கோ. ஜோதி, ஆராய்ச்சியாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்
நடந்து வாழ்ந்த காவிரியால் இனி அடிக்கடி நடக்க முடியாமல் போகும். கங்கை நதிப்புரத்துக் கோதுமைப் பண்டத்தை வாங்க முடியாமல் காவிரி உழவர்கள் கண்ணீர் விடுவார்கள். ஆறு இரண்டும் காவிரி அதன் நடுவில் திருவரங்கம் அவ்வப்போது தன் அழகை இழந்து விடும். பல லட்சக்கணக்கான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வை நிலைகுலையச் செய்யும் வண்ணம் காவிரித் தண்ணீர் தமிழகத்திற்கு மறுக்கப்பட்டு வருகிறது. இந்த உயிர் நாடியான பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் காட்டி வரும் அலட்சியமான போக்குகள், பொறுப்பற்ற தன்மைகள் தமிழ்நாட்டில் காவிரிப் பகுதி விவசாயிகளின் நலவாழ்வை கேள்விக்குறியதாக்கி வருகிறது.
தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரின் உரிமைப் பங்கு ஒவ்வொன்றாக மறுக்கப்பட்டு வருகிறது. முதலில் பாலாற்றின் மூலம் தமிழகத்திற்கு கிடைத்துவந்த நீரை கர்நாடக அரசு தடுத்தது. வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் 26 டிசம்பர் 1954ல் கூடிய விவசாயிகள் மாநாடு இதைப்பற்றி விவாதித்தது. மத்திய மாநில அரசுகளுக்கு நீண்ட தொரு அறிக்கையை அளித்தது. இவைகளால் எந்தப் பலன்களும் இல்லை. வட ஆற்காடு செங்கல்பட்டு மாவட்டங்களின் விவசாயிகளின் உரிமையான பாலாற்று நீரை தடுத்து, பல ஒப்பந்தங்களையும் மீறி செயல்பட்டது கர்நாடக அரசு. இதனால் பாலாற்று நீரினால் பாசனம் செய்யப்படும் நிலத்தின் பரப்பளவு 3,75,000 ஏக்கரில் இருந்து 2,45,000 ஏக்கராகக் குறைந்துவிட்டது.
நீண்ட காலமாக நிலவி வரும் சென்னை நகரின் குடிநீர்ப் பஞ்சத்தைப்போக்க கிருஷ்ணா நதி திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக தமிழக அரசும் தனது நிதிப்பங்களிப்பை அளித்தது. ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின. ஆனால் இன்று வரை சென்னை நகர மக்களுக்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்கவில்லை. இதிலும் நமது உரிமை மறுக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு : தமிழக அரசினால் கட்டப்பட்ட இந்த அணை, மாநிலப் பிரிவினையின்போது கேரளாவின் வசம் போனது. இந்த அணையின் நீர் மட்டத்தை 152 அடியிலிருந்து 145 அடியாகக் குறைக்க கேரள அரசு வற்புறுத்தியது. இதற்குப் பிறகும் 1979ல் நீர் மட்டத்தை 136 அடியாகக் குறைக்க கேரள அரசு வற்புறுத்தியது. எனவே அணையின் மட்டம் 136 அடியாகக் குறைந்தது. இதனால் வருடத்திற்கு 13.5 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் இழந்தது. இதனால் மதுரை, இராமநாதபுரம், பசும்பொன் மாவட்டங்களில் 80 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை இழந்தன.
இவைகளைப் போல்தான் காவிரியின் நிலைமையும் உருவாகி வருகிறது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால் தமிழகம் காவிரி நீரின் உரிமைக்காக தொடர்ந்து போராடி வருகிறது. கி.பி. 1146ஆம் வருடத்திலேயே மைசூர் அரசன் முதலாம் நரசிம்மன், காவிரியின் குறுக்கே செயற்கை மலைகளை உண்டாக்கி நீரின் போக்கைத் தடுத்தான். தமிழகத்திலிருந்து இரண்டாம் இராசராச சோழன் படையெடுத்துச் சென்று காவிரியின் குறுக்கே கட்டிய செயற்கை மலைகளை உடைத்து தண்ணீரை விடுவித்தான் என்று வரலாறு கூறுகிறது. பின்னர் மைசூர், சென்னை மாகாணங்களுக்கிடையே 1892ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி மைசூர் அரசு புதிய நீர்த்தேக்கம் கட்ட வேண்டுமெனில் அது தொடர்பான முழு விவரங்களையும் சென்னை மாகாண அரசுக்கு அனுப்பி அவர்களின் முன் அனுமதி பெற வேண்டும் என்று முடிவாகியது. ஆனால் இந்த ஒப்பந்தங்கள் மீறப்பட்டு மைசூர் அரசு மிகப்பெரிய நீர்த் தேக்கத்தைக் கட்டியது.
இன்று வரை காவிரியிலும் அதன் துணை ஆறுகளிலும் சட்டத்தை மீறியும் அனுமதியின்றியும் 19 நீர்த் தேக்கங்களை ரூ.156906 இலட்சங்களில் கர்நாடக அரசு கட்டியுள்ளது. இவைகளில் 175 ஆயிரம் மிலியன் கன அடி நீரைத் தேக்கி வைக்க முடியும்.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே கட்டியுள்ள நீர்த் தேக்கங்களில் பெரும்பா லானவை “டிட்டன்சன் ரிசர்வாயர்” என்றவகை நீர்த்தேக்கங்கள் ஆகும். இந்த வகை நீர்த் தேக்கங்கள் மூலம் காவிரியில் வருகின்ற அவ்வளவு நீரையும் தேக்கிவிட முடியும். மற்றொரு வகை “ரிட்டன்சன் ரிசர்வாயர்” என்பதாகும். இவ்வகை நீர்த் தேக்கங்களில் நீரை வெள்ளம் வந்தால் தேக்கி வைத்துவிட்டு தேவையானபோது திறந்து விடுவது. இந்த “டிட்டன்சன் ரிசர்வாயர்” வகை நீர்த்தேக்கங்கள் கர்நாடக அரசால் திட்டமிட்டே கட்டப்பட்டன.
கர்நாடக மாநிலத்தில் காவிரி பாயும் 8 மாவட்டங்களில் பெங்களூர், கோலார், டும்கூர் மாவட்டங்கள் தவிர மற்ற 5 மாவட்டங்களிலும் நிலத்தடி நீரின் உபயோகம் மிகவும் குறைவாகவே உள்ளது என்பதை 1990களில் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதன்மூலம் இந்த மாவட்டங்களில் பெரும்பாலும் காவிரி ஆற்று நீரையே விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர் என்பது தெளிவாகிறது. நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்கு பொருளாதார முதலீடுகள் இந்த விவசாயிகளுக்குத் தேவை என்றாலும் கூட, தமிழகத்தின் காவிரிப்பாசன விவசாயிகளின் நிலையினை எண்ணிப் பார்த்தால் கர்நாடக மாநிலத்தின் காவிரிப்பாசன விவசாயிகளால் ஓரளவிற்காவது நிலத்தடி நீரைப் பயன்படுத்த முடியும்.
கர்நாடகத்தில் காவிரி பாயும் மாவட்டங்கள் நிலத்தடி நீரின் பயன்பாடு
(சதவீதத்தில்)
1. பெங்களூர் 84
2. சிக்மகளூர் 17
3. ஹாசன் 15
4. குடகு 7
5. கோலார் 95
6. மாண்டியா 18
7. மைசூர் 24
8. டும்கூர் 66
நவம்பர் 2000த்தில் கொடுக்கப்பட்டுள்ள (சிவிமிணி) அறிக்கையின்படி 1998-99 ஆம் ஆண்டில் 1 ஹெக்டேர் நிலத்தில் அதிகமான நெல் மற்றும் உணவுதானிய உற்பத்தியை தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனர் என்பதை புள்ளிவிவரம் காட்டுகிறது.
தமிழகம் கர்நாடகம்
அரிசி 3440 கிலோ (ஹெக்டேருக்கு) 2530 கிலோ (ஹெக்டேருக்கு)
உணவுப்பொருள் உற்பத்தி 2280 கிலோ (ஹெக்டேருக்கு) 1350 கிலோ (ஹெக்டேருக்கு)
இரண்டு மாநிலங்களிலும் உள்ள மண்ணின் தரம் வேறுபடும் என்ற கருத்து இருந்தாலும்கூட, தமிழக விவசாயிகள் உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றனர்.
உலகின் பல நாடுகளில் ஏற்பட்டு வரும் நதிநீர் தாவாக்களை முடிவுக்குக் கொண்டு வர நான்குவிதமான கோட்பாடுகள் கையாளப்படுகின்றன. அவைகள் :
1. ஆற்றுப்படுகை உழவர்களின் கோட்பாடு : ஆற்றின் கடைக்கோடி விவசாயிகள் நீரை குறைவின்றிப் பெறுதல்.
2. தேச இறையாண்மைக் கோட்பாடு : தன் எல்லைக்குட்பட்ட நீரை கட்டுப்படுத்தி, தங்களுக்கே பயன்படுத்திக் கொள்ளுதல்.
3. உடைமைக் கோட்பாடு : தக்க நேரத்தில், முதலில் தன்னுடைமையாக்கிக் கொண்டு, உரிமையை நிலைநாட்டுதல்.
4. சமபங்கீட்டுக் கோட்பாடு : குறிப்பிட்ட பரப்பில் உள்ள ஆற்று நீரை அந்தந்த பரப்பில் உள்ளவர்கள் சமமாக பங்கிட்டுக்கொள்ளுதல்.
இந்த கொள்கைகளின்படி பலநாடுகளின் நதிநீர் சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளன. இந்த 4 கோட்பாடுகளிலும், கர்நாடகம் இரண்டாவது கோட்பாட்டை வலியுறுத்தி வருகிறது.
1972 பிப்ரவரி மாதம் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் “இந்தியாவின் மாநிலங்களுக்கிடையேயான ஆறுகள்” என்ற கருத்தரங்கில், சோமாலியா நாட்டின் உச்சநீதிமன்ற முன்னால் தலைவரான முனைவர் என்.ஏ. நூர் முகமது அவர்களால் வைக்கப்பட்ட கருத்துகள் மிகவும் தெளிவானவை. இவர் முதல் 3 கோட்பாடுகளையும் இந்தியாவின் சூழலுக்கு ஏற்ற கோட்பாடுகள் இல்லை என்பதை விளக்கிக் கூறிவிட்டு 4வது கோட்பாட்டையே வலியுறுத்துகிறார். இந்தக் கோட்பாட்டின்படிதான் தமிழகமும், கர்நாடகமும் காவிரி நீரைப் பகிர்ந்து கொள்ளவேண்டும்.
மத்தியிலும், இரண்டு மாநிலங்களுக்கிடையேயும் அடிக்கடி மாறிய அரசியல் மாற்றங்களால் காவிரிப் பிரச்னையில் மத்திய மாநில அரசுகள் போதிய கவனம் செலுத்தவில்லை.
பருவ மழை குறைவதாலும், காவிரி நதி நீர்ப் பங்கீட்டில் சிக்கல் ஏற்படுகிறது. பிறகு மழைப்பொழிவு ஏற்பட்டால் நிலைமைகள் சரியாகி வருகின்றது. இதனால் தமிழகத்தின் காவிரிப் பாசன பகுதிகளில் பெரும் இழப்பு ஏற்படுகிறது. 1999ஆம் ஆண்டு தமிழகத்தின் காவிரிப் பாசன பகுதியில் குறுவைப் பருவத்தில் மட்டும் 13 லட்சம் டன் உணவு தானிய இழப்பு ஏற்பட்டது. அரசின் விவரப்படி இந்த இழப்பு 650 கோடியாகும்.
பருவ மழை குறையும் காலங்களில் தமிழகத்தில் நிலத்தடி நீர் மிக அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. அதிக மழை பெறும் காலங்களில், மழை நீரை முறையாக சேமிக்க அரசிடம் சரியான திட்டங்கள் இல்லை. சமீப காலங்களில் இதுபற்றி பேசப்பட்டு வருகிறது.
தமிழக ஆறுகளில் குறிப்பாக காவிரி ஆறும் அதன் துணை ஆறுகளும் கடுமையாக மாசுபட்டு வருகின்றன. இவைகளில் மணல் கொள்ளையும் நடைபெற்று வருகிறது. இப்பிரச்னைகளால் உற்பத்திக் குறைவு, நிலத்தடி நீர்மட்டங்களில் மாறுதல்கள் போன்றவைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இவைகளை அரசு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.
1996ல் காவிரி நதிநீர் போராட்டத்தின்போது கர்நாடக முதல்வராக இருந்த தேவகவுடா “தமிழநாட்டில் காவிரி தண்ணீர் தேவையை மிகைப்படுத்தியது” என்றும், தவறான அடிப்படையில் எழுந்தது என்றும் கூறினார். தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கமாட்டோம் என்று கர்நாடகா முடிவு எடுத்த பின்னரும், அங்கு வன்முறை ஏற்பட்டது. தமிழகத்திலும் 5 மாவட்டங்கள் உணவுப் பயிர்களில் 40 சதவீதத்தை உற்பத்தி செய்கின்றன. இது மிகவும் முக்கியமானது. ஏனெனில்
• விவசாயத்திற்கு தகுதியான நிலங்களில் மூன்றில் 1 பங்கில் இந்த 40 சதவீத உற்பத்தி நடைபெறுகிறது.
• குறைந்த அளவிலான உரம், மின்சாரம், நிலத்தடி நீரை இது பயன்படுத்துகிறது.
• 44 லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பை இது அளிக்கிறது.
• தமிழ்நாட்டின் மிக உற்பத்தித் திறன்வாய்ந்த கரும்பு விவசாயிகளும் இங்கு உள்ளனர்.
மத்திய மாநில அரசுகள் காவிரி நதிநீர் பங்கீட்டினை தமிழகத்தின் உயிர் நாடியான பிரச்னையாகக் கொள்ள வேண்டும். சுமுகமான பேச்சுவார்த்தைகளை தமிழக, கர்நாடக மாநில அரசுகள் தொடர மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். சிறந்த நடுநிலை யாளர்களை முன்னிலைப்படுத்தி பேச்சுவார்த்தைகள் நடைபெறவேண்டும். முறையான புள்ளி விவரங்கள் அளிக்கப்படவேண்டும். பிரதேச வெறியர்களின் வன்முறைச் செயல்கள் மாநில அரசுகளால் ஒடுக்கப்படவேண்டும். இதற்காக கர்நாடக, தமிழக மாநிலங்களின் காவிரி நதி பயனுரிமையாளர்களின் (Stakeholders ‘.) அமைப்பு உருவாக்கப்படவேண்டும். இதற்கான முயற்சிகளை உருவாக்க இருமாநில அரசுகள், அரசியல் கட்சிகள், விவசாயிகள், பொதுமக்கள் முன்வர வேண்டும்.
கட்டுரைக்கு உதவிய நூல்கள், கட்டுரைகள் மற்றும் அறிக்கைகள் :
. பாசனமும், பிரச்னைகளும் – பழ. நெடுமாறன்
. காவிரி அங்கும் இங்கும் – பூ.அர. குப்புசாமி
. காவிரி நீர் போர் – நீர் பெல்கி, கலிபோர்னியா.
. கர்நாடகாவின் நிலத்தடி நீர் பிரச்னைகள் – எம். பாசப்பா ரெட்டி, கர்நாடகா.
. காவிரி நதிநீர் விவாதம் – எஸ். குகன்
. சிவிமிணி அறிக்கை – நவம்பர் 2000
. செங்கல்பட்டு, வடஆற்காடு மாவட்ட விவசாயிகள், மைசூர் முதலமைச்சர், இந்திய பொதுப்பணித்துறை அமைச்சர்களுக்கு ஷனவரி 1955ல் அனுப்பிய கடித நகல்.
. காப்பாற்றப்படுவரா காவிரி விவசாயிகள் ? – விவசாய சங்கத் தலைவர் கோ. வீரய்யன் அவர்கள் 27.9.99ல் எழுதிய தினமணிக் கட்டுரை.
***
* உழவன் உரிமை, 2002 செப்டம்பர் மாத இதழில் வெளியான கட்டுரை
***
jothi_mids@yahoo.co.uk
- முறையாய் முப்பால் குடி!
- காலச்சுவடு கண்ணன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல்
- வேர்களை வெட்டி நந்தவனம் – ‘புலிமலைச் சூழ்ச்சி ‘ – சீனப் புரட்சிக் கூத்துத் திரைப்படம்
- பாரதி இலக்கிய சங்கம்
- ஆசையும் அடிப்படைக் குணமும் – (எனக்குப் பிடித்த கதைகள் -31 -நகுலனின் ‘ஒரு ராத்தல் இறைச்சி ‘)
- தக்காளி கறி
- எலுமிச்சை மகிமை
- சிம்பன்ஸி vs சாம்ஸ்கி – மனிதனை தவிர மற்ற குரங்கினங்களில் மொழியின் வெளிப்பாடுகள்
- ஐன்ஸ்டைனுடன் பணி ஆற்றிய சத்யேந்திர நாத் போஸ் (1894-1974)
- அறிவியல் மேதைகள் சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Sir Jagadish Chandra Bose)
- மஞ்சள் மகிமை
- மூலம்: சுவாமி விவேகானந்தரின் கவிதை ‘அன்னை காளி ‘
- வேதனை
- சினேகிதி
- வாசங்களின் வலி
- காதல் பகடை
- குறும்பாக்கள் !
- புல்வெளி மனது
- வேர்களை வெட்டி நந்தவனம் ‘புலிமலைச் சூழ்ச்சி ‘ – சீனப் புரட்சிக் கூத்துத் திரைப்படம்
- தென்னிந்தியத் திரைப்படங்களின் தாக்கம்
- நாஸா கண்டுபிடித்த இராமர் கட்டிய பாலம் ?
- காவிரி – மறுக்கப்பட்ட உரிமைகள்*
- காதல் பகடை
- Where are you from ?
- நான்காவது கொலை !!!(அத்யாயம் 11)