கீதாஞ்சலி (54) – கடற்கரையில் கூடும் பாலகர்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 34 in the series 20051223_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


அகில நாடுகளின்
முடிவில்லாக்
கடற்கரையில் கூடுவது,
குழந்தைகள்!
கண்காண வியலாத, வரம்போர மில்லாத
விண்வெளிக் கூரை
அசையாமல் நிற்கிறது!
திசைமோதி யிரைச்சலிடும்,
திரைகடல் வெள்ளம்!
நீண்டு நெளிந்த கடற்கரையில்
கூடிக் குலவிக்
கும்மாளம் போடுவர்,
சிறுவர் பட்டாளம்!
வீடுகட்டிக் கடல் மணலில்!
வெற்றுச் சிப்பிகள் சேர்த்து,
விளை யாடுகிறார்!
காய்ந்த இலைச் சருகுகள் மடித்துப்
படகுகளாய்
கடலில் மிதக்க விடுகிறார்!
உலக நாட்டுக் கடற் கரையில்
குலவிப் பழகி
ஓலமிட்டு விளை யாடுபவர்,
பாலகர்கள்!

சின்னஞ் சிறுவர்க்கு
நீந்தத் தெரியாது
நீரிலே!
கயிறுகள் கோர்த்து
வலை பின்னத் தெரியாது,
விளையாடும் பிள்ளை கட்கு!
திடுமென முத்துக்குளிக்க
கடலில் குதிக்கும் மீனவர் கூட்டம்!
பயணம் துவங்கிக் கப்பலில்
அயல்நாடு நோக்கித்
துணிந்து செல்கிறது,
வணிகர் படை!
அப்போது
கூழாங் கற்கள் சேர்த்து
மணலில் பரப்புகின்றன,
குழந்தைகள்!
மறைந்து கிடக்கும்,
புதைப் பண்டம் தேடும்
விருப்பில்லை அவர்க்கு!
வலை பின்னத் தெரியாத
விளையாட்டுச் சிறுவர்!

கோரமாய்ச் சிரித்துக் கொண்டு
ஆரவாரம் செய்யும்,
திரண்டெழும் மூர்க்க அலைகள்!
வெளிறி வெளுத்து போய்
இளிக்கும்
கடற்கரை மணற் கற்கள்!
மரண வேகத்தில்
புரண்டு வரும் சுருள் அலைகள்,
புரியாத பாடல் பாடும்,
தொட்டிலில் போட்டுப்
பாலர்க்கு
தாலாட்டுப் பாடும்
தாயைப் போல்!
சிறுவருடன்
களித்து விளையாடக்
கைகொட்டி வருகிறது,
கடலாடி!

பாலர்கள் பலர் கூடி
ஞாலத்தின்
எல்லையற்ற கடற்கரையில்
துள்ளி ஆட வந்துள்ளார்!
பாதைகள் இல்லாத வான்வெளியில்,
பாய்ந்தடிக்க வகையின்றி
மாயமாய்த் திரிகிறது,
புயல் காற்று!
தடங்கள் எதுவும் தெரியாத,
கடல் நடுவே
புயல் கவிழ்த்தி விட்ட,
கப்பல்கள்
முறிந்து கிடக்கின்றன
மரண நிழலாடி!
அறியாத பாலர் அங்கே
விளையாடி வருகிறார்!
ஆயினும் அனைத்துச் சிறுவர்
கூடிக் குலவி,
கும்மாளம் போடும் குவலயக் கரைகள்
கங்குகரை யற்ற
மணல் மிக்க
கடலோரத் தளங்களே!

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (December 19, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா