குருமகான் சுப்ராஜி

This entry is part [part not set] of 29 in the series 20100402_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்



குருமகான் சுப்ராஜி சிங்கப்பூர் வருகிறாராம். ஈரச்சந்தைகள், இசை வட்டுக் கடைகள், மளிகை உணவுக் கடைகளிலெல்லாம் அவரின் இளந்தாடியும் இனிய புன்னகையும் எல்லாரையும் வரவேற்றது. மதங்களைக் கடந்து இறைநெறி தேடுபவர்களால் அவர் மிகவும் போற்றப்படுகிறார். அவரின் உரை எந்த மதத்திற்கும் விரோதமானதல்ல. எந்த சம்பிரதாயங்களுக்கும் விரோதமானதல்ல. அவரின் உரைகளும் எழுத்துக்களும் ஆனந்தம், கமுகு போன்ற பிரபல வார இதழ்களில் தொடர்ந்து வெளியாவதும் அவரின் பிரபலத்திற்கு மற்ற காரணங்கள். அது மட்டுமா? சில திரைப் படங்களுக்கு கௌரவத் தோற்றமும் தந்திருக்கிறார். ஆயிரம் பேர் அமரக்கூசடிய மண்டபம் தேர்வு செய்யப்பட்டது. எல்லா ஏற்பாடுகளும் ஏற்பாட்டுக்குழுவினரால் மும்முரமாகச் செய்யப்பட்டது.
ஏழு மணிக்கு குருமகான் சுப்ராஜி பேசுவதாக அறிவிக்கப்பட்டது. ஐந்து மணி முதல் மக்கள் கூடத் தொடங்கிவிட்டார்கள். மணி ஆறு. எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன. வாயில்களில் கதவுகளாக சிலர் அடைத்துக் கொண்டு நின்றார்கள். செவிதானே கேட்கப்போகிறது. அருகில் பார்த்துவிட்டு வெளியில் நின்றபடி கேட்டுக் கொள்ளலாம் என்று வெளியிலும் கூட்டம் குட்டித் தீவுகளாகப் பரந்தன.
ஏற்பாட்டாளர் சார்பாக இதோ ஒருவர் ஒலி வாங்கிககு முன் வருகிறார். பேசுகிறார். ‘வந்திருக்கும் அனைவருக்கும் எங்களின் வணக்கமும் நன்றியும். குருமகான் இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடுவார்கள். சரியாக ஏழு மணிக்குத் தொடங்கிவிடுவோம். உணவுப் பொட்டலங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம். பிரசங்கம் முடிந்ததும் அனைவரும் அப்படி அப்படியே அமர்ந்தபடி உணவுப் பொட்டலங்களை வாங்கிச் செல்ல வேண்டுமென்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ௪ ஆ௪ ஆ௪ இதோ குருமகான் வருகிறார்கள். அனைவரும் எழுந்து நின்று குருமகானை வரவேற்போம்.’
தென்றல் கூட நின்றுவிட்டது. அசைவுகள் ஸ்தம்பித்தன. குளிர் சாதனம் இன்னும் குளிராக காற்றை ஊதியது. ஊதுபத்தி சுகந்தம் அரங்கத்தை நிறைத்தது. குருமகான் இதோ மேடையில். எல்லாரையும் அமரச் சொன்ன அவரின் சைகை மின்னலாக வெட்டியபின் தானும் அமர்ந்துகொண்டார்.
சரியாக ஏழு மணி. குருமகான் எழுந்தார். தொடர்ந்தார்.
‘நியூட்டனின் மூன்றாம் விதி உங்களுக்கெல்லாம் தெரியும். ஒவ்வொரு விசைக்கும் சமமான ஆனால் எதிரான விசை ஒன்று எப்போதும் உண்டு. இது மனித ஆட்சியில் மட்டுமல்ல. இறையாட்சியிலும்தான் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இறையாட்சியைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆசையில் நீங்களெல்லாம் இங்கே. அறிந்துகொள்ள விரும்பாதவர்கள் வெளியே. நாளை அவர்கள் உள்ளே வரலாம். நீங்கள் வெளியே இருக்கலாம்.
எல்லாருமே குதிரைச் சவாரிக்கு ஆசைப்பட்டால் குதிரையாக இருப்பது யார்? குதிரைகளின்றி எப்படி குதிரைச் சவாரி? எல்லாருமே வெற்றியடைய ஆசைப்பட்டால் தோற்பவர்கள் யார்? தோற்பவர்களின்றி வெற்றியாளர்கள் எப்படி? எல்லா நிலங்களுமே அமோகமாக விளைந்தால் விளையாத நிலம் எது? விளையாத நிலம் இன்றேல் விளைந்த நிலத்திற்கு ஏது பெருமை? ஆக இறைவன் தன் விருப்பப்படி நம்மை இரண்டு கூறுகளாக பிரித்து வைத்து ஆட்சி செய்கிறார் என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். இந்தக் கூட்டத்தில் யார்? அந்தக் கூட்டத்தில் யார்? அது இறைவன் கையில் இருக்கிறது. நல்லவர்கள் கூட்டத்திலேயே நம்மை வைத்துக் கொள்ளத்தான் தியானங்கள், பிரார்த்தனைகள், தருமங்கள் எல்லாம்.
ஆக இரண்டு கூட்டமுமே இறைவனின் ஏற்பாடுதான். நீங்கள் எதிர்பார்த்தபடி அடுத்தவர்கள் இருக்கவேண்டுமென்ற அவசியம் இறைவனுக்கு இல்லை. அவரை எப்படி வைத்திருக்கிறாரோ அப்படித்தான் அவர் இருப்பார். அவரைக் குறை சொன்னால் நீங்கள் நல்லவர்கள் கூட்டத்தில் தொடர முடியாது. உங்களைத் தீட்டிக் கொள்வதில் மட்டுமே கவனமாயிருங்கள். அடுத்தவர்களை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
தேக்கிய நீர்தான் மின்சாரம் செய்யும். வாயைத் தேக்குங்கள்.உங்களுக்குள் ஒரு மின்சாரம் ஓடத் தொடங்கும். யாரையும் குற்றம் சொல்லாதீர்கள். அது இறைவன் வைத்தது என்று தேற்றிக் கொள்ளுங்கள். வாயைத் தேக்குங்கள். நாவைத் தேக்குங்கள். உங்களுக்குள் ஓடும் மின்சாரத்தால் உலகை வெளிச்சமாக்குங்கள்’
குருமகான் உரை முடிந்தது. அனைவரும் எழுந்து நின்று அனுப்பிவைத்தார்கள். ஏற்பாட்டாளர் மீண்டும் அறிவித்தார். ‘தயவுசெய்து அப்படி அப்படியே அமருங்கள். உணவுப் பொட்டலங்கள் பெற்றபின் செல்லுங்கள்’
முரட்டு முரட்டு அட்டைப் பெட்டிகள் வந்திறங்கின. சிவப்புப் பைகளில் உணவு. மஞ்சன் சீருடை அணிந்த ஐம்பது பேர் அடித்த பந்தாக விரைகிறார்கள். உணவுப் பொட்டலங்கள் மளமளவென்று கைமாறுகின்றன. காலியான பெட்டிகள் வீசப்பட்டன. அப்பாடா! ஒருவழியாக அனைத்து பொட்டலங்களும் கொடுக்கப்பட்டுவிட்டது. கதவுகளாக நின்றவர்கள் இன்னும் கதவுகளாகத்தான் நிற்கிறார்கள்.
உணவுக் கடைக்காரர் சொன்னார். ‘பொட்டலங்கள் முடிந்துவிட்டன. தயவுசெய்து அனைவரும் கலைந்து செல்லுங்கள்’ தொடர்ந்து சூடான கேள்விகள். சூட்டுக்குமேல் சூடாக பதில்கள்.
‘எல்லாருக்கும் உணவு உண்டு என்று ஏற்பாட்டாளர் சொன்னாரே.’
‘சொன்னது உண்மைதான். ஆனாலும் முடிந்துவிட்டது. என்ன செய்ய?’
‘ஆயிரம் பொட்டலங்களல்லவா ஆர்டர் செய்தோம்.’
‘நாங்கள் ஆயிரத்து நூறு கொண்டுவந்தோம்.’
‘நீங்கள் ஆயிரத்து நூறு கொண்டுவந்ததற்கு என்ன ஆதாரம்?’
‘நபிக்கையில்லாதவர்கள் முன்னமேயே எண்ணிப் பார்த்திருக்க வேண்டும்.’
‘முன்கூட்டியே காசு வாங்கத் தெரிகிறது. எண்ணிக் காட்ட தெரியாதா?’
ஏற்பாட்டாளர்கள் ஒருபக்கம். உணவுக் கடைக்காரர்கள் மறுபக்கம். தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூக்குரல் உயர்ந்தது. ஒருவரின் சட்டை கிழிந்தது. இதோ இன்னொருவர் நாற்காலி மேல் விழுந்து முழங்காலை உடைத்துக் கொள்கிறார். குருமகான் உரையின் இசைத்தட்டுப் பதிவு பின்னணியில் முழங்கிக் கொண்டிருந்தது.
‘யாரையும் குற்றம் சொல்லாதீர்கள். அது இறைவன் வைத்தது. வாயைத் தேக்குங்கள். நாவைத் தேக்குங்கள். தேக்கிய தீர்தான் மின்சாரம் செய்யும். உங்களுக்குள் ஓடும் மின்சாரத்தால் உலகத்தை வெளிச்சமாக்குங்கள்.’

Series Navigation

யூசுப் ராவுத்தர் ரஜித்

யூசுப் ராவுத்தர் ரஜித்