குட்டியாப்பா

This entry is part [part not set] of 42 in the series 20031023_Issue

நாகூர் ரூமி


1

பின் சீட்டின் இடது ஓரமாக நான். வலது பக்க ஓரமாக நஜீ. முன் சீட்டில் தம்பி தீனும் நண்பர் பிலாலும். நஜீ இன்னும் ஓய்ந்தபாடில்லை. அது இப்போது ஓயவும் செய்யாது. ‘என்னட வாப்பாவே ‘ என்று கொஞ்ச நேரம். ‘எனக்கு வாப்பா வேணும் ‘ என்று கொஞ்ச நேரம். அவளைப் பார்க்கப் பார்க்க எனக்கும் அடிக்கடி அழுகை வந்தது. என் குரலுக்கு அது ஊளையிடுவதுபோல் இருந்ததை நானே உணர முடிந்தது. நான் குட்டியாப்பாக்காக அழுதேன் என்று சொல்ல முடியாது. என் பாட்டியா ‘மெளத் ‘தானபோதுகூட நானிப்படி அழுததில்லை. எங்கள் குரல்கள் உச்சஸ்தாயியை நெருங்கும்போது முன் சீட்டிலிருந்து, ‘நானா, வாணா ‘ என்று எச்சரிக்கை வரும். அடக்கிக்கொள்வேன். கொஞ்ச நேரம் கழித்து காட்சி மறுபடியும் ‘ரீவைன்ட் ‘ ஆகி ‘ப்ளே ‘ ஆகத்தொடங்கும். அழுகை ஒரு தொத்து நோயோ என்னவோ ?

குட்டியாப்பாவின் தலை என் மடிமீது. பாசத்தினால் மடிமீது வைத்துக்கொண்டதாகச் சொல்ல முடியாது. தலைமாட்டில் என்னால் வசதியாக உட்கார முடியவில்லை. அதே சமயம் இனி திரும்பிவரவே மாட்டார் என்ற நிஜம். அடிக்கடி அவர் முகத்தை என் வயிற்றோடு சேர்த்து, ஒரு குழந்தையினதைப்போல வைத்துக்கொண்டு, புகை வருவதுபோல அழச்செய்தது. அடிக்கடி முகத்தை, கன்னத்தை தடவிப் பார்த்தேன். ‘ஷேவ் ‘பண்ணாமல் வளரவிட்டிருந்த வெள்ளை முடி குறுகுறுவென்று குத்தியது. ரென்டு மூனு நாளைக்கு முந்திதான் ‘ஷேவ் ‘செய்வதற்காக பெத்லஹேமில் இருந்த நாசுவப் பொடியனுக்கு சொல்லியிருந்ததாகவும் அவன் வரவில்லை என்பதால் நண்பர் ஷஃபியிடம் சொல்லி யாராவது தெரிந்தவனை ஆஸ்பத்திரிக்கு வரச்சொல்லலாம் என்றும் நஜி சொன்ன ஞாபகம் வந்தது.

சி.எம்.சி.க்கு வேனில் கொண்டு போகும்போதுகூட எப்படியும் பிழைத்துக் கொள்வார் என்று என் உள்ளுணர்வு சொல்லியது. உடம்பைத் தொட்டுப் பார்த்தேன். Warm ஆகத்தான் இருந்தது. பளீரென்ற ஒற்றைத் தலைவலி அல்லது தீர்க்க தரிசனம் போல ஒரு நம்பிக்கை. நஜியிடம், ‘குட்டியாப்பா பொலச்சுக்குவஹா ‘ என்றேன். நஜி உடனே தாவணியை ஏந்தி நம்பிக்கை பனிக்கும் கண்களுடன், ‘எஜமானே ‘ என்றாள்.

எந்த விஷவினாடியின் நுனியில் அது நிகழ்ந்தது என்று தெரியவில்லை. குட்டியாப்பாவின் தலைக்கும் என் இடது தொடைக்குமான உறவு பலமணி நேரங்கள். கன்னங்களெல்லாம் கருங்கல். தலைக்குள் பாறாங்கல். இந்த கற்களின் கனம் ஒரு கசப்பான உண்மையை என் மடிக்குச் சொல்லிக்கொண்டே வந்தது. ‘குட்டியாப்பா, குட்டியாப்பா ‘ என எனக்குள் நான் கதறினேன். உயிரோடு இருந்தபோது கொள்ளாத நேசமும் பரிவும் பொத்துக்கொண்டு வந்தது. பொங்கிப் பொங்கி வழிந்தது. போர்வைக்குள் கையைவிட்டு அவர் நெஞ்சில் கையைவைத்துப் பார்த்தேன். ஒருவேளை இதயத் துடிப்பிருந்தால் ? டாக்டர்கள் தவறு செய்திருக்கலாம். உடல் நான் நினைத்த அளவுக்கு ஜில்லென்று இல்லாதது எனக்கு லேசான ஆச்சரியம். டாக்டர் மதியைக் கேட்டால் என் ஆச்சரியத்துள் பொதிந்து கிடக்கும் அறியாமை வெளிப்படலாம். குட்டியாப்பாவின் உடம்புக்கு கனம் புதிது. அந்த கனம் இறக்கிக்கொண்டிருந்த உண்மை புதிது. அந்த உண்மையை ஒரு மாட்டைப்போல நாங்கள் மென்றுகொண்டே வந்தோம்.

வேலூரிலிருந்து கிளம்பும்போது தீனின் எரிச்சலான வார்த்தைகளையும் மீறி ஃப்ளாஸ்க்கில் டா வாங்கி வைக்கச் சொன்னேன். காரின் பின்சீட்டில் ‘மய்யத் ‘ இருந்தால் பசிக்காதா என்ன ? பசியை அமிலங்களின் கோஷம் என்று சொல்வார் பிரம்மராஜன். உண்மைதான். கோஷமேதான். இந்த கோஷத்தை அமைதிப்படுத்த டாகூட இல்லாவிட்டால் எப்படி ? (ஆனால் விஷேஷம் என்னவென்றால் அந்த டாயை கடைசிவரை குடிக்கவே இல்லை).

குட்டியாப்பா ‘மெளத் ‘தான செய்தியை யார் எப்படி நஜியிடம் சொல்வது என்று நான், நண்பர் அஷ்ரஃப், சாதிக் அண்ணன் எல்லோரும் டிஸ்கஸ் பண்ணினோம். நானே சொல்வதாக ஒப்புக்கொண்டேன். கேஷுவாலிட்டி பில்டிங்கை விட்டு தள்ளி வெளியே நுழைவு வாசலுக்குப் பக்கத்தில்தான் அஷ்ரஃப் ட்ரெக்கரை நிறுத்தியிருந்தார். பெண்களை அதில் உட்கார்ந்திருக்கும்படி நாங்கள்தான் சொல்லியிருந்தோம். காஷுவாலிட்டியில் யூனிஃபார்ம் போட்ட ஒருவன் எங்களை நிற்கவிடாமல், எட்டிப்பார்க்கவிடாமல் விரட்டிக்கொண்டிருந்தான். டாக்டர்களைக்கூட விரட்டிவிடுவான் போலிருந்தது. தீன்கூட, ‘நாங்க ஒன்னும் ஆசைப்பட்டுப் பாக்க வரலய்யா, வவ்த்தெரிச்சல்லெ பாக்குறோம் ‘ என்று எதிர்ப்புக்குரல் கொடுத்தான்.

ட்ரெக்கருக்குள் எதிர்பார்ப்புடன் நஜியும் குட்டியாப்பாவின் குட்டி மகன் அலியும். எதிர்பார்ப்பதைப் போன்ற ஒரு தொனியில் குட்டியாப்பாவின் சம்மந்தி ஜொஹராபீ. ‘குட்டியாப்பாவெ இங்கெ பாக்க முடியாதாம். ஊருக்குக் கொண்ட்டுபோங்கன்டுட்டான். நம்ப ஊருக்குப் போயில்லாம் ‘ என்றேன். அந்த நேரத்தில் என் திறமை அவ்வளவுதான். ஆனால் அது நஜியை நம்பவைக்கும் அளவுக்குப் போதுமானதாக இல்லை. ‘வாப்பா…எனக்கு வாப்பா வேணும் ‘ என்று லேசாக ஆரம்பித்தாள். மழைபோல வலுத்துக்கொண்டது அழுகை. அதில் முற்றிலுமாக நான் நனைந்து போனேன். போனவர்கள் வந்தவர்கள் எல்லாம் வேடிக்கை பார்க்கவும் விசாரிக்கவும் ஆரம்பித்தார்கள். ஷஃபி வந்து என்னை அணைத்துக்கொண்டார். ‘என்ன இது, சின்னக்கொழந்த மாதிரி ‘ என்று தொடங்கி ஏதேதோ சொன்னார்.

நான் ஜொஹாராபீயிடம் சொன்னேன். ‘ நா, நஜி, தீனு, பிலாலு, நாலுபேரும் குட்டியாப்பாவை ஏத்திகிட்டு மருதம் போறோம். நீங்க பூதங்குடி போயி மாமிட்ட பக்குவமா எடுத்துச் சொல்லுங்க. அஷ்ரஃப் டாக்ஸி புடிச்சுத் தருவாரு. அதுல எல்லாரும் மருதம் வந்துடுங்க, என்னா ? ‘

‘சரி தம்பி, வூட்டெ பூட்டி சாவியெ யார்ட்டெ குடுக்க ? ‘

‘மேலே, ஷஃபி வூட்லெ குடுத்துடுங்க ‘

‘தோசெ மாவு இரிக்கிதே அதெ என்னா செய்ய தம்பி ? ‘

இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவேயில்லை. பயங்கர எரிச்சலாகவும் சிரிப்பாகவும்கூட வந்தது.

‘எடுத்துக் கொண்டுபோயி ஊர்லெ வச்சு தோசெ சுட்டு தின்னுங்க ‘

வேகமாக வசனம் பேசியதில் கழன்று விழுந்த மீசையை எடுத்து மாட்டிக்கொண்ட சம்மந்தி மெளனமானார்.

கார்ட்ரைவர் மூச்சுக் காட்டவில்லை. இதற்கெல்லாம் மிகவும் பழக்கப்பட்டவன் போல. ஒருவேளை காரே பிணக்காராக இருக்குமோ ? பிணம். அந்த வார்த்தையையே வெறுத்தேன். மனிதனை இழிவு படுத்துவதாகத் தோன்றுகிறது. ஆனாலும் மடியில் குட்டியாப்பா கிடந்தார் என்று சொல்வதையும் மனம் ஒத்துக்கொள்ள மறுத்தது.

தடதடவென இன்ஜின் தளர்ந்தது. ஒரு ரெண்டு மணி நேரம் வந்திருப்போம். ஏதோ கோளாறு. காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு ட்ரைவர் இறங்கிப் பார்த்தான். கொஞ்ச நேரம் ஏதோ செய்துவிட்டு ‘வண்டி போகாது ‘ என்றான்.

கார் நின்ற இடம் ஊர் மாதிரி தெரியவில்லை. ஏதோ காடுமாதிரி இருந்தது. மரங்களும் இருளும் பயமுறுத்தின. ‘டெத் சர்ட்டிபிகேட் ‘ இருக்கிறதா என்று தீன் மறுபடியும் பாக்கட்டைத் தொட்டு உறுதி செய்து கொண்டான். பொறுமையின்மையும் கையாலாகாத தன்மையும் சேர்ந்து ஒரு எரிச்சலாக இருந்தது. மடியில் கனத்துடன் பக்கத்தில் ஒரு பெண்ணுடன் — வெளியில் இருந்து பார்ப்பவனுக்கு நஜி என் மனைவி என்று ‘கறாமாத் ‘தா விளங்கும் ? — ஏதோ நாங்களே ஒரு கொலை செய்து, உடலைக் கடத்துவது போல பயம் சூழ்ந்தது.

‘டெட்பாடியெக் கொண்டு போனாலே இப்புடி ஏதாவது நடக்குங்கனி ‘ என்று பிலால் என் பக்கம் திரும்பிச் சொன்னார். அப்போது என்னால் எதையும் கேட்டுக்கொள்ளத்தான் முடிந்தது. இயந்திரங்களுக்கும் இறந்த மனிதர்களுக்கும் இடையேயான மர்மமான உறவையும் ஒத்துழைப்பையும் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. கொஞ்ச தூரத்தில் ஒரு டூரிங் டாக்கீஸ் இருப்பதாகவும் அதுவரை காரைத் தள்ளிக்கொண்டு போனால் பக்கத்தில் எங்காவது ஃபோனிருக்கும். வேலூருக்குப் போட்டுப் பேசி வேறு கார் வரவழைக்கலாம். அரைமணி நேரத்தில் வந்துவிடும் என்றான் ட்ரைவர்.

காரைத்தள்ளிக் கொண்டு போய் டாக்கீஸின் எதிர்ப்பக்க ஓரமாக நிறுத்தினோம். ஷோ ஓடிக்கொண்டிருந்தது. ஏராளமான சைக்கிள்கள். ஏதோ திருவிழாக் காட்சிபோல. படத்தின் வசனங்கள் அந்த ஊருக்கே கேட்டது. இப்படிப்பட்ட ஒரு கேவலமான சூழ்நிலையை உருவாக்க வேண்டுமா ஆண்டவனே என்று நினைத்துக்கொண்டேன். அதே சமயம் குட்டியாப்பாவுக்கு சினிமா என்றால் உயிர் என்ற ஞாபகமும் வந்தது. குனிந்து காரில் உள்ளே ‘லைட் ‘ போடாத அரை இருளில் அனிச்சையாகப் பார்த்தேன். சலனமற்றுப் போர்வைக்குள் மெளனித்திருந்தார் குட்டியாப்பா.

ஃபோன் பண்ணுவதற்காக தீனும் ட்ரைவரும் போயிருந்தனர். டாக்கீஸுக்குள்ளிருந்து குதித்து வந்த பாடலுக்கு ஏற்ப, காரின் முன்புற டிக்கியில் தாளம் போட்டார் பிலால், மெதுவாக.

2

பிறந்த ஊர் நாஹப்பட்டணம் (நாகை). புகுந்த ஊர் மருதம் (வீட்டு மாப்பிள்ளை). பெற்றோர் வைத்த பெயர் செய்யது ஹுசைன் மரைக்காயர். கிழங்கள் செல்லமாக (வேறு வழியின்றி) அழைப்பது ‘செய்சா மரைக்கார் ‘. ஆனால் மக்கள் மத்தியிலே, பரவலாக வழங்கிவந்த புகழ்மிகு பட்டப்பெயர்கள் ‘மாப்பிள்ளை ‘, ‘குட்டியாப்பா ‘ மற்றும் ‘கப்பாப்பா ‘.

ஆண்பிள்ளைகள் எல்லோருமே மாப்பிள்ளைகள்தான். ஆனால் குட்டியாப்பா ‘ஸ்பெஷ ‘லாக மாப்பிள்ளை. அவர் மனைவிக்கு மட்டும் மாப்பிள்ளை அல்ல. மருதத்துக்கே மாப்பிள்ளை. அந்த ஊர்லெ போய், நாகை மாப்பிள்ளை அல்லது மாப்பிள்ளை என்றால் யாரும் சொல்வார்கள்.

ஒரு கிராமத்தின் அழகும் ஒரு டவுனுக்குரிய வசதிகளும் இல்லாத ஊர் மருதம். சின்ன ஊர்தான். நாலைந்து தெருக்கள். நீளமான தெரு நெடுந்தெரு. கிழக்கே உள்ள தெரு கிழக்குத்தெரு. பள்ளிவாசலுக்கு எதிரே உள்ள தெரு பள்ளிவாசல் தெரு. ஊரில் நிறைய கிடைப்பது மண். குழந்தைகள் விளையாட வசதி. ஒரு ஆஸ்பத்திரி உண்டு. தலைவலி, காய்ச்சல், சளி போன்ற கொடும் வியாதிகளுக்கு நம்பிச்செல்லலாம். உயிருக்கு உத்தரவாதம் உண்டு. மற்றபடி அவசரத்துக்குக் கார் எடுத்துக்கொண்டு (யாராவது பணக்கார வீட்டிலிருந்து கேட்டு வாங்கித்தான்) பக்கத்து டவுனான சீயாழிக்குச் செல்ல வேண்டும். சீயாழியிலிருந்து பக்கத்து பக்கத்து ஊர்களுக்கு பஸ் கிடைக்கும். ஒரு ஸ்கூல் — எலிமென்ட்ரி — உண்டு. கடந்த காலத்தை நிகழ்காலமாக்க முயற்சிக்கும் ஒரு லைப்ரரி உண்டு. (நேற்றைய பேப்பர் இன்று படிக்கலாம்). லைப்ரரிக்கு எதிரே காந்தியை நினைத்துக்கொண்டு செய்யப்பட்ட ஒரு சிலை பட்சிகளின் எச்சம் படாமல் குடை நிழலில் கையொடிந்து கம்பூன்றி நிற்கும். அதற்கு எதிரே ஒரு டாக்கடை. அதுதான் பஸ் ஸ்டாண்டும்.

ஒரு அரிசி கடை உண்டு. ஒரு கீற்றுத்தட்டின் கீழ் ஒருவர் உட்கார்ந்திருப்பார். அவருக்குமுன் இரண்டு மூன்று கூடைகளில் அரிசி. ஒரு நாள் நான் போனபோது ஒரு கூடை அரிசியில் ஒரு விளக்குமாற்றுக் குச்சி சொருகப்பட்டு, அதன் வானம் பார்த்த நுனியை இரண்டாகப் பிளந்து, அந்தப் பிளவில் ஒரு சிகரெட் அட்டையின் பகுதியைச் செருகி, அதில், ‘அசிரி ‘ என்று எழுதியிருந்தது.

நான் கடைக்காரரிடம் (தெரிந்தவர்) அதைக்காட்டி சிரித்துக்கொண்டே, ‘இதுதான் அரிசியா ? ‘ என்றேன். அவர், ‘பின்னால் திருப்பிப் பாருங்கள் ‘ என்றார். திருப்பினேன். ‘அரிசி ‘ என்று எழுதியிருந்தது. பக்கத்துக் கூடையில் நொய் இருந்தது. அதிலும் இதேமாதிரி அட்டையில் ‘ நோய் ‘ என்று எழுதியிருந்தது. ‘என்ன, உங்கள் ஊரில் எதையுமே பின்பக்கமாகத்தான் சரியாகச் செய்வீர்களோ ‘ என்று சொல்லிக்கொண்டே திருப்பினேன். ‘நாய் ‘ என்றிருந்தது. நான் மாப்பிள்ளையாகச் சென்றிருந்த காலத்திலேயே நோயையும் நாயையும் தின்று வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் குட்டியாப்பா மாப்பிள்ளையாகச் சென்ற காலத்தில் எதையெதையெல்லாம் சாப்பிட்டு வாழ்ந்தார்களோ!

ஒரு ஹதீது சொல்வார்கள். ஒரு நாள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தன் தோழர்களுடன் தெருவில் சென்றுகொண்டிருந்தார்களாம். விபத்தில் செத்துக் கிடந்ததாம் ஒரு நாய். அசிங்கமாக, குடல்களும் ரத்தமும் சதையுமாய்ப் பிதுங்க. வாந்தி வரவழைக்கும் துர்நாற்றத்துடன். தோழர்கள் அந்த நாயின் ஒவ்வொரு அசிங்கத்தைப் பற்றியும் குறிப்பிட்டு மூக்கைப் பொத்தினார்களாம். நபிகள் நாயகம் மட்டும், ‘அந்த நாயின் பற்களைப் பாருங்கள், எவ்வளவு வெண்மை! ‘ என்றார்களாம்.

மருதத்தைப் பொறுத்தவரை அப்படிப்பட்ட பல்லாக ஒரு கடற்கரை உண்டு. மரங்களும் பச்சை போர்த்திய மணல் மேடுகளுமாய் அதன் அழகு கடுமையான முகத்தில் புன்னகை மாதிரி. இடையிலே ஒரு ஆறு. ஒரு நீளமான குச்சியை ஆற்றுக்குள் விட்டு தள்ளிச் செல்கின்ற ஒரு அமைதியான படகிலே ஆற்றைத் தாண்டினால்தான் கடற்கரையை அடையமுடியும். இந்த ஊரில்தான் குட்டியாப்பா ‘மாப்பிள்ளை ‘யாக அறியப்பட்டார். ஆனால் அவரைப் பொறுத்தவரை அவர் நாயையும் விமர்சித்ததில்லை. பல்லையும் ரசித்ததில்லை.

ஒரு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி இரவு சிலோனிலிருந்து அப்போதுதான் வந்து இறங்கியிருந்தேன். நிறைய இலக்கியப் பத்திரிக்கைகளும் wonder light — சிலோன் ரேடியோவில் ‘வான்டலைட் ‘ — சோப்புக் கட்டிகளும் கொண்டு வந்திருந்தேன். நஜி நிறைமாத கர்ப்பிணி. மறு நாள் காலை நாகை அழைத்துச் செல்வதாக திட்டம். திடாரென நோக்காடு வந்துவிட்டது.

மருதத்தில் மின்சார வசதி உண்டு. இரவு பத்துவரை ‘ஹாஃப் கரன்ட் ‘. மாலை ஆறுக்கு விளக்கைப் போட்டால் 40 வாட்டுகளும் 60 வாட்டுகளும் கோரஸாக அழ ஆரம்பிக்கும். ட்யூப்லைட்டுகளுக்கு பத்துக்குமேல்தான் உயிர் வரும். பத்துக்குள் டேப்ரிகார்டர் வைத்தால் ஸ்லோமோஷனில் பாட்டு கேட்கலாம். பத்துக்குப் பிறகு நிச்சயமாக ‘ஃபுல்பவர் ‘ வருமா என்றால், சமயத்தில் வராது. நஜிக்கு நோக்காடு வந்தது அப்படிப்பட்ட ஒரு சமயம்தான்.

நானும் குட்டியாப்பாவும் எதிர்வீட்டு ஆலவடியில் உட்கார்ந்திருந்தோம். திறந்திருந்த ஜன்னல்வழி நஜி தெரிந்தாள். அவள் கண்கள் என்னையே பரிதாபமாகப் பார்த்தன. அனுபவம் மிக்க ஒரு பெண்மணி தோளில் கைபோட்டு அணைத்தவாறு இருக்க, நஜி ஹால் முழுவதும் நடந்துகொண்டிருந்தாள் மெல்ல. ஒரு புதிய அனுபவத்துக்கு விரும்பியும் விரும்பாமலும் தயாராகிக் கொண்டிருந்தாள்.

திடாரென்று குட்டியாப்பா எழுந்து ஆலவடியில் குட்டிபோட்ட பூனை மாதிரி உலாத்த ஆரம்பித்தார். இரண்டு கைகளையும் ஏந்தி, ‘யா பாதுஷா நாயகமே, யா காதர் ஒலீ, கஞ்ச சவாயீ, கஞ்ச பக்ஷ், மாணிக்கப்பூரி, நாகூரி, யா கெளது, யா முஹ்யித்தீன், பகுதாதீ, யா க்வாஜா முயினுத்தீன் சிஷ்தீ, அஜ்மீரீ, யா பாப்பாவூர் ஷெய்கு அலாவுதீன் பாவா, ஏர்வாடி நாதா, எம்புள்ளக்கி ஒரு கொறவும் வராம காப்பாத்துங்க ‘ என்று ஏகப்பட்ட வலியுல்லாக்களைத் துணக்கு அழைக்க ஆரம்பித்தார். அவரை அந்தக் கோணத்தில் பார்க்க வேடிக்கையாக இருந்தது.

கொஞ்ச நேரத்தில் அந்த அனுபவம் மிக்க கிழவி, வாசல் பக்கம் வந்து குட்டியாப்பாவைப் பார்த்து, ‘போய் ஆசியாமாவெக் கூப்ட்டு வாங்க மாப்ளே ‘ என்றது. ‘வாங்க தம்பி, போய் நாசுவத்தியெக் கூட்டுவரலாம் ‘ என்று என்னையும் அழைத்தார். நாசுவத்தியின் வீடு தள்ளியிருந்தது. மய்யத்தாங் கொல்லையைத் தாண்டித்தான் அவள் வீட்டுக்குப் போக வேண்டும். குட்டியாப்பாவுக்கு — எனக்கும்தான் — தனியாகப் போக பயம்.

மய்யத்தாங் கொல்லையைக் கடக்கும்போது குட்டியாப்பா குல்ஹுவல்லாஹு சூராவை சப்தமாக ஓதிக்கொண்டு வந்தார்.என்னிடம் ஏதாவது பேசுவதானால் சப்தமாகப் பேசினார். ஒருவழியாக நாசுவத்தி வீட்டு வாசல் வந்தவுடன் குட்டியாப்பா கதவைப் பலமாகத் தட்டினார்.

‘யாரது ? ‘ என்று அதட்டலாகக் குரல் வந்தது.

‘நாந்தாம் மாப்ளெ வந்திருக்கேன் ‘ என்றார் குட்டியாப்பா.

‘எந்தக் கலிச்சல்ல போற மாப்புளெ உரும நேரத்துல ? ‘ என்று எரிச்சலான கேள்வி வந்தது.

மாப்பிள்ளையை இனம் கண்டுகொள்ளாதது மட்டுமல்லாமல் திட்டு வேறு. குட்டியாப்பா ஒரு கணம் ஸ்தம்பித்து விட்டார். பின்பு சுதாரித்துக் கொண்டு அவர் மனைவியின் பெயரைச் சொல்லி பின்பு ‘மாப்பிள்ளை ‘யைச் சேர்த்துச் சொன்னார்.

‘அடியே, நாஹப்பட்ணம் மாப்புள்ளெயா ? ‘ என்று இழுத்தவாறு கதவு திறக்கப்பட்டது.

அன்று அதிகாலை 2.20க்குப் பிறந்த என் முதல் மகளுக்குக்கூட அவர் ‘மாப்பிள்ளை வாப்பா ‘வாகவே திகழ்ந்தார்.

குட்டியாப்பா எனக்கு எப்படி குட்டியாப்பா ஆனார் என்பது ஒரு சிக்கிக்கொண்ட நூல்கண்டு மாதிரியான விஷயம். அவர் நானா என் பெரியம்மாவின் கணவர். அதாவது பெரியப்பா. எனவே இவர் சின்னாப்பா அல்லது குட்டியாப்பா. குள்ளமாக இருந்ததனாலும் குட்டியாப்பா. என்னுடன் வேலை பார்க்கும் சகபேராசிரிய நண்பர்களுக்கும்கூட வயது வித்தியாசமில்லாமல் இவர் குட்டியாப்பாவாகவே இருந்தார். ஆஸ்பத்திரியில் கிடக்கும்போது சொந்தக்காரர்களைவிட காலேஜ் ஸ்டாஃப்களே குட்டியாப்பாவை பொறுப்புடனும் அக்கறையுடனும் பார்த்தனர். ( நஜி விதிவிலக்கு). குட்டியாப்பா ஒரு பிரித்த ஸ்டிக்கர் மாதிரி. எளிதாக எதிலும் எந்த இடத்திலும் அவரால் ஒட்டிக்கொள்ள முடிந்தது. எனக்கு மாமனார்தான் என்றாலும், எந்த மாமனாரும் மருமகனும் சேர்ந்து ஒன்றாக, கற்பழிப்புக் காட்சிகள் நிறைந்த டப்பிங் படம் பார்த்திருக்கிறார்கள் ?

3

எனக்குக் கல்யாணமான புதிது. நாகையில் குட்டியாப்பாவின் லாத்தா வீடு இருந்தது. வீடு கடல் மாதிரி. அந்த வீட்டில் குட்டியாப்பாவுக்கும் பாகம் இருந்ததாம். ஏதோ பொன் வாங்க வேண்டிய இடத்தில் பூ வாங்கிக்கொண்டு தன் பங்குக்கு உள்ளதை குட்டியாப்பா விட்டுக்கொடுத்து விட்டாராம். நாகூர் தர்காவுக்கு வருகின்ற பலர் நேர்ச்சைக்காக மொட்டை அடித்துக்கொண்டு, காதில் பூசகிதமாய் மண்டையிலிருந்து பக்தி பளபளக்க, காதிலிருந்து பக்தி மணக்க, பெருமிதமாய் நடந்து செல்வார்கள். குட்டியாப்பாவைப் பொறுத்த மட்டி, கத்தியையும் அவரே கொண்டுபோய்க் கொடுத்து, மழிக்கச் சொல்லி, காதையும் காட்டி, பூ வைக்கச் சொல்லியிருக்கிறார் என்பது, யானைகள் உட்காருவதற்காகச் செய்யப்பட்ட நாற்காலிகளைக் கொண்ட அந்த வீட்டை இப்போது பார்க்கின்ற யாருக்கும் புரியும்.

அந்த வீட்டுக்கு என் மாமியார் வந்திருந்தார்கள். வயிற்று வலி என்று டாக்டரிடம் காண்பிக்க. நான் பார்க்கப் போயிருந்தேன். (புது மருமகனாக, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முகமாக). குட்டியாப்பா என்னிடம், ‘தம்பி, மாமிக்கி அப்புடியே பெரட்டிகிட்டு வந்திடுச்சு. இங்லீஸ் புக்லெயெல்லாம் படிச்சிருப்பிங்களே…ஒடனே ஆபீஸ் வாப்பா — குட்டியாப்பாவின் மச்சான் — ஃபோன் போட்டாங்க. ஒடனே டாக்டரு கதறிகிட்டு வந்துட்டானே…அதுலெ எல்லாம் ஆபீஸ் வாப்பா ஒரு get ஆன — செல்வாக்கான — ஆளுதம்பி. ம்..டாக்டர் வந்து, மாத்தரெ குடுத்து, ஊசி போட்டு, அதுக்கப்பறந்தான் வவ்த்து வலி pick-up ஆனுச்சு ‘ என்றார்.

மாமியின் வயிற்றுவலி pick-up — குணம் — ஆனதைப் பற்றி எனக்கு ஆச்சரியமில்லை. நான் குட்டியாப்பாவின் ஆங்கிலத்துக்குப் பழகிப்போயிருந்தேன். அது ஒரு நவீன ஓவியம். தலை கீழே கிடக்கும். ராட்சசக் கால்கள் மேலே இருக்கும். வயிறு வீங்கி இருக்கும். அதில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு மட்டும் எளிதில் புரியும்.

என் காலேஜ் ஸ்டாஃபுகள் குட்டியாப்பாவோடு நெருங்கிப் பழகுவதற்கு அவரின் ஆங்கிலமும் ஒரு காரணம். ( ‘மருமஹப்புள்ளெ இங்லீஸ் புரஃபசரா இரிக்கிம்போது, நம்ப நாலு வார்த்தெ பேசுனாத்தானே ஒரு get ஆ — கெளரவமாக — இரிக்கும் ? ‘). அது அவர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது.

ஒரு நாள் நான் க்ளாஸ் முடித்துவிட்டு ஸ்டாஃப் ரூமுக்குள் நுழைந்தபோது குட்டியாப்பா ஜாலியாக உட்கார்ந்து மற்ற ஸ்டாஃபுகளோடு பேசிக்கொண்டும் டா குடித்துக்கொண்டும் இருந்தார். அடிக்கடி காலேஜுக்கு வருவார். ஊரிலிருந்து ஃபாரின் சட்டைகள் வாங்கிவந்து விற்பார். அப்படி வியாபார விஷயமாக வந்திருக்கிறார் என்று நினைத்தேன். ஆனால் ஒரு நண்பன், ‘என்னம்மா, உன் மாமனாரையெல்லாம் ஒனக்கு டிஃபன் கொண்டு வரச்சொல்றே ? ‘ என்றபோதுதான் கவனித்தேன். வழக்கமான சாமான்கள் கொண்டுவரும் பை இல்லை. ஒரு எவர்சில்வர் தூக்குச் சட்டி டேபிள் மேல் உட்கார்ந்திருந்தது.

‘ஆமா தம்பி, பசியாறாம வந்திட்டிங்களாம்ல ? தங்கச்சி சொன்னா. இடியப்பம் மசிச்சுக் குடுத்தா ‘ என்றார்.

வெளியே போய்க்கொண்டிருந்த ஒரு ஸ்டாஃப் நண்பன் சொன்னான். ‘டேய், இந்த மாதிரி மாமனார் கெடிக்க — கிடைக்க. அவனுக்கு ஊர் பேர்ணாம்பட்டு. தமிழ் அப்படித்தான் — நீ குடுத்து வச்சிருக்கணும்மா ‘. குட்டியாப்பாவுக்கு இதைக்கேட்டு மிகவும் குஷி வந்துவிட்டது. பழைய துருப்பிடித்த ப்ளேடினால் நீண்ட நேரம் அங்கங்கே வெட்டிக்கொண்டு, ஷேவ் செய்து, லேசான நூல் வைத்த மாதிரி ஒதுக்கிய மீசையுடன் கூடிய அந்த முகத்தில் பெருமிதம் பனிரண்டு மாதக்குழந்தைபோல் தவழ்ந்து வந்தது.

உடனே அவர், தன்னைப் பற்றி உயர்வாகச் சொன்ன நண்பன் பக்கம் பார்த்து, ‘நம்ம மேலே எல்லாருக்கும் ‘மொஹப்பத் ‘ல தம்பி. இன்ஷா அல்லாஹ், வர்ற வெள்ளிக்கெலமெ, நம்ப வூட்ல முக்கியஸ்தர்களுக்கு ஒரு allotment உண்டு ‘ என்றார். அவர் போனபிறகு, allotment என்றால் ‘விருந்து ‘ என்று மொழிபெயர்த்து குழப்பம் நீக்கினேன்.

மருதத்தில் ஒரு சொந்தக்காரக் கிழம் இருந்தது. அதற்குக் கையில் ஏதோ கிளம்பி, சீழ் வைத்து வீங்கியிருந்தது. அவரை டாக்டரிடம் அழைத்துப் போக குட்டியாப்பா. கூட நான். சீழையெல்லாம் பிதுக்கி எடுத்துவிட்டு, கட்டுப்போட்டுவிட்டது டாக்டரம்மா. பிதுக்கிய வலியில் கிழம் முனங்கிக்கொண்டே வந்தது. ‘ஒன்னுங் கவலெப்படாதிங்க மாமா. அதான் டாக்டரம்மா உங்க pulse — சீழ் — ஐயெல்லாம் பிதுக்கி எடுத்துடுச்சே. இன்னமே எல்லாம் முடிஞ்சு போயிடும் ‘ என்றார் குட்டியாப்பா ஆறுதலாக.

யாராவது உங்க ஊர் எது என்று கேட்டால் போதும். உடனே, ‘நம்ம negative place — native place — நாஹப்பட்ணம் ‘ என்பார். அவர் பிறந்த ஊரும் சரி, புகுந்த ஊரும் சரி, அவரைப் பொறுத்தவரை positive-ஆன இடங்களாக அமையவில்லைதான் என்றாலும், native placeக்கு அப்படி ஒரு திருப்பம் தர சாதாரண கற்பனையால் முடியாது.

அஹமது என்ற பேராசிரிய நண்பனிடம் ஒருதரம், ‘தம்பி, காலைலேந்து கண்ணுல ஒரே ப்ளீடிங் ‘ என்றாராம். பயந்து போன நண்பனிடம் நான்தான் ‘ப்ளீடிங் ‘ என்றால் கண்ணில் நீர் வடிதல் என்று விளக்கினேன்.

பஸ்ஸில் எப்போதுமே குட்டியாப்பா reverse (ரிசர்வ்) செய்துதான் போவார். ‘காமன்ஸ் ‘ஆன (அமைதியான) குழந்தைகளையும், get ஆன (கெளரவமான, செல்வாக்கான, இன்னபிற) மனிதர்களையும் அவருக்கு மிகவும் பிடிக்கும். எப்போதுமே அவர் தெரிந்தவர்கள், நண்பர்கள் குடும்பத்துக்கு ஒரு problem ஆகத்தான் — உதவியாகத்தான் — இருப்பார். மேலும் அவர் அடிக்கடி dash, level போன்ற வார்த்தைகளை பல தளங்களில் பயன்படுத்தி வந்தார்.

குட்டியாப்பாவால் எந்த வார்த்தைக்கும் எந்தப் பொருளையும் கொடுக்க முடிந்தது. மொழியின், வார்த்தைகளின் உள்ளார்ந்த அர்த்தமின்மையை அவர் உணர்த்திக்கொண்டே இருந்தார். இந்த ஆங்கில அறிவை அவர் ஸ்கூலில் பெற்றிருக்கலாம். வயிற்று வலியால் ரோலிங்மில் வேலையை விடுவதற்குமுன் தன்னோடு பணி புரிந்த மாதம் பதினைந்து ரூபாய்க்காரர்களிடமிருந்து பெற்றிருக்கலாம். ப்ரிட்டிஷ்காரன் காலத்தில் அவனே மெச்சும் அளவுக்கு ஆங்கில அறிவும் ‘ஸர் ‘ பட்டமும் பெற்று, பல சீர்திருத்தங்களைச் செய்து இஸ்லாமிய கலைக்களஞ்சியத்தில் இடம்பிடித்துக்கொண்ட குட்டியாப்பாவின் பாட்டனார் காலத்திலிருந்து, அந்தப் பரம்பரையின் தொடர்ச்சியில் எஞ்சியதிலிருந்து பொறுக்கி எடுத்திருக்கலாம். அல்லது இவை எல்லாமும் சேர்ந்த காரணமாகவும் இருக்கலாம். எது எப்படியாயினும் குட்டியாப்பாவின் ஆங்கிலம் யாரும் எளிதில் பின்பற்ற முடியாததாகவே இருந்தது.

4

சமயங்களில் நான் கஜல் கேஸட்டுகளைப் போடும்போது குட்டியாப்பா மிகவும் ரசித்துக் கேட்பார். ஜக்ஜித் சிங் அல்லது ஹரிஹரனின் இரும்புக் குரல் கீழிறங்கி மனதை சுகமாக அழுத்தும்போது குட்டியாப்பாவின் தலையும் அசையும். ஆனால் பாட்டையெல்லாம் கேட்டுவிட்டு கடைசியில், ‘யார் தம்பி, முஹம்மது ரஃபியா ? ‘ என்பார். தமிழைத்தவிர வேறு எந்த மொழியில் யார் பாடினாலும் அது அவரைப் பொறுத்தவரை முஹம்மது ரஃபிதான்.

குட்டியாப்பாவுக்கு பாட்டு கேட்பதென்றாலும் பாடுவதென்றாலும் உயிர். சினிமா, பாட்டு, கச்சேரி, டா, பீடி என்று சிலபல விஷயங்களில் அவர் தனது உயிரை வைத்திருந்தார். (எல்லாமாகச் சேர்ந்து அவர் உயிரை வாங்கிவிட்டது. அவர் ‘மெளத் ‘தானதற்கு மூலகாரணங்களாக, self-medication, டா, பீடி ஆகியவை சொல்லப்பட்டன). பாட்டுப்பாடுவதென்ற ஆசை குட்டியாப்பாவின் மனப்பிரமிடுகளில் நெடுங்காலமாக பதப்படுத்தி வைக்கப்பட்ட மம்மிகளில் ஒன்று. சொந்தக்கார வீட்டுக் கச்சேரிகள், ‘மீலாது ‘விழா மேடைகள் போன்றவற்றில் — மனைவி வீட்டுக்குத் தெரியாமல் — பாடி, அவர் அதற்கு உயிர் கொடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அந்த முயற்சிகளின் எவரெஸ்ட்டாகத்தான் அவர் தன்னை கப்பல் பாடகராக ஸ்தாபித்துக் கொண்டது.

குட்டியாப்பாவை ப்ரின்ஸ்பாலிடம் அறிமுகப்படுத்திய அன்று லட்சத்து முப்பத்து நாலாயிரத்து ஐநூற்று எழுபத்து நான்காவது தடவையாக குட்டியாப்பா தான் ஏன் நாகூர் கந்தூரியின்போது கப்பலில் பாடுகிறார் என்று சொல்ல ஆரம்பித்தார்.

கிட்டத்தட்ட முப்பது வருஷங்களுக்கு முன்பு அவருக்கு வயிற்றுவலி வந்தது. ரோலிங்மில் வேலையை அவர் விட்டார். எவ்வளவோ டாக்டர்கள் பார்த்தும் வலி தீரவில்லை. பிறகு ஒரு நாள் குட்டியாப்பா ஒரு பாரம்பரிய ‘மனாம் ‘ கண்டார். அதில் ஒரு பெரியவர் வந்தார். பச்சை நிறத்தில் ‘பேட்டா ‘. பச்சை நிறத்தில் சால்வை. கையில் ஒரு ‘ஆஸா ‘க்கோல்.

இந்த மாதிரிக் கனவுகளில் வருபவர்கள் பெரும்பாலும் prefer பண்ணுவது பச்சை நிறம்தான். கையில் மறக்காமல் ஒரு கோல் — ஆஸா — இருக்கும். தேவையில்லாத எதையோ விரட்டுகின்ற தோரணையிலேயே அவர்கள் வருவார்கள். விரட்டுவது பெரும்பாலும் பேயாக இருக்கும். பேசும் மொழி பெரும்பாலும் உர்து மொழியாக இருக்கும். பேய்களுக்கு அந்த மொழிதான் தெரியுமோ என்னவோ. குறைந்த பட்சம் ‘ஜாவ் ‘ (போ) என்ற உத்தரவையாவது அவர்கள் பயன்படுத்துவார்கள்.

