கீதாஞ்சலி (68) பன்னிற வடிவப் படைப்புகள் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


பாய்கின்றன எனது பூமிமேல்,
பரிதியின் ஒளிக்கதிர்கள்!
விரியும் கதிர்க் கரங்களை
வெளிப்புறம்
நீட்டிக் கொண்டு பரிதி,
நிற்கிறது,
வீட்டு வாசல் முன்பாக!
என் கண்ணீர்த் துளிகளை,
என் பெருமூச்சுகளை,
என் கீதங்களை,
மேக மந்தையாக
நின் பாதத்தில் சமர்ப்பிக்க
ஏந்தி வருகிறது!
கண்ணிய பூரிப்புடன் அவை யாவும்
விண்மீன்கள் மினுமினுக்கும்
நினது மார்பைப்
பனித் தூபமாய்ச்
சுற்றிக் கொள்ளும்!

எண்ணற்ற அண்டங்கள் ஆக்கி
வண்ண மயமாக்கி
பன்முறையில் உருமாற்றி
பற்பல விதமான
வடிவத்தில் படைத்துள்ளாய்!
மென்மை யானவை சில,
மெலிந்தவை சில,
மெதுவாய்ச் செல்பவை சில,
ஈரமானவை சில,
கருகிக் காய்ந்தவை சில.
வேறானவை
ஆதலால் நீ ஒவ்வொன்றையும்
காதலிக் கின்றாய்!
அவற்றின்
சொந்த நிழல்களால்
உந்தன் வெண்ணிறக் கதிரொளி
மறைக்கப் படுகிறது,
புனிதமான
கனிவு அதிபதியே!

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (April 9, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா