ஜெயமோகன்
குறைந்தது பத்து நூற்றாண்டுகளாகவாவது குறள் தமிழ் சமூகத்தின் நீதியுணர்வின் சாரமாக இருந்து வந்துள்ளது. குறளுக்கு எழுதப்பட்ட புராதன உரைகள் குறள் குறித்த பாமாலைகள்,என இதற்கு பல ஆதாரங்கள் உண்டு ஆயினும் அந்த இடம் அறிஞர் மத்தியில் தான் இருந்தது. கல்வி எல்லைக்குட்பட்டு வழங்கப்பட்ட சென்ற காலங்களி,ல் அது இயல்பும் கூட.
பிற்பாடு மக்களாட்சியின் சாத்தியங்களுக்கு உட்பட்டு கல்வி பரவலாக்கப்பட்டபோது தமிழில் மிக அதிகமாக வெகுஜனமயமாக்கப் பட்ட பேரிலக்கியம் குறளேயாகும். திராவிட இயக்கம் இதில் பெரும்பங்கு வகித்தது என்பது ஒரு வரலாற்று உண்மை. இன்றும் குறள் தமிழகத்துமேடைகளில் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது . இங்கு வாழ்வின் ஒவ்வொரு உச்ச கணத்திலும் பெரும்பாலான மனங்கள் குறளைத் தொட்டு மீள்வதை கவனித்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை எனது நீதியுணர்வு குறளாசிரியனுடன் இரண்டறக் கலந்தது . என்னால் குறளாசிரியன் மீது என் அகங்காரத்தையோ இலக்கியஅறிவையோ ஒருபோதும் செலுத்தமமுடியாது என்பதிலோ , என் மனதில் இறைவனின் பீடத்தில் அவரை அமர வைத்திருக்கிறேன் என்பதிலும் எனக்கு எவ்விதமான கூச்சமும் இல்லை.
ஆனால் குறளை நாமின்று புரிந்துகொள்வதில் சில மேலதிக விளக்கங்கள் தேவை .குறள் எழுதப்பட்ட காலத்தில் கவிதையே அறிவுலகின் இயல்பான தொடர்புமுறையாக இருந்தது. மருத்துவ நூல்களும் சிற்ப நூல்களும் இலக்கணநூல்களும் கவிதைக்குரிய வடிவிலேயே யாக்கப்பட்டன. அவற்றில் கவிதைக்குரிய அணிகளும் பயன்படுத்தப்பட்டன அச்செய்யுட்களிலும் ஆங்காங்கே மேலான கவித்துவம் மிளிர்வதை காணலாம். ஆகவே ஒரு படைப்பு கவிதையா நீதியா என்று இன்று எழும் கேள்வி அன்று எழ வாய்ப்பிலை. குறள் ஒரு பேரிலக்கியமாகவும் நீதிநூலாகவும் ஒரேசமயம் கருதப்பட்டது.பிற்பாடு நவீன சுதந்திர சூழலில் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டபோது அது முதன்மையாக ஒரு நீதி நூலாகவே உணரப்பட்டது. அதன் கருத்துக்கள் மட்டுமே பேசப்பட்டன, விளக்கப்பட்டன. அவ்வாறே இன்று அது கற்பிக்க படுகிறது.தமிழ் சூழலில் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அதற்கு இருந்த அவசியம் வேறு ஒரு தலைப்பு. ஆனால் கவிதையா நீதியா, இரண்டுக்கும் உள்ள உறவென்ன என்று இன்றுபேச வேண்டிய அவசியம் உள்ளது. காரணம் நவீன கவிதையின் உருவாக்கத்துக்கு பிறகு குறளை ஒரு கவிதை நூலாக கருதுபவர்கள் குறைந்துவிட்டார்கள்.
பலவருடம் முன்பு குறளை கவிதையாக கொள்ள முடியாது என்று சுந்தர ராமசாமி சொன்னார். அதை ஞானக்கூத்தன் மறுத்தார் .என்னுடைய ‘ ‘நவீனத்துவத்துக்கு பிறகு தமிழ் கவிதை ‘ ‘என்ற நூலில் குறளை ஒரு கவிதை நூலாக அணுகுவது குறித்து நான் சில சொல்லியிருந்தேன்.அதற்கு காலச்சுவடு இதழில் விமரிசனம் எழுதிய ந.முருகேசபாண்டியன் அக்கூற்றை திடமாக மறுத்து எழுதியிருந்தார். இது எப்போதும் நவீன கவிதையியலில் ஒரு பிரச்சினையாகவே உள்ளது.
