கொலுசுகள்.

This entry is part [part not set] of 17 in the series 20010715_Issue

ருத்ரா


உன் கொலுசு இசைத்த

கிசு கிசுப்புகளின்

கிளு கிளுப்பில்

இந்த பூமி கூட

பூகம்பம் செய்யாமல்

சுருண்டு கொண்டு

படுத்துக்கிடக்கிறது.

அதனால்

கொலுசுகள் இசையமைக்கும்

உன் பூங்கால்களின்

தடம் பதிக்க மறக்காதே.

ஏனெனில்

அந்த தாலாட்டுகள்

இல்லாமல் விழித்துக்கொள்ளும்

பூகம்பங்களின்

இன்னொரு ‘குஜராத்தை ‘

இந்த பூமி தாங்காது.

உன் ‘காலடி ‘ கூட

அத்வைதம் பேசுகிறது.

‘இரண்டல்ல ஒன்று ‘.

நான் நானில்லை.

நீ நீயில்லை.

காதல் எனும்

காற்று ஒன்றே.

பிரணவம் என்ற

புாியாத

பிரம்ம சூத்திரத்தின்

புாிகின்ற மொழி

உன் சிாிப்பில் !

அவை கொலுசுகள் அல்ல.

‘குமுக் ‘கென்று

கொட்டிக்கவிழ்க்கும்

முறுவல்களின்

முல்லைச்சரம்.

காதலன் காதலி

இங்கு இரண்டல்ல !

பால்வேற்றுமை கழன்ற

‘பால் வெளி ‘ இது.

‘பிக் பேங்க் ‘ என்பது

காதலிப்பது.

‘பிக் க்ரன்ச் ‘ என்பது

காதலிக்கப்படுவது.

உன் கண்விழியில்

என்னை உறிஞ்சும்

‘ப்ளாக் ஹோல் ‘ பிரபஞ்சத்தின்

கணித சமன்பாடுகளுக்கு

தீர்வு சொல்ல முயலும்

‘ஸ்டாஃபன் ஹாக்கிங் ‘ அல்ல நான்.

அதனால் கண்ணே!

மெளனமாய்

புதைந்து விடுகிறேன்.

உன் பார்வை

ஒவ்வொன்றும்

அச்சுக்கு வரத்துடிக்கின்ற

ஒரு கவிதைத்தொகுதியின்

சர சரக்கும் பக்கங்கள்!

உன் கொலுசுகள்

சிந்திவிட்டுப்போன

அந்த வார்த்தைகளை

எல்லாம்

விதைத்து வைத்திருக்கிறேன்.

விருட்சமாய்

விசுவரூபமெடுக்கும்

அந்த ‘ஆரண்யத்தில் ‘

ஒரு ‘பிருகு ‘ முனிவனின்

உபநிஷத கீதங்கள்

உன் கொலுசு சப்தங்கள் !

பூ :

புவ :

சுவ :

மஹ :

என்ற நான்கு வ்யாஹிருதிகளிலும்

காதலின்

மஹா சம்ஹிதையாய்

மாயம் செய்கிறது

உன் கொலுசு மந்திரங்கள்.

எப்போதோ

எங்கோ

ஆற்றுக்கு குடம் சுமந்து

சென்றுகொண்டிருக்கிறாய்.

ஏதோ ஒரு குயிலோடு

தில்லானா பாட

கொலுசுகளில்

ஜெண்டை வாிசைகளை

நிரவல் செய்துகொண்டிருக்கிறாய்.

உன் முகம் தொியவில்லை.

அந்த தடம் தொியவில்லை.

ஆனாலும்

அந்த

மராமரங்களிலிருந்து

எட்டிப்பார்க்கும்

மறைவான அம்புகளில்

வீழ்ந்து கிடக்கின்றேன்.

அன்பே

அந்த ‘டெசிபல் ‘களை

செதுக்கி

சிற்பம் ஆக்கியிருக்கிறேன்.

தனிமை குடைவிாித்த

அந்த மெளனத்திலிருந்து

இன்னொரு

மெளனத்தைப் பிசைந்து

வார்த்து வைத்திருக்கிறேன்.

அந்த நாதப்பிழம்பை

நாடி பிடித்து நாடி பிடித்து

நான் கரைந்து போனேன்.

காதுகளே கண்கள் ஆயின.

விண்ணுக்குள் மண்

விதைத்து

மண்ணுக்குள் விண்

புதைந்த புதையலின்

புல்லாிப்புகள்

உன் கொலுசு சப்தங்கள்.

உன் கொலுசுக்குள்

கொலுவீற்றிருக்கும்

அந்த சங்கீத சபாவில்

இடம் பிடிக்க

எத்தனை போட்டிகள் இங்கே!

நீ

நடந்து போன பிறகு

பார்க்கிறேன்.

பாவம்

இடம் கிடைக்காமல்

ஒலிச்செதில்களாய்

இங்கு

உதிர்ந்து கிடக்கிறார்கள்…

ஏ.ஆர்.ரகுமான்களும்

இளையராஜாக்களும்.

தொடுவானத்தோடு

‘தொட்டு பிடித்து ‘

விளையாடும் கடலில்

ஆசை

பாய்மரம் விாிக்கும்.

அதன்

அலை நுரைப்புகளை

அள்ளித்தெளிக்கும்

உன் கொலுசுகள் !

உன்

ஓசைப்பரல்களுக்குள்

சூாியனின் சில்லுகள்.

அவை

வெளிச்சத்தை

விழுங்கும் இருட்டாய்

இருட்டை

முலாம் பூசும் வெளிச்சமாய்..

உன் கொலுசுக்குள்

எனக்கு

ஒரு அந்தியின் மயக்கம்.

Series Navigation

ருத்ரா

ருத்ரா