குண்டு மழையோடு மாமழையும் பொழிகிறது

This entry is part [part not set] of 32 in the series 20081225_Issue

வசீகரன்



மகிந்தாவின் அநியாத்தால்
குண்டு மழையும்
வான்பிதாவின் புண்ணியத்தால்
மாமழையும் பொழிகிறது

ஒரு குடையின் கீழே
குடியிருந்த எங்கள் வாழ்வு
வன்னிக் காட்டில்
வெள்ளக்காடாய் மிதக்கிறது

நேற்றிருந்த வீட்டையும்
இன்றிருந்த குடிலையும்
இழுத்துப் போனது வெள்ளம்
இனியென்ன செய்வது?

முன்னேறி வரத்துடிக்கும்
எதிரிகளின் காலடிச் சத்தம்
முன்னரங்க முறியடிப்பில்
பிள்ளைகளின் யுத்தத்தால் தொலைகிறது

ஆயிரம் அர்பணிப்புகள்
அடைமழை போல் புரட்சிகள்
ஆடு நனையுது என்று
ஓநாய்களும் அழுகிறது

தூக்கிப் போக முடியாத
சொத்தாக நிமிர்ந்து நின்ற
தென்னையும் பனையும்கூட
சரிந்துபோய்க் கிடக்கிறது

எத்தனை முறை இடம்பெயர்ந்தாலும்
இங்கேதான் இருக்கிறோம்
என்ற நிம்மதிப் பெருமூச்சு.
மக்களின் முகங்களில் மலர்கிறது

மின்னஞ்சலில் வருகிற
நிழற்ப் படங்களில்
என் நெஞ்சில் பதிந்திருந்த
நினைவுகள் கரைந்து போனது

நெல்லும் புல்லும்
விளைந்த வயலில் இன்று
விரைவுப் படகும்
விரைந்து செல்கிறது

எங்கள் பூமியின் தேகத்தை
கிழித்துப் போடுவது
குண்டு மழை மட்டுமல்ல
மாமழையும்தான்

-வசீகரன்
நோர்வே
21.12.2008

Series Navigation

வசீகரன்

வசீகரன்