ஹமீது ஜாஃபர்
கடந்த இரண்டு வாரங்களாக ஹெச். ஜி. ரசூலின் பிரச்சினைக் குறித்து திண்ணையில் வந்த செய்திகள் என்னை அதிரவைத்தது. அவரை காஃபிர் என்று அங்குள்ள உலமாக்கள் சபையால் தீர்ப்பளித்திருப்பதும், அந்த ஊர் சமுதாயம்(ஜமாஅத்) அவரை குடும்பத்தோடு ஊர் விலக்கி வைத்திருப்பதையும் என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அவர்மீது இத்தகைய தீர்ப்பளிப்பதற்கு அவர் என்ன குற்றம் செய்தார் என்று நண்பர்கள் வட்டத்தில் விசாரித்தபோது இஸ்லாத்தில் குடி கலாச்சாரம் என்ற ஒரு கட்டுரை உயிர்மை என்ற பத்திரிக்கையில் எழுதியிருப்பதாக சொன்னார்கள். நேரமின்மை காரணமாக திண்ணையில் வரும் ஒரு சில எழுத்தாளர்களின் படைப்பைத் தவிர வேறு எந்த பத்திரிக்கைகளையும் படிப்பதில்லை. எனவே என்னைப் போன்றவர்களுக்கு தெரியாமல் போனதில் அதிசயம் ஒன்றுமில்லை.
பிரச்சினைக்குரிய அந்த கட்டுரையைப் படிக்கவேண்டுமென்று நண்பர் ஒருவரிடம் சொன்னபோது எங்கெங்கோ தேடி கிடைக்காமல் கடைசியில் ஊரிலிருந்து வரவழைத்து இரண்டு நாட்களுக்கு முன்புதான் தந்தார். நான்கு மாத வயதான பழைய இதழ்.
படித்துப் பார்த்தபோது, அவர் தன்னுடைய நுணுக்க அறிவினால் மிக சாதுர்யமாக, மிகத் திறமையாக விஷத்தை கக்கி வைத்திருக்கிறார். இது அவருக்கு இயல்பாகிவிட்டது.
ஹெச். ஜி. ரசூல் நல்ல சிந்தனையாளர், நல்ல எழுத்தாளர். அவருடைய கருத்துக்கள், அவற்றை சொல்லும் முறை, எழுத்தின் நடை இவைகள் என்னை மிகவும் கவர்ந்திருந்தது; அவர்மீது தனி மதிப்பு வைத்திருக்கிறேன். ஆனால் சமீப காலமாக முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் அவர் தடம் மாறிப் போவதைப் பார்க்கும்போது அவர்மீது பரிதாப உணர்வே ஏற்படுகிறது.
அந்த கட்டுரையில் அவர் மூன்று விதமான கருத்தாக்கத்தை முன் வைக்கிறார். (1) மதுவின் நன்மை தீமைகளின் மதிப்பீடு, (2) சுத்தம் அசுத்தம் என்பதான கருத்தியல், (3) மதுவை குற்றவியலாகக் கருதாமல் அறிவுரை சார்ந்த அம்சம்.
இந்த மூன்றையும் வைத்து அல்லாஹ்வை வணங்கும்போது அதாவது தொழும்போது குடிபோதையில் இருக்கக்கூடாது, மற்ற நேரங்களில் இருக்கலாம்; தவிர , குடித்தாலும் – நிதானமாக இருக்கும்பட்சத்தில் – தொழலாம் என்று குர்ஆன் மறைமுகமாக அனுமதிக்கிறது என்பதுபோல் ஒரு மாயை கருத்தை ஏற்படுத்தியுள்ளார்.
நபிகள் கோமான் தோன்றிய காலகட்டத்தையும் சூழலையும் முதலில் கருத்தில் கொள்ளவேண்டும். நாகரீகம் வளர்ச்சி பெற்ற இந்திய துணை கண்டத்திலோ அல்லது எகிப்திலோ அல்லது மெஸபடோமியோவிலோ தோன்றாமல் அறிவீனர்களாக மதுவுக்கும் மங்கைக்கும் அடிமைப் பட்டு பல குழுக்களாக ஒற்றுமையற்று ஒருவருக்கொருவர் சண்டை இட்டுக்கொண்டு ஏறக்குறைய காட்டுமிராண்டிகளைப் போலிருந்த பாலைப் பிரதேச சமூகத்தில் தோன்றி சொல்லனா பல இன்னல்கள்பட்டு அம் மக்களை ஒற்றுமைப் படுத்தி ஒரு சமூக, அரசியல் அமைப்பை உருவாக்கி அதை உலகு முழுவதும் பரப்பி வெற்றி கண்டவர் பெருமானார் அவர்கள்.
அடிமைப்பட்டிருக்கும் எந்த செயலையும் உடனே நிறுத்த முடியாது. அப்படி இருக்கையில் புத்தியை பிறழச் செய்து இனம்புரியாத இன்பம் போன்ற மயக்க நிலையை உருவாக்கும் மதுப்பழக்கத்தை எப்படி உடனே தடை செய்யமுடியும்? எனவே குடித்தால்கூட தொழலாம்; தொழும்போது மட்டும் குடிக்காதீர்கள் என்று அறிவுறுத்திய மார்க்கம் ஒரு நிலை வந்தவுடன் முற்றிலும் குடிக்கக்கூடாது என்று தடை விதித்தது என்ற செய்தி உலகறிந்தது.
அதே நேரம் , இஸ்லாத்தில் எதற்கும் நிர்ப்பந்தம் இல்லை. மதுபானம் போன்று எத்தனையோ பொருட்களை இஸ்லாம் தடைவிதித்துள்ளது என்றாலும் தவிர்க்கமுடியாத நிலையில் அந்த தடை செய்யப்பட்டவைகளும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. உதாரணமாக சளி, இருமல் போன்ற நோய்களுக்கான மருந்தில், இதை உட்கொள்பவர்கள் வாகனம் ஓட்டுவதையோ இயந்திரங்களை இயக்குவதையோ தவிர்த்துக்கொள்ளுங்கள் என்று எழுதியிருப்பார்கள். ஏன்? அவற்றில் குறிப்பிட்ட அளவு போதையூட்டும் சக்தி இருக்கிறது என்பதால். வேறு வார்த்தையில் சொன்னால் அவற்றில் ஆல்கஹால் கலந்திருக்கிறது. நோய் நீங்கும் என்பதால் அவற்றை அருந்த அனுமதி உண்டு. நோயே இல்லாமல் வெறும் போதைக்காக பருகினால் அது ஹறாம். அதுமட்டுமல்ல போதை தரும் என்பதற்காக சில குளிர்பானத்தில் சில குறிப்பிட்ட மாத்திரையை கலந்து பருகினாலும் ஹறாம்தான். எனவே இங்கு செயலைவிட அதன் விளைவை கருத்தில் கொள்ளவேண்டும். இத்தகைய விளைவை கருத்தில் கொண்டுதான் மது அருந்துவதில் நன்மையைவிட தீமை அதிகம் இருக்கிறது என்று இறைவசனம் கூறுகிறது.
“சொர்க்கத்தில் மது ஆறுகள் ஓடுகிறதெனில் ஏன் இந்த உலத்தில் அந்த ஆறுகள் ஓடக்கூடாது?” என்று கேட்கிறார் ஹெச் ஜி ஆர்.
சொர்க்கத்தின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று அவரால் வரையறுத்து காண்பிக்கமுடியுமா? இல்லை இப்படி இருக்கும் என்று உதாரணம் இல்லாமல் சொல்லமுடியுமா? இல்லை அவருக்கு தெரியுமா? நிச்சயமாக எனக்கும் தெரியாது; வேறு யாருக்கும் தெரியாது. அதை அனுபவிக்கும்போதுதான் தெரியும்.
விண்ணகத்தின் கதவுகளெல்லாம் திறக்கப்படும்போது…. என்று இறைவசனம் உள்ளது. அதற்காக விண்ணகத்தில் கதவு இருக்கிறது அது பூட்டி போட்டு பூட்டியிருக்கிறது என்று அர்த்தம் கொள்ளமுடியுமா? மனிதனாகிய உனக்கும் இறைவனுக்கும் இடையிலுள்ள திரைகளெல்லாம் கிழித்தெறியப் படும்போது என்று பொருள் கொண்டால் அது ஓரளவுக்குப் பொருந்தும்! குர்ஆன் என்பது நீண்ட நாவல் அல்ல அல்லது கதை சொல்லும் புராணம் அல்ல. அது ஒரு பேரிலக்கியம் என்று மேற்கத்திய கிழக்கத்திய ஆய்வாளர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட திருமறை வசனங்களுக்கு literary meaning கொடுத்தால் அதன் இலக்கியத் தன்மை கெடுவதோடு அதனைக் கேலி செய்வதுபோல் ஆகிவிடும். இதனைக் கருத்தில் கொண்டுதான் குர்ஆனுக்கு விரிவுரை எழுதிய அறிஞர்கள் இப்படி சொல்கிறார்கள்: “எங்கள் சிற்றறிவுக்கு எட்டியவரை இந்த புனித குர்ஆனுக்கு விரிவுரை செய்துள்ளோம், இதுதான் இறுதியான கருத்து என்று சொல்லமுடியாது, நாளை மேலும் சிறப்பான விளக்கம் வரலாம்…”
மேலும் அவர் (1) அரபு நாடுகளில் மது அருந்துவதற்கு அனுமதித்திருப்பது பற்றியும், (2) முஸ்லிம்கள் மதுவை வெறுப்பதற்குக் காரணம் மேற்கை வெறுப்பதே என்றும் , (3) அமெரிக்க முஸ்லிம்கள் இங்குள்ள பிறர் அனுபவிக்கும் சுதந்திரத்தை அனுபவிக்கமுடியவில்லை என்றும் அங்காலாய்த்துள்ளார்.
(1) ஒரு நாட்டில் மது தடை விதித்திருப்பதும் விதிக்காமலிருப்பதும் அந்த நாட்டின் சமூக பொருளாதார அரசியல் நிலைப்பாட்டைப் பொருத்தது. பெட்ரோல் வளமிக்க அரபு நாடுகளில் தங்களது சுய வலுவைவிட ஏகாதிபத்தியங்களின் அழுத்தம் அதிகம். இவர்கள் வெறும் தஞ்சாவூர் பொம்மைகள்.
(2) தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறிகட்டியதுபோல் இருக்கிறது இவரது கருத்து. இறைசொல், நபிசொல், இஸ்லாத்தின் சட்டம் எல்லாம் வெறும் ஏட்டு சுரைக்காய்; மேற்குதான் எல்லாம். அப்படியானால் மது அருந்தும் முஸ்லிம்களுக்கு மேற்கு என்ன அள்ளி கொடுக்கிறது?
(3) அமெரிக்காவிற்கென்று என்ன கலாச்சாரம் இருக்கிறது? அவர்களின் free sex; single parent; இன்னும் சொல்லமுடியாத வாழ்க்கை முறை அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு வேண்டும் என்கிறீர்களா? ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக லண்டன் வாழ் இலங்கைத் தமிழர்களின் மன உளைச்சளை அதே இதழில் இளைய அப்துல்லா எழுதியுள்ளாரே! அது சுதந்திரமான வாழ்க்கை என்கிறீர்களா?
ஆக மொத்தத்தில் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது முற்போக்கான அறிவு என்ற போர்வையில் தவறிழைத்துவிட்டு அந்த தவறை நியாயப்படுத்த பன்முகங்களில் சமாதானப் படுத்த முயற்சி செய்துக்கொண்டிருக்கிறதைப் பார்க்கும்போது “தவறுக்குத் தவறான தவறை செய்துவிட்டு தறிகெட்டுப் போனேனே ஞானப் பெண்ணே!” என்ற அடி நினைவுக்கு வருகிறது.
ஹமீது ஜாஃபர்
e.mail: maricar@eim.ae
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 7
- அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் -3
- 9 கேள்விகளும் – உண்மையின் மையப்புள்ளியும்
- காதல் நாற்பது – 39 சொல்லிக் கொடு இனியவனே !
- சாவு அச்சங்கள் நீங்கிய பொழுதுகள்!
- மேற்கு உலகம்!
- இழந்த பின்னும் இருக்கும் உலகம்
- சீரியல் தோட்டம்
- சொன்னாலும் சொல்வார்கள், திருக் கயிலாயம் வெறும் பாறை என!
- கடிதம்
- பிழைதிருத்தம் 16 – அலைகடல் – அலைக்கடல்
- மீசை
- குடி கலாச்சாரம்?
- ஸ்ரீனி’யின் ‘அந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…’
- ஹெச்.ஜி.ரசூல் என்ன செய்தார்…. எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்தின் பதிவு
- கண்மணி குணசேகரனுக்கு சுந்தர ராமசாமி இலக்கிய விருது
- மங்களத்தின் கவலையில் நானும் பங்கேற்கிறேன். ஆனால்…
- மகாகவி பர்த்ருஹரியின் ‘சுபாஷிதம்’ : மதுமிதாவின் தமிழாக்கம்
- இராம சேது குறித்தும் இராமர் குறித்தும்
- பாரதி 125 பன்னாட்டுக்கருத்தரங்கம்
- கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் 84 ஆம் பிறந்தநாள்விழா
- ஆடும் கசாப்புக்காரனும்!!
- வீடு
- ஈழத்துப்பூராடனாரின் தமிழ்இலக்கியப் பணிகள்
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 24
- “படித்ததும் புரிந்ததும்”.. (2) நினைவுச் சின்னம்
- இலை போட்டாச்சு கடலைப் பருப்பு போளி
- மகத்தானவர்கள் நாம்
- ரசனை
- பிடுங்கிகள்
- பதுங்குகுழியில் பிறந்தகுழந்தை
- “பெயரில்லாத நண்பனின் கடிதம்”
- தொட்டிச் செடிகள்
- காதலே ஓடிவிடு
- அக்கினியின் ஊற்று……
- ஒரு சுனாமியின் பின்னே…
- மாத்தா ஹரி – அத்தியாயம் 28
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 2
- மாலை நேரத்து விடியல்