கொட்டிவிட்ட காதல்….

This entry is part [part not set] of 18 in the series 20010812_Issue

நா பாஸ்கர்


பதினாறு முதலே எங்கும் சிந்திவிடாமல்
மனதிலே சேமித்துவந்தேன் முழுக்காதல்
மனமுதிர்ந்தபின் வரவேண்டுமென்று

பன்னிரண்டாம் வகுப்பில்
கவிதாவின் குறுகுறு கண்கள் பட்டு
சிறு ஓட்டைவிழுந்துவிட
உடனடியாய் அடைத்துவிட்டேன்

கல்லூரி இரண்டாம் ஆண்டில்
காதல் கீதல் என்று ஏதேதோ
உளறிய உயிர்த் தோழியிடம்
‘இதெல்லாம் இனக்கவர்ச்சி ‘யென
அறிவுரை சொல்லி
உதாசீனப்படுத்திவிட்டேன்

கல்லூரி செல்லும் காலைநேரப்
பேருந்தில் கவிதை கொழிக்கும்
விழிகளோடு அனுதினமும்
அம்பெய்திய பெயர்தெரியாத
அம்மணியோடு
பேருந்தின் ஓர் உலுக்கலில் உடம்போடு
மனசும் உரசிக்கொள்ள
மனதை கட்டிப்போட இயலாது
பேருந்தை மாற்றிக்கொண்டேன்

வேறு சில சில்லென்ற சந்தர்பங்களிலும்
சிறகு முளைத்த மனது
பறக்க துடிக்கையிலெல்லாம்
வெட்டி வைத்து கட்டிவைத்தேன்

உள்ளக்காதல் அத்தனையும்
உனக்காக சுமந்துவந்தேன்
உன் ஒவ்வொரு அசைவிலும்
உருகியுருகி காதல் வளர்த்துவந்தேன்
காதல் கண்கொண்டுப் பார்த்ததினால்
உனக்குள் காதல் உள்ளதை கண்டுகொண்டேன்

சரியான ஒரு சாயங்கால பொழுதில்
மனதில் கனத்தக் காதலை
உனக்கு பகிர்ந்தளிக்க பதறியபொழுதுதான்
சொன்னாய்
நீயும் காதலிப்பதாய்
ஆனால்
காதலன் நான் அல்லன்
என்று அறிந்தபொழுதே
அறுந்து விழுந்துவிட்டேன்

காதலிக்கப்பட்டபொழுதும் இல்லை – மனதை
கட்டிவைத்தபொழுதும் இல்லை – அவளை
காதலித்தபொழுதும் இல்லை – எனது
காதல் நிராகரிக்கப்பட்டபொழுதும் இல்லை
நேற்றுவரை என்னை தூண்டிவிட்டு
வேடிக்கை பார்த்தவர்கள்
இன்று என்னை பார்க்கிற பார்வை
அப்பப்பா அந்த பார்வையில் தான்
எத்தனை விஷமங்கள்
அரளியை அரைத்தல்லவா
ஊற்றுகிறார்கள்
எல்லாம் சோகத்தின் மறு உருவாய்
நெஞ்சை அழுத்திக்கொள்கிறது.
காதல் நிராகரிப்பையும் தாங்கிக்கொண்ட
என் நெஞ்சே!
ஏன் இந்த போக்கற்றவர்களின்
பார்வைகளுக்கு பயம் கொள்கிறாய் ?

Series Navigation

நா.பாஸ்கர்

நா.பாஸ்கர்