் சக கவிஞர்களேனும் இதுபோன்ற கவிதைகளைப் பற்றிக் கருத்துச் சொல்வது பொதுவாகக் கவிதை வளர்ச்சிக்கும் தனிப்பட்ட முறையில் கவிஞன் தன்னைச் சீராக வளர்த்துக் கொண்டு செல்வதற்கும் உபயோகமாக இருக்கும்.
கோயிலுக்கு
வாசல்
நான்கு
சந்நிதி
இரண்டு
சுயம்புலிங்கம்
சொல்ல ஒரு விசேஷம்
அம்மன்
அழகு சுமந்தவள்
ஆறுகால
பூஜை நைவேத்யம்
பள்ளியறையில்
பாலும் பழமும்
ஸ்தலவிருஷம் பிரகாரம்
நந்தவனம் பொற்றாமரைக் குளம்
வசந்தோற்சவம் தேரோட்டம்
நவராத்திரி சிவராத்திரி
பட்டர் சொல்லும் மந்திரம்
ஓதுவார் பாடும் தேவார திருவாசகம்
சேர்த்து வைத்த சொத்து
வந்து சேரும் குத்தகை
ஆகமம் ஆசாரம்
தவருத நியமம்
தெய்வமும்
ஐதிகத்தில் வாழும்
( ‘உள்வாங்கும் உலகம் ‘
தொகுப்பு பக்கம்: 10&11.)
- மாற்றம்
- தேவகோட்டை – சிவகங்கை
- சீரணி அரங்கத்தில் பேரணி
- பயணம்
- மெளனம்
- இந்திய இளவரசர்களே!
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
- Mahakavi’s Puthirathoru Veedu and Ionesco’s The Chairs to be plays at Manaveli’s Ninth Festival
- எனக்குப்பிடித்த கதைகள் – 4 – ஐஸக் பாஷெவில் ஸிங்கரின் ‘முட்டாள் கிம்பெல் ‘ ஆசை என்னும் வேர்
- கோயிலுக்கு
- அமெரிக்க ஆக்க மேதை – தாமஸ் ஆல்வா எடிசன்
- நான் வானவியலுக்கு புதியவன். நான் எந்த தொலை நோக்கியை வாங்குவது ?
- எதிர்காலத்துப் பணம் உண்மையிலேயே பேசலாம்
- நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்
- ஈழத்தில் சமாதானம்
- இழந்த யோகம்
- சின்னப் பூக்கள்
- தீ தித்திப்பதில்லை…
- காவல்
- குழந்தை யேசு
- தலைப்பாரம்…..
- உதிரும் சிறகு
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
- விருந்துக்கு வந்த இடத்தில்
- என் தந்தையார் பற்றி சிறு விளக்கம்
- மதக்கல்விக்கு அரசு ஆதரவு தரலாகாது
- ஞாநிக்கு மீண்டும்
- இந்த வாரம் இப்படி – மார்ச் 3 2002. (எரியும் குஜராத், தன்னார்வக் குழுக்களின் கொடூர முகம், குருமூர்த்தியும் சிவகாசியும்)
- என் அக்கா
- பால்யகாலத்து நண்பன்!