குஜராத் கலவரங்களை முன்வைத்து

This entry is part [part not set] of 30 in the series 20020512_Issue

சின்னக் கருப்பன்


குஜராத் கலவரங்கள் பற்றிய பெரும் புயல் எல்லாப்பத்திரிக்கைகளில் அடித்துக்கொண்டிருக்கிறது. நானும் வேண்டுமானால், கண்டித்து வைக்கலாம். என்னுடைய இந்தக்கட்டுரையின் நோக்கம் அதுவல்ல.

குஜராத் கலவரங்கள் காண்பிக்கும் ஒரு விஷயத்தை நாம் பார்க்கத்தவறிவிடுகிறோம். அதுவே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

முதலாவது அறுதிப் பெரும்பான்மையுடன் ஒரு மத்திய மாநில அரசு இருக்கும்போது, அந்த அரசில் இருப்பவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்யாமல் எப்படித் தடுப்பது என்பது.

இரண்டாவது மாநில மத்திய உறவுகள் எப்படி இருக்கவேண்டும் என்பது.

உதாரணத்துக்கு நாம் கடந்தகாலத்துக்குத் தான் செல்ல வேண்டும்.

நெல்லி என்ற அஸ்ஸாமிய ஊரில் முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதுதான் அஸ்ஸாம் பிரச்னையின் ஆரம்பம். அது இந்திரா காந்தி காலத்தில் நடந்தது. இந்திரா காந்தி ஆட்சியில் இருக்கும்போது அட்டகாசமான மெஜாரிட்டி அவருக்கு. இந்திரா காந்தி அந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். அந்த படுகொலையில் போலீஸில் இருந்தவர்களே கூட்டாளிகள். அப்போதைய போலீஸ் அதிகாரி காங்கிரஸ்காரர் என்பதால் அவரை டிஸ்மிஸ் செய்யவேண்டாம், வேறு இடத்துக்குக் கூட மாற்றவில்லை மாநில காங்கிரஸ் அரசும், மத்திய காங்கிரஸ் அரசும்.

அதைவிட மோசம், பத்திரிக்கைகள் வாயே திறக்கவில்லை.

டில்லியில் இந்திராகாந்தி கொலையுண்டபின்னர் நடந்த சீக்கியர் எதிர்ப்புக் கலவரங்கள் எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். அது சம்பந்தமாக இன்னும் வழக்குகள் நடந்துவருகின்றன. அந்தப் படுகொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் வயது முதிர்ந்து இறந்தும் போய்விட்டார்கள். குற்றவாளிகள் இறுதிவரை தண்டிக்கப்படவே இல்லை. அப்போது ராஜீவ் காந்தி, ‘ ஒரு பெரும் மரம் கீழே விழும்போது, தரை அதிரத்தான் செய்யும் ‘ என்று பேசியது பலருக்கு ஞாபகம் இருக்கலாம்.

இன்று குஜராத்தில் ஒரு தூண்டுதல் நடந்ததும், மாநில அரசாங்கம் நேரடியாக ஈடுபடவில்லை என்று ஆட்சியில் உள்ளவர்கள் சொன்னாலும், மறைமுகமாக ஆசீர்வதித்து இந்தக் கலவரங்கள் நடந்திருக்கின்றன என்பதுதான் தெரிகிறது. போலீசின் கைகள் கட்டிப்போடப்பட்டிருக்கிறது. அல்லது போலிசே கலவரங்களுக்கு மறைமுக ஆதரவு தந்துள்ளன. ராஜீவ் சொன்ன வார்த்தை போன்றே , மோடியின் வாயிலிருந்தும் வருகிறது.

சட்டம் ஒழுங்கு ஒரு மாநிலத்தில் சீர்குலைவது காரணமாக அந்த மாநில அரசு டிஸ்மிஸ் செய்யப்படலாம் என்பது மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டம் 365 சொல்வது.

ஆனால், அந்த மாநிலத்தின் அரசாலேயே சட்டம் ஒழுங்கு சீர்குலைவது என்பது இன்னும் தீவிரமான ஒரு விஷயம். இதுதான் அஸ்ஸாமில் காங்கிரசாலும், டில்லியில் காங்கிரசாலும், குஜராத்தில் பாஜகவாலும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இது இன்னும் நம் உலகத்தில் தொடர்ந்து நடக்கும் விஷயம் என்பதை சற்று வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியும். பாகிஸ்தான் ராணுவம், 1971இல், 30 லட்சம் கிழக்குப் பாகிஸ்தானிய இந்துக்களையும், மாணவர்களையும், அவாமி லீக் கட்சியினரையும் கொன்றது, ர்வாண்டா அரசு தன் மக்களையே கொன்றது, கம்யூனிஸ அமைப்பை உருவாக்குகிறேன் என்று கம்போடியாவில் போல்போட் தன் மக்களையே கொன்றது, ஸ்டாலின் தன் மக்களையே கொன்றது, கம்யூனிஸ்ட் சைனா லாங் மார்ச்சிலும் கலாச்சாரப்புரட்சியிலும், டியானன்மேனிலும் தன் மக்களையே கொன்றது ஆகியவைகளும் இதில் அடக்கம்.

