குறிப்புகள் சில – 28 ஆகஸ்ட் 2003 தி ஹிந்து-குளிர் பானங்கள்-வணிக முத்திரை,பதிப்புரிமையும் கருத்துச்சுதந்திரமும்

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


125 ஆண்டுகளை எட்டியிருக்கும் தி ஹிந்துவில் சமீபத்தில் கடந்த கால செயல்பாடுகள், நிகழ்கால சவால்கள், எதிர்கால கண்ணோட்டம் குறித்து விரிவாக ஒரு தலையங்கம் வெளியாயிருந்தது. இது N.ராம் எழுதியது என யூகிக்கமுடிகிறது. கடந்த 10/15 ஆண்டுகளில் இந்நாளிதழில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பழைமைவாத நாளிதழ் எனக் கருதப்பட்ட தி ஹிந்து இப்போது இடதுசாரி சார்புடைய தாரளவாத நாளிதழாக உள்ளது என்பது மிகையாகாது. அதே சமயம் ஈழப் பிரச்சினை, சீனா-திபெத் குறித்த அதன் நிலைப்பாடுகள் சர்ச்சைக்குரியவை.போபார்ஸ் விவகாரத்தில் ஒரு காலகட்டத்தில் தி ஹிந்து சிறப்பாகச் செயல்பட்டு உண்மைகளை வெளிக்கொண்டுவந்தது. கெயில் ஒம்வேத், காஞ்சா இலையா போன்ற தலித் சிந்தனையாளர்கள் தொடர்ந்து எழுத வாய்ப்பளிப்பதுடன், தலித்களின் பிரச்சினககளில் தொடர்ந்து அக்கறை காட்டுகிறது.டர்பன் மாநாடு குறித்த விவாதங்கள், சாய்நாத் எழுதிய தொடர்கட்டுரைகள் இதற்கு சான்று. இந்தியாவின் மிகச்சிறந்த சிந்தனையாளர்கள்/சமூக அறிவியல் அறிஞர்கள் தி ஹிந்துவில் எழுதுவதும், மாறுபட்ட கருத்துக்கள் இடம் பெறுவதும் குறிப்பிடத்தக்கது. அதே சமயம் புத்தக மதிப்புரைப் பகுதி மிகச் சாதரணமாக உள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் டைம்ஸ் ஆப் இந்தியா தன்னை மாற்றிக் கொண்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் பழைய சிறப்பை இன்னும் திரும்பபெறமுடியவில்லை, 80 களில் இருந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் வேறு, இன்று உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் வேறு. டைம்ஸ் ஆப் இந்தியாவும், தி ஹிந்துவும் கடந்த 10 ஆண்டுகளில் வேறு வேறு திசைகளில் பயணித்தன.150 ஆண்டுகள் கண்ட டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு புதுவித பத்திரிகை தர்மத்தை நடைமுறைப்படுத்தியது. இது குறித்து சர்ச்சைகள் எழுந்தன.வணிகரீதியில் டைம்ஸ் வெற்றி கண்டது. ADVERTORIAL,INFOTAINMENT போன்ற புதிய கருத்துகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.பத்திரிகையாளரின் பணி மறுவரையறை செய்யப்பட்டது. (இதை ஏற்காத பலர் டைம்ஸிலிருந்து விலகினர்).femina புது அவதாரம் எடுத்தது இதற்கு ஒரு உதாரணம்.பத்திரிகையாசிரியர் அழகிப்போட்டியில் பங்குவகிப்பது அப்பத்திரிகையாசிரியத் தொழிலின் ஒரு பகுதியானது.

இத்தலையங்கம் தனக்கான முன்மாதிரியை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டது.அதே சமயம் போட்டிகளையும் எதிர் நோக்கத் தயார் என்பதையும் தெளிவாகக்காட்டிவிட்டது. டைம்ஸ் ஆப் இந்தியா சென்னைப் பதிப்பு வெளியானால் அது தி ஹிந்துவிற்கு ஒரு போட்டி நாளிதழ் -அனைத்து விதத்திலும். இது எக்ஸ்பிரஸின் விற்பனையையும் ஒரளவு பாதிக்கும்.இன்று இந்தியாவின் மிகச்சிறப்பான ஆங்கில நாளேடு தி ஹிந்து என்றால் அது மிகையாகாது.ஒரு தாரளவாத,பத்திரிகைத் தொழிலின் தார்மீக நெறிகளை கையாளுகின்ற,சமூக அக்கறை கொண்ட ஒரு நாளிதழ் எப்போதும் தேவை.இன்று ஹிந்து அப்பணியினைச் நன்றாகவே செய்துவருகிறது. வரவிருக்கும் மாற்றங்கள் ஹிந்துவை நாளிதழ் என்ற ரீதியில் வளப்படுத்துவதுடன், வலுப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.இந்தத் தலையங்கம் அது சாத்தியம் என்ற நம்பிக்கையினைத் தருகிறது. ‘மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு ‘ வின் புதிய ‘அவதாரம் ‘ எப்படியிருக்கும் என்ற கேள்விக்கு விரைவில் பதில் தெரியலாம்.


குளிர்பானங்கள் குறித்த அரசின் அறிக்கை முழுமையாக வெளியாவில்லை.அரசின் அறிக்கையும், அறிவிப்பும் ஏமாற்றமளிக்கின்றன.பாராளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கை வெளியாகும் போது சில விஷயங்கள் தெளிவாகலாம். CSE வெளியிட்ட ஆய்வு முடிவுகள் மாலத்தியான் இருப்பதைக் காட்டுகின்றன, ஆனால் அரசின் அறிக்கை அவ்வாறில்லை என்கிறது.இது குறித்து சுனிதா நாராயண் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதற்கு அரசு பதில் தர வேண்டும்.குளிர் பானங்கள் குடிக்க பாதுககாப்பானவையா,அவற்றால் உடலுக்குத் தீங்கு வராதா என்று கேள்வி கேட்டால் பாலில் கூட DDT எச்சங்கள் உள்ளன எனப்பதில் வருகிறது. ஒர்வெல்லின் Inside the Whale தான் எனக்கு இதைப்படித்ததும் நினைவிற்க்கு வந்தது.

இந்தப்பிண்ணணியில் உச்சநீதிமன்றம் முன் உள்ள குடிநீரின் தரம் குறித்த வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது.இது குறித்த விபரங்கள் அதிர்ச்சி தருகின்றன. நீங்கள் வண்டி ஒட்டி விபத்து ஏற்படுத்தி ஒருவர் பாதிக்கப்பட்டால் சட்டப்படி உங்கள் மீது வழக்குத் தொடரலாம், பாதிக்கப்பட்டவர் நஷ்ட ஈடு கோரலாம். ஆனால் தரமற்ற, உடலுக்கு ஊறு விளைவிக்கும் குடிநீர் அரசு/உள்ளாட்சி அமைப்புகள் தந்தால் அவ்வாறு செய்ய இடமுண்டா என்ற கேளிவி எழுகிறது.சில சட்டங்கள் முடியாது என்கின்றன. இது போன்ற பல கேள்விகளுக்கு இவ்வழக்கில் பதில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

இவ்விஷயத்தில் CSE ஆய்வு செய்தபின்னே அரசுகள் அக்கறை காட்டுகின்றன. CSE ன் முயற்சி ஒரு துவக்கம்தான், நுகர்வோர் அமைப்புகள் இதில் மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும், பிற நாடுகளில் உள்ள தரக்கட்டுப்பாடு,உணவுப் பொருட்கள் குறித்த விதிமுறைகள்,ஒழுங்குபடுத்தும் அமைப்புகள் குறித்து தகவல்கள் திரட்டுவதுடன், அமெரிக்கா, ஐரோப்பாவில் இப்பிரச்சினைகள் எப்படி கையாளப்பட்டுள்ளன என்பதையும் கண்டறிய வேண்டும்.


Fair and balanced என்ற தொடர் FOX CABLE NEWSன் விளம்பர வாசகமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த வணிகமுத்திரை(trademark) ‘Lies And the Lying Liars Who Tell Them: A Fair and Balanced Look at the Right என்ற நூலின் தலைப்பில் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த FOX NEWS பின் அதை விலக்கிக் கொண்டது.இந்நூலின் தலைப்பு வாசகர்கள் இதை FOX NEWS endorse செய்ததாக கருதி குழப்படமையக்கூடும் என்றும், FOX NEWS ன் anchor Bill O ‘Reilly யின் புகைப்படமும் நூலின் அட்டையில் இடம்பெற்றுள்ளதால் குழப்பம் ஏற்படும் என வாதிட்டது.இதை ஏற்க மறுத்த நீதிபதி டென்னி சின் குழப்பம் இல்லை என்றதுடன பகடி(parody) அமெரிக்க அரசியல்சட்டத்தின் முதல் திருத்த்தின்படி பாதுகாக்கப்படும் ஒன்று என்றார்.Bill O ‘Reilly யின் புகைப்படம் தவிர வேறுசிலர் புகைப்படங்களும் அட்டையில் இடம் பெற்றிருந்தன.

இதையும் அவர் சுட்டிக்காட்டினார்.வழக்கை விலக்கிக் கொண்டது என்றாலும் இது போன்ற வழக்குகள் கருத்து சுதந்திரம், குறிப்பாக பகடி செய்வது, பிறருடைய படைப்புகளை பகடி செய்ய/இணை அல்லது எதிர் படைப்புகள் உருவாக்க பயன்படுத்துவது குறித்து கேள்விகளை எழுப்புகின்றன. பதிப்புரிமை(copyright) காலம் முடிவுற்ற, பொதுக்களனில்(public domain) உள்ள படைப்புகளை பகடி பண்ணுவது சட்டரீதியாக பிரச்சினைக்கு அப்பாற்பட்டது, அதில் வேறு பிரச்சினைக்குரிய அம்சங்கள் இருந்தால் ஒழிய. ஆனால் பதிப்புரிமைக் காலம் முடிவுறாத படைப்புகளை பகடி செய்து எதிர்-மாற்று-இணைப் பிரதிகள்/படைப்புகள் உருவாக்குவதை தடைசெய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது புதிதல்ல.இது குறித்து அடுத்த வாரக்குறிப்பில் விளக்குகிறேன். Bill O ‘Reilly நடத்தும் நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற் ஒரு நிகழச்சியின் முன்னோடி. அது எதுவென உங்களால் யூகிக்க முடிகிறதா ?

***

ravisrinivas@rediffmail.com

Series Navigation