கீதாஞ்சலி (72) ஐம்புலங்களுக்கு ஏது விடுவிப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா



முற்றும் விலக்கிய
துறவறத்தில் என்னை
விடுவிக்கப் போவதில்லை நான்!
மானிடத்தின்
ஆயிரக் கணக்கான
ஆனந்தப் பிணைப்புகளில் காண்கிறேன்,
விடுதலை உணர்வு பின்னித்
தொடுத்துள்ளதை!
கண்கவர் வண்ணத்தையும்,
பொங்கும் நறுமணத்தையும்,
புதிதாய் ஆக்கிய
மதுவாய்ப் பொழிந்து வார்க்கிறாய்
எனக்காக!
உன் தீக்கனலில்
என்னுலகு ஏற்றி வைக்கும்,
வெவ்வேறு வித விளக்குகளை
நூற்றுக் கணக்கில்!
உன் ஆலயத்தின் உள்ளே
ஒளிவீசும்படி அவை அனைத்தும்
வைக்கப் பட்டுள்ளன,
மையப் பீடத்தில்!

ஐம்புலங்களின் வாயிற் கதவுகளை
என்றைக்கும்
மூடப் போவதில்லை நான்!
கண்கள் காண்கின்ற களிப்புக்
காட்சிகள்,
காதுகள் கேட்கும் உன்னதக்
கீதங்கள்,
மேனி தொட்டு உணர்த்தும்
ஆனந்தம்,
ஆகியவை அனைத்தும்
உந்தன் உற்சாகத்தை நிலைநாட்டும்
எந்தன் பிறவிக்கு!
என் மாயப் போலி எண்ணங்கள்
எல்லாம் எரிந்து போகும்,
உன் பூரிப்பொளியில்!
அன்பெனும்
அமுதக் கனிகளாய்ப்
பழுத்திடும் என்
ஆசைகள் அனைத்தும்!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 7, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா