குருட்டுச் சட்டம்

This entry is part [part not set] of 42 in the series 20031023_Issue

PS நரேந்திரன்


சமீபத்தில் தமிழ்நாட்டு அரசாங்கம் கோவில்களில் ஆடு, கோழிகளை பலியிடுவதற்குத் தடை விதித்து சட்டம் இயற்றியிருப்பதையும், ‘திண்ணையில் ‘ அது குறித்த விவாதங்களையும் படிக்க நேர்ந்தது. அதன் பாதிப்பில் எழுதுப் பட்டது இந்தக் கட்டுரை.

********

எங்கள் தேனி மாவட்டத்தில் ஒவ்வொரு வருட சித்திரை மாதக் கடைசியிலும் நடக்கும் வீரபாண்டி மாரியம்மன் கோவில் திருவிழா அந்தப் பகுதியில் மிகப் பிரசித்தம். கிட்டத்தட்ட ஒரு வாரம் வரைக்கும் மிகக் கோலாகலமாக நடக்கும் இந்தத் திருவிழாவிற்கு சுற்று வட்டார கிராமங்களிலிருத்து மக்கள் வண்டி கட்டிக் கொண்டு சாரி சாரியாக வருவார்கள். எங்கும் பாட்டும், கூத்தும், இன்னிசைக் கச்சேரியும், கரகாட்டமும், த.பி. சொக்கலால் ராம்சேட் பீடிக் கம்பெனியாரின் இலவச திரைப்படங்களுமாக நடக்கும் மிகக் கல கலப்பான திருவிழா அது. தேனி மாவட்டத்து மக்களின் கலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்தது இந்தத் திருவிழா என்றால் அது மிகையில்லை. தங்கள் நேர்த்திக் கடன் நிறைவேற்ற பக்த கோடிகள் தீச்சட்டி ஏந்தி ஆடுவது, அலகு குத்திக் கொள்வது, கரகம் எடுத்து ஆடிவருவது மற்றும் இன்ன பிற செயல்கள் செய்து மனங்கவர் மாரியம்மனை வேண்டிக் கொள்வார்கள்.

நேர்த்திக் கடன் செய்வதில் இன்னொரு முக்கியமான, சர்ச்சைக்குரிய சங்கதி ஒன்றும் இருக்கிறது. அதுதான் ‘கடா வெட்டிப் பொங்கல் வைப்பது ‘. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இந்தக் கடா வெட்டும் சம்பிரதாயம் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிற விஷயம். குழந்தைக்கு காது குத்தும் வைபவமா ? ‘வெட்டு கடாவை ‘. வீட்டில் யாருக்கேனும் அம்மை நோய் வந்து சரியானதா ? ‘வெட்றா கடாவை ‘ என்று ஆடுகளைப் போடு போடென்று போட்டுத் தள்ளிக் கொண்டிருப்பார்கள். அதிலும் கடா கறுப்பாக, உடலில் வேறெங்கும் புள்ளி இல்லாமல் இருக்க வேண்டும். அதுதான் பலி கொடுக்க உகந்தது என்று ஒரு நம்பிக்கை. எப்படியோ, கறுப்பு கடாக்கள் பிறக்கும் போதே ‘அஷ்டமத்துச் சனி ‘யுடன்தான் பிறக்கும்.

ஒவ்வொரு கோடை விடுமுறையிலும், சென்னையில் என் தொல்லை தாங்க முடியாமல் கிராமத்திலிருக்கும் என் தாய் வழிப் பாட்டனார் வீட்டிற்கு என்னை குண்டு கட்டாகக் கட்டி கொண்டுவந்து போட்டு விட்டுப் போவார் என் தந்தை. அது போன்ற ஒரு சமயத்தில், என் தாத்தாவின் மாட்டு வண்டியில் கூட்டமாக உட்கார்ந்து கொண்டு, ‘டொடக்கு டொடக்கு ‘ என்று ஆடிக் கொண்டே வீரபாண்டித் திருவிழாவிற்குப் போனது (வேறேதும் திருவிழாவா ?) நினைவிருக்கிறது. வண்டியின் பின்னே, நேர்த்திக் கடன் ஆடு கட்டப்பட்டு நடந்து வந்து கொண்டிருந்தது. பயணம் வந்த களைப்பில் மாட்டு வண்டிக்குக் கீழே படுத்து உறங்கி எழுந்து பார்க்கும் போது, கூட வந்த ஆடு குழம்பாகவும், வறுவலாகவும் மாறி இருந்தது நினைவுக்கு வருகிறது. நல்ல வேளையாக நேர்த்திக் கடன் செய்வதை நான் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் என்னவாகி இருப்பேனோ எனக்குத் தெரியாது.

நன்றாக மூக்குப் பிடிக்க சாப்பிட்டு விட்டு, திருவிழாக் கடைகளை ஒரு சுற்று சுற்றி வந்தால், ஆஹா ஆனந்தம் ஆனந்தமே!

இதை விட பயங்கரமான நேர்த்திக் கடனைப் பார்க்கும் சந்தர்ப்பமும் எனக்குக் கிடைத்தது. எங்கள் பாட்டனாரின் கிராமத்தில், நான்கு சாதிக்காரர்கள் நான்கு மூலைகளில் குடியிருந்தார்கள். முக்குலத்தோர் ஒரு பக்கம், தெலுங்கு பேசும் ரெட்டியார்கள் ஒரு பக்கம், தாழ்த்தப் பட்ட சமுதாயத்தினர் ஒரு பக்கம், மற்ற சாதிக்காரர்கள் ஒரு பக்கமாகவும் இருந்தார்கள்.

ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனியாகக் கோவில் உண்டு. தனித்தனி திருவிழாக்களும் உண்டு. அம்மாதிரியான ஒரு திருவிழாவில் ஆடுகளை பலியிடுவதைப் பார்த்துக் குலை நடுங்கியிருக்கிறேன். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு ஆடு. அத்தனையும் கறுப்பு ஆடுகள். எங்கிருந்துதான் இத்தனை கறுப்பு ஆடுகளைப் பிடித்துக் கொண்டு வருவார்களோ எனக்குத் தெரியாது. பூசாரி, கையில் ஒரு பெரிய வீச்சறிவாளோடு சாமியாடிக் கொண்டிருப்பார். ஆட்டின் பின் கால்களைப் பிடித்துக் கொண்டு ஒருவர் நின்றிருக்க, இன்னொருவர் ஆட்டின் தலையில் குடம் நிறைய மஞ்சள் கலந்த தண்ணீரைக் கொட்டுவார். மூச்சுத் திணறிய ஆடு, தலையைச் சிலுப்பும். அவ்வளவுதான், சாமி உத்தரவு கொடுத்துவிட்டது. பூசாரியானவர் வீச்சறிவாளை ஓங்கி ஆட்டின் கழுத்தில் ஒரு போடு….

ஆட்டின் தலை தனியாகத் துண்டிக்கப்பட்டு பத்தடி தூரத்தில் உருளும். வெட்டப் பட்ட கழுத்திலிருந்து ரத்தம் பீறிட கீழே விழுந்து துடிக்கும் ஆட்டின் உடலை இழுத்துக் கொண்டு போவார்கள். ஒரு ஆசாமியின் நேர்த்திக் கடன் முடிந்தது. அடுத்த ஆடு இழுத்து வரப்பட்டு, அதே சடங்கு மீண்டும் தொடரும்.

(குரூரமான வர்ணனைக்கு மன்னியுங்கள். உள்ளதை உள்ளபடி விளக்கும் போது கொஞ்சம் குரூரம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. என்ன செய்ய ?)

என் தந்தை வழிப் பாட்டனார் நான்கைந்து வருடத்திற்கு ஒரு முறை குல தெய்வ பூஜை செய்வார். தேனிப் பக்கத்தில் ஒவ்வொரு சாதி உட்பிரிவிற்கும் ஒரு குலதெய்வம் ஒருக்கும். அதற்கென ஒரு கோவிலும் இருக்கும். கோவில் என்றால் பெரிய கட்டிடம் இருக்க வேண்டியது அவசியமில்லை. எங்காவது ஒரு தோப்புக்குள், அல்லது காட்டுக்குள் இருக்கும் ஒரு பெரிய ஆல மரத்தின் அடியில் சூலம் நடப்பட்டு, அதன் ஒவ்வொரு முனையிலும் எலுமிச்சம் பழம் சொருகி வைத்திருப்பார்கள். ‘இதுதாண்டா நம்ம குல தெய்வம் சோ அண்ட் சோ. நல்லா வேண்டிக்க ‘ என்பார் என் தாத்தா. குறைந்தது ஐந்து தலைமுறை வரலாறு இருக்கும் அந்த இடத்திற்கு.

உறவினர்கள், நண்பர்கள் என்ற ஒரு படையே புடை சூழ, குல தெய்வ பூஜை நடக்கும். கவனிக்க. அங்கும் ‘கடா வெட்டு ‘ உண்டு. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக பொழுது கழியும். மறக்க முடியாத நாட்கள் அவை. நினைத்துப் பார்க்கும் போது ஏக்கப் பெருமூச்சு வருவதைத் தடுக்க முடியவில்லை.

தமிழ்நாட்டின் உயிர்நாடி அதன் கிராமங்களிலும், விடாப்பிடியான கலாச்சார மரபுகளிலும்தான் இருக்கிறது. கிராமத்தின் பக்கமே போகாமல், நகரங்களில் ‘நரக ‘ வாழ்க்கை வாழ்ந்தவர்களால் இதைப் புரிந்து கொள்ளவே முடியாது.

********

சமயச் சடங்கு என்ற பெயரில் உயிர்ப் பலி கொடுமையானது. குரூரமானது. தடுக்கப் பட வேண்டிய ஒன்று. ஒத்துக் கொள்கிறேன். அதே சமயம் பலியிடுதல் காலங்காலமாக நடந்து வரும், பெருவாரியான மக்களால் செய்யப்படும் ஒரு வழிபாட்டு முறை. திடாரென்று ஒரு அரசாங்க சட்டத்தின் மூலம் அதை நிறுத்த முயல்வது கேலிக் கூத்தான செயல். தனி மனிதச் சுதந்திரத்தில் தலையிடும் தான் தோன்றித் தனமான, கண்டிக்கப் பட வேண்டிய ஒரு சட்டம் இது.

இம்மாதிரியான ஜனநாய விரோத சட்டங்களை ஆதரிப்பது மட்டுமல்லாமல், சப்பைக்கட்டு கட்டக் கூடவே பாரதியையும் துணைக்கழைப்பவர்களைப் பார்க்கும் போது என்ன சொல்வது என்று தெரியவில்லை. நாளையே, இன்னின்ன நாட்களில்தான் மனைவியைப் புணரவேண்டும் என்று சட்டம் வந்தாலும் வரலாம். அப்போது எந்தக் கவிஞனைத் துணைக்கழைப்பார்களோ ?

இந்தச் சட்டம் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமா ? அல்லது எல்லா மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை.

ஹைதராபாதில், ‘பக்ரீத் ‘ பண்டிகை சமயத்தில் பலர் பார்க்க, நடுவீதியில் ஒட்டகத்தை ‘குர்பான் ‘ கொடுப்பார்கள். Deccan Chronicle-இல் புகைப்படத்துடன் செய்தியாக வரும் அது.அன்றைய தினம் ஹைதராபாத் நகரம் முழுவதும் இஸ்லாமியர்களின் வீடுகளில் அவர்களின் சக்திக்கேற்ப ஆடோ, மாடோ பலியிடுவார்கள். அவ்வாறு பலியிடுவது இஸ்லாம் மதத்தின் மிக முக்கியமான சடங்கு. இச் சடங்கு உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் மக்களுக்குப் பொதுவானது. தமிழ்நாட்டிலுள்ள இஸ்லாமிய மக்களும் இதற்கு விதி விலக்கில்லை. எங்கே ? அவர்களிடம் இந்த மாதிரியான ஒரு சட்டத்தை நடை முறைப் படுத்தச் சொல்லுங்களேன் பார்க்கலாம் ? ‘டின் ‘ கட்டி விடுவார்கள் என்பது இந்த சட்டத்தைக் கொண்டு வந்தவர்களூக்குத் தெரியும். இளைத்தவன் கண்ணில் விரல் விட்டு ஆட்டுவதுதான் ‘புரட்சி ‘ போலிருக்கிறது!

கவுதம புத்தர் முதல் மோகன்தாஸ் காந்தி வரையான அஹிம்சா முன்னோடிகள், அஹிம்சையைப் ‘போதித்தார்களே ‘ ஒழிய கோலெடுத்து அடிக்க வரவில்லை. அந்த போதனைகளைக் கேட்டு திருந்துவதும் திருந்தாதும் அவரவர் உரிமை. திணிக்கப் படுபவை நிலைத்திருப்பதில்லை என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.

இன்னின்னதுதான் சாப்பிட வேண்டும், இப்படித்தான் உடுக்க வேண்டும், படுக்க வேண்டும் என்று ஜனங்களின் அன்றாட வாழ்க்கையில் குறுக்கிடுவதுவா ஒரு தேர்ந்தெடுக்கப் பட்ட அரசாங்கத்தின் வேலை ? ஆந்திராவும், கர்நாடகாவும் போட்டி போட்டுக் கொண்டு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன. பொருளாத ரீதியாக மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன அந்த மாநிலங்கள். தமிழ்நாட்டை பொருளாதர ரீதியாக முன்னேற்ற இன்னின்னது செய்யப் போகிறேன் அல்லது செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பேசி (அரசு விழாக்களைத் தவிர) எத்தனை முறை நாம் கேட்டிருக்கிறோம் ? அல்லது அது பற்றி அவர்களின் கட்சிப் பத்திரிகைகளில் ஒரு பத்தியாவது இது பற்றிச் செய்தி வந்திருக்கிறதா ? சுய தம்பட்டமும், வீண் வாதங்களுமல்லவா நிறைந்து கிடக்கும் அந்தப் பத்திரிகைகளில்.

தமிழக அரசியல்வாதிகள் கடவுளுக்கு அடுத்தபடியாக தங்களைத் தாங்களே நினைத்துக் கொள்வதும்….மல்லாந்து படுத்துக் கொண்டே எச்சில் துப்பிக் கொள்வதும்….அடாடடா…என்னே ஒரு கீழ்ப் புத்தி! வாழ்க திராவிடப் பண்பாடு!!!

வழிபாட்டில் உயிர்ப்பலி கொடுப்பது உலகில் பல பகுதிகளில் இன்றும் நடந்து வருகிறது. ஏரளமான உதாரணங்களைச் சொல்லலாம். அதற்காக அது சரியானது என்று நான் வாதாடவில்லை. அதைத் தடுக்கும் முறைதான் தவறானது என்பது என் வாதம்.

ஜனநாயக அமைப்பில் அர்த்தமற்ற குருட்டுச் சட்டங்கள் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது.

காலம் அவற்றைக் காணாமற் போகச் செய்து விடும்.

*********

narenthiranps@yahoo.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்