எஸ். இராமச்சந்திரன்
அரசியல் அல்லது சமுதாய இயக்கங்களைச் சேர்ந்தோர், மக்களிடையே நெடுங்காலமாக நிலவிவருகிற நம்பிக்கைகளை, தமது இயக்கத்தின் கருத்துகளைப் பரப்புவதற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கு புதுமையானதன்று. சமய நிறுவனங்களைச் சார்ந்தார், தத்தமது சமயக் கோட்பாடுகளை மக்களிடையே வேரூன்றச் செய்வதற்காக, அம்மக்களுடைய மொழியுணர்வையும், வழிபாட்டு நம்பிக்கைகளையும் சமயோசிதமாகப் பயன்படுத்திக் கொண்டதற்கு வரலாற்றில் பல எடுத்துக்காட்டுகள் உண்டு. அவ்வகையில் பெண்ணின் மார்பகம் பற்றிய பழங்குடி நம்பிக்கையொன்று, இலக்கியங்களில் எவ்வாறெல்லாம் இடம்பெற்று வந்துள்ளது என நாம் ஆராய்ந்தால் சுவையான செய்திகள் கிடைக்கின்றன. இன்றைக்கு, தொழில் வணிக நிறுவனங்களால் விளம்பரத்திற்குப் பயன்படுத்தப்பட்டுக் கொச்சைப்படுத்தப்படுகிற கொங்கைகள் நாம் காண இருக்கிற இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள விதம், முற்றிலும் வேறுபட்டதாகும்.
கன்னிப்பெண்ணின் மார்பகத்தில் ‘அணங்கு ‘ என்ற பெண்தெய்வம் உறைவதாகச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இத்தெய்வத்திற்கு ‘வீற்று தெய்வம் ‘ (அதாவது வீறுமிக்க உக்கிரமான தெய்வம்) என்று உரையாசிரியர்கள் விளக்கமளிக்கின்றனர். பொதுவாகத் திருமணமாகாத கன்னிப் பெண், உக்கிரமான தெய்வசக்தி நிரம்பியவளாகக் கருதப்படுவது வழக்கம். மணமாகாமல் இறந்துவிட்ட கன்னிப் பெண்னைத் தெய்வமாகக் கருதி வழிபடும் மரபு இன்றும் தமிழகத்தில் உள்ளது. இத்தகைய பின்புலத்தில் பார்க்கும்போது, பெண்மையின் முதன்மையான அடையாளமாகக் கருதப்பட்ட மார்பகத்தில் உக்கிரமான தெய்வம் உறைந்ததாகச் சங்க காலத் தமிழர்கள் கருதியதில் வியப்பில்லை. புன்கமரத்தின் தளிர்களைக் கொங்கையில் பிணைத்துக்கட்டி இந்த உக்கிரமான தெய்வத்தினைச் சாந்திப்படுத்தும் வழக்கம் இருந்தது என்று நற்றிணைப் பாடல் ஒன்றினால் (பா.9, வரிகள் 5-6) அறிகிறோம். பெண் கன்னி கழியும் நிகழ்ச்சி ‘சாந்தி முகூர்த்தம் ‘ என்று கூறப்படுவது இதோடு தொடர்புபடுத்திச் சிந்திக்கத்தக்கது. திருமணமான பின்னர், குறிப்பாகச் சொல்வதானால் குழந்தை பிறந்த பின்னர், பெண்ணின் மார்பகத்திலுள்ள உக்கிரசக்தி, குழந்தையைப் பாலூட்டி வளர்க்கிற உன்னதமான சக்தியாக மாற்றமடைந்து விடுகிறது என்பதால்தான் கன்னிப் பெண்ணின் மார்பில் மட்டும் ‘அணங்கு ‘ உறைவதாக நம்பப்பட்டது.
