குறிப்புகள் சில 10 அக்டோபர் 2003 (ஷிரீன் இபாதி– பெளத்தம் மனம் அறிவியல்-நகலாக்கம் சர்வதேச ஒப்பந்த முயற்சி)

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


ஷிரீன் இபாதி– பெளத்தம் மனம் அறிவியல்-நகலாக்கம் சர்வதேச ஒப்பந்த முயற்சி

ஷிரீன் இபாதி என்ற ஒரு மனித உரிமைப் போராளிக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. இது இஸ்லாமிய நாடுகளில் உள்ள மனித உரிமைப் போராளிகளுக்கு கிடைத்த அங்கீகாரம். போப்பை விட இத்தகையோருக்க்கு இப்பரிசு கிடைப்பது பொருத்தமானது.திருச்சபை இன்னும் கருத்தடையை ஒரு உரிமையாகப் பார்க்க மறுக்கிறது.பலவற்றில் காலத்திற்கு ஒவ்வாத,பிற்போக்கு கருத்துக்களுக்கே ஆதரவு தெரிவித்து வருகிறது. லெச் வலேசா போன்றவர்கள் நோபல் அமைதிப் பரிசு போப்பிற்கு கிடைக்கவில்லை என வருந்தலாம். வலேசா,வகலாவ் ஹவேல் போன்றோர் ஒரு காலத்தில் எதேச்சதிகார அரசுகளை எதிர்த்தார்கள், அந்த அளவில் அவர்கள் பாரட்டிற்குறியவர்கள். ஆனால் இவர்களில் பலர் அமெரிக்காவின் மனித உரிமை மீறல்களை, சர்வாதிகார அரசுகளுக்கு அமெரிக்கா தந்த ஆதரவை விமர்சிக்கவில்லை.

லத்தின் அமெரிக்காவில் அமெரிக்கா ஆதரவுடன் செய்யப்பட்ட வன்முறைகளை எதிர்க்கவில்லை.இஸ்லாம்,இஸ்லாமிய நாடுகள்/சமூகம் குறித்து தவறான பிரச்சாரம் செய்யப்பட்டுவரும் போது, பயங்கரவாத முத்திரை இஸ்லாமியர்கள் மீது குத்தப்படும் இக்காலத்தில் இப்பரிசு வழங்கியதன் மூலம் ஷிரீன் போன்றோர் செய்து வரும் பணியின் முக்கியத்துவத்தை நோபல் பரிசுக் குழு இப்பரிசின் மூலம் அங்கீகரித்துள்ளது. இஸ்லாமிய சட்டங்களின் கீழ் வாழும் பெண்கள் என்ற கூட்டமைப்பு பல நாடுகளில் இஸ்லாத்தின் பெயரில் பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து, மனித உரிமைகள் இஸ்லாத்திற்கு விரோதாமானவை அல்ல என்று போராடி வருகிறது. ஷிரீன் செய்து வரும் பணியும் அத்தகையதே. இவ்வமைப்பு குறித்து மாதவி சுந்தர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் விரிவாகக் குறிப்பிட்டிருந்தார். இஸ்லாமிய சமூகங்களில் உள்ள மாற்று சிந்தனையாளர்கள் குறித்து சூசன் பக் மார்ஸ் சமீபத்தில் எழுதிய நூலில் விரிவான விவாதம் உள்ளது.


பெளத்த தியான முறைகள்,மனப்பயிற்சி முறைகள் குறித்து பல துறைகளைச் சேர்ந்த ஒரு குழு சில ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறது.இதில் பல ஆண்டுகள் இதில் பயிற்சி பெற்ற ஒரு விஞ்ஞானியும் உள்ளார். தலாய்லாமா இதை ஆதரிக்கிறார், தொடர்ந்து இவர்களுடன் விவாதிக்கிறார்.இது குறித்த ஒரு கட்டுரை Science ல் வெளியாகியுள்ளது.BUDDHISM AND NEUROSCIENCE:Studying the Well-Trained MindMarcia Barinaga Volume 302, Number 5642, Issue of 3 Oct 2003, pp. 44-46.

Mind and Life Institute என்ற அமைப்பினை நிறுவிய (அமரர்) வரேலா இத்தகைய ஆய்வுகளின் தேவையை வலியுறுத்தியவர்.cognitive sciences துறையில் முக்கியமான பங்களிப்புகள் செய்தவர்.இவ்வாராய்ச்சிகள் பல ஆண்டுகளாக தொடர்பவை.இங்கு பெளத்தமும்,நவீன அறிவியலும் சில கேள்விகளுக்கு விடைகாண முயல்கின்றன. இவ்வாய்வுகள் குறித்த ஒரு நூலில் சில பகுதிகளை சமீபத்தில் படித்தேன்.

மனித மூளையில் உள்ள நியுரான்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமா, தியானம் ஒருவரின் ஒட்டுமொத்த மனவளர்ச்சியில் மாறுதல்களை விளைவிக்குமா போன்ற கேள்விகள் இதில் விவாதிக்கப்படுகின்றன. விடைகள் அனைத்தும் எங்களிடம் உள்ளது என்று யாரும் கூறவில்லை.ஒரு தேடல் இது என்றுதான் கூறுகிறார்கள்.

இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது அறிவியலை விட பெளத்தமே உயர்ந்தது என்ற கோணத்திலோ அல்லது பெளத்த சிந்தனைகளுக்கு அறிவியல் மூலம்தான் நிரூபணம் தரமுடியும் என்ற கோணத்திலோ இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்படுவதில்லை. அறிவியல் மீது அசட்டுத்தனமாக விமர்சனம் வைப்போர் கவனிக்க வேண்டிய விஷயம் இது.


நகலாக்கம் குறித்த சர்வதேச ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் கருத்தொற்றுமை ஏற்படத்தால் முறிந்து விட்டன. கோஸ்டா ரிக்கா,அமெரிக்க உட்பட நாற்பது நாடுகள் முழுமையான தடை வேண்டுமென வாதிட்டன,ஆனால் பிரிட்டன்,சீனா, பிரேசில் உட்பட 14 நாடுகள் இனபெருக்க நகலாக்கத்தினை தடை செய்யலாம், சிகிச்சைக்கான நகலாக்கம் குறித்து முடிவெடுப்பதை சம்பந்தப்பட்ட நாடுகள்தான் தீர்மானிக்க வேண்டும், உலகாளவிய தடை பொருத்தமற்றது என்று வாதிட்டன. எனவே ஒரு ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பின்றிப் போனது.தார்மீக ரீதியில் சிகிச்சைக்கான நகலாக்கம் சரியா தவறா என்பது குறித்து பல கருத்துக்கள் உள்ள நிலையில் 14 நாடுகளின் வாதம் நியாயமானது. எனவே தற்காலிகமாக தீர்வு ஏதும் இல்லை. ஆனால் விரைவில் இது குறித்து நாடுகள் ஒரு முடிவிற்கு வருமா என்பது கேள்விக்குறி.

ravisrinivas@rediffmail.com

Series Navigation