குழந்தைகளை புதைத்து எடுத்த குழிமாற்றுத் திருவிழாவில் தவறேதும் இல்லை

This entry is part [part not set] of 30 in the series 20020909_Issue

சின்னக்கருப்பன்


சமீபத்தில் இந்து பத்திரிக்கையிலிருந்து குமுதம் ரிப்போர்ட்டர், ஜ்ஊனியர் விகடன் வரை, மேலே இந்திய மனித உரிமைக் கமிஷனிலிருந்து இங்கே சமூக சேவகர்கள் வரை எல்லோரும் கண்டித்த ஒரு விஷயம் பேரையூர் முத்துக்குழிஅம்மன் கோவிலில் நடந்த குழந்தைகளைப் புதைத்து எடுக்கும் குழிமாற்றுத் திருவிழா.

இதன் தாத்பர்யம், ஏன் செய்கிறார்கள், என்பது பற்றி எழுதி இதனை நான் நியாயப்படுத்தப்போவதில்லை. நான் கேட்பது இதுதான். இதனால் ஏதாவது குழந்தைகள் பாதிக்கப்பட்டார்களா ? இதனால் இதுவரை ஏதேனும் குழந்தைகள் இறந்தார்களா ? உடல் ஊனம் அடைந்தார்களா ? அப்படி ஏதும் இதுவரை நடக்கவில்லை என்றால், ஏன் இதனை தடுக்க வேண்டும் ?

இது நடந்ததாகச் செய்தி வந்ததும், உடனே அடுத்த சதித்தடுப்பு வீரர்கள்போல எல்லோரும் கிளம்பிவிட்டார்கள். இதனை தடுக்க சட்டம் வேண்டும் என்று கோரியவர்கள், இத்தோடு இந்த விவாதத்தில் ‘தேவதாசி தடுப்புச் சட்டம் ‘, சதி தடுப்புச் சட்டம் எல்லாவற்றையும் இழுத்துக்கொண்டுவந்துவிட்டார்கள். ஆகவே, அது போலத்தான் இதுவும் என்ற ஒரு பிரமையை உருவாக்கி விட்டார்கள்.

குமுதத்தில் கருத்துக் கேட்டக் கட்டுரையிலும், இந்துப் பத்திரிக்கையில் இதனைக் கண்டித்து எழுதிய கட்டுரையிலும் ஏறத்தாழ ஒரே வரிகள். அநாகரிகம், குழந்தைகள் சித்திரவதை, மனித உரிமை மறுப்பு என்று ஒரேயடியாக எட்டுக்குத் தாண்டுகிறார்கள்.

எந்தக் குழந்தையும் எந்த விதமான உடல் ஊனமும் அடையவில்லை இந்தத் திருவிழாவில்; இன்று மட்டுமல்ல, இதுவரை நடந்த எந்த விழாவிலும், இதனால் குழந்தைகள் ஊனமோ கஷ்டமோ அடைந்ததாக சரித்திரமில்லை என்னும்போது, ஏன் இப்படி இதனைத் தடை செய்யவேண்டும் என்று கேட்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

எனக்கென்னமோ ஒரே ஒரு காரணம்தான் தோன்றுகிறது. இந்து மக்கள் எந்த சமூகப் பழக்க வழக்கங்கள் வைத்திருந்தாலும், அது மேற்கத்திய படிப்பு படித்த மேதாவிகளுக்கு வினோதமாகத் தோன்றினால், அது உடனே ‘தடுக்கவேண்டியது, அநாகரிகம், மனித உரிமை மறுப்பு ‘. அதுவும் கோவிலோடு சம்பந்தப்பட்டு இருந்தால், விமர்சனத்துக்கு கேட்கவே வேண்டாம்.

18ஆம் நூற்றாண்டில், இங்கிலாந்தில், தேவைப்படாத குழந்தைகளை பிளேக்கால் இறந்தவர்களின் போர்வையைக்கொண்டு சுற்றி தேம்ஸ் நதியில் வீசியெறிந்தார்கள் ஆங்கிலேயப் பெற்றோர்கள். அது இந்தியாவின் வளமைகளை இங்கிலாந்து சூறையாடுவதற்கு முன்பு நடந்தது. அது கிறிஸ்தவ கொடுமையாகப் பேசப்படுவதில்லை. அது அன்றைய சமூகத்தின் இயலாமையின் வெளிப்பாடாக ஆகி விடுகிறது. இந்தியாவிலோ, இடது கையால் உப்புப் போட்டால் கூட கடவுளிடம் மன்னிப்புக் கேட்கும் அளவுக்கு வாழ்வும் மதமும் பின்னிப்பிணைந்த சமூகம். அதனால், இது போன்று ஏதாவது நடந்தால் உடனே இந்துமதமே இத்தனைக்கும் காரணம் என்ற ஒரு வாதம். இங்கிலாந்தில் அந்த வழக்கம் போனதற்கும், பெண் குழந்தைகளை கொல்லும் பழக்கம் தமிழ்நாட்டில் இன்னும் இருப்பதற்கும் காரணம் என்ன ? மக்களா, மக்களுக்கு உழைத்து வாழ வாய்ப்பு ஏற்படுத்தித் தராத அரசாங்கமா ? இன்றைக்கு, தமிழ்நாட்டு அரசாங்கத்தின் அடாவடியால், நெசவாளக்குழந்தைகள் பசியினால் இறந்து போயிருக்கின்றன. சுதந்திரத்துக்கு பிறகு முதல் தடவையாக தமிழ்நாட்டில் பட்டினிச் சாவு. அதைப் பற்றி விவாதம் செய்வதை விட்டுவிட்டு, ஒரு கோவிலில் தன் சமூக விழாவுக்காக, குழந்தைகளை புதைத்து எடுக்கும் வழக்கத்தை மனித உரிமை பிரச்னையாகப் பேசும் இந்துப் பத்திரிக்கையையும், மற்றப் பத்திரிக்கைகளையும் என்ன செய்யலாம் ?

பசி வந்திடப் பத்தும் பறந்து போகும். இது என் அனுபவ வார்த்தை. பத்து என்ன, இருக்கும் எல்லாமும் பறந்து போகும். அந்தப் பசியை வைத்துக்கொண்டு, அரசியல் செய்யும் பட்டாடைகளுக்கு, மற்றவர்களுக்கு கஞ்சி காய்ச்சி ஊத்தவும், பிரியாணி போட்டு நக்கல் பண்ணவும்தான் தெரியும். சோபாவில் சாய்ந்து கொண்டு, ரஜினி தம் அடிக்கிறார். இதுவெல்லாமா இளைஞர்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என அரசியலும் பேசும். ஆனால், பசி வரக்கூடாது என்று வேண்டிக்கொள்ளும் ஒரு குடும்பம் எந்த நேர்த்திக்கடனுக்கும் தயாராக இருக்கும். அது ஏஸி அறையில் கணினி முன்னால் உட்கார்ந்துகொண்டு, தேவையில்லாத இடத்தில் மனித உரிமை பிரச்னை கண்டுபிடிக்கும் அறிவுஜீவிகளுக்கு புரியும் என எதிர்பார்க்க முடியுமா ?

***

உடன் கட்டை ஏறுவது என்பது பற்றி விவாதிக்கலாம். உடன் கட்டை ஏறுவது இன்றைக்கு அவசியம் இல்லை. ஆனால் அது என்றென்றும் தவறானதாகவே இருக்குமா ?

சமீபத்தில் சில ஐரோப்பிய நாடுகளில் மெர்ஸி கில்லிங் என்பது சட்டப்பூர்வமாக ஆக்கப்பட்டுள்ளது. இது ‘வளர்ந்த, நாகரிகமடைந்த, செழுமையான, கிரிஸ்தவ, மேற்கத்திய ‘ நாடுகளில்.

மெர்ஸி கில்லிங் என்பது என்ன ? அது ஒரு தற்கொலை இல்லையா ? ஏன் அதனை பல ஐரோப்பிய நாடுகள் அங்கீகரித்திருக்கின்றன ? அனாதரவாக, தொடர்ந்து தன் உயிரைப் பிடித்துவைக்க பண வசதியற்றவர்கள், தொடர்ந்து வலியை அனுபவிக்க முடியாதவர்கள் மெர்ஸி கில்லிங் முறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். அதற்கு மதமோ, சமூகமோ ஒரு தடையாக இல்லை. இதற்கு ‘மனித உரிமை, நாகரிகம் ‘ ஆகியவை தடையாக இல்லை.

வட இந்திய பிரதேசங்களில், விவசாய சமுதாயத்தில், கணவன் இழந்த பெண், அன்றைய சமூக விதிகள் படி அனாதரவாக ஆகி விடுகிறாள். அவள் இருந்து கஷ்டப்படும் பலரைக் கண்டு, இப்படிக் கஷ்டப்படுவதற்கு செத்த கணவனோடேயே போய்ச் சேர்ந்துவிடலாம் என்ற முடிவுக்கு வருகிறாள். இது பலர் எடுக்கும் முடிவுக்குப் பிறகு அது சமூகமே திணிக்கும் விதியாகி, சாக விரும்பாத பெண்ணைக்கூட சிதைக்குள் தள்ளிவிடும் கொடுமையாகி விடுகிறது. இப்படித்தான் எல்லா விவசாய சமுதாயங்களிலும் சமூக விதிகள் உருவாக்கப்படுகின்றன. இந்தியாவில் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலும் இப்படித்தான் சமூக விதிகள் உருவாக்கப்படுகின்றன.

வாழ்வின் முடிவில் ஆண்டு அனுபவித்து, தன் சந்ததிகளை உருவாக்கிக் கொடுத்துவிட்டு கடமை முடிந்ததென்று ஒரு முது மாது சமீபத்தில் தன் 70 வயதில் தன் இறந்து போன கணவனுடன் உடன் கட்டை ஏறினாள். இது போன்று ராஜஸ்தானில் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தபின்னர், அதே போல மத்தியபிரதேசத்தில் நடந்திருக்கிறது. அது உடன்கட்டை என எல்லாப் பத்திரிக்கைகளும் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இளம் வயதில், தன்னுடைய சந்ததி உற்பத்தி செய்யும் உரிமையை (reproductive rights) துறந்தோ, துறக்க வைக்கப்பட்டோ கன்யாஸ்திரிகளாக ஆகும் பெண்களுக்கும், சாமியார்களாக ஆகும் ஆண்களுக்கும் மனித உரிமை மறுப்பு பற்றி பேச யாரும் இல்லை. பல கிரிஸ்தவ குடும்பங்களில் ஒரு ஆண் அல்லது ஒரு பெண் சாமியார் வேலைக்கு என்று கட்டாயம் இருப்பதால் பல இளம்வயதினர் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இது உண்மை. இது அநாகரிகம் இல்லை. இது மனித உரிமை மறுப்பு இல்லை. ஏனெனில் இந்தப் பழக்கம் நாகரிகம் அடைந்த மேற்கத்திய நாடுகளிலிருந்து வந்தது. இது தன்னலமற்ற தியாகம். ஒரு பெண் உடன் கட்டை ஏறினால் அது தன்னலமற்ற தியாகம் அல்ல, அநாகரிகம்.

***

லக்னவ் நகரத்தில் வருடாவருடம் மொஹர்ரம் பண்டிகை நடக்கிறது. பலர் குறிப்பிட்டது போலவே இதில் பல ஆண்கள் திறந்த மார்போடு, தன்னை சாட்டையால் அடித்துக்கொண்டும், கத்திகளால் கீறிக்கொண்டும் செல்கிறார்கள். இமாம் அலி அவர்களின் மறைவுக்கு அழுகிறார்கள்.

இதில் பங்கு பெறுபவர்கள் எல்லோருமே மேஜர் ஆன ஆண்கள் அல்லர். சிறுவர்களும் குழந்தைகளும் கூட இதில் பங்கு பெறுகிறார்கள். பிளேடால் கீறிக்கொள்கிறார்கள். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் தலையில் பிளேடால் ரத்தம் வர கீறுகிறார்கள்.

இதே போல முருகனுக்கு வேண்டிக்கொள்ளும் பலர் அலகு குத்திக்கொள்கிறார்கள். சிறுவர்கள் கூட அலகு குத்திக்கொள்கிறார்கள்.

எனக்கு மொஹர்ரம் பண்டிகையன்று காயப்படுத்திக்கொள்பவர்களின் உடலில் காயம் எப்படிப்பட்டது என்பதைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், முருகனுக்கு அலகு குத்திக்கொள்பவர்களின் உடலில் அது ஒரு வடுவைக் கூட ஏற்படுத்துவதில்லை. அப்படி இருக்கும்போது, ஏன் அதனைத் தடை செய்வதைப் பற்றிப் பேச வேண்டும் ? இதே ரீதியில் போனால், அதனையும் தடை செய்யச் சட்டம் வேண்டுவார்கள் இந்துப்பத்திரிக்கையினரும் குமுதம் பத்திரிக்கையினரும்.

இப்படிப்பட்ட வேண்டுதல்களால் பெரும் காயங்களும், இறப்புகளும் நடந்தால், அதனைத் தடை செய்ய கோரிக்கை வைத்தால், பலரும் ஆதரிப்பார்கள். ஆனால், இந்துக்கள் செய்தால் மட்டும் தவறு என்று சொல்லிவிட்டு, மற்றவர்கள் செய்தால் அது நாகரிகம், பண்பாடு, தன்னலமற்ற தியாகம், சிறுபான்மையினர் உரிமை, இன்ன பிற வார்த்தைக்கள் போட்டு அதனை நியாயப்படுத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உதாரணம் கலைஞர் மு.கருணாநிதி, தலித் அமைச்சர் கலந்து கொண்ட, தீமிதி விழாவை காட்டுமிராண்டித்தனம் என்று சொன்னது. தீ மிதி விழா இந்துக்கள் மட்டும் செய்யும் விழா அல்ல. சுவாதிமுத்யம் என்ற படத்தில் கமல் தீமிதிப்பது இஸ்லாமியர்கள் செய்யும் தீமிதி விழாவில்.

பல வருடங்களுக்கு முன்னர், கர்னாடகாவில் இருக்கும் ஒரு அம்மன் கோவிலில் பெண்களும் ஆண்களும் நிர்வாணமாக வலம் வந்து நேர்த்தி செய்துகொள்கிறார்கள் என்று ஒரு செய்தி வந்தது. உடனே எல்லாப் பத்திரிக்கைகளும், சமூக சேவகர்களும் இந்த கோவில் வழக்கத்துள் பாய்ந்து அங்கு நேர்த்தி செய்து கொண்டிருந்தவர்களை போட்டோ எடுத்து உலகெங்கும் பரப்பி, இந்து மதத்தின் அவலத்தை கேலி செய்தார்கள். இதேதான் கும்பமேளாவில் கலந்து கொள்ள வரும் நாகா நிர்வாண சாமியார்களுக்கும் நடந்தது. அதையே கவனியுங்கள். ஜைன சாமியார்கள் அப்படி கிண்டல் செய்யப்படுவதில்லை. கிண்டல் செய்யப்பட்டாலும் சற்று குறைவாக கிண்டல் செய்யப்படுவார்கள். ஆனால், அமெரிக்காவிலும் மற்ற மேற்கத்தைய நாடுகளிலும் இருக்கும் நிர்வாண கடற்கரைகள், டிரஸ்ஸிங் ஆப்ஷனல் கடற்கரைகள், நம் பெரியார் நிர்வாண கடற்கரையில் நிர்வாணமாக நின்றது எல்லாம் முற்போக்கின் அறிகுறிகள். அவைகள் அப்படி கேவலப்படுத்தப்படுவதில்லை. அது சிலருக்கு வெளிப்படையாகவே ஆதர்சம் ஆகிவிடுகிறது.

இந்த நேர்த்திக்கடன் செய்பவர்கள், மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் ஏதோ அவர்கள் வழக்கப்படி செய்து கொண்டிருந்தால், இவர்களுக்கு என்ன போச்சு ? இந்து மதத்தோடு இணைந்திருப்பதுதான் ஒரே பிரச்னையா ? யார் எப்படி தங்கள் கடவுளை வழிபடவேண்டும் என மற்றவர்கள் சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது ? இன்னும் கொஞ்சம் போனால், இந்துக்கள் தங்கள் அழகைக் கெடுத்துக்கொள்கிறார்கள் என்று மொட்டை அடிப்பதைக் கூட மனித உரிமை பிரச்னையாக்கி பேசுவார்கள்.

***

ஒரு சமூகத்தினரின் பழக்கவழக்கத்தில் அரசு தலையிடுவது என்பது மிகவும் யோசித்துச் செய்யவேண்டிய விஷயம். வைஸ்ராய்கள் தங்கள் ஆயுத வலிமை மூலம் ஆண்ட காலத்தில் மக்களின் பழக்க வழக்கங்களில் தலையிட்டு இந்தியர்களை ‘நாகரிகப்படுத்திய ‘ காலம் போய் விட்டது. சொல்லப்போனால், துப்பாக்கியில் பன்றிக்கொழுப்பையும் பசுக்கொழுப்பையும் தடவியதால் நடந்த சிப்பாய்க் கலவரத்துக்கு பின்னரே அது போய்விட்டது. இன்று மக்களே தங்களை ஆண்டு கொள்ளும் குடியாட்சி. தேவையின்றி இன்று மக்களின் பழக்க வழக்கங்களை கொச்சைப்படுத்தும் அரசுகள் தூக்கி எறியப்படும் அடுத்த தேர்தலில்.

ஒரு சமூகத்தின் பழக்க வழக்கங்கள் என்பதாலேயே, எந்த விதக்கொடுமையையும் சகித்துக்கொள்ளவேண்டும் என்பது பொருளல்ல. பெண் சிசுக்கொலையை தடுக்க வேண்டும் என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது. ஆனால், எப்படித் தடுக்க வேண்டும் என்பதில் பல கருத்துக்கள் இருக்கக்கூடும்.

இன்றைக்கு, குழந்தை திருமணங்கள் தடுக்கப்படவேண்டும் என்பதிலும் இரண்டு கருத்து இருக்க முடியாது. அது முஸ்லீம் குழந்தைகளாக இருந்தாலும் இந்துக் குழந்தைகளாக இருந்தாலும். எப்படித் தடுக்கப்பட வேண்டும் என்பதில் பல கருத்துகள் இருக்கக்கூடும்.

***

இறுதியாக…

இந்த குழிமாற்றுத் திருவிழாவினால் எந்த குழந்தையாவது ஊனம் அடைந்திருந்தால், இந்த பழக்கத்தை தடை செய்யவோ, அல்லது ஊனம் அடையாமல் இதே திருவிழா முறையை மாற்றவோ கோரலாம். ஆனால், குழந்தைகள் எந்தவிதப் பாதிப்பும் அடையாத சமயத்தில், இதனை ‘ குழந்தைகள் கொலை விழா ‘ என எழுதி, இதனைத் தடை செய்யக்கோருவது அபத்தமானது.

***

karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்