சங்க காலத்திற்குப் பின்னர், நாம் இந்நம்பிக்கை பற்றிய மறைமுகமான குறிப்பினச் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். தன் நெஞ்சத்தில் இடப்பட்ட நெருப்பினையே அள்ளி எறிவது போலத் தனது இடப்பக்க முலையைத் திருகி எறிந்து மதுரை நகரை எரியூட்டுகிறாள் கண்ணகி. கண்ணகி கன்னிப் பெண் அல்லள்; ஆயினும் அவள் குழந்தை பெறாதவள். கண்ணகியின் இடப்பக்க மார்பகம் மட்டும் திருகி எறியப்பட்டதாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுவது, மனித உடலில் இடப்பக்கம் பெண்தன்மையுடையது என்ற பழைய நம்பிக்கையையும் உள்ளடக்கியது எனத் தோன்றுகிறது. (இடப்பக்கத்தில் உமையை ஏற்ற சிவபிரானின் அர்த்த நாரீஸ்வர வடிவம் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகிறது) சமண சமயமும் சங்க காலத் தமிழர்களின் நம்பிக்கையை ஏற்றிருந்தது என்பதற்குச் சிலப்பதிகாரக் குறிப்பு ஒரு சான்றாகும். ‘தமிழிலக்கியத்தில் தாய்த் தெய்வ வழிபாடு ‘ என்ற நூலில், அறிஞர் பி.எல்.சாமி அவர்கள், சிலப்பதிகாரம் சித்தரிக்கும் காட்சிக்கு அடிப்படையாக இருந்தது, பெண்ணின் கொங்கை பற்றிய பழங்குடி நம்பிக்கையே என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மதுரை நகரில் சமண சமயம் வலிவுடனும் பொலிவுடனும் விளங்கிற்று. மதுரையை மாற்றிக் காட்டுகிற உத்வேகத்துடன் புறப்பட்டு வந்த திருஞான சம்பந்தருக்கும் சமண சமயக் குருமார்களுக்குமிடையே ஏற்பட்ட மோதல் முற்றி, அனல் வாதமும் புனல் வாதமுமே இறுதி வெற்றி யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் என முடிவாயிற்று. அனல் வாதம் என்பது சமணர்களும், சம்பந்தரும் தத்தமது சமய மந்திரங்களை ஓலைச்சுவடியில் எழுதி அச்சுவடியினை நெருப்பிலிட்டுச் சோதிப்பதாகும். யாருடைய மந்திரம் எழுதப்பட்ட சுவடி நெருப்பில் பொசுங்காமலிருக்கிறதோ அந்த மந்திரமே வெற்றி பெற்றதாகக் கருதப்படும். சமணர்கள் இதற்கு உடன்பட்டு தமது சமய மந்திரங்களைச் சுவடியில் எழுதி நெருப்பிலிட, அச்சுவடி பொசுங்கிப் போயிற்று என்றும், திருஞான சம்பந்தரோ பல சிவத்தலங்களில் தமது பயணங்களின்போது தாம் பாடிய பதிகங்கள் அடங்கிய ஓலைச்சுவடியில் நூலிட்டுப் பிரித்து, எந்தச் சுவடி கையில் கிடைத்ததோ அந்தச் சுவடியை நெருப்பிலிட்டார் என்றும், நெருப்பிலிட்ட அச்சுவடி எரிந்து போகாமல் பசுமையாகக் காட்சியளித்ததென்றும், தற்செயலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அச்சுவடியிலிருந்த (சோழ நாட்டுத்) திருநள்ளாற்றுப் பதிகம் பசுமையாக இருந்த காரணத்தால் பச்சைப் பதிகம் என வழங்கப்படலாயிற்று என்றும் பெரிய புராணம் குறிப்பிடுகிறது.
பெரியபுராணம் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருப்பினும், இது சேக்கிழாரின் கற்பனை எனக் கருதுவது தவறு. திருநள்ளாற்றுப் பதிகம் நெருப்பை எதிர்த்து நின்றது, தமது அருள்வாக்கில் உதித்த அற்புதக் கவிதை என்பதால் அன்று என்றும் அதற்குக் காரணம் என்ன என்றும் (காரணத்தை விளக்கியும்) சம்பந்தரே கூறுவது போல் அமைந்த பதிகம் ஒன்று தேவாரப் பாடல் தொகுதியில் உள்ளது. திருநள்ளாற்றுப் பதிகத்தின் முதல் பாடலின் முதல் வரி, ‘போகமார்த்த பூண் முலையாள் தன்னொடும் ‘ எனத் தொடங்கும். உமையன்னையின் மார்பகம் இப்பாடலில் அழிக்கும் சக்தி கொண்டதன்று; ஞானசம்பந்தர்க்கு ஞானப்பாலூட்டிய மார்பு அது. எனவே, தேவியின் இணை முலைகள் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ள திருநள்ளாற்றுப் பதிகம், நெருப்பிலிட்டாலும் எரியாது என்ற பொருள்பட, ‘தளிரிள வளரொளி ‘ என்று தொடங்கும் பதிகத்தினை சம்பந்தர் பாடியுள்ளார். சோழநாட்டிற் பிறந்த ஒரு சமணப் பெண்மணியின் இடமுலையால் எரியுண்ட மதுரை நகரில் நிகழ்ந்த அனல் வாதத்தில், உமையன்னையின் இணை முலைகள் பற்றிய குறிப்பினை உள்ளடக்கிய பாடலின் மூலம் நெருப்பினை வெற்றி கண்டு, சமண சமயத்தை வீழ்த்துகிறார், சோழ நாட்டிற் பிறந்த ஒரு சைவர். இந்த வரலாற்றுக் காட்சி, ஒரு நாடகக் காட்சி போல அமைந்திருப்பது திட்டமிட்ட ஏற்பாடா, தெய்வீக அற்புதமா என்ற ஆய்வில் இறங்குவதைவிட, பெண்ணின் மார்பகம் பற்றிய மக்களின் நம்பிக்கையை ஒவ்வொரு சமயத்தவரும் எவ்வாறு சரியாகப் பயன்படுத்தி, தமது ‘காவியக் காட்சி ‘களை அமைத்துள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்வதே தேவை.
துறவு நெறியையும் வாழ்க்கையின் நிலையற்ற தன்மையையும் ஊழ்வினையின் ஆற்றலையும் முதன்மைப்படுத்திய சமண சமயம், ‘ஈனா வேண்மாள் ‘ எனத்தக்க ஒரு பெண்மணியின் மார்பகத்து உக்கிர சக்தியை – எதிர்மறையான ஓர் ஆற்றலைச் சிலப்பதிகார நாடகத்தின் ஒரு காட்சியாகச் சித்தரிக்கிறது.
இல்லற நெறியைப் போற்றி, ஆடல்பாடல் முதலிய கலைகளின் மூலம் இறையருள் பெறலாம் என்ற கருத்தைப் பரப்பி, ‘பெண்ணின் நல்லாளொடும் இருந்த பெருந்தகை ‘யை வழிபடச் சொல்லிக் கொடுத்த சைவ சமயம், உயிர்களை ஈன்ற அன்னையின் மார்பகத்து அருட்சக்தியை – அமுதூட்டி வளர்க்கும் ஆக்க சக்தியைத் தேவாரப் பாடல் காட்சியாகச் சித்தரிக்கிறது.
சம்பந்தரின் காலத்திற்குப் சற்றுப் பிற்பட்ட வைணவ ஆழ்வார்கள் பாடலிலும் கன்னிப்பெண்ணின் மார்பகத்து உக்கிர சக்தி குறிப்பிடப்படுகிறது. ஆனால் அது பயன்படுத்தப்படும் களமோ, நாயக-நாயகி பாவனையிலமைந்த நாச்சியாரின் விரகதாபப் புலம்பல் ஆகும். ‘திருமாலின் மார்பில் பொருந்தி அணைந்து மகிழும் பேற்றினப் பெறாத எனது கொங்கையை வேரோடு பிடுங்கி, அவனது மார்பில் எறிந்தாகிலும் எனது விரகத் தீயைத் தணித்துக் கொள்ள மாட்டேனோ ? ‘ என்று நாச்சியார் திருமொழி நவில்கிறது.
‘கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டவன் மார்பில் எறிந்தென் அழலைத் தீர்வேனே ‘
(நாச்சியார் திருமொழி-13:8)
நாச்சியார், பாண்டிநாட்டு நங்கை என்பதே வைணவ மரபாகும். பாண்டி நாட்டினை, குறிப்பாக மதுரையை மீனாட்சி ராஜ்யம் என்று கூறுவதுண்டு. கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த மெகஸ்தனிஸ், பாண்டியா என்ற பெண்ணின் ஆட்சி இங்கு நிலவியதாகக் கூறியுள்ளார். கி.பி.13-14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திருவிளையாடற்புராணத்தில் மலையத்வஜ பாண்டியனுக்கும் காஞ்சனமாலைக்கும் பிறந்த தடாதகைப் பிராட்டியார் மும்முலை நங்கையாகத் திகழ்ந்து, எதிர்ப்போர் யாருமின்றி வாழ்ந்து வந்தார் என்றும், தமக்கு கணவனாக வரத் தகுதியுள்ள சிவபெருமானைக் கண்டவுடன் மூன்றாவது மார்பகம் மறைந்து உக்கிரம் தணிந்து பெண்மையின் இயல்பாகிய நாணம் கொண்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. பாண்டியநாட்டின் தனிப்பெருந் தெய்வமாக, முற்காலத்தில் உக்கிரமான கன்னித் தெய்வமே இருந்திருக்க வேண்டும். கன்னியாகுமரி பற்றிய பழங்கதைகளாலும் இவ்வுண்மை புலனாகிறது. ஆணாதிக்க சமூகம் நிலை பெற்றபோது, இத் தெய்வம் தனது வீறு அடங்கி, அருள் வழங்கும் அன்னைத் தெய்வமாக மாற்றமடைந்துவிட்டது என்ற வரலாற்று உண்மையை இக்கதைகள் நமக்கு உணர்த்துவதோடு, அவ்வக்காலச் சமூக மதிப்பீடுகளை வலியுறுத்தவும் நிலைநிறுத்தவும் இக்கதைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்ற கருத்தையும் நம்மிடம் உருவாக்குகின்றன.
———
(இக் கட்டுரையின் ஆசிரியர் எஸ். இராமச்சந்திரன், தமிழ்நாடு தொல்பொருள் துறையில் பணிபுரியும் கல்வெட்டு ஆய்வாளர். இவரது பிற கல்வெட்டு ஆய்வுகளை www.varalaru.com என்கிற இணைய தளத்தில் காணலாம்.)
———
நன்றி
மழை (காலாண்டிதழ்) – ஜூலை 2002
ஆசிரியர் : யூமா. வாசுகி
எண். 130/2
அவ்வை சண்முகம் சாலை
கோபாலபுரம்
சென்னை – 600 086
ஆண்டு சந்தா : 160 (இந்திய ரூபாய்களில்)
———
தகவல் : தஞ்சை சாமிநாதன்
- கல்வெட்டுகள்
- சின்னச்சின்ன ஆசை
- மனைவி…
- இலையுதிர் காலங்கள்
- கோலத்தைப் புறக்கணித்த புள்ளிகள்.
- கொள்கை பரப்புதலில் கொங்கை பற்றிய கோட்பாடுகள்…
- ‘திண்ணை ‘க்கு ஒரு குறிப்பு.
- தேவதேவனின் வீடு :ஒரு குறிப்பு
- எளிமையின் உறையும் மேன்மை (எனக்குப் பிடித்த கதைகள் – 22 -ஸெல்மா லாகர்லாவின் ‘தேவமலர் ‘)
- தன்படை வெட்டிச் சாதல் [தளைய சிங்கம் விமரிசனக்கூட்டப் பிரச்சினை பற்றி]
- வங்காள முறை பாகற்காய் கறி
- அறிவியல் மேதைகள் -இப்போகிரட்ஸ் (Hippocrates)
- விண்ணோக்கிக் கண்ணோக்கும் ஹப்பிள் தொலை நோக்கி
- நான்காவது கொலை!!! (அத்தியாயம் : இரண்டு)
- வந்ததும் சென்றதும்
- என் வேலை
- தீ, திருடன், சிறுத்தை
- ஆத்ம தரிசனம்
- தேவதேவன் கவிதைகள் : வீடு
- ஒரு ஜான் வயிரும் சில கோரிக்கைகளும்.
- வீடு வேண்டி
- என்னவள்
- இந்திய மார்க்சீயமும் அம்பேத்காியமும்
- உலக நாடுகளின் கடன் – ஆரம்பமும், தொடர்ச்சியும் – ஒரு எளிய முன்னுரை – பகுதி 3
- இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 12 2002
- பிரம்ம புரம்