குட்டியாப்பாவின் மனாமில் வந்த பெரியவர் குட்டியாப்பாவை நாகூர் தர்காவுக்குள் அழைத்துச் சென்று, பாட்டுப்பாடச் சொல்லிவிட்டு மறைந்து விட்டார். மனாமிலிருந்து விழித்த வருஷத்திலிருந்து வருஷா வருஷம் கப்பலில் நேர்ச்சையாக பாடிக்கொண்டு வருகிறார் குட்டியாப்பா. வயிற்றுவலியும் கம்ப்யூட்டர் கோப்பைப்போல ‘டெலீட் ‘ ஆகிப்போனது. இடையில் ஒரு வருஷம் பாடாமல் விட்டபோது, மறுபடியும் வலி ‘அன்டெலீட் ‘ ஆகிவிட்டது. எனவே மனாமில் வந்த நாகூர் ஆண்டவரின் கட்டளைப்படி, குட்டியாப்பா வருஷாவருஷம் கப்பலில் பாடிவருகிறார்.

அனேகமாகக் கடைசிக் கப்பலில் இருந்துதான் குட்டியாப்பாவின் குரல் வரும். கணீரென்று. சளி கலந்து. பயிற்சியில்லாத கமகம். பாட்டெல்லாம் எஜமானைப் பற்றித்தான். ‘திரு நபிப்பேரர் ‘ அல்லது ‘நமனை விரட்ட ‘ இப்படி. எல்லாப் பாடல்களுமே எங்கேயோ கேட்டதுபோன்ற ஒரு குழப்பமான உணர்வை ஏற்படுத்தும். அதற்குக் காரணம் குட்டியாப்பாவின் மெட்டுத்தான். உச்ச ஸ்தாயிக்குப் பழக்கப்படாத அவர் குரல், அந்த இடத்தை நெருங்கும்போது கிளை பிரிந்து, வேறு வசதியான பாதையில் ஓடி, பின்பு ஓரிடத்தில் வந்து மையச்சாலையோடு இணையும். இப்படிப் பல புதிய ‘பைபாஸ் ‘கள் வழியாக வருவதால் பிரபலமான பாடல்கள் புதிய மெருகும் மெட்டும் அடைந்துவிடுகின்றன.

சில தெருக்களின் முனைகளில் கப்பல் நிற்கும். (ட்ராஃபிக் ஜாம்). அகார சாதகங்களுக்கும் கமக ஆலாபனைகளுக்கும் குட்டியாப்பா அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்வார். நெல்லுக்கடைத்தெரு முனையில் கப்பல் பொதுவாக நிற்கும். அப்போது குட்டியாப்பா பாடிக்கொண்டே கூட்டத்தில் தன் மச்சான் கவிஞர் சலீம் நிற்கிறாரா என்று தேடுவார். அந்த நேரத்தில் சரியாக சலீம் எழுதிய பாட்டைத்தான் பாடிக்கொண்டிருப்பார். பாட்டின் முத்திரையடியில் சலீம் பெயர் வரும். சலீமின் தலையைக் கண்டவுடன், ‘சலீமைக் காத்தருள்வாய் நாயகா ‘ என்று பாடுவார். நெல்லுக்கடைத்தெருவை நெருங்கும்போதே குட்டியாப்பா அவரையும் அறியாமல் அந்த வாக்கியத்திற்குச் சென்றுவிடுவார். வாக்கியத்தை முடிப்பதற்குள் சலீமின் தலை தெரியாவிட்டால் ஊசி மறுபடியும் வாக்கியத்தின் தொடக்கத்துக்குச் சென்றுவிடும். எப்படியும் ஏழெட்டு தரம் பாடிமுடித்த பிறகே, சலீமின் தலை தென்படும். அவர் தலையைக் கண்டவுடன் குட்டியாப்பாவுக்கு உற்சாகம் கப்பல் கவிழ்க்கும் பேரலையென எழும்பும். உரத்த குரலில் மறுபடியும் முத்திரையடி. சலீம் சந்தோஷப்பட்டதன் அடையாளமாக தனது தலையை ஆட்டியபிறகுதான் புன்சிரிப்புடன் பாட்டு முன்னேறும்.

‘மைக் ‘கைக் கையில் பிடித்துப் பாடிவரும் அந்த சில மணி நேரங்கள் இந்த பூமியை — மற்றும் அவர் மனைவியை, மாமனாரை, இன்னும் யார்யாரையோ — நெருப்பாய் உதைத்து விண்ணேறும் ராக்கெட்டாய் குட்டியாப்பாவின் மனம் உராய்வுகளற்ற வெளிகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும். ‘ஹந்திரியிலெ கப்பல்லெ பாடிட்டு வருவாஹாலே ‘ என்றால் போதும், அந்த ஊரில் குட்டியாப்பாவை அடையாளம் சொல்லாதவர்களே இருக்க முடியாது.

குடும்பத்தில் அவர் குரலைக்கேட்க யாருமில்லாவிட்டால் என்ன ? வருஷா வருஷம் பல ஆயிரக்கணக்கான மக்கள் அவர் குரலை விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில் நினைவு வைத்திருப்பார்கள். நாஹப்பட்டிணத்திலிருந்து நாகூர்வரை மெல்ல ஊர்வலமாக இழுத்துக்கொண்டு வரப்படும் நாகூர் கந்தூரி முதல் நாள் ஊர்வலக் கப்பலொன்றில் ‘மைக் ‘ பிடித்து பாடிக்கொண்டே வருவதற்கு எத்தனை கச்சேரிகள் ஈடாகும் ? மனைவிக்கும் மாமனாருக்கும் பிடிக்காவிட்டால் என்ன ? அவர்கள் மட்டும் இஸ்லாமியப் பாடல்களை முணுமுணுக்கலாம் ( ‘மூடு ‘ வரும்போது), கேஸட் கேட்டு கண்ணீர் சிந்தலாம். அவர் மட்டும் பாடினால், ஏதோ நடுத்தெருவில் அம்மணமாகப் போய்விட்ட மாதிரி பேச்சு. ஆனால் கப்பலில் பாடும்போது யாராவது தடுக்க முடியுமா ? எஜமானுடைய காரியமாச்சே! குட்டியாப்பா சாதாரண கச்சேரிப் பாடகரா ? கப்பல் பாடகர். அவர் குரல் ‘ஹந்திரி ‘யின் ஒரு அம்சம். இந்த ஆத்ம திருப்திக்காக அவர் நன்றி சொல்லவேண்டியது ஹந்திரிக்கோ, ‘மைக் ‘ ஏற்பாடு செய்து கப்பலில் ஏற்றிவிடும் நண்பருக்கோ அல்ல. வயிற்றுவலிக்குத்தான் அவர் கடன் பட்டிருந்தார்.

தஞ்சாவூரை ஆண்ட ராஜ பிரதாப்சிங் என்பவனுக்கு தீராத வயிற்றுவலி இருந்தது. அவனுடைய மனாமில் வந்த காதர்வலியின் கட்டளைப்படி வலி தீர்ந்தான். இன்றைக்கும் அவன் கட்டித்தந்த பெரிய மினாரா அவன் வயிற்று வலியை நினைவு படுத்தும். கால் நோயால் கஷ்டப்பட்ட சங்கீத வித்வான் ஒருவர் தன் மனாமில் வந்த காதர்வலியின் கட்டளைப்படி தர்காவில் சுபுஹு நேரத்தில் மால்கோஸ் என்ற ராகம் நாற்பது நாட்கள் பாடி, தன் நோய் தீர்க்கப்பட்டார். இந்த வரலாற்றுப் பின்னணியின் தொடர்ச்சியாகத்தான் குட்டியாப்பாவின் மனாமிலும் வந்த காதர்வலியின் கட்டளைப்படி அவர் கப்பலில் பாடி வலி தீர்த்துக்கொண்டார். அதோடு ‘கப்பாப்பா ‘

(கப்பல் வாப்பா) என்ற செல்லப் பெயரையும் குட்டியாப்பா குழந்தைகளிடம் சம்பாதித்துக் கொண்டார்.

5

அதிகாலையில் விழிப்பு வரும் அற்புதம் எனக்கு அடிக்கடி நிகழ்வதில்லை. அதிலும் மனைவி வீடு. மரியாதையோடு தூங்கலாம். அன்று என்னவோ அந்த அற்புதம் நிகழ்ந்தது. சரி, விழிப்புதான் வந்துவிட்டதே, காலை வேளையில் இந்த உலகம், குறிப்பாக மருதம், எப்படி உள்ளது என்று பார்த்துவிடுவோமே என்ற ஆர்வத்தில் எழுந்துவிட்டேன். குட்டியாப்பாவின் கோபம் கலந்த குரலும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

குட்டியாப்பாவுக்குக் கோபம் என்றாலே வீட்டில் உள்ளவர்களுக்கெல்லாம் ஏதோ காமெடி படம் பார்ப்பது மாதிரி. கொல்லைக்கு வந்தேன். குட்டியாப்பாதான். வழக்கமான கோபம். கையை சுளுக்கெடுப்பதுபோல உதறி உதறி — அவர் பாணி — பேசிக்கொண்டிருந்தார். வழக்கம்போல் ‘டார்கெட் ‘ அவர் மனைவிதான். அந்த அதிகாலையில் — ஆறுமணி — குளித்திருந்தார். எப்போதுமே குளித்தால் டவல் கொண்டு உடம்பைத் துடைக்க மாட்டார். தலையெல்லாம் நனைந்திருக்க, கைலியை மட்டும் நெஞ்சுவரை உயர்த்தி உடுத்தியிருப்பார். காற்று அல்லது வெயில் பட்டுத்தான் உடம்பு காயவேண்டும். அவருக்கே தெரியாமல் வாழ்வின் சுவைகளில் ஒன்றை அனுபவித்த கணங்களில் அதுவும் நிச்சயமாக ஒன்று. உடம்பு சீக்கிரம் காய்ந்துவிட காற்று போதும். ஆனால் தலைக்கு நேரமெடுக்கும். காயும்வரை குளிர்ச்சி உடம்பில் இறங்கிக்கொண்டிருக்கும். அந்த இன்பமான குளிர்ச்சியை தினமும் அவர் பெற்றார். அந்த இன்பத்துக்காக அவர் மூலவியாதிக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். (கிட்டத்தட்ட முப்பது வருஷங்களுக்கும் மேலாக அவரை அவஸ்தைப்படுத்திக் கொண்டிருந்த அது உண்மையில் மூலவியாதியே அல்ல என்று ‘மெளத் ‘தாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு டாக்டர் மதி சொல்லித்தான் எனக்கும் தெரிந்தது).

