கீதாஞ்சலி (40) கனிவு மழை பொழியட்டும் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 28 in the series 20050916_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


நாட்கள் நாட்களாய்க் கடந்து
என் காய்ந்த இதயத்தில்
மழை பெய்யாமலே,
பின்தங்கிப் போனது,
என்னரும் இறைவனே!
குளிர்ச்சியாய் மழை பெய்யும்
தூரத்து அடையாளம்
துளியேனும் தெரியாமல்,
கருமேக மென்துகில் தவழ்ந்து
சிறிதேனும் பரவாமல்,
தொடுவானும் நிர்வாணமாய்த் தோன்றும்
கொடூர மாக!
இப்புற அடிவான் முதல்
அப்புறத் தொடுவான் வரை
திடுக்கிடக்
கொட்ட டித்து, மின்னலை
வெட்டி விளாசி,
நினது விருப்பம் அதுவாயின்
சினத்துடன் அனுப்பு,
காரிருள் சூழும் உனது
மாரகப் புயலை!

ஆயினும்
அழைத்துக் கொள் மீண்டும்,
அருமைப் பிரபு!
மனம் உடைந்து
நெஞ்சினை எரித்து,
கொடூரமாய் நிலைத்திடும்,
வெப்ப மயம்
மெளனமாய் நிலவி,
அப்பி யுள்ளதை
அழைத்துக் கொள் மீண்டும்!
நளின மேகம் தாழ்வாய்
நெளிந்து,
பகல் வேளை வெப்ப மென்னும்
தகப்பன் சீற்றத்தை
தாங்க முடியாது
ஏங்கிக் கண்ணீர் சொரியும்
தாயின் பார்வை போல்
தோயட்டும் மழைப் பொழிவு
மேலிருந்து கீழே!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 11, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா