குறிப்புகள் சில- நவம்பர் 13 2003

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


வீரமணி,பகுத்தறிவு, மூடநம்பிக்கை-நகலாக்கம்-பொருளாதார இறையாண்மை, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், உலக வர்த்தக அமைப்பு

ஹிந்துவின் மீதான உரிமைப் பிரச்சினை விவகாரத்தில் வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை சுவாரஸ்யமாக உள்ளது. http://www.viduthalai.com/20031108v.html இதிலிருந்து பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரம் குறித்து அவர் வைத்திருக்கும் கருத்து என்ன என்பது தெரிகிறது.உண்மையில் கேள்வி பதில் பகுதியில் அரசு ஊழியர் போராட்டம் குறித்த அவர் பதில், modern rationalist இதழில் முன்னாள் நீதிபதி வேணுகோபாலின் கட்டுரை இவற்றைப் படித்தால் ஜெயலலிதா தமிழ்நாட்டில் அவசர நிலை பிரகடனம் கொண்டு வந்தால் முதலில் வரவேற்பது தி.க வாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.ஜெயலலிதா தலைமையில் உள்ள அரசுக்கு மட்டும் அந்த உரிமையைத் தரவேண்டும் என்று கூட வீரமணி கோரலாம்.more loyal than the king(or queen) என்பது வீரமணிக்கு பொருந்தும், அத்தகைய விசுவாசி அவர்.தேசப்பற்று என்பதையே கேள்விக்குள்ளாக்கியவர் பெரியார். ஆட்சியாளர்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் வீரமணி காட்டும் அக்கரை அலாதியானது.ஒருவேளை உச்ச நீதிமன்றம் அரசு ஊழியர் வேலை நிறுத்தம் செய்வது அடிப்படை உரிமை என்று தீர்ப்பளித்தால் அது சமூக நீதிக்கு எதிரானது என வீரமணி அறிக்கை விடக்க்கூடும்.சட்டசபை நிலைத்து நிற்கும், ஆட்சி மாறும் .சட்டசபை இல்லாமல் ஒரு கட்சி ஆள முடியாது.எனவே சபையின் மாண்பும்,பணியும் முக்கியமானவை.ஆட்சியின் நடவடிக்கைகளை சட்ட மன்றம் விவாதிப்பது ஜனநாயகத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று.சட்ட மன்ற ஒப்புதல் பலவற்றிற்குத் தேவை.ஆனால் வீரமணிக்கோ ‘சட்டமன்றப் பெருமைகளைக் காக்கும் அதே நேரத்தில் இந்த ஆட்சியின் பெருமை அதை விட முக்கியம் ‘. இது பகுத்தறிவின் வெளிப்பாடா அல்லது மூடநம்பிக்கையின் வெளிப்பாடா ?.


நகலாக்கம் குறித்த ஒரு சர்வதேச ஒப்பந்தம் குறித்து இரண்டு ஆண்டுகள் கழிந்த பின் பரீசிலிக்கப்படும். இது குறித்த வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 80 ஒட்டுகள், எதிராக 79 ஒட்டுகள் விழுந்தன.15 நாடுகள் ஒட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.மனித இனப்பெருக்கத்திற்கான நகலாக்கம் மீது மட்டும் தடை என்ற தீர்மானத்தை கோஸ்டா ரிக்கா, அமெரிக்கா கொண்டு வந்திருந்தால் அது நிறைவேறியிருக்கும்.ஆனால் அனைத்து வகை நகலாக்க முயற்சிகளுக்கும் தடை என்று கோரியதால் இரான் கொண்டு வந்த மேற்கூறிய தீர்மானம் வெற்றி பெற்றது.இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு அனைத்து வகை நகலாகத்திற்கும் தடை என்பதை ஏற்கவில்லை.பல நாடுகள் நகலாக்கம் குறித்து முடிவெடுக்க அவகாசம் தேவை என்று கருதுகின்றன. இஸ்லாமிய கோட்பாடுகள் சிகிச்சைக்கான நகலாக்கத்திற்கு எதிரானவை அல்ல என்ற கருத்தை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு ஏற்றதால் அவை ஒட்டு மொத்ததடையை எதிர்த்தன. இரண்டு ஆண்டுகள் கழித்தும் இதே கருத்து வேறுபாடுகள் இருக்கும்.திருச்சபை தன் கருத்தினை மாற்றிக் கொள்ளாது. எனவே இந்த சர்ச்சைக்கு தீர்வு மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று விரும்பினால் கருத்தொற்றுமை ஏற்படாது.


அமெரிக்கா ஒரு சிலவகை இரும்புப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு முரணானது என்று அந்த அமைப்பின் மேல்முறையீட்டு அமைப்பு கூறியுள்ளது.இதனால் அமெரிக்கா தன் கொள்கையை மாற்றாவிட்டால் ஐரோப்பிய யூனியன் பதிலடி தரமுடியும். $2.2 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்க ஏற்றுமதிப் பொருட்களின் மீது இறக்குமதி வரியை அதிகரிக்க முடியும் அல்லது கட்டுப்பாடுகள் விதிக்க முடியும். ஏற்கனேவே அமெரிக்காவிற்கு எதிரான ஒரு வழக்கில் ஐரோப்பிய யூனியனிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அமெரிக்க நிறுவனங்கள் ஏற்றுமதி செய்தால் தரப்படும் சில சலுகைகள் ஏற்கக் கூடியவை அல்ல என்று W.T.O வின் மேல்முறையீட்டு அமைப்பு கூறிவிட்டது. இது குறித்த சட்டதிருத்தம் 2004 மார்ச்சிற்குள் நிறைவேற்றப்பட்டாவிட்டால் ஐரோப்பிய யூனியன் பதிலடி தரலாம்.

அமெரிக்காவின் இரும்புத் தொழிலைக் காக்க புஷ் இந்த இறக்குமதி வரியை அதிகரித்தார்.இது மூன்றாண்டுகளுக்கு அமுலில் இருக்கும். பென்சில்வேனியா, ஒஹையோ, வர்ஜினியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலையையும் இது காக்கும். ஆனால் இது தீர்வல்ல, ஏனெனில் அமெரிக்க இரும்புத் தொழில் எதிர் நோக்கும் பிரச்சினைகள் வேறு என்று கருதப்படுகிறது. ஜப்பான், பிரேசில், ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் அமெரிக்க நிறுவனங்களால் போட்டி போட முடியவில்லை. ஜப்பான் தன் தொழில் நுட்பத்தை மேம்படுத்தியுள்ளது. அதால் மூலப்பொருட்களை இறக்குமதி செய்து உற்பத்தி செய்து சர்வதேச சந்தையில் போட்டி போட முடிகிறது.பிற நாடுகளுக்கு வேறு சில அம்சங்கள் (உ-ம் தொழிலாளர் ஊதியம்) சாதகமாக உள்ளன. இறக்குமதி வரி அதிகரிப்பால் அமெரிக்காவில் உள்ள நுகர்வோர் சர்வதேச சந்தை விலையை விட 30% அதிகமாகக் கொடுத்து இவற்றை வாங்க வேண்டியுள்ளது.ஒரு காலத்தில் அமெரிக்க இத்தொழிலில் உலகில் முதலிடத்தில் இருந்தது.

உலக வர்த்தக அமைப்பின் விதிகளின்படி மேல்முறையீட்டு அமைப்பின் தீர்ப்பு இறுதியானது. இதனை ஏற்க மறுத்தால் எந்த நாட்டிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டதோ அது பதிலடி(retaliatory) நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.இந்தியா தன் உரிமங்கள் சட்டத்தை உலக வர்த்தக அமைப்பின் அறிவு சார் சொத்துரிமைவிதிகளுக்கொப்ப மாற்றவில்லை என்று அமெரிக்க கொடுத்த புகாரில் அமெரிக்கா கூறுவது நியாயம் என்று மேல்முறையீட்டு அமைப்பின் தீர்ப்பு கூறியது.இதை மதித்து மாற்றங்களை கொண்டு வராவிட்டால் அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதிகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால் இந்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. உள் நாட்டு எதிர்ப்பையும் மீறி அரசு இதைத் செய்தது. இது குறித்து பல கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன (உ-ம் ‘Challenging Sovereignty: India,TRIPS, and the WTO ‘ by U.Camen, C.Norchi in How Governments Respond:Sovereignty Under Challenge (Eds) J.D.Montgomery,N.Glazer, Transaction Publishers 2002)

நாடுகளின் பொருளாதார இறையாண்மைக்கு உலக வர்த்தக அமைப்பின் விதிகள் சில வரையரைகளை விதிக்கின்றன.உள் நாட்டு தொழில் பாதுகாப்பா அல்லது சர்வதேச விதிகளை மதிப்பதா என்ற பிரச்சினை இப்போது புஷ் முன் உள்ளது. 2004ல் வரவிருக்கும் தேர்தலையும் அவர் கருத்தில் கொண்டாக வேண்டும். இரும்புத் தொழிலில் வேலை இழப்பு அம்மாநிலங்களின் அவருக்கு கிடைக்கும் ஒட்டுகளை பாதிக்கும்.ஐரோப்பிய யூனியனுடன் வணிக ரீதியில் நல்லுறவும் தேவை. எனவே தீர்வுகாண்பது எளிதல்ல என்பதே யதார்த்தம்.


ravisrinivas@rediffmail.com

Series Navigation