பிரச்சினை நாம் எண்னுவதை விடவும் ஆழமானது.நவீன கவிதை உபதேசிக்கும் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டுவிட்டிருக்கிறது.அது மேலான உண்மைகளின் விளக்கமாகவோ வெளிப்பாடகவோ இன்று தன்னை உருவகித்துக் கொள்வது இல்லை.கவிஞனும் இன்று ஞானியின் பீடத்தில் இல்லை.அவன் சகமனிதனாகவே பேசமுற்படுகிறான்.ஆகவே உபதேசிக்கும் ,ஆற்றுப்படுத்தும் கவிதை மீது இன்று ஆழமான அவநம்பிக்கை உள்ளது.அச்செயலை செய்யும் போது அப்படைப்பாளி கவிஞனுக்குரிய நுண்ணுணர்வு நிலையில் இல்லை என்று கொள்ளப்படுகிறது.நுண்ணுணர்வு நிலையில் கவிதை நம்முடைய கற்பனையை தூண்டுவதையே தன் வழிமுறையாக கொண்டுள்ளது,கவிதை சொல்வதையல்ல உணர்த்துவதையையே நாம் அடைகிறோம் என்று கருதப்படுகிறது.நவீனக் கவிதையயலின் ஓர் அடிப்படைக் கொள்கை இது[ நான் இதில் முரண்படுகிறேன் ,இது நவீனத்துவ கவிதையின் அடிப்படை என்று சொல்வேன் ] .குறள் ஒரு சாராரால் நீதி நூலாக கருதப்படும் போது அக்காரணத்தாலேயே அது பிறிதொரு சாராரால் கவிதையல்ல என்றும் கருதப்படுகிறது.
திருக்குறள் ஒரு மாபெரும் நீதிநூலாக இன்று கருதப்படுவதன் மூலமாக அதன் வாசிப்பின் ஓரிரு சாத்தியங்கள் மட்டுமே வெளிப்படுகின்றன என்பது முதல் பிரச்சினையாகும்.உதாரணமாக ‘ ‘குழலினிது யாழினிது என்ப தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர் ‘ ‘என்ற அற்புதமான கவிதை இதில் உள்ளடங்கிய நீதி எது என்னும் வினாவுடன் படிக்கப்படுகையில் அவ்வரிகளீல் உள்ள முடிவற்ற வாசல்கள் ஒவ்வொன்றாக மூடி இறுகிவிடுகின்றன.நித்ய சைதன்ய யதி இவ்வரிகளை பற்றி குறிப்பிடுகையில் குழந்தையை உதடுகளால் முத்தமிட்டும் தொட்டு மார்போடு அணைத்தும் அறியும் பேரனுபவமும் இக்கவிதைவரியில் உள்ளது என்று சொன்னார்.பல குறள் பாக்கள் இவ்வாறு அதி தூய கவித்துவ நிலையில் தான் உள்ளன.நீதி என்று எடுத்துக் கொண்டால் இவை சர்வ சாதாரணமான ஒரு லெளகீக உண்மையையோ அனுபவத்தையையோ சொல்லுவனவாக மாறிவிடக்கூடும். எளிய உலகிஉஅலை வலியுறுத்துபவையாக அவை தோன்றும் அபாயமும் உண்டு. தம் மக்கள் சிறு கையால அளாவிய அந்தகூழ் தந்தையின் நெகிழ்ந்த மனமாக மாறும் அழகை அப்போது நாம் இழக்க நேரும்.
இரண்டாவது சிக்கல் கவிதையின் நீதியும் நீதியின் கவிதையும் முற்றிலும் வேறானவை என்பதே. குறள் ஆய்ந்து தெளிந்த நீதியை முன்வைக்கவும் விளக்கவும் கவிதைக்குரிய கூறுமுறைகளை எடுத்தாள்கிறது என்பதே பரவலாக கூறப்படும் தரப்பாக உள்ளது. அதாவது அதில் உள்ள கவிதையானது நீதியை விளக்கும் உத்தேசத்துடன் அடையபெற்ற ஒன்று மட்டுமே என்று சொல்லப்படுகிறது. அந்த நீதியை அடையும் விதம் கவிதைக்கு அப்பால் வாழ்வனுபவம் தந்த விவேகத்தாலோ , தத்துவசிந்தனை தந்த தெளிவினாலோ தாந்தீர்மானிக்கப்படுகிறது என்பது இக்கருத்தின் விரிவாக்கம். ஆனால் குறளின் கவித்துவத்தினூடாக நாம் பயணம் செய்கையில் நீதியை விட கவித்துவம் சாராம்சமாக தோற்றம்தருவதையே நாம் மீண்டும் மீண்டும் காண்கிறோம்.குறளின் நீதிகள் கவித்துவ எழுச்சியின் விளைவுகளாகவே உள்ளன. ‘ ‘இரந்தும்யுயிர்வாழ்தல் வெண்டின் பரந்து கெடுக உலகியற்றியான் ‘ ‘இது என்ன நீதி ?இதில் உள்ளது கவித்துவத்தின் சீற்றம் அல்லவா ?குறளின் மெய்காண்முறை கவிதையே என்பதை மற்ற நீதி நூல்களுடன் ஒப்பீடு செய்தாலே அறியலாம்.அவை முன்வைப்பது விதிகளை.குறல் ஓர் உச்ச மனஎழுச்சியை. உதாரணம். ‘ ‘அறத்தாறிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை ‘ ‘அனுபவ விவேகமோ குலமரபின் அறப் பிரக்ஞையோ தத்துவசிந்தனையின் வழிநடத்துகையோ உருவாக்கும் நீதிக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு மிக முக்கியமானது.அதை ஒரளவு வகுத்துக் கொள்ளமுயல்வோம்.
அடிப்படையில் நீதி என்பது என்ன ?அது எதற்காக மானுடனுக்கு தேவைப்படுகிறது ?மனிதனைரொரு சமூக விலங்கு என்று எடுத்துக் கொண்டால் அவனது வாழ்வை உள்ளுணர்வும் பரிணாமம் மூலம் உருவாகி படிந்த பழக்கவழக்கங்களும்தான் தீர்மானிக்கின்றன.ஒரு கட்டத்தில் அவனுக்கு தன்னையும் தன்னைசார்ந்துள்ளவர்களையும் பற்றிய பிரக்ஞைவந்தபோது பொதுவான நடத்தைவிதிகளை உருவாக்க வெண்டிய அவசியம் வந்தது.முதல் நீதி பிறந்தது. நீதி என்பது அடிப்படையில் பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு சமூக ஒப்பந்தம். அந்த ஒப்பந்தம் சமூக வன்முறையினால்,அதாவது தண்டனையினால் மட்டுமே நிலைநிறுத்தப்பட்டிருக்கவேண்டும். இன்றும் பழங்குடி சமூகங்களிலேயே தண்டனைகள் தளர்வில்லாத மூர்க்கத்துடன் நிறைவேற்றப்படுகின்றன என்பதைக் காணலாம். இந்த சமூகஒப்பந்தங்கள் நம்பிக்கைகள் ஆயின என்று கொள்ளலாம்.சடங்குகளாகவும் மரபுகளாகவும் உருவம் கொண்டன.இக்காலகட்டங்களில் எப்போதுமே நீதி என்ற தனியான கருத்தும் அமைப்புகளும் தேவையாக இருக்கவில்லை.பழங்குடி சமூகங்கள் அனைத்திலும் அநேகமாக நீதிநூல்களேஇல்லை. நாம் இன்றும் ‘ ‘நடைமுறை நீதி ‘ ‘ , ‘ ‘ குலமரபு நீதி ‘ ‘ ஆகிய பழங்குடி அமைப்புகளையே நமது அன்றாட வாழ்வின் இயக்கத்துக்கு சார்ந்திருக்கிறோம்.
அப்படியானால் நீதி என்ற தனிக் கருதுகோளும் நீதிநூல் என்ற அமைப்பும் எப்போது உதயமாயின ?தத்துவசிந்தனை உருவாகி வலுப்பெற்ற பிறகுதான் என்று ஓரளவு கூறலாம்.ஒவ்வொன்றையும் நடைமுறைலிருந்து பிரித்தெடுத்து, மிகப்பொதுவானதளத்துக்கு கொண்டுசென்று , தூய தருக்க நிலையில் நிறுத்தி யோசிக்கும் செயல்பாட்டையே நாம் தத்துவசிந்தனை என்கிறோம்.இப்படிப்பட்ட ஒரு சிந்தனைமுறை சங்க காலத்தில் இருந்ததாகக் கொள்ள [தொல்காப்பியம் ,இலக்கியம் கண்டதற்கு அமைந்த இலக்கணம் ,காலத்தால் பிந்தியது என்று கொண்டால்]தடயங்கள் சங்க இலக்கியங்களில் இல்லை.வாழ்வின் நேரடியானகவித்துவ வெளிபாடும் அக்கவிதையை, பொதுவாக நிர்ணயித்துக் கொள்ளும் இலக்கண பிரக்ஞையும் , பொதுவான அறமும் ஒழுக்கமரபுகளும் தான் அவற்றில் காணக்கிடைக்கின்றன.
அப்போதும் நீதி குலமுறை நீதியாகவே பெரிதும் இருந்திருக்கக் கூடும்.தத்துவசிந்தனையின் ஊற்றுமுகங்கள் இருந்திருக்கக் கூடும் .தத்துவம் எப்போதுமே பெரிய அமைப்புகளை சார்ந்து அவற்றின் தேவைகளால் உந்தப்பட்டு உருவாவது என்று கொள்ள வரலாற்றில் ஆதாரம் உள்ளது. வரலாற்றில் எப்போதுமே பெரும் தரிசனங்கள்[அதாவது மதங்கள்] பேரரசுகள் ஆகியவற்றை சார்ந்தே தத்துவசிந்தனையின் வளர்ச்சியும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றுப் பரப்பில் பெளத்த ஜைன மதங்களின் வருகை மிக முக்கியமானது.அதற்கு முன்பு இீங்கு இருந்தவை மத நம்பிக்கைகள் அல்லது வழிபாட்டு முறைகள் மட்டுமே[CULTS]ஒருங்கிணைவுள்ள மையத்தரிசனம் ,ஒருங்கிணைவுள்ள வழிபாட்டுமுறை ஆகியவை இணைக்கப்படுகையில்தான் மதங்கள் உருவாகின்றன.பிற்பாடு சைவ வைணவ மதங்களாக வளர்ந்த வழிபாட்டுமுறைகள் பல தமிழ் மரபில் முன்பே இருந்தன என்றாலும் தமிழகத்தின் முதற்கட்ட மதங்கள் பெளத்தமும் சமணமுமேயாகும்.
ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்துவரும் வழிபாட்டுமுறை ஒன்று மதமாக மாறுவது அது பிற வழிபாட்டு முறைகளுடன் உரையாடவும் வெல்லவும் தன்னுடன் இணைத்துக் கொண்டு தன் எல்லைகளை விரிவுபடுத்தவும் முயலும் போதுதான்.ஆகவே பெரும் தொகுப்புச் செயல்பாடு ஒன்றின் மூலமே ஒரு வழிபாட்டுமுறை மதமாக மாறுகிறது.இத்தொகுப்புச் செயல்பாட்டை நவவரலாற்றாய்வாளர்கள் மத உருவாக்கம் என்று குறிப்பிடுகிறார்கள்.எதனடிப்படையில் பல்வேறு வாழ்க்கைக் கூறுகள் ஒன்றுசேர்க்கப்படுகின்றன ?அந்த மையத்தரிசனத்தின் அடிப்படையில் தான்.
ஆனால் அத்தரிசனம் தன் தொகுப்புச் செயல்பாட்டின் போக்கில் படிப்படியாக விரிவும் உட்சிக்கலும் அடையும்.சமரசம் செய்துகொள்ளும்.இந்தவளர்சிதை மாற்றத்துக்கு விரிவான விவாதக்களம் ஒன்று தேவை.அதன் பொருட்டு மதம் தத்துவப்பரப்பு ஒன்றை திரட்டி எடுக்கிறது.அத்தத்துவப்பரப்பின் தீவிரமான இயக்கம் மூலம் பல்வேறுவகையான வாழ்க்கைக்கூறுகள் இணைந்து பொதுவான வாழ்க்கைத்தரிசனம் ஒன்று உருவாகும்போது அதன் தொடர்ச்சியாக பேரரசுகள் உருவாகின்றன.பல சிறு அரசுகள் ஒன்றாகத்திரண்டு தான் பேரரசு உருவாகிறது. இது ஒரு விவாத உருவகம் மட்டுமே .ஒருவேளை இந்த இயங்குமுறையில் நேர்மாறான போக்குகளும் இருக்கலாம். பெரியமதம் ,ஒருங்கிணையும்தத்துவப் பார்வை , பேரரசு மூன்றும் ஒரேசமயம் ஒன்றை ஒன்று பயன்படுத்திக் கொண்டு வளரும் மூன்று சக்திகள் என்று மட்டும் குறைந்தபட்சம் உறுதியாக கூறமுடியும்.
தமிழ் சூழலை எடுத்துக் கொண்டால் பண்டைத்தமிழ் மரபின் ,பெரிதும் பழங்குடித்தன்மை கொண்ட, வாழ்வுக்கூறுகளை பெளத்தமும் சமணமும் சந்தித்த போதுதான் தத்துவப் பிரச்சினைகள் உருவாகின.இருகாப்பியங்களிலும் நாம் காண்பது ஓய்வற்ற விரிவான தத்துவப் போராட்டத்தையே.தமிழ் மரபு சார்ந்த வழிபாட்டு முறைகளை, குறிப்பாக பத்தினி ,பெளத்தம் தன் சரடில் கோர்ப்பதை காணலாம்.அதாவது ‘ ‘குலமரபு நீதி ‘ ‘யானது ‘ ‘தத்துவ போராட்டத்தினூடாக ‘ ‘பொது நீதி ‘ ‘யாக மாறும்காலகட்டம் இது. அதற்கேற்ப அறம் என்ற சொல்லில் வந்த மாறுதல்களை [அல்லது குடியேறிய கனத்தை]நாம்கவனிப்பது பெரிதும் உதவிகரமானது.இல்லறம் x துறவறம் ,அறம் x மறம் ஆகிய சொற்களில் உள்ள அறமல்ல அரைசியல் பிழைத்தோர்க்கு கூற்றாகவரும் பேரரறம்.
இவ்வாறு நீதி புறவயமாக ஆனதன் பிறகுதான் நீதிநூல்கள் எழுதப்பட்டன.அவ்வாறு ‘ ‘எழுத ‘ ‘ப்படுவதன் அவசியத்தையும் நாம்கவனிக்கவேண்டும் .சான்றோர் அறவோர் மத்தியில் ஒரு பொதுப் புரிதலாக அது இருந்தால் போதுமானதல்ல என்ற நிலை ஏற்பட்டுவிட்டது .எழுதப்படுகையில் அது கால- இட எல்லைகளை தாண்டிவிடுகிறது. வளைக்கப்படவொ மாற்றப்படவோ முடியாததாக ,அதாவது தனிநபர் சராததாக, ஆகிவிடுகிறது .பேரரசுகள் உருவானதன் விளைவாக நீதி பொதுவானதாக ஆயிற்றா , அல்லது நீதி பொதுவாக ஆனதன் விளைவுகள் தான் பேரரசுக்கு காரணமாக ஆயிற்றா என்பது ஒரு அடிப்படைவினா.விரிவாக வரலாற்றை முன்வைத்து எழுப்பிக் கொள்ளவேண்டிய ஒன்று அது.
காப்பிய காலகட்டத்தைத் தொடர்ந்து நீதி நூல்களின் காலகட்டம் உருவான காரணம் இதுதான் .[குறள் கால அளவில் காப்பிய காலத்துக்கு சமானமானது என்றும் சொல்லப்படுகிறது] இக்காலகட்டத்தில் நீதிநூல்கள் பெருமளவில் எழுதிக்குவிக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதை காலவெள்ளத்தை தாண்டியும் இத்தனை நூல்கள் எஞ்சியிருப்பதில் இருந்து ஊகிக்கலாம். ஆனால் குறள் இவற்றில் ஒன்று மட்டும் அல்ல,காரணம் அது வெறும் நீதி நூல் அல்ல.
பெரும் தத்துவ விவாததுக்கு பிறகு திரண்டுவந்த பொது நீதியை சுருக்கமாகவும் கறாராகவும் வகுத்துரைப்பதையே நீதி நூல்கள் செய்கின்றன.அவை முன்வைக்கும் நீதி உடனடியாக சமூக நடைமுறையாக மாற்றப்படவேண்டியுள்ளது.எனவே அவற்றின் குரல் அப்படி இருந்தாக வேண்டியுள்ளது.அவற்றின் ஒரு நுனி பழங்குடிகளின் நீதியில் வேரூன்றியிருக்கும்.மறு நுனி விரிந்து பரவும் கிளைகளுடன் அன்றாட சந்தர்ப்பங்கள் மூலம் எதிர்கால நீதியை தேடியபடியிருக்கும் .முற்றிலும் நடைமுறை சார்ந்த ஒரு நீதி நூல் வெறும் ஆசாரத்தொகுப்பாக மாறி காலத்தில் பொருளிழந்து போகும்.முற்றிலும் இலட்சியவாதம் சார்ந்தஒரு நீதிநூல் வெற்றுக் கனவாக அந்தரத்தில் நின்று புறக்கணிக்கப்படும். எல்லா நீதி நூல்களும் இவ்விரு புள்ளிகளின் நடுவே நின்று கொண்டிருப்பதையே நாம் காண்கிறோம். அர்த்த சாஸ்திரமும் ஆசாரக்கோவையும் மனுநீதியும் நடைமுறைவாதம் சார்ந்த எல்லை அருகே நிற்கின்றன. குறள் இலட்சியக்கனவின் அருகாமையில் நிற்கிறது.இந்த அம்சமே குறளை நீதி நூல் என்ற அடையளத்தை மீறி பேரிலக்கிய எல்லைக்குள் கொண்டுவருகிறது.
தத்துவம் எவ்வாறு தருக்கத்தை தன் அறிதல்முறையாக கொண்டிருக்கிறதோ அவ்வாறு இலக்கியம் தன் அறிதல்முறையாக கற்பனையை கொண்டிருக்கிறது.தருக்க ரீதியான அறிதல்முறை தொகுத்தல் பகுத்தல் ஆகிய செயல்பாடுகளினூடாக , சமரசப் புள்ளிகளைக் கண்டடைந்து அப்புள்ளிகள் இணைந்து உருவாகும் கோடு வழியாக நகர்கிறது. மாறாக கற்பனைக்கு சமரசபுள்ளிகள் இல்லை,அது ஒவ்வொரு புள்ளியில் இருந்தும் அதிகபட்ச சாத்தியங்களைக் கண்டடைய முயல்கிறது. ‘ ‘ யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘ ‘ என்பது தருக்கபூர்வமாக அடையப்பெற்ற ஒரு உண்மையல்ல , உ ச்சகட்ட மனஎழுச்சியில் உருவான ஒரு அகத்தரிசனம் அது.தத்துவம் அதை ஒரு வெறும் மனப்பாய்ச்சல் என்பதற்கு மேல் முக்கியமாக கருதாது.இலக்கியத்தில் அது நூற்றாண்டுகளை அதிர வைக்கும் ஒரு மாபெரும் மானுட தரிசனம் .
குறளின் இயங்குமுறை பெரிதும் இலக்கியம் சார்ந்ததாகவே உள்ளது. ஒரு வாழ்க்கைசந்தர்ப்பத்தை எடுத்துக் கொண்டு அதன் சாராம்சமான நெறி என்ன என்று திட்டவட்டமாக வகுத்துக் கூற அது பெரும்பாலும் முயல்வது இல்லை.
மாறாக அவ்வாழ்க்கைச் சந்தர்ப்பங்களில் இருந்து மின்னல் போல தொலையா தொலைவுக்கு பளீரிட்டுப் பாய்ந்து அதிகபட்சச் சாத்தியங்களை கண்டடையவே அது முயல்கிறது. ‘ ‘ அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு ‘ ‘ என்பது ஒரு நீதியே அல்ல, ஒரு பெரும் மானுடக்கனவு மட்டுமே.மானுடத்தை இன்று வரை இயக்கிவரும் ஒரு மகத்தான இலட்சியக்கற்பனை .இவ்வெல்லையை சென்று தொடுவதனால் தான் குறள் நீதிநூலாக அல்லாமல் பேரிலக்கியமாக ஆகிறது.
ஒரு பேரிலக்கியத்தை வாசிப்பதற்கும் நீதி நூலை வாசிப்பதற்கும் இடையேயான வித்தியாசம் முக்கியமானது. அதுவே இப்பாகுபாட்டை துல்லியமாக நிகழ்த்திக் கொள்ள நம்மை வலியுறுத்துவது. ஒரு நீதி நூலை நாம் அதன் மிகப்பொருத்தமான பொருளில் எப்படி எடுத்துக் கொள்வது என்ற கண்ணோட்டத்திலேயே அணுகுகிறோம். அதில் மாற்று வாசிப்புகளுக்கு இடம் தருவது பலசமயம் நீதியை நம் விருப்பத்துக்கு ஏற்ப திரித்துக் கொள்வதாகவே அமையும்.அதாவது நீதிநூல அடிப்படையில் ஒரு தத்துவ நூலேயாகும். அதில் உள்ள இலக்கிய உத்திகளைக்கூட நாம் தத்துவத்தின் எல்லைக்கு உட்பட்டே அணுகவேண்டும். உதாரணமாக அதில் உள்ள உவமைகளை பதிலிபிம்பங்களாகவே [அலிகரி] எடுத்துக் கொள்ள வேண்டும். திட்டவட்டமாக வகுக்கப்பட்ட ஒரு விஷயத்தை துல்லியமாக சுட்டும் பொருட்டு தரப்பட்ட உதாரணங்கள் அவை.
மாறாக இலக்கியப்படைப்பு நம்மை எந்த அளவு கற்பனை செய்ய வைக்கிறது என்பதே அதை மதிப்பிடும் அளவுகோலாகும். மிக அதிகமான வாசிப்புச் சாத்தியங்களே அதன் இலக்கியப்பண்பின் அடிப்படை.அது எதையும் திட்டவட்டமாக நம்மில் விட்டுச் செல்வது இல்லை, கற்பனையின் நீரை நம் அந்தரங்கத்தில் பாய்ச்சுவதன் மூலம் அது நம் விதைகளை முளைக்கச் செய்கிறது. ஒரு இலக்கியப்படைப்பிடம் ஒருபோதும் கேட கூடாத வினா இதன் திரண்ட கருத்து யாது என்பதேயாகும். ஏனெனில் இக்கேள்வி அப்படைப்பின் விரிந்து செல்லும் எல்லா சாத்தியங்களயும் ஒரு புள்ளியில் குறுக்கி அதை முளையடித்துக் கட்டிவிடுவதாகும். அவ்வாறு திரண்டு வந்த கருத்து என்பது உண்மையில் ஒரு வாசிப்பு அதன் தருணத்தில் அடைந்த ஒரு முகம் மட்டுமே, அதுவே அப்படைப்பின் முழுமையல்ல. அவ்வாசிப்பே அப்படைப்பு என்பது ஒரு அழகிய பெண்ணை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு அவளை கொன்று விடுவதற்கு நிகராகும்.
இலக்கியப்படைப்பில் உள்ள அத்தனை அழகுகளும் நுட்பங்களும் அணிகளும் அதன் வாசிப்பை முடிவின்றி பெருக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டவையே.குறள் மீதான இன்றைய வாசிப்பு அதை ஓர் இலக்கிய படைப்பாக கண்டு அதன் பாக்களின் முடிவற்ற வாசிப்புச் சாத்தியங்களினூடாக முன்னகர்வது அவசியமாகும். குறாளை ஒரு நீதி நூல்நென்று வரையறுத்து விடுவதே இவ்வகை வாசிப்பின் பெரிய தடையாகும். அதாவது வேறுவகையில் சொல்லப்போனால் இன்று ஒரு புதுக்கவிதை எப்படி வாசிக்கப்படுகிறதோ அப்படியே குறளும் வாசிக்கப்பட வேண்டும்.
உதாரணமாக ‘ ‘ வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு ‘ ‘ இக்குறளில் மரபான வாசிப்பு இரண்டாம் பகுதிக்கு அதிக அழுத்தம் தந்து அதற்கான உதாரணமாக முதல் பகுதியை ,அவ்வுவமையை , கண்டு வந்தது. நவீன வாசிப்பு வெள்ளத்தை ஒரு படிமமாக [poetic image] எடுத்துக் கொள்ளும் . அப்போது அப்படிமம் சர சரவென்று வளர்ந்து காட்சிகளை உருவாக்கியபடியே போகும்.வெள்ளத்தின் அலை ,ஆழம் ,அதன் நிழற்கோலங்கள் ,அதில் ஊடுருவும் ஒளி ,அதன் அடிப்பரப்பின் சேற்று தடம் , அங்கு வேர்விட்டு மேலெழுந்த மலர் … அம்மலர் எது என்ற கற்பனை அவனை மேலதிக கவிதைக்கற்பனைகளுக்கு இட்டுச் செல்லும். உள்ளத்தின் அடியாழத்தில் வேர் கொண்டு மேலெழுந்து , அலைகளில் ததும்பி நின்றாடி ,விண்நோக்கி மலர்ந்து , ஒளி உண்டு ,மிளிரும் அம்மலர் அவன் மனதிலும் விரியக்கூடும்.அக்கணமே கவிதையின் மெய்க்கணம்.
தமிழ் புதுக்கவிதைக்கு அரை நூற்றாண்டு வயதாகிவிட்டது.அதன் பிரபலமான போக்கு அனைவரும் அறிந்த கருத்துக்களுக்கு அனைவரும் அறிய சாத்தியமான உவமையணிகளை உருவாக்குவதிலேயே ஈடுபட்டுள்ளது . ஆனால் ‘ ‘எழுத்து ‘ ‘ இதழில் துவங்கி சிற்றிதழ்களினூடாக வளர்ந்து , இன்று மைய ஓட்டமாக மாறிவரும் போக்கு சொற்களையல்ல, அவற்றிற்கு நடுவே தேங்கும் மெளனங்களையே புதுக்கவிதை வாசகன் வாசிக்கவேண்டும் என்று
ஏறத்தாழ நிறுவி விட்டது.புதுக்கவிதயை இவ்வாறு மெளனங்களை வைத்து வாசித்து விரிக்கும் பல வாசகர்கள் இன்று உருவாகியும் விட்டார்கள் .ஆனால் அவர்கள் கவனம் இன்னும் குறள் மீது விழவில்லை.காரணம் அதன் மீதுள்ள நீதி நூல் என்ற முத்திரையே. அந்த எல்லைகளாஇ தாண்டி நவயுகத்தின் புதிய வாசிப்புகளுக்கு தமிழின் இப்பேரிலக்கியத்தை ஆளாக்க வேண்டிய அவசியம் உள்ளது.
***
[ தமிழரசு , அய்யன் திருவள்ளுவர் சிலைதிறப்பு விழா சிறப்புமலர் 2000 ]
***
- புரியவில்லை
- ஐந்து தி.கோபாலகிருஷ்ணன் கவிதைகள்
- இரண்டு கரிகாலன் கவிதைகள்
- பாலமாகி சிறந்து நிற்கும் பணி
- தினம் ஒரு கவிதை – கலந்துரையாடல்
- காலந்தோறும் கலந்துறவாடும் மொழிகள்
- பிரிவினையின் ஞாபகமும், நாவல்களும்.
- குறள்- கவிதையும் நீதியும்
- உசிலி உப்புமா.
- ரவா பொங்கல்
- ஒரு புது அதிவேக கணினி (Supercomputer) கட்ட அமெரிக்க அறிவியல் தளம் பணம் தருகிறது
- உப்பு நிலத்தில் வளமையாக வளரும் மரபணு மாற்றப்பட்ட தக்காளி
- ஒரு தண்ணீர் தண்ணீர் கதை – சுப முடிவுடன்
- வேகவேகமாக வாழ்வு
- ஆறு சேவியர் கவிதைகள்
- விசாரணை
- எதிாியிடம் ஒரு வேண்டுகோள்
- அன்புத்தங்கைக்கு………
- டூக் ரெட்பேர்ட் மற்றும் மெல் டாக் எழுதிய கனேடியக் கவிதைகள்
- சிதைந்த இரவிலொன்று
- டி.எஸ் எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும் (3)
- ஒரு பேறு
- திக்குத் தொியாத கட்டடக் காட்டினிலே…
- பாலமாகி சிறந்து நிற்கும் பணி
- பிரிவினையின் ஞாபகமும், நாவல்களும்.
- இஸ்லாமிய அடிப்படைவாதமும் இந்துத்துவமும்
- இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19, 2001 (ஜெயலலிதா, தி.க, வரவு செலவு, மனித உரிமைகள்)
- வெற்றியும் அதிர்ஷ்டமும்
- முதல் மனிதனும் கடைசி மனிதனும்
- கேட்டால் காதல் என்பீர்கள்…