அப்படிப்பட்ட சூழ்நிலையை எப்படி எதிர்காலத்தில் தடுப்பது என்பதுதான் நமது கேள்வியாக இருக்க வேண்டும்.

***

இந்தியாவின் ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களின் ஜனநாயக அரசாங்கம். அதுதான் முதல் கட்டப்பாதுகாப்பு. இது ராணுவ சர்வாதிகாரமாக இருந்தால் (எப்படிப்பட்ட கருணைமிக்க சர்வாதிகாரியாக இருந்தாலும்) அது நிச்சயம் தன் மக்களைத் தானே கொல்லும் அரசாங்கமாகத்தான் இருக்கும்.

ஆனால், பெரும்பான்மை மக்கள் ஆட்சி என்பதே பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை மக்கள் மீது செலுத்தும் சர்வாதிகாரமாகிவிடக்கூடாது. அதற்காகத்தான் அரசியல் சட்டம் எழுதப்பட்டிருக்கிறது. இது நீதி, தனி மனிதர் கொடுக்கும் நீதியாக இல்லாமல், எழுதப்பட்ட, எல்லோரும் ஒப்புக்கொண்ட சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்படுவதாக இருப்பதும் இரண்டாவது பாதுகாப்பு.

அரசியல் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைப் பற்றி தொடர்ந்து விவாதிப்பதும், அந்த ஓட்டைகளை அடைப்பது பற்றிய மக்கள் விவாதமும்தான் பலனளிக்கும். அப்படிப்பட்ட பொது விவாதத்தை நாம் தொடர்ந்து நடத்திக்கொண்டே இருக்கவேண்டும். அதற்கு உறுதுணையாக இருப்பது, மக்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடும் உரிமை.

இந்த உரிமை சில வேளைகளில் அரசாங்கத்தால் மறுக்கப்படுகிறது. ஏனெனில், இந்த உரிமை, உண்மையைச் சொல்வதற்குப் பதிலாகப் பொய்களைச் சொல்வதற்கும், மற்றவர்களைப் புண்படுத்தும் உண்மைகளைச் சொல்வதற்கும், மற்றவர்களை வன்முறைக்குத் தூண்டும் பேச்சுக்களை பேசுவதற்கும் பயன்பட்டு விடுகிறது.

ஜான் ஸ்டூவர்ட் மில் தன்னுடைய புத்தகத்தில் எந்த சூழ்நிலையில் ஒரு தனிமனிதனின் உரிமை பறிக்கப்படலாம் என்று எழுதும்போது, ஒரு மனிதன் பெளதீக ரீதியாக (மனரீதியில் அல்ல) இன்னொரு மனிதனின் உடலை துன்புறுத்தும்போது மட்டுமே அவனது உரிமைகள் பறிக்கப்பட்டு அவன் சிறைப்படுத்தப்படலாம் என்று எழுதுகிறார். இதுதான் சரியான அடிப்படையாக இருக்க முடியும். ஒருவர் பொய் பேசுகிறார் என்பதற்காகவோ, வன்முறைக்குத் தூண்டும் பேச்சுக்களைப் பேசுகிறார் என்பதற்காகவோ ஒருவரை சிறை செய்யவோ, அவரது கருத்துக்களை அடக்கவோ முயலக்கூடாது. எந்தப் பேச்சு வன்முறை தூண்டும், எந்தப் பேச்சு வன்முறை தூண்டாது என்பது கேட்பவரின் மனநிலையை, படிப்பறிவைப் பொறுத்தது. அதனை சட்டரீதியாக ஆக்க முடியாது. இப்படிக் கட்டுப் படுத்துவது எல்லாவிதமான விமர்சனங்களையும் கட்டுப் படுத்தும் முயற்சிக்குத் தான் இட்டுச் செல்லும்.

