குறிப்புகள் சில (ஜூன் 7, 2003)

This entry is part [part not set] of 34 in the series 20030607_Issue

k.ரவி ஸ்ரீநிவாஸ்


மீண்டும் வானொலி மிகவும் பிரபலமாகி உள்ளது.வானொலியில் தனியார் முதலீடு பெருமளவு அதிகரித்துள்ளது.ஆனால் வானொலி என்பது வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டுமா, அதில் அரசு,தனியார் துறை என்பது தவிர பிற சாத்தியக்கூறுகள் கிடையாதா போன்ற கேள்விகள் எழுகின்றன.ஆனந்த விகடனில் சுஜாதா சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.Frontlineல் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. இந்த வார EPW (www.epw.org.in) வில் சில முக்கியமான கட்டுரைகள் உள்ளன.இவை வானொலியில் வேறு பல சாத்தியப்பாடுகள் உள்ளதை சுட்டிக்காட்டுகின்றன. சிறிய நாடுகள் கூட இதில் பல வித்தியாசமான முயற்சிகளை செய்துள்ளன.இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கான வானொலிச் சேவை தவிர தேசிய அளவில் ஒரு பொது வானொலிச் சேவை தேவை.இது அரசு சாராத, அதே சமயம் வணிகமயமாகாத ஒன்றாக இருக்க வேண்டும். அமெரிக்காவில் உள்ள National Public Radio போன்றதாக இருக்கலாம்.

வானொலி பற்றிய கட்டுரைகள்,நூல்களில் உள்ள கருத்துக்களைத் தொகுத்து ஒரு சிறப்பான கட்டுரையை எந்த சிறு பத்திரிகை வெளியிடப் போகிறது ?

****

இந்தியா டுடேயின் ஆசியருக்கு தமிழ் எழுத்தாளர்கள் அனுப்பிய கடிதத்தை இணையத்தில் படித்தேன். கவிதாசரண் மே இதழில் உள்ளது.http://www.geocities.com/kavithaasaran/

கடிதம் இன்னும் அழுத்தம் திருத்தமாக,தெளிவாக இருந்திருக்க வேண்டும்.பேட்டை என்றால் ghetto என்று யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை.அப்படியானால் ராயப்பேட்டை என்பதை rayaghetto என்றா ஆங்கிலத்தில் குறிப்பிடுவீிர்கள் என்று கேட்க தோன்றுகிறது. ஆங்கிலத்தில் அச்சொல் எத்தகைய பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பதை கையெழுத்திட்ட ஒருவர் கூட கவனத்தில் கொள்ளவில்லையா. ஒரு இயக்கமாக இந்த பிரச்சினையை எடுத்து செல்ல இக்கடிதம் போதாது. தனி நபர் மீதான புகாராக இல்லாமல் இதை கையாள முடியும்.அதுதான் சரியான வழியும் கூட.மேலும் மின்னஞ்சலை இதற்காக பயன்படுத்த முடியும்.

***

ஆந்திராவில் வெயில் காரணமாக உயிர் இழந்தோர் எண்ணிக்கை 1000 த்தினை தாண்டிவிட்டது.எனினும் மாநில அரசு உதவித்தொகை தர அரசு எடுத்துள்ள காப்பீட்டு திட்டத்தில் வழியில்லையாம்.சொல்லப்படும் காரணம் எதுவானலும் மத்திய – மாநில அரசுகள் இதை முன்பே யோசித்திருக்க வேண்டும்.ஏனெனில் வெயில் காரணமாக உயிர் இழப்பு என்பது புதிதல்ல. மேலும் வேறு எவற்றை இத்திட்டம் கருத்தில் கொள்கிறது என்று தெரியவில்லை. ஒரு வேளை பனிக்கரடி தாக்கி மரணமடைந்தால் இழப்பு தொகை வழங்க விதி இருக்குமோ ?.

****

The Social Shaping of Technology எனக்கு பிடித்தமான நூல்களில் ஒன்று.அதன் இரண்டாவது பதிப்பு வந்துள்ளது.எனினும் முதல் பதிப்பின் பிரதி ஒன்றை சமீபத்தில் வாங்கினேன். முதலில் படித்த போது புதிய வெளிச்சங்களை காட்டிய நூல் அது.தொழில்நுட்பம் குறித்து ஒரு புதிய புரிதலைக் தரக்கூடிய நூல். சில புத்தகங்களைப் படிக்கும் போது தமிழில் இது போன்ற நூல்கள் இல்லையே என்ற எண்ணம் எழும். அத்தகைய நூல் இது. மாணவர்கள் பயன்படுத்தக் கூடிய Technology and Future போன்ற நூல்கள் இந்தியாவில் பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் உள்ளனவா என்று தெரியவில்லை. தொழில்நுட்ப கல்வியில் தொழில்நுட்பத்தின் சமூக பரிமாணம் குறித்தும் அறிய வாய்ப்புகள் தரப் பட வேண்டும்.

***

அகில உலக என்பதை தாண்டி பிரபஞ்ச இந்தி மாநாடு நடந்துள்ளது. பிரபஞ்ச ரீதியில் இந்தி என்றால் எந்த வேற்று கிரகங்களில் இந்தி பேசப்படுகிறது என்று தெரியவில்லை. இல்லை இந்தியை பிரபஞ்ச மொழியாக அறிவிக்கக் கோரி ஐ.நாவில் தீர்மானம் போடவேண்டும் என்று கோருவார்களோ ? இந்தி உலகின் முதல் பிரபஞ்ச மொழி என்பதை நிறுவ ஆய்வு செய்ய நிதி ஒதுக்கினால் ஆச்சரியப்படத்த தேவையில்லை. இல்லை தமிழ்தான் என்று சிலர் வாதிடலாம்.பிரபஞ்சம் தோன்றும் முன்பே மொழி தோன்றிவிட்டது என்றும் கூட வேறு சிலர் கூறலாம்.அது சம்ஸ்கிருதமா, தமிழா என்று சர்ச்சை எழக்கூடும்.

***

ravisrinivas@rediffmail.com

Series Navigation