கே. ஆர். மணி
3. படைப்பாளி – யுரேகா – துண்டு எங்கே ?
பாவண்ணண் – கதை சொல்லியல்ல. எழுத்தாளர். தன் வலியை, புரிதலை, பார்த்ததை ஆர்ப்பாட்டமில்லாமல் சொல்லிப்போகிற
கதை எழுத்தாளர். ஒரு திணை சார்ந்த பெருமை கொண்ட நாக்கோ, குழுப்பாடகனின் தத்துவப்பாடலோ இடம்பெறுவதில்லை.
அகம் சார்ந்த தத்துவவிசாரணையற்று, புறத்தே நிகழும் நிகழ்வுப்புள்ளிகளிலிருந்து கோலம் சமைக்கிற எழுத்தாளர்.
80-களின் நவீனத்துவ அலை ஓடிக்கொண்டிருந்த காலத்தில் சாய்ந்த இவரது பேனா – அதீதமாய் எந்த இசத்தினூடும் ஓட்டிஉறவாடாது அமைதியாய் ஓல்லியாய் ஒரு குட்டையாய் ஓடிக்கொண்டிருந்தது எனலாம். அந்தக்காலம் பொதுவுடமை தனது சாயங்களை மெல்லதொலைத்துக்கொண்டிருந்தது. ஆனாலும் அதன் காலிப்பெருங்காய டப்பா வாசனை இருக்கத்தான் செய்தது. திராவிட இலக்கியம் கிட்டதட்ட காணாமல் இருந்தது. நவீனத்துவம் இலக்கிய குழுக்களால் பேசப்பட்டு அதற்கான உச்சத்தை நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருந்தது.லாசாராவுக்கும், கிராவுக்கும் தனித்தனி பீடங்களிருந்தன. இவர் எழுத்துக்களில் அந்தக்கால ஹாங்க் ஓவர் அதிகமாய் இல்லாது போனது அதிர்ஸ்டம்தான்.
கதைத்தள சோதனையோ, புதியன படைக்கவேண்டுமென்று களி கிண்டும் முயற்சியோ, பிடித்த முயலுக்கு காலேயில்லை
என்றும் போராடும் இலக்கிய அரசியல்வாதியில்லை இவர். போடப்பட்ட மண்ரோட்டில் செய்வன திருந்த செய்பவர்.
அப்படியெல்லாம் செய்யாவிட்டால் இலக்கிய உலகத்தில் எப்படி பொன்னால் பொறிப்பார்கள் என்றெல்லாம் கவலைப்படாது
தனக்கான, தான் பார்த்த புள்ளிகளை இணைத்து தனக்கு பழக்கமான தரையில் கோலம் போடுகிறவர். அதே தரை, அதே மாவு,
மாறுபடும் கோலங்கள். கொஞ்சம் சாணிமேல் வைத்த பூ, சிவப்பாய் பார்டர். இவ்வளவுதான் என்கிற தெளிவு.
ப்ளாஸ்டிக் பேப்பர் வாங்கி வைக்கிற கோலமில்லை. நிலம் தாண்டி புதிதாய் ஹைவேயில் போடுகிற கோலமில்லை.
சுருக்கமான விவரணை, அரிதாய் தென்படும் அங்கதம், தேவையான இடத்தில் மட்டும் முகம் காட்டிவிட்டு போகும்
படிமங்கள், சோகங்கள், துன்பவியல்கள் என பூத்துக்குலுங்குகிறது இவரது எழுத்தெல்லாம். கோலம், நவீனத்துவ வடிவ அழகோடு,
ஆர்ப்பாட்டமில்லாமல், அதீத சோதனையின்றி, பெரும்பாலும் புற நிகழ்வுகளை கொண்டு கட்டப்பட்ட சமன்பாடுகளின் படி முன்னேறுகிறது இவரது எழுதுதளம்.
மண்ரோட்டில் போடப்பட்ட வீட்டுக்கோலம். எந்த அடைப்புக்குறிக்குள்ளும் அவ்வளவு இலேசில் அடைபட்டுக்கொள்ளாமல்
இருந்தது இலக்கிய அரசியல் உலகில் ஆச்சரியம்தான்.
பாவண்ணண் என்கிற படைப்பாளியின் எழுத்து தூண்டுதல் எதுவாயிருக்கும் ? – என்ன சுண்டைக்காய் கேள்வியுது ?
ஆனாலும் கேட்டு வைப்போம். தன் மூலமும், தான் அறிந்தவர் மூலமும் கிடைத்த அநுபவத்தை வாழ்க்கை பகிர்தலை, தேடலை எழுதிக்கொள்ளும் முயற்சி, கலை மனிதருக்காக அதுவும் அடித்தட்டு மனிதருக்காக என்கிற பிரஞ்ஞை, துன்பவியலையும் படைக்கவேண்டுமென்கிற அவாவினால் சிற்றிதழ் சந்தையில், குறுகிய இலக்கிய வட்டத்தில் மட்டும் எழுத நினைக்கிற தேர்வு, புலம்பெயர்ந்து வேரிலிருந்து தள்ளப்பட்டு வேரையே நினைக்கும் விழுதுகளின் நித்திய பிரசவ வலி, அந்த மண்ணின் எழுத்துக்களின் சாரத்தை உறிஞ்சி ஏன் என் தமிழுக்கு கொண்டு செல்லமுடியாது என்கிற ஆதங்கம், அதனூடான சின்ன முயற்சிகள் – இப்படி பலவகையான பதில்கள். மேலே சொன்ன எல்லாவாகத்தானிருக்கும் என்று சொல்லிவிட்டுத்தான் இந்தக்கேள்வியை நாம் தாண்டிபோகமுடியும். அவரும் அப்படித்தான் உணர்கிறார்.
பாத்திரமறிந்து பிச்சை போடும் எழுத்தாளனை பாத்திரம் மூலமாக தேடிப்போகமுடியுமா. உடைந்த பாத்திரங்களில் எழுத்தாளனின் உருவம் எங்காவது ஓட்டியிருக்குமா ? குறைந்த பட்சம் எந்த தளம், எவ்வளவு ஆழம் என்றாவது கணக்கிடமுடியுமா ? நாவலில் அவர் எவ்வளவு தூரம் தள்ளியும், உள்ளேயும் இருக்கிறார் ? ஒரு படைப்பாளியின் மையச்சரடு எது என்று ஒரு வரியில் சொல்லச்செய்வது வாசகன் விரும்பாத ஒன்று. வியர்வை வழிய சமைத்த சமையலை, புத்தகம் படித்துக்கொண்டே சாப்பிட்டுவிட்டு, ‘பரவாயில்லை, நன்னாயிருக்கு ‘ என்று ஒற்றைவரியில் விமர்சித்துவிட்டு குனிந்துகொள்ளும் கயமைத்தனமானது. ஆனாலும் அப்படி பாத்திரத்திற்குள் படைப்பாளியை தேடிப்பார்ப்பது, அவர் எழுத்தோடு அவரது ஆளுமையும், பின்புலத்தையும் இணைத்துவிடுவது வாசகமனதில் தானகவே நடந்து, இருப்பின் வசதியின்மையை போக்குகிறது.
அப்படியானால் பாவண்ணணின் நாவல் பாத்திரங்கள் எப்படியிருக்கின்றன ? அவைகள் எது வேண்டுமோ அதுவாகவே ஆகிவிடுகிறது.
தன் வலி தன்னை சார்ந்தவர்களின் வலியை மையம் கொண்டவையானவையாக அமைகின்றன. பெரும்பாலும் வாழ்வின் துன்பவயிலுக்கு தங்களை எதிர்பார்த்து தயார் செய்துகொள்கிற பாத்திரங்களாகவும், அதற்குப்பிறகான வாழ்க்கை ‘எல்லாம் அப்படித்தான்.. நல்லபடியாய்நடக்கும் என்கிற நம்பிக்கை, கால வீழ்ச்சி, வீழும் விழுமியங்கள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு, எழுந்து நகரும் பண்பை மிக அடிமின்னூட்டமாய் கொண்டு ஓடுகிற தலைமை பாத்திரங்களின் அழுத்தமான, அமைதியான அவரின் சுபாவம்தான் எழுத்துக்களில் எல்லாம் விரவிக்கிடக்கிறது என்கிறது அவருக்கு நெருங்கியவட்டம்.
அவரின் தலைமைபாத்திரங்கள் வறண்ட நதியாய் வாழ்கிறார்கள். இவர்கள் ஓயாது மானிட குலத்தின் நம்பிக்கைகளை மீட்டெடுக்கிறார்கள்.
ஒரு கான்கிரிட்(கணிப்பொறி) காடான இந்தத்தலைமுறை முன் அது பதிவு செய்யப்படுகிறது. அதுதான் ஒரு இலக்கியவாதியின்
முடிந்த வேலையாகவுமிருக்கலாம்.
4. படைப்பிலிருந்து சில துளிகள்
மற்ற எந்த வடிவத்தைவிட நாவல்களில் ஒரு படைப்பாளியின் உச்சகட்ட ஆக்கம், ஆற்றல், உழைப்பு
வெளிப்படுவதாக நம்புகிறது இலக்கிய உலகம். எவ்வளவு உண்மையோ தெரியாது, ஆனால் ஒரு
படைப்பாளியின் ஆளுமை அதிகமாக தென்படுகிற ஒரு வடிவம் நாவல் என்பதில் அதிக கருத்து
வேறுபாடு இருக்கமுடியாது. எனவே, பாவண்ணனின் ஒரு சில நாவல் படைப்புகளைப்பற்றிய சிறுகுறிப்பும்,
அதிலிருந்து எழும் கேள்விச்சிதறல்களும் ஆராய்தல் ஆளுமை அறிதலின் அடுத்த கட்டத்திற்கு
கொண்டு செல்லலாம்.
4.1 வறண்ட மணல்நதி : வாழ்க்கை விசாரணை
வாழ்க்கை என்பதுதான் என்ன என்கிற தத்துவ விசாரணையை மேட்டுக்குடி மட்டுக்குமான கேள்வியில்லை.
வாழ்கிற எல்லா உயிர்களும் அதற்கான இருத்தியல் சிக்கல்களை எதிர்கொள்கின்றன. சவால்களும், போராட்டங்களும்
சொல்லப்போகிற தத்துவங்களும், பாடங்களும் ஒன்றாகத்தானிருக்கமுடியும். அப்படியான கதைச்சரடிலிருந்து
எழுகிற நாவலாக இதுபடுகிறது. ஒரு அடித்தட்டு மனிதனான காளியப்பன் கண்ணோட்டத்திலிருந்து ஊர்கிறது நாவல்.
போலிஸ் ஸ்டேசனில் தொடங்கி அங்கயே முடிகிற நாவல். தான் செய்யாத குற்றத்திற்காக அவன் இருமுறையுமே
அவமானப்படுத்தப்படுகிறான். ஓரளவு அவர்கள் வாழ்க்கையை அப்படியே எழுத்தில் பிடித்ததில் மற்றும் இதனால்
தெரியப்படும் நீதியாதெனில் என்றோ, வாசகர் கண்களை கலக்குமளவுக்கு துன்பவியியல் கிளசரின் அப்பாமல்
விட்டதே இந்த நாவலின் மிதமான வெற்றியெனலாம்.
சேரியும், சேரி சார்ந்த நாவல் என்று வகைப்படுத்தலாம். குடிகார காளியப்பன். சேரி வாழ்க்கை வாழும் சாதரணன்.
மாடுகளுக்கு லாடம் கட்டிப் பிழைப்பு நடத்தி வாழும் பொருளாதார நிலையற்ற வாழ்க்கையிலும், வறுமையிலும் செம்மையானவன்.
சூழல்களினால் நியாயமற்ற விசாரணைகளுக்கு இலக்காக நேர்கிறது. நல்ல நாவலில் இருக்கவேண்டிய அம்சங்கள் தானாக
வந்து விழாவிட்டாலும் படைப்பாளியில் திட்டமிட்ட உந்துதலால் ஆங்காங்கே தெளிக்கப்பட்டிருப்பது பெரிய தவறொன்றுமில்லை.
சந்தேகப்படும் கணவன், மன நெகழ்வான விபச்சாரி, காதலித்துவிட்டு ஓடிப்போகும் ஒரு காதலன், ஆதிக்க சக்தியாக முதலாளி,
அடித்து துவைக்கும் போலிஸ் – அடித்தட்டு மக்களுக்கான கதையில் இடம்பெற வேண்டிய அத்தனை பாத்திரங்கள் இதிலும் உண்டு.
வித்தியசாகமாகவும், அழககாவும் கையாளப்பட்ட சில கதாபாத்திரங்கள் நம்மை வியப்புள்ளாக்கவும் செய்கின்றன.
வாட்ச் திருடி மறுபடியும் சைக்கிள் திருடி விற்று மும்பாய் போய் பிழைத்து பணம் அனுப்பும் தம்பி, மிகப்பெரிய வீழ்ச்சியின் பிம்பமாய்
குடித்தே கெட்ட தஷ்ணாமூர்த்தி, நம்பிக்கை தூணாக அனைவரின் பூர்வோத்தரங்களை அறிந்த வடிவேலுத்தாத்தா, இடையில் வந்து சேர்ந்து
ஓடிப்போகும் பைத்தியக்காரன். இவற்றையெல்லாம்விட நாயகனை சதா அலைக்கழிக்கும் தொழில் சிக்கல்கள் அதனால் எழும் நிலையற்ற
பொருளாதார வாழ்வியல் என்பவையே இந்த நாவிலின் அரிதான பதிவாகப்படுகிறது.
இதுதான் அவர்களது வாழ்க்கை என்று சொல்லிவிட்டு மட்டும் போய்விடுகிற பாணி , இதனால் தெரியப்படும் நீதியாதெனில் என்கிற
உரத்த குரலற்ற நடை, மாறி மாறி வருகிற துன்ப இன்பங்களின் கோர்வை, சோகமான நவினத்துவ பாணியின் தாக்கம்,
தேர்ந்தெடுத்த களத்தைவிட்டு துறுத்தி நிற்காத நடை, இறுக்கம் என்று சொல்லாவிட்டாலும் அதிக தொய்வில்லாத
கதையொழுக்கு, சில கதாபாத்திரங்களை கொண்டே கிட்டத்தட்ட அந்த சேரியின் முழு குறுக்குவெட்டுத்தோற்றத்தை ஏற்படுத்தியதில்
கொஞ்சம் வெற்றி, சின்னதாய் கதை திருகல் மூலம் கதாபாத்திரத்தின் ஆழத்தை சொல்லாமல் சொல்லிச் செல்லும் லாவகம்
என்று கலவையாய் நிற்கிறது நாவல் ‘வாழ்க்கை விசாரணை’
“சேரியிலும் செம்மையான வாழ்க்கை ” ( என்ன ஆணவமான மேட்டுக்குடி எழுத்து. ஏன் சேரியில் செம்மையிருக்காதா ? )
எல்லாயிடத்திலும் வாழ்க்கை செம்மைதான். நமது பொதுப்புத்தியில் அவ்வாறு பதிக்கப்படாததுதான் செம்மையற்றது.
வாழ்க்கையின் கவலை, சந்தோசம், உணர்வுகள் போன்றவற்றில் அளவுகோல்கள் என்பதேயில்லை. நாவலின் முதலில்
நாயகன் சாராயம் குடிக்க செல்லும் காட்சி கிட்டத்தட்ட சங்கீதபாகவதர் பாட்டுக்கச்சேரிக்கு ரசனையோடு போகிற தொனியில்
எழுதப்பட்டிருப்பது நுட்பமான விவரணை. இரண்டுமே மாயை விலக்கி அத்வைதத்திற்கு அழைத்து செல்லும் பாதைகள்.
கிழட்டு நதியாய் கிழவர் வடிவேலுத்தாத்தா, வற்றாத நம்பிக்கையும், விழுமியமும் சுமந்து கொண்டு வறண்ட மணலாய் காளியப்பன்,
எல்லா கிராமத்து சிலுவைகளையும் தொலைத்துவிட்டு நகர கான்கீரிட் காடுகளில் தொலைத்து பாண்டிச்சேரிக்கும், மும்பைக்கும்
ஓட எத்தனிக்கும் அடுத்த தலைமுறை.
கிழட்டு நதி, வறண்ட மணல்நதி அதன் பழைய காலத்தின் ஈரநினைவுகளோடு – அந்த சேரியை துறந்து ஓடும் கான்கீரிட் காடுகள்.
***********************************
4.2 சிதறும் கான்கீரிட் காடுகள் (சிதறல்கள்)
சிதறல்கள் – பாண்டிச்சேரியில் 1982-84 கால அளவில் இரண்டாடுகளுக்கு மேலாக மூடப்பட்டிருந்த மூன்று ஆலைகளை
சேர்ந்த ஆறாயிரம் குடும்பங்களில், ஒரு சில குடும்பங்களின் சீரழிவை சித்தரிக்கிறது இந்த நாவல். தொழிற்சங்கள், பெரிய ஆலைகள்
அது சார்ந்த வாழ்க்கை 70,80 மற்றும் பெரிய மாற்றங்களை கண்ட 90களின் ஆரம்பகால நிலைமையை ஓரளவுக்கு
கண்முன்னே காட்டியிருக்கிறது. மாறிய வர்த்தக சமன்பாடுகள், உலகமயமாக்கம், பெரிய மீன்கள் மட்டுமே நீந்தும் உள்நாட்டுச்சந்தைகள்,
தனது வேலையை சிறு நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டு, சந்தைப்படுத்தலை மட்டுமே நோக்கும் பெரிய மீன்கள், தேவையற்ற தொழிற்சங்கங்கள்,
வளர்ந்த மத்திய தட்டு வர்க்கம், விஸ்வரூபமெடுத்த நுகர்வோர் கலாச்சாரத்தில் மாறிப்போன, பெருகிப்போன தேவைகள்,
அடிமட்ட தொழிலாளர் தட்டுப்பாடு – என்பவையெல்லாம் இந்தக்கதையை 2008க்கு தேவையற்ற, இறந்தகால பதிவாக மாற்றிவிடும்
என்று எண்ணுவது முட்டாள்தனம். வேலை இழத்தல், பொருளாதார சரிவு, குடும்பத்தோடு தற்கொலை செய்தல், தன் தகுதிக்கு மீறிய
செலவுகள், நிலைகுலைதலை எதிர்பாரமை இவையெல்லாமே – இந்த தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்திலும், எல்லா நாடுகளிலும்
நடப்பது இதெல்லாம் தொடர்கதைதான் என்கிற அநுபவஅறிவை ஞானத்தை கொடுக்கின்றன. காலம் காலமாய்
நாம்தான் இதையெல்லாம் கவனிப்பதில்லை.
வேலை தொலைத்த துன்பமும் அதை மட்டுமே முதுகெலும்பாக எண்ணியிருக்கும் (முருகேசன் மற்றும் அவன் தொடர்பு கொண்ட குடும்பத்தின் சீரழிவும்,
அதனால் ஏற்படும் வாழ்வியல் சிக்கல்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஏதோ ஒரு வேலை, வேறிடம் குடிபுகுதல், பிடிக்காத முடியாத
வேலை செய்தல், தினமும் நசியும் நம்பிக்கை, ஆனாலும் மாறாத விழுமியங்கள், எங்கோ ஊறும் பாறையடித்தண்ணீர்போல நம்பிக்கை
கசிவு, தன்னையும் மற்றவரையும் தேற்றும் மனித மாண்பு எல்லாம் கலந்துகட்டிய தலைமுறையின் பதிவு. மனிதம் மீது இடைவிடாது
இத்தகைய தாக்குதல்கள் இயற்கையாலோ மற்ற மனிதர்களாலோ தொடர்ந்து நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. உணர்ச்சி கொந்தளிப்பு,
பிரச்சார நெடி, வர்ணணை மயக்கமற்ற நடை. தத்துவ மூக்கு நுழைப்பில்லாததும், முதலாளித்துவதின் மீது சேறுவாரி தூற்றாததும்,
மடியாத உட்கசியும் நம்பிக்கையை (pursuit of happiness) எடுத்தாண்டவிதமும் சிதறல்களை நல்ல நாவலாக
காட்டியிருக்கலாம் என்றாலும், அதன் வீச்சை அதீத சோகம் காட்டும் பாத்திரங்கள் அதனை ஒரு சராசரி நாவலாக்குகிறது.
நுட்பமான நிறைய இடங்களும் உண்டு. ஒரு சில தலைமுறைகளில் மாறும் வாழ்க்கை முறை, எதிர்பார்ப்புகள் , உணவு, உடை, இருப்பிடத்திற்காக
மட்டுமே போராடிக்கொண்டிருந்த தந்தையர் தலைமுறை, அவர்களிடமிருந்த பிரஞ்சு விசுவாசம், தன்காலத்தில் அவையெல்லாம் விடுத்து
தேசவிடுதலைக்காக போராடி பின் வாழ்வாதராத்திற்காக போராடுதலாகப்போன நிலைமை, குடும்பத்திற்குள் புறவாழ்க்கையின் பாதிப்புகள்,
தனது பெண் வேலைக்கு போகும் மாறும் விழுமியங்கள் என ஒரு நூற்றாண்டு மாறுதல்கள் கொட்டிக்கிடக்கின்றன.
அப்பா கிழட்டு நதி, முருகேசன் வறண்ட மணல் – இந்த நாவல் இங்கேயே முடிந்துவிடுகிறது. அவனது அடுத்த தலைமுறை
கான்கீரிட் காடுகளை நோக்கி, வேலை நோக்கி துரத்தியடிக்கப்பட்டு தொலைந்துப்போகிறார்கள்.
தொழிற்சங்க வேலைநிறுத்தத்தை மிக நன்றாக பதிவுசெய்த எனக்கு பிடித்தநாவல், மெர்க்குரிப்பூக்கள்.
பிரமாதமாக எல்லா கோணத்திலிருந்தும் எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவல். தொடர்கதையாய் எழுதப்பட்டதால் கொஞ்சம் விறுவிறுப்பு
சேர்க்கப்பட்டது, அளவுக்கதிகமாய் தனிமனிதர்களும் உறவுச்சிக்கலும் ஆராயப்பட்டது, அளவுக்கதிகமான அழகியல் ,
மானுட சோகத்தை தேவையான அளவிற்கு பிழியவில்லை என்கிற இலக்கிய குட்டை ஜாம்பவான்களின் விமர்சன சகதியில்
ஒரளவு உண்மையாயிருந்தாலும் தொழிற்சங்க போரட்டத்தை அதைச்சுற்றிய வாழ்வியலை, இதைவிட பிரமாதமாய் இதுவரை எந்த எழுத்தும்
சொல்லியதில்லை என்பது என் கருத்துமட்டுமல்ல, எனக்கு தெரிந்து அந்த வாழ்க்கை வாழ்ந்து கடந்தவர்களின் கூற்றாகவுமிருந்திருக்கிறது.
பெருவாசகத்தளத்தில் அது வெற்றி பெற்றதாலே, அதுவே சாபமாக ஏதோ இலக்கியத்தெருவிற்குள் நுழையமுடியாது நிற்கிறது.
எல்லாரும் ஏற்றுக்கொண்டதை நல்லநாவல் என்று சொல்லிவிட்டால் அப்புறம் சிறுவாசக மற்றும் இலக்கிய விமர்சக ஜாம்பாவன்களுக்கு மதிப்பேது.. ?
இந்த நாவலிருந்து இப்போது சிந்தனை மற்றும் கேள்விகள் எழுப்ப வேண்டுமானால், கீழ்கண்ட கேள்விகளை எழுப்பலாம். ஒருவேளை
அது கடந்த இருபதாண்டில் தலைமுறையில் நடைமுறையில் ஏற்பட்ட கருத்துமாற்றமாகயிருக்கலாம்.
அ)இந்தியாவின் பலவீனமாக கருதப்பட்ட மக்கள்தொகையே பலமாக கருதப்படுகிறது.
ஆ) மாறிவிட்ட முதலாளியம் – குறைந்த நபர்கள், அதிக வேலை, அதிக சம்பளம். நிரந்திரமின்மை எப்போதுமுண்டு.
இ) திறந்த சந்தை, அதிக வாய்ப்புகள், பலமுள்ளதே பிழைத்துகொள்ளும், பலமற்றது செத்துப்போகும்.
ஈ) உலகமயமாக்கலுக்குப்பிறகு தரமான பணியாளர்கள் எல்லாத்துறையிலும் தட்டுப்பாடோடிருக்க வேலைக்கு பிரச்சனையில்லை.
கேள்விகள்:
– 90களுக்கு பிறகான தொழிற்சங்கங்களின் வேலையும் தேவையும் என்ன ? போனஸீக்காக போராடும் தரகுவேலை போய்விட்ட
பிறகு தொழிற்சங்கங்கள் எங்கே, இப்போது ?
– கடல் போன்று நிறைய சிறுதொழில்களால் ஆன சந்தை, ஒரு சில பெரிய மீன்களால் நிரப்பப்படும் மீன் தொட்டியாகிவிட்டதா ?
– இயந்திரமாக்கல், தொழில் நுட்ப அபிவிருத்தி போன்றவற்றை பற்றிய தொழிற்சங்கங்களின் பார்வை மாறிவிட்டதா ? மாற்றங்கள்
தவிர்க்கமுடியாதவை என்பதை உணர்ந்து கொண்டுவிட்டனவா ?
– முன்னேற்றத்தை அதுவும் தங்கள் காலத்திலே துய்ப்பதுமட்டுமே மக்களின் விருப்பமா ?
– உலகத்தொழிலாளார்களே, பாட்டாளி மக்களே, புரட்சி மலரும், விதை வெடிக்கும் – எல்லாம் இனி வீண்கோசம் தானா ?
– உண்மையிலே பிரச்சனை – பொருளாதாரா வீக்கமும், உள்ளோருக்கும் இல்லாதோருக்குமான இடைவெளி அதிகமாதலா ?
இந்த பிரச்சனைகள் இப்போதும் இருக்கத்தானே செய்கின்றன மாறுபட்ட ரூபத்தில். ( உலகப்பொருளாதார சரிவு, குடும்பத்தோடு தற்கொலை,
அமெரிக்கா பொருளாதாரத்தில் மின்னலடித்தால் நம் நாட்டு சந்தைக்களுக்கு ஸாக்கடிக்கிறது, மனிதர்களை லாபம் உற்பத்தி செய்யும்
இயந்திரமாக நோக்குவதும், வயதானோரை வீட்டுக்கனுப்புதல், குறைந்துவரும் ஓய்வூதிய வசதிகள், உயரும் மருத்துவ செலவுகள், உடையும்
குடும்ப பாதுகாப்புகள், தேயும் Social Capital value, அழியும் கிராமங்கள், விவசாய்த்திற்கும், நெசவுக்கும் ஆட்கள் தட்டுப்பாடு..)
கான்கீரிட் காடுகளில் கிழட்டு நதியின் ஈரமில்லை. வறண்ட மணலின் வருத்தமுமில்லை. அது அதனது துக்கத்தை கூட இயந்திரமாகவும்,
பிரம்மாண்டமாகவும்தான் வெளிப்படுத்தவேண்டியிருக்கிறது.
“Think Big. Big. Get Screwed Big..”
****************
- ஞயம் பட உரை
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன ? (கட்டுரை 46 பாகம் 2)
- தீயடி நானுனக்கு
- முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் !(பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -3)
- தாகூரின் கீதங்கள் – 60 எனக்கவனைத் தெரியும் !
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -15 << எனக்குரியவள் நீ >>
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -3
- கிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 2
- வேத வனம் விருட்சம் 15
- தருணங்கள்..
- இக் கிழமை ‘திண்ணை’ பற்றிய கடிதம்
- இட ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்துரிமையா? ஜனநாயக விரோதமா?
- குமரிமாவட்ட அடித்தள மக்கள்வரலாறும் பண்பாடும்
- நகரத்தார் குலம் செழிக்கச் செய்யும் ஐந்து பாடல்கள்
- கிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 1
- [முனைவர் துரை.மணிகண்டன்] எழுதிய இணையமும் தமிழும் என்ற நூலிற்கு விமர்சனம்
- “ஜடப்பொருளின் உரை”
- ஒரு மாயவானம்
- “மும்பை மண்ணே வணக்கம்!”….
- கவிதைகள்
- ஞாநிக்கு ஒரு தீனி.
- கடவுளின் காலடிச் சத்தம் – 9 கவிதை சந்நிதி
- உன் முகங்கள்
- எங்கள் எல்லைக்குள் வரும் எதிரிகளுக்கு
- டேட்டிராயிட்ன் தொடரும் துயரங்கள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் பத்தொன்பது
- பேரம்
- தாழ்பாள்களின் அவசியம்