மலர்மன்னன்
ஹிந்துஸ்தானத்திலும் பிற நடுகளிலும் மத அடிப்படையில் முகமதியர்கள் என்பதாக மக்களில் ஒரு பிரிவினர் இருப்பதுபோல பாகிஸ்தானிலும் முகமதியர்கள் உண்டேதவிர, பாகிஸ்தானியர் என்பதாக ஒரு தேசியம் இல்லை! பங்களா தேஷ் மக்களும் ஒரு தனி தேசியம் இல்லை! அவர்கள் பேசும் மொழியால் வங்காளிகள்; வங்காளிகள் ஹிந்துஸ்தானத்திலும் ஒரு மொழி வழி மாநிலமாக இருப்பதை நினைவூட்டத் தேவையில்லை! இங்கேயிருக்கும் மேற்கு வங்க மக்களும் வங்காளிகள், பங்களா தேஷ் மக்களும் வங்காளிகள். ஆனால் அங்கு பெரும்பான்மையினர் முகமதியர் என்பதால் அது ஒரு தனி நாடு!
குழப்பமான காலகட்டம்
குழப்பம் மிகுந்த 1940 களின் கால கட்டத்தில் ஜம்முகாஷ்மீர் சமஸ்தானத்தில் முகமது அப்துல்லா தமது மக்களாட்சிக் கிளர்ச்சியைத் தீவிரப் படுத்தினார். ஜம்முகாஷ்மீர் சமஸ்தானம் மன்னர் ஹரி சிங்கின் முன்னோருக்கு வெள்ளைக்காரன் கொடுத்த கூலி என்று அவர் பிரசாரம் செய்தார்.
வெள்ளையர் சீக்கிய ராஜ்ஜியத்தை வெற்றி கொள்வதற்குத் துணை செய்தமைக்காக ஹரி சிங்கின் முன்னோருக்கு அந்த சீக்கிய ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்த ஜம்மு, காஷ்மீர் ஆகியவற்றைப் பரிசளித்தது உண்மைதான். ஆனல் எந்த முகமதிய ராஜ்ஜியத்திலிருந்தும் அது பிடுங்கப்படவில்லை. சீக்கிய ராஜ்ஜியத்திலிருந்துதான் கொடுக்கப்பட்டது! ஆராயும் வேளையில் சமஸ்தானங்கள் உருவாவதும், மன்னர்கள் தோன்றுவதும் இப்படியெல்லாம்தான். ஜம்மு காஷ்மீருக்கு மட்டும்தான் அது பொருந்தும் என்பதற்கில்லை. ஹைதராபாத் நிஜாம் மட்டும் ஆகாயத்திலிருந்து குதித்தவரா என்ன?
கிளர்ச்சியை அடக்க அப்துல்லாவையும் அவரது கட்சியினரையும் மன்னராட்சி கைது செய்து சிறை வைப்பதும், வெளியே விடுவதுமாக இருந்தது. அது எங்கும், எந்த வகையான ஆட்சியிலும் உள்ளதுதானே! முகமது அப்துல்லா ஜம்மு காஷ்மீர் மக்களின் ஏகப் பிரதிநிதி போலத் தலையெடுப்பதற்கு அது உதவியது.
இங்கே முக்கியமாக ஒன்றை கவனிக்க வேண்டும். பாகிஸ்தான் பிரிவினை உறுதியாகிவிட்ட தருணம் அது. ஆனால் அப்துல்லாவின் குறி சமஸ்தானத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்பதில்தான் இருந்ததேயன்றி, மத அடிப்படையில் பாகிஸ்தானுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு இல்லை. தனிக் காட்டு ராஜாவாகத் தட்டிக் கேட்க ஆளில்லாமல் அதிகாரம் செலுத்துவதில் ஆர்வம் மிகுந்திருந்த அவருக்கு ஜின்னாவின் கட்டளைக்கு அடிபணியும் சிற்றரசராக இருக்க மனம் எப்படி ஒப்பும்?
முகமதியர் வேலை வாய்ப்பு
மன்னர் ஹரி சிங்கை அப்துல்லா ஒரு கொடுங்கோலனாகச் சித்திரித்தமைக்குப் பெரிதாக ஆதாரம் எதுவுமில்லை. சமஸ்தான அலுவலகங்களிலும் அமைப்புகளிலும் தகுதி வாய்ந்த முகமதியருக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போய்விடவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவரது ராணுவத்தில் ஒரு முகமதிய படைப் பிரிவே இருந்தது. பின்னர் பாகிஸ்தான் காஷ்மீரில் அத்துமீறி ஊடுருவியபோது அந்தப்படைப் பிரிவு மத அடிப் படையில் திடீரெனப் பாகிஸ்தான் படையுடன் சேர்ந்துகொண்டு உண்ட வீட்டுக்கு இரண்டகமும் செய்தது!
முகமதிய சமுதாயத்தில் கல்வி என்றால் அது குரானையும் ஹதீஸ்களையும் பயிலும் மதக் கல்வியாக, மதரஸா கல்வியாகத்தான் இருந்தது. அவர்களுக்கு மன்னராட்சியின் போது அரசாங்க அலுவலகங்களில் வேலை வாய்ப்புக் கிடைக்க வில்லை என்று குறை சொல்லிப் பயனென்ன? இன்று காஷ்மீர் அலுவலகங்களின் முக்கிய பதவிகளில் மட்டுமின்றி அடிமட்டங்களிலும் முகமதியர்களைத்தான் காண முடிகிறது. காரணம் பல முகமதியக் குடும்பங்களிடையே கற்கும் கல்வியில் மாற்றம் விளைந்திருப்பதேயன்றி வேறென்ன?
அதிகாரம் மக்கள் கையில் என்பது கேட்பதற்கு வசீகரமானதுதான். ஆனால் மக்களாட்சி என்கிற ஏற்பாட்டில் என்னவெல்லாம் செய்ய முடிகிறது என்பது தெரிந்த விஷயம்தானே!
மக்களாட்சி என்ற பெயரில் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளக் கிளர்ச்சி செய்து சிறை செல்வதும் வெளியே வருவதுமாக அப்துல்லா அரசியல் நடத்திக் கொண்டிருந்தபோதுதான் பாகிஸ்தான் பிரிவினை நிகழ்நதது. அதிகாரம் செலுத்தத் தமக்கென்று ஒரு நிலப் பரப்பு வேண்டும் என்கிற தமது ஜன்ம சாபல்யம் நிறைவேறிய களிப்பில் ஜின்னா உடனுக்குடன் முகலாயப் பேரரசர்கள் போலத் தமது சாம்ராஜ்ஜிய எல்லைகளை விரிவு படுத்திக் கொள்ளும் முயற்சியிலும் இறங்கினார். முகலாயர் காலம் போல அதை நேரடியாக மேற்கொள்ள முடியாது அல்லவா? ஆகவே காஷ்மீரில் ஹிந்து மன்னரின் கொடுங்கோல் ஆட்சியில் தவிக்கும் முகமதியர்களைக் காக்கும் பொருட்டு சகோதர பாசத்துடன் அண்டையிலுள்ள முகமதிய வனவாசிக் குழுக்கள் திரண்டு வருவதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.
இன்றைக்கும் வட மேற்கு எல்லைப்புற மலைப் பிரதேசங்களிலும் ஆஃப்கானிஸ்
தானத்திலும் பல கூலிப் படைகள் திரிவதைப் போல அன்றைக்குச் சிறிது கூடுதலாகவே இருந்தன. ஒரு புறம் காஷ்மீருக்குப் பொருளாதாரத் தடையை விதித்து பாகிஸ்தானுடன் இணையுமாறு மன்னருக்கு நிர்பந்தம் செய்துகொண்டு, மறுபுறம் காஷ்மீர் பெண்கள் அழகாக இருப்பார்கள், அங்கு கொள்ளையடித்துக் கொண்டு வர ஏராளமான செல்வங்களும் உண்டு என்று கூலிப் படையினருக்கு ஆசை காட்டி இரு முனைத் தாக்குதலைத் தொடுத்தார், ஜின்னா.
அவசர கால நிர்வாகி அப்துல்லா
இரு முனைத் தாக்குதலைச் சமாளிக்கத் தமது சமஸ்தானத்தை ஹிந்துஸ்தானத்துடன் இணைத்தார், ஹரி சிங். அது சமஸ்தானம் என்கிற அந்தஸ்தைத் துறந்து மாநிலம் என்கிற உரிமையுடன் ஹிந்துஸ்தானத்தின் ஒர் அங்கமாகியது. நேருவின் கடாட்சம் அப்துல்லாவுக்குப் பரிபூரணமாக இருந்ததால் அவர் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் அவசர கால நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். நிலைமை சரியானதும் ஒரு நிரந்தர ஏற்பாடு செய்து
கொள்ளலாம் என்ற யோசனைக்கு அவர் உடன்பட்டார். எப்படியோ அதிகாரம் அவர் கைக்குக் கிட்டிவிட்டது. அது போதாதா?
பாகிஸ்தானிலிருந்து கூலிப் படைகளும் வனவாசிகள் போல வேட மிட்டுக் கொண்ட பாகிஸ்தான் படைப் பிரிவுகளும் காஷ்மீருக்குள் புகுந்து கொலை, கொள்ளை தீ வைப்பு, வன் புணர்ச்சி என்று தமது கை வரிசையைக் காண்பித்தவாறு முன்னேறின. அதைத்தான் பின்னர் ஐநா அவையில் பாகிஸ்தான் பிரதிநிதி காஷ்மீர் மக்களின் விடுதலைப் போருக்குத் தங்களால் ஆன உதவி என்று வர்ணித்தார்.
ஹிந்துஸ்தானத்து ராணுவம் ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடிக்கும் கடமையை வெற்றிகரமாகச் செய்துகொண்டிருக்கையில், அந்தப் பணி முற்றுப் பெறுவதற்கு முன்னதாகவே நேரு அவசரப் பட்டு பாகிஸ்தானின் அத்து மீறல் குறித்து ஐநாவிடம் புகார் செய்தார். உலக அரங்கில் பாகிஸ்தானின் முகத் திரையைக் கிழித்து அதன் சொரூபத்தை அம்பலப் படுத்த வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். அனால் சரியாகக் காய் நகர்த்தத் தெரியாமல் காஷ்மீரையும் அதனைத் தன்னோடு இணைத்துக் கொண்ட ஹிந்துஸ்தானத்தையும் ஒரு நிரந்தரமான சிக்கலில் மாட்டிக் கொள்ளச் செய்துவிட்டுப் போய்ச் சேர்ந்துவிட்டார். காஷ்மீரை பாகிஸ்தானின் வன்முறைத் தாக்குதலிலிருந்து காக்கும் பணியில் இதுவரை ஹிந்துஸ்தானத்தின் பல்லாயிரக் கணக்கான ராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிரையும் உடல் உறுப்புகளையும் தியாகம் செய்தாயிற்று. இவ்வாறான இழப்பு இன்றளவும் தொடர்கிறது. நேருவின் அனுபவமற்ற ஒரு சிறு அவசரச் செயல் இன்றளவும் காஷ்மீரில் ரத்தக் காவு வாங்கிக் கொண்டேயிருக்கிறது.
காஷ்மீர் விவகாரம் ஐ நா வின் பாதுகாப்புக் கவுன்சிலில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, காஷ்மீர் ஹிந்துஸ்தானத்தின் ஒரு பகுதியே என்று எடுத்துச் சொல்ல முகமது அப்துல்லாவையே ஹிந்துஸ்தானத்தின் பிரதிநிதிகளுடன் அணுப்பி வைத்தார், நேரு.
பாதுகாப்பு கவுன்சிலில் அப்துல்லா
1948 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் ஐந்தாம் நாள் பாகிஸ்தான் பிரதி நிதி பாதுகாப்பு கவுன்சிலில் பேசுகையில், “காஷ்மீர் மக்களை ஒரு கொடுகோலாட்சியிலிருந்து விடுவிக்க அண்டையிலுள்ள அவர்களின் சகோதரர்கள் முனைந்தபோது பாகிஸ்தான் அவர்களுக்கு உதவியது. காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு இசைய ஒரு பகுதியை மீட்டது. எஞ்சிய பகுதியையும் மீட்டு காஷ்மீர் மக்கள் அனைவரையும் ரட்சிப்பதற்குள் ஹிந்துஸ்தானம் சமஸ்தான மன்னரைச் சரிக்கட்டி, ஜம்மு காஷ்மீரைத் தன்னோடு இணைத்துக் கொண்டு விட்டது. மேலும் காஷ்மீர் சமஸ்தானம் முகமதியர் மிகுதியாக உள்ள பகுதியாதலால் பிரிவினை நடைமுறைக்கு இணங்க அது பாகிஸ்தானுடன்தான் இணைய வேண்டும்’ என்று கூறினார். பிறகு அவரே முன்னுக்குப்பின் முரணாகப் பாகிஸ்தானின் அத்துமீறல் எதுவும் நிகழவில்லை என்றும் சொன்னார்! மறு நாள் ஃபிப்ரவரி ஆறாம் நாள் பாகிஸ்தான் பிரதிநிதி பேசியதையெல்லாம் மறுத்துப் பேசினார், ஜம்முகாஷ்மீர் மாநில அவசர கால நிர்வாகியாக நேருவின் வற்புறுத்தலுக்கு இணங்க நியமிக்கப்பட்ட, முகமது அப்துல்லா.
ஐ நா அவையின் பதுகாப்பு கவுன்சிலில் அவர் பேசிய ஆங்கில உரையைத் தமிழில் தருகிறேன்:
ஷேக் முகமது அப்துல்லா பின் வருமாறு பேசலானார்:
“இங்கே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள பிரச்சினை ஜம்முகாஷ்மீர் சமஸ்தானம் ஹிந்துஸ் தானத்துடன் இணைந்தது பற்றியல்ல, மாறாக, காஷ்மீர் மீது பாகிஸ்தான் நிகழ்த்தியுள்ள ஆக்கிரமிப்பு பற்றியதாகும் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். பாகிஸ்தானின் பிரதி நிதியும், பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர்களும், இங்கு பேசியதையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் என் குழுவினர் தெரிவித்த கருத்துகளையும் பொறுமையோடும், கவனமாகவும், மரியாதையுடனும் கேட்டேன். இந்த விவகாரத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டவன் நான் என்பதைப் பாதுகாப்பு கவுன்சில் ஒப்புக் கொள்ளும் என்று கருதுகிறேன். ஏனெனில் நான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினைக்குக் காரணமான நிலப் பரப்பைச் சேர்ந்தவன்.
“இங்கு இரு தரப்பினரும் எனது பேச்சைப் பெருமளவு சுட்டிக் காட்டித் தங்கள் தரப்புக் கருத்தைச் சொன்னார்கள். ஏனெனில், அதிர்ஷ்ட வசமாகவோ, இன்னும் சரியாகச் சொல்வதானால் துரதிர்ஷ்டமாகவோ 1931 லிருந்தே எனது நாட்டு மக்களை விடுதலைக்கு இட்டுச் செல்லும் பணியை நான் செய்து வருகிறேன். இந்தப் பணியில் நான் மிகவும் துன்பங்களை அனுபவித்திருக்கிறேன். ஒரு முறை இரு முறை அல்ல, ஏழு தடவைகள் இதற்காக நான் சிறை வைக்கப்பட்டேன். கடைசியாகச் சிறையிலிடப்பட்டவரை மொத்தம் ஒன்பது ஆண்டுகள் நான் சிறையில் இருந்திருக்கிறேன்.
ஆக்கிரமிப்பே விவாதப் பொருள்
“காஷ்மீரில் பல தொல்லைகள் உள்ளன. பாதுகாப்பு கவுன்சில் விவாதத்தை மிகவும் பொறுமையாகக் கேட்ட போதிலும் அதனால் குழப்பமுற்றிருப்பதாகவே நான் உணர்கிறேன். இந்தப் பிரச்சினைதான் என்ன? பாகிஸ்தான் பிரதிநிதி நேற்று கூறியது போல காஷ்மீர் சமஸ்தானத்தின் மன்னருக்கு உள்ள அதிகாரம் பற்றியதல்ல, இந்தப் பிரச்சினை. என்ன இருந்தாலும் பாகிஸ்தான் பிரதிநிதி சுட்டிக் காட்டிய அதே விஷயத்தை, அதாவது1846 ஆம் வருட ஒப்பந்தத்தைச் சொன்னதற்காகத்தான் நான் மொத்தம் ஒன்பது வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேர்ந்தது. அந்த ஒப்பந்தம் குறித்துப் பேசுவதால் தண்டனை எதுவும் கிடைக்க மாட்டாத பாதுகாப்புக் கவுன்சிலில் பாகிஸ்தான் பிரதிநிதி அதைப் பேசியதில் எனக்கு மகிழ்ச்சிதான். எனவே அந்த விஷயம் பற்றி நான் ஆட்சேபிக்கப் போவதில்லை. ஆனால் அது இப்போது இங்கே பாதுகாப்பு கவுன்சில் முன்பாக விவாதிக்க வேண்டிய பிரச்சினை அல்ல (கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கும் ஹரி சிங்கின் முன்னோருக்கும் இடையில் செய்துகொளப்பட்ட ஒப்பந்தம் பற்றிய பழங் கதை அது; மேற்கு பஞ்சாபை உள்ளடக்கிய சீக்கிய ராஜ்ஜியத்தை வெள்ளையர் வெற்றி கொள்வதற்கு மன்னர் ஹரி சிங்கின் முன்னோர்களான டோக்ரா சகோதரர்கள் உடந்தையாக இருந்தனர். அதற்கு வெகுமதியாக அன்றைய சீக்கிய ராஜ்ஜியத்திற்குட்பட்டிருந்த காஷ்மீர் பிரதேசம் வெள்ளையர்களால் மன்னர் ஹரி சிங்கின் முன்னோருக்கு அளிக்கப் பட்டது. இந்த விவகாரத்தைத்தான் பாகிஸ்தான் பிரதிநிதி பாதுகாப்பு கவுன்சிலில் விவரித்து, மேற்கு பஞ்சாபுடன் முன்பு காஷ்மீர் இணைந்திருந்ததால் தற்போது அதன் மீது உரிமை கோரினார். சொல்லப் போனால் அன்றைய காலகட்டத்தில் பல சமஸ்தானங்கள் வெள்ளையரால் செயற்கையாக உருவாக்கப் பட்டன. தேசத்தை அடகு வைக்கிறோம் என்கிற குற்ற உணர்வு சிறிதுமின்றி முற்றிலும் சுயநலத்துடன் வெள்ளையருக்கு உதவிய பலர் அதன் பயனாக சமஸ்தானாதிபதிகளாகப் பட்டம் சூட்டிக் கோண்டார்கள். காஷ்மீர் மட்டுமே இதற்கு விதி விலக்கு அல்ல).
“பாதுகாப்பு கவுன்சில் முன்பாக விவாதிக்கப் பட வேண்டிய விஷயம் காஷ்மீர் சமஸ்தான மன்னரின் சீர்கேடான நிர்வாகம் பற்றியதுமல்ல. அந்தச் சீர்கேடான நிர்வாகத்தைச் சரி செய்யும் முயற்சியை மேற்கொண்டதற்காகத்தான் நான் மிகவும் துன்பங்களுக்கு உள்ளாக்கப் பட்டதாக நினைக்கிறேன். இன்று இங்கே, பாகிஸ்தான் பிரதிநிதி அது சம்பந்தமாக என்னுடைய வழக்கை ஆதரித்துப் பேசியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியினை அளித்தது.
“இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள சச்சரவுதான் என்ன? பாதுகாப்புக் கவுன்சில் முன்பு எனது குழு வைத்துள்ள புகாரிலிருந்து நான் அறிந்து கொண்டது என்னவென்றால் காஷ்மீர் சட்டப்படியும் அரசியல் நிர்ணயப்படியும் இந்தியாவுடன் இணைந்துள்ளது என்கிற விஷயத்தை ஒட்டியதாகும். அதன்பேரில் காஷ்மீர் நிர்வாகத்தைப் பங்கீடு செய்வது தொடர்பாக மாநிலத்திற்குள்ளாவே சிறிது தொல்லைகள் இருந்தன. அதற்குள் எல்லைக் கோட்டிற்கு அப்பாலிருந்து வட மேற்கு எல்லைப் புற மாகாண வனவாசிக் குழுக்கள் எமது நாட்டிற்குள் வந்து குவிந்து விட்டன. அவர்களுக்கு பாகிஸ்தான் அரசு உதவியது, தொடர்ந்து உதவி வருகிறது. இதன் விளவாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பெரும் மோதல் உருவாகும் சாத்தியக் கூறு உள்ளது. எனவே இந்தியா பாதுகாப்புக் கவுன்சிலின் உதவியை நாடியுள்ளது. வனவாசிகளுக்கு ஒத்தாசை செய்வதை நிறுத்திக் கொள்ளுமாறும் சட்டப்படி அமைந்துள்ள ஒரு நிர்வாகத்திற்கு எதிராகக் கிளம்பியுள்ள கிளர்ச்சிக்கு ஆதரவு காட்ட வேண்டாம் என்றும் பாகிஸ்தானிடம் கூறுமாறு பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்தியா வேண்டிக் கொண்டுள்ளது.
மறுப்பில் உண்மையில்லை
“பாதுகாப்பு கவுன்சில் முன்பாக பாகிஸ்தான் பிரதிநிதி “ஆமாம், நாங்கள் வனவாசிகளுக்கு ஆதரவு அளிக்கிறோம்தான், காஷ்மீருக்குள் குழப்பம் விளைவிக்கிறவர்களையும் நாங்கள் ஆதரிக்கிறோம். ஏனென்றால் காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமானது அல்ல, பாகிஸ்தானைச் சேர வேண்டியது என்று நாங்கள் கருதுகிறோம். அதனால் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததை ஓர் ஏமாற்று வேலை என்று நாங்கள் எண்ணுகிறோம்’ என்று தைரியமாகக் கூறியிருந்தால் என்னால் அவர்களின் தரப்பைப் புரிந்துகொள்ள முடிந்திருக்கும். அப்போது காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததில் உள்ள நியாயத்தைப் பற்றி நாம் விவாதிக்க முடிந்திருக்கும். ஆனால் பாகிஸ்தான் பிரதிநிதியின் நிலைப்பாடு அவ்வாறாக இல்லை. வனவாசிகள் காஷ்மீருக்குள் நுழைவதற்கோ, காஷ்மீருக்குள் சட்டப்படி அமைந்துள்ள நிர்வாகத்திற்கு எதிராகச் சிலர் குழப்பம் விளைவிப்பதற்கோ பாகிஸ்தான் எவ்வித உதவியும் வழங்கவில்லை என்கிற மறுப்பைத்தான் அவர் தெரிவித்திருக்கிறார்.
“அவரது இந்த மறுப்பு முற்றிலும் பொய்யானது என்பதைப் பாதுகாப்புக் கவுன்சில் ஒப்புக்கொள்ளுமாறு செய்வதற்கு என்னால் என்ன செய்ய முடியும்? எனது நாட்டிலிருந்து ஆயிரக் கணக்கான மைல்கள் தொலைவிலுள்ள பாதுகாப்பு கவுன்சில் முன்பாக நான் உட்கார்ந்திருக்கிறேன். ஜம்மு காஷ்மீர் எல்லையில் எனது சொந்த மக்களுடன் இணைந்து நான் பல சண்டைகள் போட்டிருக்கிறேன். பாகிஸ்தான் அரசு வனவாசிகளுக்கு பஸ்களை மட்டுமின்றி, ஆயுதங்கள், வெடி மருந்துகள் ஆகியவற்றையும் கொடுத்து ஆதரிப்பதை என் கண்களாலேயே கண்டேன். அது மாத்திரமல்ல, பாகிஸ்தான் படைகளையுங்கூட எல்லைப் புறத்தில் நான் பார்த்தேன்.
“பாகிஸ்தான் தனது செய்கை குறித்துச் சிறிதும் கூசாமல் மறுப்புத் தெரிவிப்பதால் பாதுகாப்பு கவுன்சில் முன் அதனை எப்படிப் பொய் என நிரூபிப்பது என்று எனக்குப் புரியவில்லை. பாதுகாப்பு கவுன்சில் எங்கள் கோரிக்கையினை ஏற்றுத் தனது ஆய்வுக் குழுவை சம்பந்தப் பட்ட இடத்திற்கு அனுப்பி வைத்து, பாகிஸ்தான் அரசு ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவி செய்கிறதா இல்லையா என்பதை அந்தக் குழு நேரில்பாõர்த்தால்தான் நாங்கள் சொல்வது சரியா தவறா என்பது தெரிய வரும். அதன் பிறகாவது பாதுகாப்பு கவுன்சில் அவ்வாறு உதவிகளை வழங்கவேண்டாம் என்று பாகிஸ்தானிடம் கேட்டுக் கொள்ளட்டும்.
மன்னரை ஆதரித்த ஜின்னா
“ஆனால் இச்சிறு விஷயம் குழப்பப்படுகிறது. பாகிஸ்தான் அரசு ஒரு பக்கம் “காஷ்மீருக்குள் தொல்லை கொடுப்பவர்களோடு எங்களுக்குப் பங்கில்லை. அங்கு தொந்தரவுகள் அளிக்கப்படுவதற்குக் காரணம் சீர்கேடான நிர்வாகம்தான். ஜம்மு காஷ்மீர் அரசுக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள்’ என்று சொல்கிறது. “ஆமாம், நாங்கள் சீர்கேடான நிர்வாகத்திற்கு எதிராக 1931 லிருந்தே போராடிக் கொண்டுதானிருக்கிறோம். அரசு ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும் என்று கேட்டு வருகிறோம். ஆனால் இன்று பாகிஸ்தான் எப்படி எங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி எங்கள் சுதந்திரத்திற்குக் குரல் கொடுக்க வருகிறது? 1946 இல் சமஸ்தான மன்னருக்கு எதிராக, “காஷ்மீரைவிட்டு வெளியேறு’ என்கிற முழக்கத்தை நான் எழுப்பியபோது, இன்று பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரலாக இருக்கும் முகமது அலி ஜின்னா, எனது இயக்கத்தைப் பிற்போக்கானது என வர்ணித்து அதற்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொன்னார் (மன்னர் ஹரி சிங்கிற்குத் தூண்டில் போடுவதற்காக ஜின்னா அவ்வாறு அப்துல்லாவின் இயக்கத்தைக் கண்டித்தார்).
“முஸ்லிம் மாநாடு, எனது இயக்கத்தைக் கண்டித்து, மன்னருக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தது (தேசிய மாநாடு எனப் பெயர் மாற்றம் செய்தபோது அதன் ஒரு பிரிவினர் கட்சியில் அப்துல்லாவின் மேலாதிக்கம் குறித்துக் கருத்து வேறுபட்டு, தொடர்ந்து முஸ்லிம் மாநாடு என்ற பெயரில் இயங்கலாயினர்). “ஷேக் அப்துல்லா முன்பு மன்னரை காஷ்மீரை விட்டு வெளியேறு என்று சொன்னார். இப்போது அவரே மன்னருடன் கை கோத்துக் கொண்டிருக்கிறார் ‘ என்று பாகிஸ்தான் பிரதிநிதி இங்கு சொன்னார். பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போது, மகாராஜா ஜம்முவுக்கு மட்டுமின்றி ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுமைக்கும் மகாராஜாவாக இருக்க வேண்டும் என்று நான் பேசியதாகவும் குறிப்பிட்டார்.
“இத்தவறான பதிவை நான் திருத்தியாக வேண்டும். ஜம்முவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நான் பேசினேன்தான். அது எங்கள் ராஜ்ஜியத்தின் குளிர் காலத் தலை நகர். வேறு ஒரு நோக்கில் நான் அவ்வாறு பேசினேன். பாதுகாப்புக் கவுன்சில் முன் எங்கள் குழுவின் தலைவர் முன்னரே சொன்னதுபோல, ஜம்மு பகுதியில் சில படுகொலைகள் நிகழ்ந்தன. வனவாசிகள் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிக்குள் புகுந்ததன் விளைவாக அங்கு எல்லைப்புற கிராமங்களிலும் நகர்ப் புறங்களிலும் வசித்த ஆயிரக் கணக்கான ஹிந்துக்களும் சீக்கியர்களும் புலம் பெயர்ந்து ஜம்மு பகுதியில் தஞ்சம் புகுந்தனர். அதனால் அங்கு எதிர் விளைவு ஏற்பட்டது. காஷ்மீரில் ஆக்கிரமிப்பாளர்களைத் தடுப்பதற்கான நடவடிக்கையில் நான் மும்முரமாக இருந்ததால் ஜம்மு பகுதியை என்னால் கவனிக்க இயலவில்லை. எனினும் அவகாசம் கிடைத்தபோது நான் ஜம்முவுக்குச் சென்று அறுபதாயிரம் போலத் திரண்டிருந்த ஹிந்துக்கள், சீக்கியர்களுக்கு மிகவும் வெளிப்படையான அறிவுரை கூறினேன்.
காஷ்மீருள் இரு பிரிவு அகதிகள்
“எதிர் விளைவு செய்வதால் ஹிந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் நன்மையில்லை என்று அவர்களிடம் சொன்னேன். அவர்கள் பெரும்பான்மையினராக உள்ள இரண்டொரு மாவட்டங்களில்தான் அவர்களால் எதிர்விளைவு செய்ய முடியும்; அங்குள்ள முஸ்லிம்கள் அனைவரையுமே கூட அவர்களால் அழித்துவிட முடியலாம், ஆனால் மாநிலத்தில் எண்பது சதம் முஸ்லிம்கள் இருப்பதால் அவர்கள் அனைவரையும் அழிப்பது இயலாத காரியம். எனவே இரு மாவட்டங்களில் மட்டும் அவர்கள் எதிர் விளைவு செய்தால் அதன் பிறகு அவர்கள் ஆதரவு காட்டும் மன்னர் அந்த இரு ஜம்மு மாவட்டங்களுக்கு மட்டும்தான் மன்னராக இருக்க முடியும்; அவர் ஜம்முகாஷ்மீர் முழுமைக்கும் மன்னராக இருக்க வேண்டுமென்றால் எதிர் விளைவைக் கைவிடுங்கள் என்றுதான் நான் பேசினேன்.
“எனினும், இந்தச் சங்கடம் எவ்வாறு ஆரம்பித்தது என்பதை நான் முன்னரே குறிப்பிட்டிருக்கிறேன். பாகிஸ்தானின் பிரதிநிதி அதனை ஒப்புக்கொள்ளவும் கூடும். இந்தியா இரண்டாகப் பிளவுபட்டபொழுது, நானும் என் தோழர்கள் அனைவரும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னாலிருந்தோம். இந்தியா பிரிக்கப்பட்டதன் விளைவு, இரு தரப்பிலும் படுகொலைகள் நடந்தன. முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்த மேற்கு பஞ்சாபில் ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் கொல்வது தொடங்கியது. அதற்குக் கிழக்குப் பஞ்சாபில் பதிலடி கொடுக்கப் பட்டது. எங்களது எல்லைப் புறம் நெடுகிலும் ஒரு பக்கம் ஹிந்துக்களும் சீக்கியர்களும் கொல்லப்படுவதும், இன்னொரு புறம் முஸ்லிம்கள் கொல்லப்படுவதும் அன்றாட நிகழ்வுகளாக இருந்தன. ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலமும் அதன் மக்களும் அமைதி காத்தனர். அதன் பயனாக முஸ்லிம்கள், ஹிந்துக்கள் ஆகிய இரு பிரிவுகளையும் சேர்ந்த பல்லயிரக் கணக்கான அகதிகள் எங்கள் மாநிலத்தில் அடைக்கலம் புகுந்தார்கள். அவ்விரு தரப்பினருக்கும் எங்களால் ஆன உதவிகளையெல்லாம் நாங்கள் வழங்கினோம்.
(காஷ்மீரின் ஒருபுறத்து எல்லை பாகிஸ்தானாகவும், இன்னொரு புறத்து எல்லை ஹிந்துஸ்தானாகவும் இருந்தது. ஆகவே பாகிஸ்தான் பகுதியில் தாக்கப் பட்ட ஹிந்துக்களும், ஹிந்துஸ்தானத்தின் பகுதியில் பதில் தாக்குதலுக்குள்ளான முகமதியர்களும் ஒருசேரக் காஷ்மீருக்குள் தஞ்சமடைந்தனர். அவர்கள் தம்முடன் பகையுணர்வு, பழி வாங்கும் உணர்வு ஆகியவற்றையும் காஷ்மீருக்குள் கொண்டு வந்தனர்).
“இது எவ்வறு சாத்தியமாயிற்று? ஏனெனில் நானும் எனது அமைப்பும் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இருவேறு தேசியங்கள் என்று நம்பியதே இல்லை. இரு வேறு தேசியக் கோட்பாட்டை நாங்கள் நம்புவதில்லை. மத அடிப்படையிலான மாச்சரியம், மதவாதம் ஆகியவற்றிலும் எங்களுக்கு நம்பிக்கையில்லை. அரசியலில் மதத்திற்கு இடமில்லை என்பதுதான் எங்களது நம்பிக்கை. எனவேதான் “காஷ்மீரைவிட்டு வெளியேறுங்கள்’ என்று ஒரு இயக்கத்தைப் பிற்பாடு நாங்கள் ஆரம்பித்தது வெளியிலிருந்து வந்த முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி, எமது ஹிந்து, சீக்கியத் தோழர்களையும் பாதிப்பதாக அமைந்தது. அதன் விளைவாக, எல்லைப் புறம் நெடுகிலும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில், ஜம்மு, காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம்கள், ஹிந்துக்கள், சீக்கியர்கள் ஆகியோர் ஒன்றுபோல அமைதியாக இருந்தனர்.
“எங்கள் மாநிலத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வந்ததால் எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் (ஹிந்துக்களும் சீக்கியர்களும்)பதற்றமடையத் தொடங்கினார்கள். என்னையும் என் சகாக்களையும் விடுதலை செய்யுமாறு நிர்வாகத்திற்கு பெரிதும் நிர்ப்பந்தம் வரலாயிற்று. சிறைக்கு வெளியே இருந்த நிலைமை எனது தேசிய மாநாடு ஊழியர்களையும் அதன் தலைமையினையும் விடுதலை செய்யுமாறு கோரியது. அதற்கு இணங்க, நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம் (காஷ்மீரில் தஞ்சம் புகுந்த முகமதியர் மத வெறியைத் தூண்டிவிட்டு ஹிந்துக்கள், சீக்கியர் ஆகியோர் மீதான தாக்குதலைக் காஷ்மீர் மண்ணிலும் தொடர்ந்தனர். பதற்றமடைந்து, ஹிந்துக்கள் மிகுதியாக உள்ள ஜம்மு வட்டாரத்திற்கு இடம் பெயர்ந்தனர். தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்ட ஜம்மு வட்டார ஹிந்துக்களும் சீக்கியரும் ஆத்திரமடைந்து, முகமதியர் மீது பதில் தாக்குதல் தொடங்கினர். அதனால்தான் முகமதியர் மீது ஹிந்துசீக்கியர் மேற்கொண்ட தாக்குதலை அப்துல்லா “எதிர் விளைவு’ என்று குறிப்பிடுகிறார்).
- தாகூரின் கீதங்கள் – 51 மீண்டும் உனக்கு அழைப்பு !
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -6
- ஒளியூட்டுவிழா
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 11 (இறுதிக் காட்சி)
- பெண் படைப்புலகம் – இன்று – விழுப்புரம் தென்பெண்ணை கலை இலக்கியக் கூடல் நடத்தும் கருத்தரங்கம்
- எம்.எஸ்.வெங்கடாசலம் அவர்கள் எழுதிய “நான் கண்ட அண்ணா “
- கிராமியப் பாடல்களில் கட்டபொம்மன்
- இந்திய இலக்கியம்: வாழ்க்கைக் கூறுகளும் பண்பும்
- நீர் வளையங்கள்
- அண்டவெளியில் நீந்திய முதல் ஆசிய விண்வெளித் தீரர் !
- “கிளர்ச்சி”
- வேதவனம் -விருட்சம் 6
- வனாந்திரத்தின் நடுவே..
- கடவுளானேன்.
- அண்ணலே நீக்குவாய் இன்னலே
- பிம்பங்கள்.
- இசைபட…!
- காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 4
- காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 3
- நவராத்திரி – பசுமையான நினைவுகள்
- காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 2
- நினைவுகளின் தடத்தில் – (20)
- அப்பாச்சி -2
- அப்பாச்சி
- என் பெயர் ஒளரங்கசீப்!
- உதவி
- சுமை
- விஸ்வரூபம் – அத்தியாயம் பத்து
- மனிதமென்னும் மந்திரம்