ஆனால் அது இப்போது நடக்கவில்லை. டில்லி கலவரங்கள் பற்றி பாராளுமன்றத்தில் பேசியதற்காக ஜார்ஜ் பெர்னாண்டஸின் ராஜினாமாவை காங்கிரஸ் கேட்கிறது. மத்திய மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று உரத்தக் குரல் எழுகிறது. மத்திய அரசு மானில அரசினை டிஸ்மிஸ் செய்யும் உரிமை இருக்கலாகாது என்று சொன்ன இடதுசாரிக் கட்சிகளும் சேர்ந்து இதைக் கோருகின்றன.

பாஜகவுக்கு இரட்டை வேடம் கிடையாது. அது இந்தியா முழுவதிலும் இந்து சார்பான, இத்துத்வா சார்பான கட்சி. ஆனால் காங்கிரஸ் கட்சி அப்படியல்ல. கோவாவில் அது கிரிஸ்தவ ஆதரவு கட்சி. கிழக்கு இந்திய மாநிலங்களில் தீவிர கிரிஸ்தவ ஆதரவு கட்சி. திரிபுராவில் அது ஒரு கிரிஸ்தவ தீவிரவாதக்குழுவுடன் தேர்தல் கூட்டணியே வைத்திருக்கிறது. திரிபுராவின் இந்த தீவிரவாதக்குழு இந்துக்களை கொல்வதையும், சரஸ்வதி பூஜை இந்துவிழாக்களை திரிபுராவில் நடத்தக்கூடாது என்று தடை உத்தரவு போட்டு அப்படி நடத்துபவர்களைக் கொன்றும் வந்திருக்கிறது. (இது அமெரிக்காவின் மதச்சுதந்திரம் பற்றிய அறிக்கையில் இருக்கிறது). எந்த ஊரில் எந்த ஜாதி அதிகமாக இருக்கிறதோ, அந்த ஜாதி வெறி முன்னுக்குக்கொண்டுவந்து அரசியலதிகாரம் அளித்த கட்சி காங்கிரஸ். திருச்சியில் இருப்பவர்கள் காங்கிரஸ் கட்சி ஒட்டிய ‘கிரிஸ்தவர் ஓட்டு கிரிஸ்தவருக்கே ‘ என்ற போஸ்டரைப் பார்த்திருக்கலாம். முஸ்லீம் பெரும்பான்மை பகுதிகளில் முஸ்லீம் தீவிரவாதம். கிரிஸ்தவர்கள் பெரும்பான்மை பிரதேசத்தில் கிரிஸ்தவ தீவிரவாதம், இந்துக்கள் பெரும்பான்மை இருக்கும் பிரதேசத்தில் இந்து தீவிரவாதம் என பல முகமூடிகள் காங்கிரசுக்கு. கர்நாடகாவில் கன்னட வெறி, கேரளாவில் ஜாதிவெறி, ஆந்திராவில் ஜாதிவெறி என்று பல முகங்கள் காங்கிரசுக்கு. அகாலிதளத்தை கட்டுப்படுத்த பிந்தரன்வாலே பூதத்தை உருவாக்கியது, ஜனதாவைக் கட்டுப்படுத்த சிவசேனாவுக்கு சாமரம் வீசியது, காஷ்மீரில் ஷேக் அப்துல்லாவைக் கட்டுப்படுத்த அவரது குடும்பத்தாரையே பயன்படுத்தியது, அவரைச் சிறை செய்தது, காஷ்மீரில் பேசும்போது இந்து தீவிரவாதம் என்றும், ஜம்முவில் பேசும்போது முஸ்லீம் தீவிரவாதம் என்றும் பேசி ஓட்டுக்கேட்டது எல்லாம் வரலாற்றின் பதிவேடுகளில். இப்படிப்பட்ட முகமூடிகளே இந்தியாவை இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியில் நிறுத்தி வைத்திருக்கிறது என்பது எல்லோருக்கும் புரியும். இப்படிப்பட்ட காங்கிரசின் தவறுகள் ஒரு எதிர்வினையை உருவாக்காமல் இருக்கும் என எண்ணுவது அறிவிலித்தனம். அந்த எதிர் வினையே இந்துக்களிடமிருந்து, பாஜக ஆதரவாக வெளிவருகிறது.

பாஜக எல்லா இந்திய மக்களையும் இந்தியக் கலாச்சாரத்தின் கீழ், இந்து கலாச்சாரத்தின் கீழ் ஒன்று படுத்த விழைகிறது. பாஜக இந்தியக் கலாச்சாரத்தை இந்துகலாச்சாரமாகப் பார்க்கிறது. இந்துக் கலாச்சாரமே இந்தியாவின் அனைத்து குடிமக்களிடமும் இருக்கிறது என்று இது கூறுகிறது. ஒருவர் வைணவராகவோ, சைவராகவோ, சாக்தராகவோ இருந்தாலும் அவர் இந்துவாக இந்தியராக மற்ற கோவில்களையும் மதிப்பவராக இருப்பது போல, அவர் கிரிஸ்தவராகவோ முஸ்லீமாகவோ இருந்தாலும், அவர் இந்து கலாச்சாரத்தை மதிப்பவராக, மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பவராக, மற்ற மதங்களிலும் உண்மை இருக்கிறது என ஒப்புக்கொள்பவர்களாக இருக்கவேண்டும் எனக் கோருகிறது. அதுவே, கிரிஸ்தவர்களும், முஸ்லீம்களும் இந்த தேசத்தை புனிதத்திலும் புனிதமாகப் பார்க்கவேண்டும் என்ற கோரிக்கையாக இந்துத்வ சக்திகளிடமிருந்து வருகிறது.

இது விவாதிக்க வேண்டிய விஷயம். அப்படிக் கோர முடியுமா ? அது சரியானதா ? அப்படிக் கோர ஒரு சாராருக்கு உரிமை இருக்கிறதா ? அமெரிக்காவின் குடியரசுக்கட்சியின் கொள்கை ஏறத்தாழ இது போன்றதுதான். அமெரிக்கா ஜீடோ கிரிஸ்டியன் வேல்யூஸ் மீது அமைக்கப்பட்டது என்றும், அந்த அமெரிக்க அரசியலமைப்பு சாசனம் இந்த கிரிஸ்தவ கொள்கைகள் மீது அமைக்கப்பட்டது என்றும் குடியரசுக்கட்சியைச் சார்ந்த தினேஷ் திசவுசா, ரஷ் லிம்பா போன்றவர்கள் வற்புறுத்தி பேசி வந்திருக்கிறார்கள்.

இஸ்ரேல் தேசத்திலும் இஸ்ரேல் பெரும்பான்மை யூதர்கள் உள்ள, யூத குணாம்சம் கொண்ட தேசமாகத்தான் இருக்க வேண்டும் எனக் கோருகிறார்கள்.

இப்படிக் கோருகிறவர்கள் எல்லோரும் கன்சர்வேடிவ் பிரிவைச் சார்ந்தவர்களாக இருப்பதைப் பார்க்கலாம். அது மட்டுமல்ல, தான் வாழும் நிலத்தை புனிதமாகப் பார்ப்பது எல்லா மக்களிடமும் இருக்கும் ஒரு பொது குணாம்சம் என்பதையும் காணலாம். அதுவே சில சமயங்களில் போர் முழக்கமாகவும் ஆகிறது. பாகிஸ்தான் என்ற வார்த்தைக்கு ‘பரிசுத்தமான நிலம் ‘ என்று பொருள். பங்களாதேஷ் போராட்டம் ‘அமார் சோனார் பங்க்ளா ‘ என்ற கோஷமாகத்தான் தோன்றியது. ஆனால், கன்சர்வேடிவ் ஆகப் பேசுகிறார்கள் என்பதற்காகவே அவர்களை ஜனநாயக அமைப்பிலிருந்து விலக்கிவிட முடியுமா ? அவர்களது கொள்கைகளை நேரடியாகச் சந்தித்து விவாதிப்பதும் அதன் மீது ஒரு மத்திய நிலைக்கு வருவதும்தான் சரியானதாக இருக்கமுடியும்.

ஆனால், அது பாஜக அரசுகள் செய்யும் தவறுகளை பொறுத்துக்கொள்வதல்ல. அதே சமயம், இந்தத் தவறுகள் சட்டரீதியாக யாராலும் செய்யப்பட முடியாததாக ஆக்கப் படவேண்டும் என்பது நோக்கிய விவாதமே வேண்டும். அப்படி இந்தத் தவறுகள் செய்யப்பட்டாலும் அது சட்டப்படி உடனே கண்டறியப்படக்கூடியதாகவும், அந்த தவறை இழைத்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதாகவும் தான் இருக்க முடியும்.

அப்படிப்பட்ட தண்டனை, இதுவரை நெல்லி படுகொலைகள் செய்தவர்களுக்கு வழங்கப்படவில்லை. டில்லிப் படுகொலைகள் செய்தவர்களுக்கு வழங்கப்படவில்லை. பம்பாய் படுகொலை செய்தவர்களுக்கு வழங்கப்படவில்லை. பங்களாதேஷ் படுகொலைகளைச் செய்தவர்களுக்கு வழங்கப்படவில்லை. குஜராத் படுகொலைகளைச் செய்தவர்களுக்கும் இதுவரை வழங்கப்படவில்லை. குஜராத்தில் நீதி கிடைக்கும் என்ற எண்ணம் குஜராத்தின் மக்களுக்கு இல்லை.

இந்தத் தவறுதான் இந்தியாவில் நடக்கும் இப்படிப்பட்ட படுகொலைகளில் கடைசியாக இருக்க வேண்டும். இதற்குப்பின்னர் எந்த ஒரு அரசாங்கமும் தன் மக்களை தானே கொல்ல முயல சிந்திக்கக்கூட பயப்படும்படி தண்டனை இருக்க வேண்டும். இப்போதைக்கு பாஜகவை அழிப்போம், பிறகு நாம் ஆட்சிக்கு வந்ததும், நாம் படுகொலைகளை தொடர்ந்து செய்யலாம் என காங்கிரஸ் கூட நினைக்க முடியாத அளவு சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.

போலிஸ் என்பது சுதந்திரமான, அமைச்சர்களின் கைப்பாவையாய் இல்லாதபடி, நீதித்துறையைப் போல ஒரு தனித்து இயங்கும் அமைப்பாக உருவாக்கப் படவேண்டும். காவல் துறையில் சிறுபான்மையினருக்கும் சரியானபடி பிரதிநிதித்துவம் வழங்கப் படவேண்டும். அவர்களுக்கு அளிக்கும் பயிற்சியில் மனித உரிமைகள் மற்றும் நீதி வழங்குதல், பரிவுடன் மக்கள் அனைவரையும் பார்த்தல் பற்றிப் பயிற்சிகள் தரவேண்டும்.

மனித உரிமைக் கமிஷன் நேரடியாக ஜனாதிபதிக்கு அறிக்கை வழங்கி அதன் கீழ் ஜனாதிபதி பரிந்துரைகள் வழங்க வசதிகள் செய்யப் படவேண்டும். இப்படிப் பட்ட கலவரங்கள் நடந்தால் உடனடியாக, ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் கைகோர்த்து கலவர இடங்களுக்குச் சென்று கலவரத்தினை மட்டுப் படுத்த முயலவேண்டும். இதிலும் அரசியல் ஆதாயம் தேடவேண்டும் என்ர எண்ணம் வரலாகாது.

அதைவிட முக்கியமாக, ஒரு தொகுதியில், ஒரு மாநிலத்தில் உள்ள மக்கள் அமைதியாக, சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் வாழ்வதில் அந்த மக்களை ஆள்பவர்களுக்கு, அந்த மக்களின் பிரதிநிதிகளுக்கு ஒரு சுயநல ஆர்வம் vested interest இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு திட்டத்தை அரசியல்வாதிகளின் வேலைக்குத் தகுந்த ஊதியம் என்ற கட்டுரையில் கிஷோர் அவர்களும், கோபால்ராவ் அவர்களும் குறித்திருந்தார்கள்.

அப்படி ஒரு முறை அமலில் இருந்திருந்தால், இப்படி அரசியல்வாதிகள் மக்களுக்கு இடையே பிரச்னைகளை உண்டுபண்ணி, தொழிலை முடக்கவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கும் காரணமாக இருந்திருப்பார்களா என்பது ஒரு விவாதத்துக்குரிய அடித்தளம். இன்றைக்கு இந்த அரசியல்வாதிகள், மக்கள் தேர்ந்தெடுக்கும் ஜனநாயகம் காரணமாக, அடுத்த தேர்தலில் நின்று ஜெயிக்க வேண்டும் என்பது சுயநல ஆர்வமாக இருக்க, அந்த தொகுதியில் ஓரளவுக்கு அமைதியை நிலைநாட்ட உதவுகிறார்கள். ஆனால், ஒரு சாராரின் மத ஜாதி அடிப்படையில் ஓட்டுப்பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை காரணமாக, எல்லா மக்களையும் ஒன்று போல பார்க்கும் தேவை இன்றி இருக்கிறார்கள். அல்லது அப்படிப்பட்ட முன்னுதாரணத்தை காங்கிரஸ் உருவாக்கித் தந்திருக்கிறது இந்த 50 ஆண்டுகளில். அதனை பாஜக உபயோகப்படுத்தியிருக்கிறது. இந்த அடிப்படை உடைக்கப்படவேண்டும்.

அதனை நோக்கிய விவாதத்துக்கு கிஷோர், கோபால்ராவ் அவர்களின் கட்டுரை ஒரு ஆரம்பப்புள்ளி எனக் கருதுகிறேன்.

***

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்