துறைமுகங்களில் பெரும் மூட்டைகளைத் தூக்க ராட்சச சிலந்திகளைப் போலவோ, கொடுக்குகளைப் போலவோ க்ரேன்கள் போன்ற அமைப்புகள் இறங்கி வந்து மூட்டைகளைத் தூக்கி மேலே செல்லுமே அதேபோல குட்டியாப்பா ரெண்டுக்குப் போகும்போதெல்லாம் குதவாய்த் தசைகள் இளகி கீழே வந்து இறங்கிக்கொள்ளுமாம். மலம் கழிப்பது அவருக்கு ஏறத்தாழ பிரசவ வேதனை. ரத்தமும் மலமுமாய்க் கழித்துவிட்டு கையால் உள்ளே தள்ளிவிட்டுக்கொள்வாராம்.

சில வருஷங்களுக்கு முன்பு, எவனோ ஒரு quake-ஐ வைத்து ப்ளேடால் ‘ஆபரேஷன் ‘ வேறு செய்து கொண்டாராம். ஒவ்வொரு நாள் காலையிலும் கடனைக் கழிக்க அவருக்கு ஒரு உந்துதல் தேவைப்பட்டது. கடன் கழித்தால்தான் ‘ராஹத்து ‘. அதற்காக அவருக்குத் தேவை ஒரு லோட்டா நிறைய ஸ்ட்ராங்கான டா. டா குடித்து பத்து நிமிஷம் கழித்து கக்கூஸ். கக்கூஸ்போய் பிரசவத்தை முடித்த பிறகு அதன் ‘பின் ‘விளைவுகளை — கடும் எரிச்சல் முதலியன — குறைப்பதற்கும் சமாதானப்படுத்துவதற்கும்தான் அந்த குளிர்ச்சியும் துவட்டாத தலையும் அவருக்கு தினம் தினம் தேவைப்பட்டது.

‘தம்பி, நம்பளுக்கு இன்னமே சரிப்பட்டு வராது ந்த வூடு. நாம்போறேன் வாப்பா. இன்னமே நீங்க பாத்துக்குங்க. நீங்க, உங்க பொஞ்சாதி, உங்க புள்ளெ.. ‘ இந்த இடத்தில் குட்டியாப்பா வேண்டுமென்றே ஒரு கணம் நிறுத்தி — ஒரு அழுத்தமும் தூரமும் கொடுக்கும் வகையில் — ‘உங்க மாமியா, எல்லாரையும் நீங்க பாத்துங்க வாப்பா, நாம்போறேன். எனக்கென்னா வூடில்லெயா வாசலில்லையா ? ‘

‘ஏங்குட்டியாப்பா, என்னா பிரச்சனை ? ‘

‘இல்லெ தம்பி, என்ன மதிக்க மாட்டேங்குறா ‘

‘யாரு ? ‘

‘யாரு, உங்க அருமெ மாமியா. நா என்னா தப்பா சொல்றேன் ? காசெ வீணாக்காதே. ‘வேஸ்டேஜ் ‘ பண்ணாதே. மேப்படி ஆளுக்கு ஒன்று தராதே, அப்புடான்டா, அதெல்லாம் சொல்லப்டாது, நா தருவேன், எங்க வாப்பாட காசு அப்டாங்குறா. சொல்லுங்க தம்பி, இதுக்குமேலே நா இங்கெ இரிக்கணுமா ? ‘

‘சரி, நா சம்பாதிக்கலெ. உண்மெதான். ஆனா என்னெ சம்பாதிக்க உடாமெ செஞ்சது யாரு ? நீயும் உங்க வாப்பாவும். என்னெ ரோலிங்மில் வேலெயெ உடச்சொன்னது யாரு ? உங்க வாப்பா. கடெ வச்சுத் தரேன்டாரு. தந்தாரா ? சிங்கப்பூருக்கு ஏத்திக்கிறேன்டிங்கிளே ஏத்துனிங்களா ? ஒன்னுமே செய்யலெயே! என் life ஐயே dash பண்ணிட்டாங்களே (அழிச்சிட்டாங்களே)…உங்க வூட்டுக்கு சட்டி தூக்கவும் பொட்டி தூக்கவும் ஆளா வச்சிருந்தீங்க. நீங்க என்னெ மதிச்சால்ல ஊர்லெ உள்ளவன் மதிப்பான். எங்க மதிக்கிறிங்க ? நீங்க மிதிக்கிறிங்க. வாப்பாட ‘ஜண்டா ‘வெத் தூக்கிக்கிட்டு ஆடுறீங்க. எத்தினி நாளைக்கி ஆடுவீங்க ? ஆடுங்க. அதையும் பாப்பம் ‘

குட்டியாப்பா மூச்சு விடாமல் தொடர்ந்தார்.

‘என்னமோ வாப்பா, வூட்டக் கட்னோம், வாசலக் கட்னோம்.. ‘ இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது பக்கத்தில் நின்றிருந்த சில சொந்தக்காரப் பிள்ளைகள் சிரித்தார்கள்.

‘பாத்திங்களா ? சிரிக்கிறாளுவ. என்னா சிரிப்பு ? வூட்டெக் கட்னேன்டா சிரிப்பா ? வாஸ்தவந்தாம்மா. ஏங்காசல்ல. எல்லாம் அப்பாடெ (அவர் மாமனார்) காசுதான்.ஆனா அதெ wastage பண்ணாம, குடிச்சு அளிக்காம, கொள்ளாம, ஒரு வூடா உருப்படியா, மலையிலயும் தண்ணியிலயும் வெயில்லயும் நின்டு உருவாக்குனேம் பாருங்க, என்னெ செருப்பாலெ அடிக்கணும். ‘

அவர் சொல்வதையெல்லாம் மெளனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். இந்த வசனங்களும் இந்த கோபமும் எனக்கு மனப்பாடம். எத்தனை தடவை போட்டுக்கேட்டாலும் குட்டியாப்பாவுக்கு அலுக்காது.

ஒருவகையில் குட்டியாப்பா சொன்ன அவ்வளவும் உண்மைதான். மாமி பார்ப்பதற்கு ரொம்ப அழகு. குட்டியாப்பா இப்போது பார்ப்பதற்கு நன்றாக இல்லை. ஆனால் கூர்ந்து கவனித்தால் இளம் வயதில் பல பெண்களைக் கனவு காணவைத்த முகம் என்பது விளங்கும். சிவந்த நிறம். வெயிலில் அலைந்தலைந்து கறுத்துவிட்டது. (குட்டியாப்பாவின் பல உயிர்களில் அலைவதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்).

யானைக்கால் எப்போது வந்ததென்று தெரியவில்லை. ஒரு கையும் ஒரு பாதமும் வீங்கியிருக்கும். நீளமான நாசி. கண்கள், புருவம், உதடுகள் எல்லாம் அடர்த்தியாகவும் அழுத்தமாகவும். என்னைப் பொறுத்தவரை அவருடைய ‘மைனஸ் பாய்ன்ட் ‘ அவருடைய நடைதான். நடக்கும்போது கனமான சூட்கேஸ் அல்லது பைகளை இரண்டு கைகளாலும் தூக்க முயற்சி செய்வதுபோல கைகளை வைத்துக்கொள்வார். அவரது மூன்று பிள்ளைகளுக்கும் — நஜி உட்பட — அந்த தூக்கல் உண்டு. (கடைக்குட்டி அலி ஒரு தனி ஃபோட்டோவில் அவரை மாதிரியே கைகளைத் தூக்கிக்கொண்டிருந்தான். ‘என்னா குட்டியாப்பா, உங்களெ மாதிரியே நிக்கிறானே ? ‘ என்று கேட்டதற்கு, ‘ஆமா, என்னெ மாதிரித்தான் தம்பி ஸ்டைலா நிப்பான் ‘ என்று ஒரு போடுபோட்டு அசத்தினார்). மற்றபடி மாமியைவிட நல்ல, மிக உயர்ந்த குடும்பத்தில் வந்தவர். நாகையில் இவர் பாட்டனார் பெயரில் ஒரு தெருவே உள்ளது.

எப்படியோ, ஆரம்பம் முதலே பொருத்தமில்லாத கல்யாணமாக குட்டியாப்பாவுக்கு வாழ்க்கை அமைந்துபோனது. மாமியின் கை நீளமானது. சொந்தக்காரிகள் தன் வீட்டிலிருந்து திருடி எடுத்துக்கொண்டு போவதுகூட மாமிக்குப் பிடிக்கும். குட்டியாப்பாவுக்கு மிகமிகச் சின்ன கை. ஐந்து பைசாவிடாமல் சார்மினார் சிகரெட் அட்டையில் கணக்கெழுதி பாக்கெட்டில் வைத்திருப்பார். (நூறு இரு நூறு விட்டுவிட்டு ஏமாந்துவிடுவார்). சொந்தங்கள் உறவு சொல்லிச் சுரண்டுவதை அவரால் அனுமதிக்க முடியவில்லை.

மேனேஜராக இருந்த சுகத்திலேயே குட்டியாப்பா காலம் கழித்துவிட்டார். கணவனின் சம்பாத்தியம் என்று எதையும் அனுபவிக்க முடியாமல் மாமியும், தன் இஷ்டத்துக்கு மனைவி இல்லையே என்ற வருத்தத்தில் குட்டியாப்பாவும் காலம் கடத்திவிட்டனர். அவரை மதித்தவர்கள் என்று யாரையுமே சொல்ல முடியாது. நிச்சயமாக அவர் மனைவியைச் சொல்ல முடியாது. எனக்கே இன்னும் புண் ஆறவில்லை. ஒரு நாள் எனக்குக் காய்ச்சலடித்தது. சம்பாதிக்காதவனுக்குக் காய்ச்சல் வரக்கூடாதென்பது என் மனைவிக்குத் தெரியவில்லை. அவளின் கவலையான முறையீடுக்கு மாமியின் பதில், ‘ஆமா, உங்க மாப்புள்ளக்கி ஓயா காச்சதான். ‘

குட்டியாப்பாவை நினைக்கும்போது பாவமாகத்தான் இருந்தது. பணம் செலவாகும் எந்தப் பழக்கமும் அவரிடம் கிடையாது. என்றாலும் சம்பாதிக்காத காரணத்தால் ஏளனத்தையும் மரியாதையின்மையையும் அவர் வாழ்நாள் பூரா சுமந்து திரிந்தார். அதுவும் மனைவியிடமிருந்து. மருமகளிடமிருந்து. வீட்டு மாப்பிள்ளையாக. அவருக்கென்று வீடோ, தாயோ, தந்தையோ இன்றி.

சோறுகண்ட இடம் சுகம் என்று அவர் இருந்தார் என்று சொல்ல முடியாது. அவர் சாப்பிடுவதே இல்லை. அவருக்குத் தேவையாக இருந்ததெல்லாம் டா, பீடி, சினிமா, பாட்டு, கச்சேரி, ஊர் சுற்றல் அவ்வளவுதான். வீட்டில்கூட அவர் சாப்பிட வந்து நான் பார்த்ததில்லை. சாப்பாட்டு நேரத்தில் வீட்டில் இருந்தாலும் சாப்பிடுவதில்லை. ஏதோ ஒருசில கணங்களின் வேகத்துக்குச் சாட்சியாக மூன்று பிள்ளைகள். மற்றபடி அந்தப் பிள்ளைகளுக்கான எந்தப் பொறுப்புத் தூசியையும் அவர் தட்டியதில்லை.

இந்த ஒட்டாத உறவுக்கு குட்டியாப்பாவின் மனதில் ரகசியமான, ஆழமான வேறு காரணம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒரு வேளை காதல் தோல்வி கீல்வி ? ஒரு தடவை என்னிடம் சொல்லியிருக்கிறார். சின்ன வயதில் — அதாவது வாலிப வயதில் — என் ம்மாவைத்தான் விரும்பினாராம். ஒருதலைக் காதல். என் பாட்டியாகூட இவர் விரும்புவதைப் பயன்படுத்தி ‘ஜெமீமா — என் ம்மா — கொண்ட்டு வரச்சொன்னா ‘ன்னு சொல்லி வெகு தூரத்திலிருந்து குடம் குடமாக குடிநீர் கொண்டுவந்து ஊற்றச் செய்வார்களாம்.

குட்டியாப்பா சொல்வார். ‘பாருங்க தம்பி, அல்லாஹ்ட செயலெப் பாருங்க. எந்த ஜெமீமாவெ நா கல்யாணம் பண்ணனும்னு நெனச்சேனோ, அதே ஜெமீமாட மவனுக்கும் எம்மவளுக்கும் முடிச்சு போட்டு எப்புடிக் கொண்டுவந்து அல்லாஹ் dash (இணைத்து) பண்ணிட்டான் பாத்திங்களா ? ‘

குட்டியாப்பா கிளம்பிவிட்டார். கோபத்தில். சீயாழிக்கோ நாகைக்கோ. நாகையானால் எப்ப வருவார் என்று சொல்ல முடியாது. சீயாழியானால் கடைசி பஸ்ஸில் இரவு பத்தரைக்குத் திரும்பி வருவார். பல க்ளாஸ் டா குடித்திருப்பார். சில வடைகள். பல பீடிகள். எப்படியும் ஒரு மலையாள செக்ஸ் படம் உண்டு.

6

ஃபோன் பண்னப்போன தீனும் ட் ரைவரும் ரொம்ப நேரம் கழித்து வந்தனர். பக்கத்தில் எங்குமே ஃபோன் இல்லையாம். ஒரேயொரு மாடிவீட்டில் மட்டும்தான் இருந்ததாம். அதிலிருந்த கிழவியைக் கெஞ்சிக் கூத்தாடி ஃபோன் பண்ணினானாம். அரைமணி நேரத்தில் வேறொரு கார் வந்துவிடும் என்றான் தீன்.

அழுகையும் பயமுமாக ஒன்றரை மணி நேர காத்திருத்தலுக்குப் பிறகு வேறொரு கார் வந்தது. குட்டியாப்பாவுக்குக் கீழே இருந்த போர்வையால் அவரை மூடி, மேலிருந்து நானும் பிலாலும் தலைமாட்டுப் பக்கமும் கால்மாட்டுப் பக்கமும் பிடித்து, செத்த மிருகத்தின் கால்களைப் பிடித்துத் தூக்கிப் போவதுபோல, ஆனால் மெதுவாக, வந்த காருக்குள் ஏற்றினோம். குட்டியாப்பாவை அவமானப்படுத்தும் ஒரு கொடூரமான செயலைச் செய்கிறோமே என்று மனம் சங்கடப்பட்டது.

எவ்வளவோ கெஞ்சியும், பழைய காரைக் கட்டி இழுத்துக்கொண்டு போய் வேலூர் வொர்க்ஷாப்பில் விட்டுவிட்டுத்தான் போகமுடியும் என்று சொல்லிவிட்டார்கள். எல்லாம் நம்முடைய ‘தக்தீர் ‘ என்று வந்தவழியே மறுபடியும் வேலூரை நோக்கி குட்டியாப்பாவுடன் சென்றோம். ‘குட்டியாப்பாவெ இந்த வூரு உட மாட்டேங்குதே ‘ என்றார் பிலால். பல மாதங்களாக பூதங்குடிக்கே வராமலிருந்த குட்டியாப்பாவை ஃபோன் போட்டு வரவழைத்து ரெண்டு மாசத்துக்குள் இப்படி ஆகிவிட்டதே என்று என் மனதுக்குள் பூச்சி ஊர்ந்தது.

மார்ச் மூன்றாம் தேதி. இரவு ஒன்பதிருக்கும்.

‘தம்பி, முதுவெல்லாம் ஒரே புடிப்பா இருக்கு. மூச்சுவுட முடியாம வலிக்கிது ‘ என்றார் குட்டியாப்பா. டாக்டர் மதியிடம் போகலாமா என்றதற்கு வழக்கம்போல ‘பாத்துகிட்டு போவலாம் ‘ என்றார்.

ரெண்டு நாளைக்கு முன்புதான் காய்ச்சலில் படுத்திருந்தார். நண்பர் அஷ்ரஃப் தந்த மாத்திரைகளையும் போட்டிருந்தார். ஒருவேளை அது ஒத்துக்கொள்ளவில்லையோ என நினைத்தேன். பழைய மாத்திரை ‘wastageஆப் போயிடும் ‘ என்று போட்டுக்கொள்ளும் பழக்கமும் அவருக்கு இருந்தது. டாக்டர் மதியிடம் பதினோரு மணிக்குமேல் காட்டி, மறுநாள் காலை ஈஸிஜி எடுத்த பிறகுதான் உறுதியாகத் தெரிந்தது. ஏற்கனவே அவருக்கு ‘அட்டாக் ‘ வந்திருக்க வேண்டும் என்று மதி சொன்னது. ஹார்ட் அட்டாக்கை முதுகுப்பிடிப்பென்று நினைத்த முதல் மனிதர் குட்டியாப்பாவாகத்தான் இருக்கும்.

ஆஸ்பத்திரியிலும் குட்டியாப்பாவுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மூன்று நாட்களாக ஏறிக்கொண்டிருந்த ‘ட்ரிப் ‘பும் ஆக்ஸிஜனுமாய் இன்டென்சிவ் கேர் யூனிட்டில் இருந்தார். ஜெனரல் வார்டுக்கு வந்தபிறகு அதன் பொறுப்பிலிருந்த டாக்டர் பொடியன்களின் கவனிப்பில் மோசமடைந்துகொண்டே வந்தார். ஒரு நாள் ‘பல்ஸ் ‘ அதிவேகமாக சறுக்கிக்கொண்டே கீழே போக ஆரம்பித்தது. முப்பத்தெட்டு என்றார்கள். பொடியன்களைக் கேட்டால் ‘He is sick ‘ என்று ஒரு விளக்கமான பதிலைக் கொடுத்தார்கள். நான் உடனே டாக்டர் ஃப்ரென்டான மதிக்கு, ‘Kuttiyappaa serious, please come and see ‘ என்று அலியிடம் ஸ்லிப் கொடுத்தனுப்பினேன். உடனே ஆட்டோவில் விரைந்து வந்த மதி, பார்த்துவிட்டு, வார்டுக்குப் பக்கத்தில் — ஆஸ்பத்திரியிலேயே — உள்ள பார்க் பென்ச்சில் உட்கார்ந்து கொண்டு, நடந்து வந்தது மூச்சிறைக்க, ‘We can only pray ‘ என்றது. அதிகாலை மூன்றிலிருந்து ‘பல்ஸ் ‘ அதிசயமான முறையில் உயர்ந்து நார்மலுக்கு வந்தது.

குட்டியாப்பாவை வேலூருக்கோ மெட்ராஸுக்கோ கொண்டு போகாத காரணம் பிரயாணம் செய்வது அவரைப் பொறுத்த அளவில் ‘ரிஸ்க் ‘ என்பதால்தான். மதியின் யோசனைப்படி மெட்ராஸிலிருந்து ஸ்பெஷலிஸ்ட்டை அழைத்து வந்து யோசனை கேட்க, அந்த ஆஸ்பத்திரியின் செவிட்டு டைரக்டரிடம் மதியின் உதவியுடன் சப்தமாக டெக்னிகல் வார்த்தைகளில் கத்தி, ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கினோம். அதை டூட்டியில் இல்லாத டூட்டி டாக்டரிடம் சொல்வதற்காக கேஷுவாலிட்டி, லேடாஸ் ஹாஸ்டல், ரெக்ரியேஷன் க்ளப் என்று அரைமணி அலைந்தோம்.

ஸ்பெஷலிஸ்ட் வந்து பார்த்த பிறகுதான் குட்டியாப்பாவுக்கு கடுமையான டி.பி. இருப்பது தெரியவந்தது. அவர் வந்து ட்ரீட்மென்ட்டை மாற்றிக் கொடுத்தது பொடியன்களுக்குப் பிடிக்கவில்லை. செவிட்டு டைரக்டரை மீறி எதுவும் செய்யமுடியாததால் வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் எங்கள்மீது எரிந்து விழுந்தான்கள். ( ‘See, if anthing happens, we are not responsible ‘. ‘Go go, don ‘t stand here ‘.)

ஸ்பெஷலிஸ்ட் வந்து போனபின்பு குட்டியாப்பாவின் உடல் நிலை முன்னேறத்தொடங்கியது. மலம், ஜலம், பேச்சு எல்லாம் வர ஆரம்பித்தது. எதிர் படுக்கைக்காரர் ‘பலூனைக் காட்றார் பாரு ‘ என்றெல்லாம் ஜோக் அடிக்க ஆரம்பித்தார். நஜி சிரித்துக்கொண்டே, ‘அதிருக்கட்டும், உங்க பலூனைக் காட்டாதிங்க ‘ என்று அவர் கைலியை இழுத்து மூடினாள். வருவோர் போவோரையெல்லாம் தனக்கு ‘முச்சு ‘ கொடுத்துவிட்டு போகச்சொன்னார். வந்து பார்த்த காலேஜ் ஸ்டாஃபுகளிடமெல்லாம் வளவளவென்று பேசி நாக்கு வறண்டு போனார். பேசிக்கொண்டே இருப்பது நல்லதல்ல என்பதால் நான், ‘சும்மா இரிங்க குட்டியாப்பா ‘ என்று சற்று அதட்டலாகச் சொன்னால், தலையை ஆட்டி, கையால் வாயைப் பொத்திக் காட்டுவார்.

களைப்பே அறியாத ஒரு தேவதையைப்போல நஜி அவரை இருபத்தி நாலு மணி நேரமும் கவனித்துக்கொண்டாள். அவள் கவனிப்பை கவனித்த எனக்கும் நோயில் படுத்து அவளால் கவனிக்கப்பட வேண்டும் என்று ஆசைகூட வந்தது.

குட்டியாப்பாவின் பக்கத்துப் படுக்கையில் இருந்தவர் திடாரென்று ‘மெளத் ‘தானார். அதை அறியாத அவரது தடியான மகன் வார்டுக்குள் வந்து பார்த்துவிட்டு இடம் கழுவி விடப்பட்டிருப்பதைக் கண்டு குழம்பி நின்றான். நான் ஆட்டோ பிடித்து, ஆறுதல் சொல்லி, அவனை வீடுவரை கொண்டுபோய் விட்டுவிட்டு ‘மய்யத் ‘தையும் பார்த்துவிட்டு வந்தேன். ஆட்டோவிலிருந்து அலறிக்கொண்டே இறங்கியவன் கையிலிருந்த பொட்டலத்தை வெறியோடு வீசியெறிந்தான். எதிரிலிருந்த எலக்ட் ரிக் கம்பத்தில் மோதிச் சிதறியது ஆறு effcorlin இன்ஜெக்ஷன் பாக்கெட்டுகள்.

அந்த இன்ஜெக்ஷனைத்தான் குட்டியாப்பாவுக்கு அடிக்கடி போட்டார்கள். உள்ளூரில் எப்போதுமே அது கிடைக்காதாம். வேலூருக்கு ஆள் அனுப்பித்தான் வாங்கி வந்தோம். அன்று அனுப்பிய பையன் இன்ஜெக்ஷன் கிடைக்கவில்லை என்று வெறுங்கையுடன் திரும்பி வந்தான். நஜி மிகவும் கவலைப்பட்டாள். நான் மறுபடியும் ‘மய்யத் ‘ வீட்டுக்குள் போய் உடைந்தது போக மீதியிருந்த நாலு இன்ஜெக்ஷனையும் வாங்கி வந்தேன். நஜிக்கு சந்தோஷமும் ஆச்சரியமும். எப்படியாவது குட்டியாப்பா பிழைத்துக்கொள்ள வேண்டும்.

மார்ச் 24ம் தேதி.

மறுபடியும் சீரியஸானார் குட்டியாப்பா. Deep coma-வில் இருப்பதாக ஒரு டாக்டர் பொடியன் சொன்னான். காலைத்தட்டினால் தட்டின பக்கம் தலையைத் திருப்பினார் குட்டியாப்பா. வேலூர் சி.எம்.சி.க்குக் கொண்டு போவது ‘ரிஸ்க் ‘ என்றாலும் போனால் பிழைப்பதற்கு ஒரு remote chance உள்ளது. ஆனால் ‘ட்ரிப் ‘பும் ஆக்ஸிஜனும் ஏற்றிக்கொண்டே கொண்டு செல்ல வேண்டும் என்றது மதி. வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிற, அன்பையும் ஆதரவையும் போதிக்கின்ற கர்த்தரைக் கடவுளாகக் கொண்ட அந்த க்றிஸ்டியன் ஆஸ்பத்திரியில் ஆக்ஸிஜனோ வேனோ தருவதில்லையாம். கடைசியில் ப்ரின்ஸ்பால் ஒரு இருபது முப்பது ஃபோன் யார் யாருக்கோ போட்டு, ஒரு ப்ரைவேட் க்ளினிக்கிலிருந்து ஆக்ஸிஜன் வாங்கித் தந்தார். சி.எம்.சி. சென்ற கால் மணி நேரத்திலேயே ஹார்ட்டை அமுக்கி மூனு நாலு டாக்டர்கள் குட்டியாப்பாவை ‘ரிசஸ்ஸிடேட் ‘ செய்ய ஆரம்பித்தார்கள். அப்பவே பகீரென்றது.

மருதத்தில் இரண்டு மாதத்துக்கு முன்பு கட்டப்பட்ட பிரம்மாண்டமான புதிய பள்ளிவாசலில்தான் குட்டியாப்பாவுக்காக முதல் ஜனாஸா தொழுகை நிறைவேற்றப்பட்டது. குட்டியாப்பாவுக்குத் தெரிந்தால் மிகவும் பெருமைப்படுவார் என்று நினைத்தேன். அப்படி நினைப்பது எவ்வளவு அபத்தமானது என்பது எனக்கே தெரிந்தாலும் ஏனோ நான் அப்படி நினைத்தேன்.

குட்டியாப்பாவை குழிக்குள் வைத்த பிறகு கடைசி முறையாக வெள்ளைத்துப்பட்டியை நீக்கி முகத்தை ஒருமுறை எல்லாருக்கும் காட்டினார்கள். குட்டியாப்பாவை எனக்கு மருதத்தில் அடக்கவே பிரியமில்லை. நாகப்பட்டினம்தான் கொண்டுபோயிருக்க வேண்டும். என்னை இங்கே அடக்க வேண்டாம் என்று சொல்ல நினைத்த குட்டியாப்பா வாய்மூடிக் கிடந்தார் குழிக்குள். ஆஸ்பத்திரியில் ஒரு நாலு நாள் நன்றாக இருந்தபோது என்னிடம் பேசினார்.

‘தம்பி, மருதம் உங்களுக்குப் புடிச்சிக்கிது ? ‘

‘எனக்கு எப்பவுமே புடிக்காதே குட்டியாப்பா ‘

‘எனக்கு இப்ப சமீப காலமா புடிக்காம போச்சு. நீங்க ஊருக்குப் போனாகூட, என்னெ ரூம்லெயே வச்சுப் பூட்டிட்டுப் போங்க. நா, எம்புள்ளெ ஃபரீது — மூத்த மகன் — கொண்ட்டு வந்த ஹார்மோனியத்தெ — சிந்தசைஸரை — வாய்ச்சுகிட்டே இருந்துர்றேன். ‘

ஆஸ்பத்திரியில் இருந்து உடம்பை பூரணமாக குணமாக்கித்தான் தன்னைக் கொண்டு போகவேண்டும் என்ற விருப்பத்தை குட்டியாப்பா அவர் பாணி ஆங்கிலத்தில் என்னிடம் சொன்னார். சி.எம்.சி. டாக்டர்கள் அவர் ‘மெளத் ‘தானதற்கான காரணத்தை எங்களிடம் விளக்கிக் கொண்டிருந்தபோது எனக்கு குட்டியாப்பா சொன்னதுதான் ஞாபகம் வந்தது :

‘தம்பி, இங்கெருந்து போவும்போது bodyயெ close பண்ணித்தாங் கொண்ட்டு போவணும். ‘

=============

தி. ஜானகிராமன் குறு நாவல் போட்டியில் தேர்வு பெற்றது.

கணையாழி, மார்ச், 1992.

==============

அருஞ்சொற்பொருள்

===============

வாப்பா – அப்பா

நானா – அண்ணன்

லாத்தா – அக்கா

பாட்டியா – பாட்டி

மெளத் – இறப்பு

மய்யத் – இறந்த உடல்

மய்யத்தாங்கொல்லை – அடக்கஸ்தலம்

நாசுவன் – முடிதிருத்துபவர்

ஹயாத்து – வாழ்வு

ராஹத்து – வசதி

எஜமான், காதர்வலீ – நாகூர் ஆண்டவர் எனப்படும் இறை நேசர் ஷாஹுல் ஹமீது

அவர்கள்.

கறாமாத்து – அற்புதம்

ஜண்டா – கொடி

ஹந்திரி – கந்தூரி, உருஸ்

அப்பா – தாத்தா

வலியுல்லாஹ் – இறை நேசர்

ஆலவடி – வராந்தா

சூரா – திருக்குர் ஆன் அத்தியாயம்

உரும நேரம் – பகல் / இரவு 12 மணி

நாசுவத்தி – மருத்துவச்சி

ஹதீது – முஹம்மது நபி(ஸல்)யின் வாழ்வும் வாக்கும்

பேட்டா – தலைப்பாகை

மனாம் – கனவு

மொஹப்பத் – அன்பு

சுபுஹு – விடியல் நேரம்

தக்தீர் – விதி

ஜனாஸா தொழுகை – இறந்தவருக்கான தொழுகை

மீலாது – முஹம்மது நபியின் பிறந்த நாள்

(கதை பற்றிய கருத்துக்கள்

=========

ரூமி அவர்களின் தலைப்புக் கதையான குட்டியாப்பா ஒரு மகத்தான சாதனை என்றே கருதத் தோன்றுகிறது. பாத்திரத் தேர்வு, சம்பவத் தேர்வு எவ்வளவுக்கெவ்வளவு இயல்பாகத் தோன்றுகிறதோ அதே அளவுக்கு தனித்துவமிக்கவை…குட்டியாப்பாவின் பாத்திரத்தில்தான் எவ்வளவு நுட்பமான இழைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன! பரிகாசம், பரிதாபம் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக ரூமி அவர்கள் படைப்பில் காட்டப்பட்டிருக்கிறது. கலையும் முதிர்ந்த அறிவும் இப்படி ஒரு சேரக்காண்பதில் மிகுந்த மன நிறைவு ஏற்படுகிறது.

( ‘குட்டியாப்பா ‘ பற்றி குட்டியாப்பா நூலுக்கான முன்னுரையில் அசோகமித்திரன்.)

அண்மையில் தமிழில் எழுதப்பட்ட சிறந்த குறு நாவல்களில் ஒன்று ‘குட்டியாப்பா ‘.

(ஆனந்த விகடன் (15-07-01), கற்றதும் பெற்றதும், சுஜாதா.)

‘குட்டியாப்பா ‘ கதை நேஷனல் புக்ட்ரஸ்ட் இந்தியாவின் சிறுகதைத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் எம்ஃபில் பட்ட ஆய்வுக்காக ‘குட்டியாப்பா ‘ நூல் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆய்வுக்கட்டுரையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. )

==================

ruminagore@yahoo.com

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி